ஆரோக்கியமாக வாழ்வது என்றால் சதா சர்வகாலமும் உடம்பை பற்றியும் நோய்களை பற்றியும் நினைத்து கொண்டே இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல அப்படி இருக்கவும் கூடாது. ஒவ்வொரு வினாடியும் எனக்கு நோய் வந்துவிடுமோ என்ற பயத்தோடும் எதிர்பார்ப்போடும் இருப்பதே ஒருவித நோய் அதற்காக எதைபற்றியும் கவலைபடாமல் கண்டதே காட்சி தின்பதே தீனி என்று வாழ்வதும் சரியான முறையல்ல ஒரு அறிவாளி மனிதன் அப்படியும் வாழ கூடாது. கட்டுதிட்டத்தோடு விழிப்புணர்வோடு வாழ்பவனே நல்ல வாழ்க்கையை வாழ முடியும்.
மனித வாழ்வை சரியான முறையில் நடத்தி செல்வதற்கே விழிப்புணர்வு வேண்டுமென்றால் ஒரு தேசத்தை மிக சரியான பாதையில் பாதுகாப்போடு நடத்தி செல்ல எத்தனை விழிப்புணர்வு வேண்டும் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை. கையில் கட்டி வந்தவுடன் நான் கவனிக்கவில்லை அது பழுத்து வெடித்த பிறகு தான் வடிந்த இரத்தத்தை பார்த்து அறிந்து கொண்டேன் என்று கூறுபவன் உணர்சிகளில் குறையுடைய மனிதன் என்பது போல தனக்கு வந்திருக்கின்ற ஆபத்தை உணராமல் அடுத்தவர்கள் சொல்லியும் அசைந்து கொடுக்காமல் ஒரு தேசத்தின் தலைமை இருக்கிறது என்றால் நிச்சயம் அந்த தேசம் சபிக்கப்பட்ட தேசமாகவே இருக்க வேண்டும்.
மிக வருத்தத்தோடு ஒரு விஷயத்தை நினைவு படுத்தி கொள்ளும் சூழலில் நாம் இருக்கிறோம் நமது நாட்டு எல்லைக்குள் சீனா நாட்டு இராணுவம் 19 கிமீ தூரம் முன்னேறி வந்திருக்கிறது பகிரங்கமான ஆக்கிரமிப்பை நிகழ்த்தி இருக்கிறது அது இந்த நாட்டு இராணுவத்திற்கோ இராணுவ தலைமைக்கோ நாட்டு அரசியல் தலைவர்களுக்கோ தெரியவில்லை உள்ளூர் செய்தி நிறுவனங்கள் கூறிய பிறகு தான் தெரிய வந்திருக்கிறது என்ற செய்தியை பார்க்கும் போது சபிக்க பட்ட தேசத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்ற வேதனையை தருகிறது.
அந்நியநாட்டு படை உள்ளே வந்திருக்கிறதே அதை தடுக்க கூடாதா என்று தேசத்தை நேசிப்பவர்கள் கேட்டால் இந்த நாட்டை ஆளும் மந்திரி ஒருவர் சொல்கிறார் அவர்கள் ஊடுருவி வந்திருப்பது நம் நாட்டு நிலபரப்பு தான் ஆனால் உபயோகம் அற்ற நிலம் அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம் என்கிறார். இன்னொரு ஆளும்கட்சி பிரமுகரோ ஆக்கிரமிப்பு செய்துள்ள சீனா நம்மை விட வலுவான இராணுவ பலத்தை கொண்டுள்ளது எனவே தீடிரென்று வேகபட்டுவிட முடியாது என்கிறார். இவைகளை எல்லாம் கேட்கும் போது ஆண்மை உள்ள ஒரு நாட்டில் நாம் வாழ்கிறோமா? அல்லது உயிருள்ள பிணங்கள் நடமாடுகிற மயானத்தில் வாழ்கிறோமா? என்ற சந்தேகம் இயல்பாகவே வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை நமது பாதுகாப்பிற்கு எப்போதுமே பெரிய அச்சுறுத்தலாக திகழ்வது மூன்றுவித அபாயங்களே ஒன்று சீனா வழியக வரும் பொதுவுடைமை அபாயம் இரண்டு ஐரோப்பிய நிதிவழியாக வரும் அமெரிக்க அபாயம் மூன்றாது சர்வேதேச தீவிரவாதம் என்று கருதபடுகிற இஸ்லாமிய பயங்கரவாதம் இவர்கள் மூவருமே வேறுபட்ட துருவங்கள் என்றாலும் இந்தியாவை சிதைக்க வருகின்ற போது ஒருகிணைந்து ஒரே துப்பாகியாக எக்காலத்திலும் செயல்பட்டு வருவதை பல அனுபவங்களின் மூலம் கண்டிருக்கிறோம்.
உதாரணமாக நேபாளத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் மாவோ பயங்கரவாதிகள் சீனாவின் ஆசிர்வாதத்தோடு கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளை யுத்த பூமியாக மாற்றி வருகிறார்கள். அடிப்படையில் பொதுவுடைமை தீவிரவாதிகள் மதவாதிகளை தங்களோடு சேர்த்து கொள்ள மாட்டார்கள் என்றாலும் கூட நாகலாந்து மாவோ தீவிரவாதிகள் கிருஸ்தவ பாதிரிகளோடு அமெரிக்காவிலிருந்து வரும் மத மாற்றத்திற்கான கட்டுபாடற்ற நிதி உதவிக்காக கூட்டு வைத்து திரிபுரா, பிகார், அருணாச்சலபிரதேசம் போன்ற பகுதிகளில் பிரிவினைவாத வேலையை செய்து வருகிறார்கள் இதை போல இஸ்லாமிய பயங்கர வாதிகள் நாத்திகர்களின் பக்கம் போக மாட்டார்கள் என்றாலும் தெற்கு பகுதியில் நாத்திகம் பேசுகிற திராவிட பரிவாரங்களோடு கைகோர்த்து கொண்டு கூட்டாக செயல்படுகிறார்கள் இவர்களின் இந்த கூட்டு சதி அரசாங்கத்திற்கு தெரியாத விஷயம் அல்ல தெரிந்தாலும் நாட்டு நலனை யோசிக்காத தலைவர்கள் அரசாட்சி செய்வதால் தேச பக்தர்களுக்கு அடிப்படை வாதிகள் என்ற பட்டத்தை கொடுத்து தேச விரோத சக்திகளை ஓட்டுகளுக்காக அரவணைத்து செயல்படுகிறார்கள்.
காங்கிரஸ் கட்சி மட்டும் இத்தகைய விபரீத விளையாட்டுகளை நடத்துகிறது மற்றவர்கள் அப்படி அல்ல என்று கூறி விடுவது அறியாமையாகும். மற்ற கட்சியினரும் காங்கிரசை போலவே ஆட்சிக்கு வந்தால் ஒரு செயலையும் வராவிட்டால் மறு செயலையும் செய்பவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக சொல்வது என்றால் தற்போது ஆட்சியில் இருக்கும் நமது தலைவர்கள் நாட்டை பற்றி கிஞ்சித்தும் அக்கறை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்த பதவியை எப்படி பிடிப்பது என்ற ஒரே கவலையே தவிர வேறு எதுவுமில்லை.
ஒருபுறம் பாகிஸ்தான் நமது இராணுவ வீரர்களின் தலையை வெட்டி பரிசாக அனுப்புகிறார்கள் அதை பற்றிய சிறு எதிர்ப்பு கூட காட்டுவதற்கு நமது பிரதமருக்கு நேரமில்லை இன்னொருபுறம் நட்பு நாடு என்று சொல்லப்படும் இலங்கை நமது மீனவர்களை கொன்று குவிக்கிறது அதை பற்றியும் அவருக்கு கவலை இல்லை இப்போது சீனா உள்ளே நுழைந்து ஒய்யாரமாக உட்கார்ந்திருக்கிறது அதை பற்றிய அக்கறை கூட அவருக்கு வரவில்லை. இனி எப்போது அவருக்கு அக்கறை பிறக்கும் என்றும் நமக்கு தெரியவில்லை. ஒருவேளை அவர் அடுத்த முறை நாம் பிரதமராக வரப்போவதில்லை பிறகு எதற்கு அதை இன்னொரு இந்தியருக்கு விட்டு கொடுக்க வேண்டும் பேசாமல் சீனாகாரனுக்கோ பாகிஸ்தான்காரனுகோ கொடுத்துவிட்டு போகலாமே என்று நினைக்கிறாரோ என்னவோ?
ஒருவகையில் பார்க்க போனால் பிரதமரை மட்டும் குறை கூறி அர்த்தமில்லை நாட்டு மக்களையும் அக்கறையுள்ள ஜனங்கள் என்று கூறிவிட இயலாது இத்தனை நடந்த பிறகும் எங்கோ யாருக்கோ கேடு வருகிறது நமக்கென்ன என்ற போக்கில் சுயநலத்தோடு அவரவர் வேலையை பார்ப்பதாகவே தெரிகிறது. விளம்பரங்களை தேடித்தரும் போராட்டங்களில் காட்டுகிற அக்கறையை காட்ட வேண்டிய விஷயத்தில் காட்டுவதற்கு மக்களுக்கு விருப்பமில்லை. நமது தமிழ் நாட்டில் சீன ஊடுருவலுக்காக ஒரு சின்ன அசைவு கூட இல்லை. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் கைது செய்ய பட்டு விட்டார் என்றவுடன் பேருந்துகளை கொளுத்தவும் மரங்களை வெட்டி சாய்க்கவும் பாலங்களை வெடி வைத்து தகர்க்கவும் துவங்கி விட்டார்கள். தமிழகத்தின் கதை இதுவென்றால் ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படி தனித்தனியாக ஒவ்வொரு கதைகள் உண்டு. அவைகள் தான் முக்கியத்துவம் அடைகிறதே தவிர மற்றவற்றை பற்றி யாருக்கும் கவலை இல்லை.
சுவர் இருந்தால் தான் சித்திரம் நாடு இருந்தால் தான் பதவி புகழ் வாழ்வு எல்லாமே அடிமை நாட்டில் தலைவர்களாக யாரும் இருக்க முடியாது. தலைவர்கள் தலைவர்களாக இருக்க வேண்டும் என்றால் நாடு அவசியம் இன்று அந்த நாட்டுக்கே அபயம் வந்து கதவை தட்டுகிறது அதை பற்றி பேசாமல் அதற்காக ஒரு துரும்பை கூட எடுத்து போடாமல் எதுயதை பற்றியோ சிந்தித்து கொண்டு அலைகிறோம் முதலில் மக்களுக்கு விழிப்பு வந்தால் தான் தலைவர்களின் உறக்கம் தெளிவடையும். மக்கள் எப்போது விழிப்பார்கள்? அதுவரை நாடு இருக்குமா?