குருஜிக்கு வணக்கம். என் சகோதரியின் மகனுக்கு பத்துவயது ஆகிறது. இன்னும் சரிவர பேசமாட்டேன் என்கிறான். நிறைய திக்குகிறது இன்றுவரை வைத்திய சிகிச்சை செய்துகொண்டு வருகிறோம் ஓரளவு பலன் இருக்கிறது இருந்தாலும் ஜோதிடம் ரீதியாக எதாவது பரிகாரம் செய்தால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறோம். பையனின் ஜாதகத்தை பார்த்து பரிகாரம் சொல்லும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
லதா,
கலசபாக்கம்.
ஜாதகத்தில் இரண்டாம் பாவத்தை வாக்குஸ்தானம் என்று சொல்வார்கள். அந்த இடத்தின் அதிபதி கெட்டு போனாலும், இரண்டாம் இடத்தில் கெட்ட கிரகங்கள் இருந்தாலும் வாக்கு சம்மந்தப்பட்ட குறிப்பாக திக்கு வாய் போன்ற பிரச்சனைகள் வரும்.
இப்படி திக்குவாய் உள்ளவர்கள் சிவன் கோவிலில் உள்ள ராகு, கேது சன்னதிக்கு சனிக்கிழமை தோறும் ராகுகால நேரத்தில் சென்று வழிபட்டாலும், ராகு, கேதுகளுக்கு உரிய திருத்தலங்களுக்கு குறிப்பிட்ட நாளில் சென்று வழிபட்டாலும் திக்குவாய் பிரச்சனை படிப்படியாக குறையும். அல்லது உளுந்து பத்துகிராம், கொள்ளு பத்துகிராம் எடுத்து வெள்ளைத்துணியில் மூட்டையாக கட்டி தொண்ணூறு நாள்கள் தலையணை அடியில் வைத்து உறங்கி வரவேண்டும். தொண்ணூறு நாள் முடிந்தபிறகு கோவில் குளங்களில் சென்று அந்த மூட்டையை போட்டுவிட வேண்டும். இதன்மூலம் கிடைக்கும் அதிர்வுகளால் திக்குவாய் பிரச்சனை தீரும் இவைகள் அனுபவப்பூர்வமாக கண்ட பரிகார முறைகளாகும்.