குருஜி அவர்களின் திருப்பாதங்களுக்கு கோடான கோடி நமஸ்காரம். நானும் எனது கணவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். ஜாதக பொருத்தம் எதுவும் பார்க்கவில்லை கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றாலும் குடும்பத்தில் பலவித சிக்கல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருகிறது பொருத்தம் பார்க்காமல் விவாகம் செய்து கொண்டீர்கள் அதனால் தான் பல தொல்லைகள் ஏற்படுகிறது என்று ஒரு ஜோதிடர் கூறுகிறார். பொருத்தம் பார்க்காமல் விவாகம் செய்ததற்காக இப்போது வருத்தப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை இருந்தாலும் அந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய எதாவது பரிகாரம் இருந்தால் தயவு செய்து சொல்லி இந்த ஏழைக்கு வழிகாட்ட வேண்டுமாறு அன்போடு வேண்டுகிறேன்
இப்படிக்கு,
ரங்கநாயகி,
கோவில்பட்டி.
வாழ்க்கை என்பது ராஜபாட்டை அல்ல குண்டும், குழியும் நிறைந்த ஒரு சாதாரண சாலை போன்றதே ஆகும். இதில் லாப நஷ்டங்கள் சகஜம் யாரும் எப்போதும் நிரந்தரமாக சந்தோசப்பட்டு கொண்டே இருப்பதும் இல்லை அழுது கொண்டே வாழ்வதும் இல்லை. சக்கரம் சுழலுவதை போல் இன்ப துன்பம் வந்து போய்கொண்டு இருப்பதை தவிர்க்க இயலாது இதை புரிந்து கொண்டவன் புத்திசாலி புரியாதவன் அபாக்கியசாலி.
திருமண பொருத்தம் பார்க்காமல் விவாகம் செய்துகொண்ட எத்தனையோ பேர் மிகவும் நன்றாக இருக்கிறார்கள் தசவிகித பொருத்தங்கள் பார்த்து கூடி வாழாமல் பிரிந்து போனவர்களும் இருக்கிறார்கள். இவைகளை பார்க்கும் போது ஆண்டவனின் விளையாட்டிற்கு உண்மையான காரண காரியங்கள் நமக்கு புரிவதில்லை.
இருந்தாலும் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்தால் விமோசனமே கிடையாது என்பதல்ல கண்டிப்பாக பல மார்க்கங்கள் விடுதலை அடைவதற்கு இருக்கிறது இவற்றில் மிக முக்கியமானது அப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் இருவரும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபாட்டு குறைந்தபட்சம் ஐந்து பேருக்காவது அன்னதானம் செய்துவிட்டு வந்தால் நல்லது நடக்குமென்று பெரியவர்கள் கூறுகிறார்கள், செய்தவர்களும் பயன் அடைந்திருக்கிறார்கள். நீங்களும் செய்து பாருங்கள் கண்டிப்பாக முருகன் அருள்கிடைக்கும்.