பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருந்தால் அவளை பெண் என்ற வார்த்தையால் அழைக்கலாம் ஆண்களிலிருந்து மாறுபட்ட உடலமைப்போடு இருப்பதனால் மட்டும் அவள் பெண்ணாகி விடுவாளா? பல பெண்களை பகுத்தாயும் போது அவர்களுக்கும் ஆண்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லையே பெண் என்றால் அன்பு. பெண் என்றால் அரவணைப்பு. பெண் என்றால் பொறுமை. பெண் என்றால் தியாகம். என்று சிறப்பித்து கூறும் விஷயங்களில் ஒன்று கூட தங்களிடம் இல்லாமல் ஐந்து அறிவுடைய மிருகங்களை விடவும் கீழாக மற்றவர்களை புரிந்து கொள்ளாமலும் மற்றவர்களின் சுக துக்கங்களை பற்றி கவலைப்படாமலும் இருக்கிறார்களே ஒரு சில பெண்கள் தங்களை மனித ஜாதி என்று கூட நம்பாமல் மாட்டுக்கொட்டகையில் வளர்க்கப்படும் அடிமை மாடுகளை போல நினைத்து கொள்கிறார்களே அடிமைத்தனத்திலேயே சுகம் காண்கிறார்களே இவர்களை பெண் உடம்போடு இருந்தாலும் பெண்ணாக ஏற்றுக்கொள்ள முடியுமா? என்ற சந்தேகம் நமக்கு பல நேரங்களில் வருகிறது.
சென்ற நூற்றாண்டின் துவக்க காலம் முதல் இந்த நூற்றாண்டு வரையிலும் ஆணும் பெண்ணும் சமம் ஆணுக்கு பெண் எந்த வகையிலும் சளைத்தவள் அல்ல என்ற கோஷங்கள் வானளாவ எழுந்து ஒலித்து வருகிறது. திட்டமிட்டே குறிவைத்தே பெண் என்பவள் தாக்கப்படுகிறாள், ஒதுக்கப்படுகிறாள், உரிமைகள் பறிக்கப்படுகிறாள் என்ற கோஷமும் வைக்கப்பட்டு வருகிறது ஆணுக்கு பெண் சமம் என்பதும் பெண்ணுக்கு உரிமை இல்லை என்பதும் ஒரு பெண்ணை உடலாகவும் அறிவாகவும் மட்டுமே கருதுவதனால் வருகிற சிந்தனையாகும். உடல் உழைப்பிலும் அறிவு உழைப்பிலும் வேண்டுமானால் பெண் ஆணுக்கு சமமானவளாக இருக்கலாம் ஆனால் ஒருபோதும் பெண் என்பவள் உணர்வுகளால் ஆணுக்கு சமமாக வரமாட்டாள் உணர்வுகளை பொறுத்தவரை ஆண்மையின் பக்கத்தில் வருகிற தகுதி கூட பெண்ணுக்கு கிடையாது.
அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி இனி வருகிற எக்காலத்திலும் சரி ஒரு ஆண்மகனின் உணர்ச்சியும் பெண்மகளின் உணர்ச்சியும் ஒன்றாகவே இருக்காது இந்த உலகை இதன் சுற்றுப்புறத்தை ஆண் பார்க்கின்ற விதம் வேறு பெண் பார்க்கின்ற விதம் வேறு அதே போலவே ஒரு ஆணுக்குள் எழும்புகின்ற உணர்சிகளும் பெண்ணுக்குள் ஊற்றெடுக்கின்ற உணர்சிகளும் இணையவே இணையாத துருவங்களை போன்றது இதில் ஆண் உணர்ச்சி மேலானது பெண் உணர்ச்சி தாழ்மையானது என்று நான் சொல்லவரவில்லை இரண்டும் இரண்டு கோணங்களில் தனித்தனியாக மேன்மை பொருந்தியது எனவே அவை இரண்டும் ஒன்றாக சமமாக இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது.
இறைவனது படைப்பில் ஆணும் பெண்ணும் சமம் என்றாலும் பன்னெடுங்காலம் மனித சமூகம் பெற்றுவரும் அனுபவத்தை அடிப்படையாக கொண்டு பார்க்கின்ற போது ஆண்களின் உணர்சிகளை விட பெண்களின் உணர்ச்சியானது புனிதத்தன்மை வாய்ந்ததாக கருதமுடிகிறது காரணம் ஆணுக்கு இல்லாத ஆணுக்கு இறைவன் கொடுக்காத “தாய்மை” என்ற உணர்ச்சி பெண் இனத்திற்கு மட்டுமே மணிமகுடமாக திகழ்வதால் அவளது உணர்ச்சி புனிதம் மிகுந்ததாக கருதப்படுகிறது இன்று அந்த தாய்மையின் சிறப்பை பற்றி தாய்மையின் உயர்வை பற்றி தாய்மையின் தெய்வீகத் தன்மையை பற்றி எண்ணங்கள் குறைந்து பிள்ளை பெறுவது என்பது ஒரு தவிர்க்க முடியாத இயற்கை உபாதை என்ற சிந்தனை அதிகரித்து வருவதாலேயே ஆண்களால் பெண்ணுக்கும் பெண்களால் ஆணுக்கும் தொல்லைகள் அதிகரித்திருக்கிறது என்று சொல்லலாம்.
இன்னும் தெளிவாக சொல்வது என்றால் சென்ற இருபது வருடங்களில் பிறந்த பல பெண்களுக்கு தாங்கள் பெண்கள் என்பதோ தங்களிடம் அபரீதமான சக்தியும் பொறுப்பும் இருக்கிறது என்பதோ தெரியவில்லை என்றே சொல்லலாம் அல்லது இளம் பெண்களுக்கு பெண்மைக்கான இலக்கணங்களை யாரும் கற்று கொடுக்கவில்லை என்று கூட கருதலாம். அதனால் தான் திருமணம் முடிந்தவுடன் தங்களது பிரம்மச்சரிய வாழ்கையிலிருந்த சுதந்திரத்திற்கும் குடும்ப வாழ்க்கையில் கிடைக்கும் சுதந்திரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் தவியாக தவித்து மற்றவர்களையும் தவிக்கவிட்டு வாழ்வின் முகவரியை தேடி கொண்டிருக்கிறார்கள்
குடும்பம் என்று வந்துவிட்டாலே பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள் அவர்களது அபிலாஷைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை என்று சிலர் கூறுகிறார்கள் இந்த கூற்றை உண்மை என்று ஏற்றுக்கொண்டாலும் குடும்பத்தில் பெண்கள் மட்டுமா? அடிமைப்படுத்த படுகிறார்கள் மற்ற அனைவரும் சுதந்திரமாகவா இருக்கிறார்கள் என்பது யோசிக்க வேண்டும் ஒருவிதத்தில் குடும்பத்தில் பெண்கள் அடிமைப்படுத்தபடுகிறார்கள் என்றால் இன்னொருவிதத்தில் ஆண்களும் அடிமைப்படுத்தபடுகிறார்கள் என்பதும் உண்மையாகும். இதை மறுக்க முடியாது. காரணம் ஒரு மனிதன் தன்னந்தனியாக இருக்கின்ற போது அவன் எந்த கட்டு திட்டங்களுக்கும் ஆட்பட்டு நடக்க வேண்டிய அவசியம் இல்லை அவனே ஒரு சமுதாய வாழ்விற்குள் நுழைந்தால் சில சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்பட்டு தான் ஆகவேண்டும் அங்கே சுதந்திரம் இல்லை என்று வாதிட்டால் அவன் காட்டுக்கு போகவேண்டியது தான்.
“குடும்பம்” என்பதும் “சமூகம்” என்பதும் பெரிய வித்தியாசம் உள்ள அமைப்பு அல்ல. ஒரு சில வேறுபாடுகளை தவிர மற்றவை அனைத்துமே ஒன்றாகவே இருக்கிறது எனவே குடும்பம் என்ற ஒரு எல்லைக்குள் வாழுகின்ற போது சில தனிப்பட்ட விருப்பங்களை தள்ளிவைக்கத்தான் வேண்டும் இது விட்டுகொடுத்து வாழ்வது என்று சொல்லலாமே தவிர அடிமைப்பட்டு வாழ்வதாக கூற முடியாது. இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அல்லது குடும்பத்தில் வாழ்ந்து பழக்கப்படாதவர்கள் அடிமைத்தனம் “ஆளுமை” என்றெல்லாம் பேசுவார்கள் அவைகள் வாதங்களுக்கு சுவையாக இருக்குமே தவிர வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டால் சுமையாகவே இருக்கும். வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம் என்று சொல்வார்கள் நமக்கு முன்னால் சிறந்த பெண்மணிகளாக வாழ்ந்தவர்களை எண்ணிப்பார்த்தால் இப்போதைய வாழ்க்கை சிக்கல்கள் தானாக விலகும்.
கடந்தகால பெண்களின் வாழ்க்கை எனும்போது நமது கண்முன்னால் விஸ்வரூபமாக எழுந்து நிற்பது சீதாதேவியின் வாழ்க்கையே ஆகும். சீதை இதிகாசகால பெண்ணாக இருந்தாலும் தற்கால பெண்ணுக்கும் பாடம் கற்றுகொடுக்கும் வாழ்க்கை முறையை வாழ்ந்தவர். அவள் வாழ்க்கை முறையை பாடமாக எடுத்துக்கொண்டால் பெண்மைக்குள் மறைந்திருக்கும் தாய்மை என்ற தெய்வம் வெளியில் வந்து சமூகம் முழுவதும் வெளிச்சம் கொடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த கூற்றை சீதையின் வாழ்வின் சில அம்சங்களோடு சம்பந்தபடுத்தி பார்த்தாலே தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
ராமனை காட்டுக்கு போ என்று அரசகட்டளை சொல்லி விட்டது அவனும் மகிழ்வோடு வனவாசம் மேற்கொள்ள தயாராகி விடுகிறான் தான் வனம் போவதை அக்னி சாட்சியாக தனது கரம்பிடித்த வாழ்க்கை துணையோடு பகிர்ந்து கொள்ள விரும்பி அவளிடம் சென்று நான் காட்டுக்கு போகிறேன் என்கிறான். அவளும் நானும் வருவேன் என்கிறாள் நீ ராஜகுமாரி அரண்மனையிலேயே வாழ்ந்து பழக்கப்பட்டவள் மேலும் பெண்மையின் மென்மை நிரம்பியவள் வனாந்திரத்தின் கல்லும் முள்ளும் அக்னி வெயிலும் உன்னை சுடும் என்கிறான் அதற்கு அவள் கண்ணிறைந்த கணவனான உன்னை பிரிந்து வாழ்வதை விடவா வனவாசம் என்னை சுட்டுவிடும் என்று கேட்கிறாள் கதையின் இந்த பகுதியை இத்தோடு நிறுத்தி வேறொரு பகுதிக்கு செல்வோம் அதுவரை இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
காட்டிற்கு வந்த சீதை அரக்கன் ராவணனால் சிறைபிடிக்கப்படுகிறாள் அசோகவனத்தில் தன்னந்தனிமையில் அரக்கிகள் மத்தியில் வாடிவதங்கி அழுதவண்ணம் துடிதுடித்து கிடக்கிறாள் அந்த நேரம் ராமன் அனுப்பிய தூதனான அனுமன் வந்து வணங்கி நிற்கிறான் அம்மா நீ பட்டதுயர் போதும் இனிமேலும் நீ துன்பப்பட வேண்டாம் என் தோள்மீது அமர்ந்துகொள் ஆகாய மார்க்கமாக பறந்து சென்று உன் நாயகனோடு உன்னை சேர்த்துவிடுகிறேன் புறப்படு அம்மா என்று வேண்டி வணங்கி நிற்கிறான். அவனை பார்த்து சீதை சிரிக்கிறாள் அன்பு மகனே வானர வீரா இந்த சிறையிலிருந்து என்னால் மீண்டுவர முடியாது என்றா நினைக்கிறாய் நான் நினைத்தால் என் கற்பின் திறத்தால் ராமனை தவிர இந்த விண்ணையும் மண்ணையும் ஒரே நொடியில் சுட்டு எரித்துவிடுவேன் அந்த ஆற்றல் என்னிடம் இருக்கிறது வனவாசம் அழைத்துவந்த மனைவியை சிறை கொடுத்துவிட்டு மீட்கமுடியாத பலஹீனன் ராமன் என்ற அவப்பெயர் என் கணவனுக்கு வரக்கூடாது அதனால் தான் பொறுமையோடு இருக்கிறேன் என்று பதில் கூறுகிறாள் இதையும் தாண்டி வேறு சம்பவத்தையும் சிந்திப்போம்
ராம ராவண யுத்தம் முடிகிறது வீர மங்கையாக சீதை யுத்த களத்திற்கு அழைத்து வரப்படுகிறாள் உலகத்தவரின் சந்தேக கண்கள் அவளை அவமானபடுத்தி விட கூடாது ஒருநாட்டின் அரசி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்பதற்கு அக்னி பிரவேசம் செய்விக்கப்படுகிறாள் நெருப்பு குடனத்திற்குள் இறங்குகிற சீதை அக்னி தேவனே துடிக்கும் வண்ணம் அவனை சுடுகிறாள் இப்போது பார்க்க வேண்டும் முதலில் கணவனை பிரிந்தால் பிரிவு துயரம் தன்னை சுடும் என்று சொன்னவள் தனது ஒழுக்கத்திற்கு பங்கம் வருவதாக இருந்தால் விண்ணையும் மண்ணையும் சுடுவேன் என்று சொன்னவள் அக்னியையே சுட்டவள் சீதை இந்த மூன்று சம்பவங்களையும் ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் சீதையின் பெருமையும் தெரியும் பெண்கள் வாழவேண்டிய முறையும் தெரியும்.
அதாவது பாசம் என்று வந்துவிட்டால் மெழுகுபோல உருகுபவளாகவும் அபாயம் என்று வந்துவிட்டால் எதையும் துணிச்சலோடு எதிர்கொள்ளும் வீராங்கனையாகவும் சமூக வாழ்வு என்று வந்துவிட்டால் சத்தியத்திற்காக தன்னை மாய்த்து கொள்ளவும் சித்தம் கொண்டவளாகவும் பெண் இருக்க வேண்டும் இப்படிப்பட்ட கோடிக்கணக்கான பெண்கள் வாழ்ந்த பூமி இந்த பாரத பூமி இந்த பூமியில் பெண்ணாக பிறந்த எவளும் ஆதி பராசக்தியின் அம்சமாக இருக்க வேண்டுமே தவிர அநாகரீக வாழ்வின் ஊற்றுக்கண்ணாக இருக்க கூடாது. ஆண்களை வெல்லப்போகிறேன் என்று கூறிக்கொண்டு பெண்மை தோற்று போய்விட கூடாது காரணம் ஆண்மையை பெண்மையால் வெல்ல முடியாது அதே போலவே ஆண்மையாலும் பெண்மையை வெல்ல முடியாது. இரண்டும் அதனதன் இடத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததே ஆகும்.