Store
  Store
  Store
  Store
  Store
  Store

ராமதாஸ் அவர்களுக்கு ஒரு சபாஷ் !



    ழக்கமாக தமிழ்நாட்டு மக்களுக்கு தேர்தல் என்றால் சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் என்றுதான் தெரியும் நமது தொகுதிக்கு எப்போதாவது வராதா என்று ஏக்கத்தோடு பார்க்கின்ற  இடைத்தேர்தலையும் தெரியும் இப்போது தான் முதல்முறையாக நமது மக்கள் ராஜ்யசபா தேர்தலைப்பற்றி பேச ஆரம்பித்து இருக்கிறார்கள் குறிப்பாக சொல்வது என்றால் டீ கடை பெஞ்சு வரையிலும் காரமான மிளகாய்  பஜ்ஜியை  போல் ராஜ்யசபா தேர்தல் பேசப்படுகிறது

தமிழ் நாட்டில் வெறும் ஆறு உறுப்பினர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க கூடிய இந்த தேர்தல் இவ்வளவு விறுவிறுப்பாக ஆனதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான் தனக்கிருக்கும் ஒட்டு பலத்தையும் தாண்டி ஐந்து வேட்பாளர்களை களமிறக்கி ஒரு அதிர்வை ஏற்படுத்தினார் முதல்வர் அப்போது பிடித்த சூடு இன்று வரையிலும் தீர்ந்தபாடில்லை 

தரையை தொட்டு அடித்த சூறைக்காற்றில் தலை தப்பியது போல கம்யூனிஸ்ட் கட்சி கரை சேர்ந்தது வழக்கமாக அவர்களால் பூர்ஷுவா வர்க்கம் என்று அழைக்கப்படும் ஒரு திராவிட கட்சியின் தலைவரின் அருளால் தப்பி பிழைத்திருக்கிறார்கள் வெற்றி பெற்றபிறகு தங்களது வழக்கமான கொள்கைப்படி ஏற்றிவிட்ட ஏணியை மறந்துவிட்டு புதிய லாவணிபாட ஆரம்பித்து விடுவார்கள் 

ராஜ்யசபா தேர்தல் யாருக்கு தொல்லை மிகுந்ததாக இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக நமது கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் மிகப்பெரும் தொல்லையாக ஆகிவிட்டது. ஒருவர் எப்படியாவது தனது மைத்துனனை தலைநகர் அனுப்பவேண்டும் என்று கனவுகண்டார் இன்னொருவர் தனது அருமை மகளை டெல்லிக்கு அனுப்பி அழகுபார்க்க கனவுகண்டார் நல்லவேளை மைத்துனருக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது திராவிட சிசுவான அன்பு மகளின் நிலையோ ஊசலாடி கொண்டிருக்கிறது 

இதுவரை கருணாநிதி அவர்கள் அமைச்சர் பதவி பெறுவதற்கும் வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்கும் மட்டுமே டெல்லி அம்மனை நோக்கி தவமிருப்பார் இந்தமுறை பரிதாபமாக என் மகளுக்கு மந்திரி பதவிதான் தரவில்லை வாக்கு சீட்டாவது கொடுங்கள் என்று டெல்லியை நோக்கி கைதொழுத வண்ணம் நிற்கிறார் அவரது பிரார்த்தனைக்கு டெல்லி அம்மன் செவி சாய்ப்பாரா? மாட்டாரா? என்று தெரியவில்லை இந்த நிலையில் திண்டிவனம் தந்த திருவிளக்கான ஐயா ராமதாஸ் அவர்கள் பலரும் எதிர்பாராத வண்ணம் தான் முன்பு கொடுத்த வாக்குறுதியை மீறாமல் உறுதியாக நிற்கிறார். 

இதுவரை பாட்டாளிமக்கள் கட்சித்தலைவர் பல முடிவுகளை எடுத்திருக்கிறார். உயிரே போனாலும் அந்த முடிவுகளிலிருந்து மாறுபடுவதில்லை என்று மக்களுக்கு உறுதிமொழியும் தந்திருக்கிறார் மனைவி செத்து புதைத்த இடம் ஈரம் காய்வதற்கு முன்பே அடுத்த மனைவியை தேடும் கணவன் போல அவர் கொடுத்த உறுதிமொழி தனது எதிரொலியை நிறுத்துவதற்கு முன்பே அதிலிருந்து தடாலடியாக பின்வாங்கியும் போயிருக்கிறார். 

இப்போது தெரிந்தோ தெரியாமலோ திராவிட கட்சிகள் எதுவோடும் கூட்டணி இல்லை என்று அறிவித்தார் அதை குறைந்தபட்சம் தனது தொண்டர்களாவது நம்ப வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் சுத்திவந்து ஒரு நம்பிக்கை ஏற்பட பாடுபட்டார். அவர் எதிர்பார்த்தது போல சில இடங்களில் ஜாதி மோதல்கள் உருவாகி இதுவரை மறந்து போனதாக இருந்த பாட்டாளி மக்கள் கட்சி ஊடகங்களில் விவாதிக்கப்படும் அளவிற்கு வளர்ந்தது.

இன்று வந்த ராஜ்யசபா தேர்தலுக்கு ஆதரவு வேண்டி ஸ்டாலினும் மற்ற திமுகவினரும் மருத்துவமனைக்கே சென்று ராமதாஸ் அவர்களை வேண்டினார்கள். அப்போது அவருடைய நடவடிக்கைகளும் திமுக தன்பக்கம் வந்துவிட்டதனால் ஒருவித சந்தோசம் அடைந்ததாகவே தெரிந்தது பாட்டாளி மக்கள்கட்சி தொண்டர்களும் ஆதரவாளர்களும் மீண்டும் தைலாபுரமும், கோபாலபுரமும் இணைய போவதாக பேசினார்கள் அந்த இணைப்பிற்கு பலவித சமாதானங்கள் உருவாக்கப்பட்டு நடமாடவும் விடப்பட்டது.

ஆனால் உண்மையாகவே ராமதாசை விரும்புகிற விசுவாசிகள் வருத்தப்பட்டார்கள் கொள்கையில் உறுதி இல்லாதவர் நிமிடத்திற்கொரு முடிவெடுப்பவர் என்று தனது தலைவர் விமர்சிக்கப்படுகிறாரே என்று வருத்தத்தோடு இருந்த அவர்கள் திராவிட கட்சிகளோடு கூட்டு இல்லை என்று அவர் உறுதியாக நின்றதில் சந்தோசம் அடைந்தார்கள். ஆனால் இப்போது அந்த நிலை மாறிவிடும் என்று சூழல் வந்தபோது அவர்களால் வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை இதுவரை ஓரளவாவது தலைநிமிர்ந்து வீதியில் நடக்க முடிந்தது இனி அப்படி ராமதாசை தலைவர் என்று சொல்லி வீதியில் நடக்க முடியுமா? மக்கள் நம்மை மதிப்பார்களா? என்றும் அச்சப்பட்டார்கள் 

நல்ல வேளை அந்த விசுவாசிகளை ராமதாஸ் கைவிடவில்லை காப்பாற்றி விட்டார். யாருக்கும் தங்கள் ஒட்டு கிடையாது தேர்தலையே புறக்கணிக்கிறோம் என்று அறிவித்து விட்டார். இதை பார்க்கும் போது திராவிட கட்சிகளோடு கூட்டு இல்லை என்ற முடிவில் அவர் இன்னும் உறுதியாக இருக்க வேண்டும் வேறு பல சிக்கல்கள் வந்தாலும் இதிலிருந்து பின்வாங்க கூடாது என்ற எண்ணத்தில் அவருக்கு சபாஷ் போட்டு வாழ்த்த வேண்டும் என்று தோன்றுகிறது.

ராமதாஸ் நல்லவரோ கெட்டவரோ அவர் சில சமயம் ஜாதிகள் மத்தியில் முறுகல் நிலைமையை ஏற்படுத்துவது நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் இதுவரை திராவிட கட்சிகள் அரசாட்சி செய்து சினிமா அரசியல் செய்தது போதும் இனியும் அவர்களை ஆட்சி பொறுப்பிற்கு வர அனுமதிக்க கூடாது என்ற ஒரு முடிவிற்கு வந்திருக்கிறாரே அதை பாராட்டியே தீர வேண்டும்.ஆனால் நமக்குள்ள ஒரே பயம் அவர் அதில் உறுதியாக இருப்பாரா என்பதில் இருக்கிறது.

இந்த தேர்தல் புறக்கணிப்பிற்கு அமைதியாக இருக்க வேண்டும் தி.மு.க. வோடோ மற்ற எதிர் கட்சிகளோடோ கூட்டு சேர்ந்து லூட்டி அடிக்க கூடாது மீறி லூட்டி அடித்தால் பழைய வழக்குகள் தூசு தட்டப்படும் என்று அம்மையார் அவர்கள் மிரட்டியது தான் காரணம் என்று பலர் பேசுகிறார்கள் காமாலை கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாக தெரிவது போல் நாமும் இல்லாமல் நல்லதாகவே பார்த்து அவரை பாராட்டலாமே சபாஷ் ராமதாஸ்.






Contact Form

Name

Email *

Message *