இறைவனின் திருமேனியாகிய விக்கிரஹங்களுக்கு பலவகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது பாலபிஷேகம், பன்னீர்அபிஷேகம், போன்றவைகள் அனைவரும் அறிந்ததாகும். சில கோவில்களில் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. பழ அபிஷேகம் செய்வதனால் என்ன பலன் கிடைக்கும்?
இப்படிக்கு,
கிருத்திகாராஜகுமாரி,
மும்பை
இன்னென்ன பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தால் இறைவன் மனமகிழ்ந்து இன்னென்ன பலன்களை தருவார் என்ற நம்பிக்கை நமது இந்துமக்களிடம் பலகாலமாக இருந்துவருகிறது. மந்திரப்பூர்வமாக வடிவமைக்கப்பட்ட இறைவனின் திருமேனி தத்துவம் “பிருத்வி” என்ற பூமி தத்துவமாகும். மண்ணோடு நீர் கலக்கும்போது உற்பத்தி ஏற்படுகிறது என்பதை காட்டவே அபிஷேகம் என்ற வருணதத்துவம் பிருத்வி தத்துவத்தோடு இணைக்கபடுகிறது.
அதனடிப்படையில் இறைவனுக்கு வாழைப்பழங்களால் அபிஷேகம் செய்தால் வேளாண்மையில் நல்ல வளர்ச்சி இருக்கும். பலாப்பழத்தால் அபிஷேகம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும். மாம்பழங்களால் அபிஷேகம் செய்தால் குழந்தைப்பேறு கிடைக்கும். மாதுளைப்பழத்தால் அபிஷேகம் செய்தால் மனநிம்மதி ஏற்படும். எலுமிச்சைப்பழத்தால் அபிஷேகம் செய்தால் பகைவர்களின் தொல்லை குறையும், கண்திருஷ்டி விலகும். என்று ஐதீகம் இருக்கிறது. நீங்களும் உங்களது இஷ்ட தெய்வத்திற்கு இப்படி அபிஷேகம் செய்து பாருங்கள். நல்ல பலன் கண்டிப்பாக கிடைக்கும்