பெருமாள் கோவில் மடப்பள்ளியில் காரியங்கள் பண்ணுபவர் போல் பருத்து குடைசாய்ந்த வயிறு புடைத்துக்கொண்டு நிற்பது போன்ற மூக்கு. எப்போதுமே உருண்டுகொண்டே இருக்குமோ என்ற எண்ணத்தை வரவழைக்கும் பெரிய கண்கள். யானையின் தோள்பட்டையில் உலக்கைகளை சொருகியது போன்ற கைகள். உடல் பாரத்தை தாங்க முடியாமல் வளைந்து வளைந்து நடக்கும் குட்டை கால்கள். இது தான் தொப்பை கணேசனின் உருவம். கருப்பு என்றால் அப்படியொரு கருப்பில் நெற்றி நிறைய விபூதி பட்டையில் வெற்றிலை காவி தெரியும்படியாக பல்லை காட்டி அவர் சிரிக்கும் போது என்னவோ போல் இருக்கும். இந்த தோற்றத்தில் நீங்கள் கூட உங்கள் ஊரில் தொப்பை கணேசர்களை தினசரி பார்க்கலாம்.
அவர் பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது ஒருவேளை கணேசன் என்பது கூட அவர் பெயராக இருக்கலாம் முதன்முதலில் காலை பத்துமணி ரெயிலுக்கு எங்கள் ஊரில் அவர் வந்து இறங்கிய போது இது என்ன தொப்பை கணேசன் போல ஒரு கேசு நம்ம ஊருக்கு வந்திருக்கு என்று கோபால் சொன்னான் அன்று முதல் அவர் அனைவராலும் தொப்பை கணேசன் என்று அழைக்கப்பட்டார். எப்படியும் பத்துவருடம் இருக்கும் அவர் இங்கு வந்து ரெயிலில் இறங்கியவர் பிறகு எத்தனையோ ரயில் வந்து நின்று போனாலும் திரும்ப ஏறியதே இல்லை. எதோ மாமியார் வீட்டிலிருந்து அடித்து துரத்தபட்டவள் தாய்வீட்டுக்கு வந்து தஞ்சம் அடைந்தது போல் இந்த ஊரிலேயே இருந்துவிட்டார்.
யாரோடும் அதிகம் பேசமாட்டார் அப்படியே பேசினாலும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவார் அதுவும் நமக்கு சரிவர புரியாது. யார் என்ன வேலை சொன்னாலும் தட்டாமல் செய்வார். ஊரில் உள்ளவர்களுக்கு கல்யாணம், மஞ்சள் நீர் என்று சுப நிகழ்சிகள் நடந்தாலும் சாவு, கருமாதி என்று அசுப நிகழ்வுகள் நடந்தாலும் கணேசனை கூப்பிடாமல் இருக்க மாட்டார்கள் குடம் குடமாக தண்ணீர் எடுத்து ஊற்றுவார் எவ்வளவு பெரிய மரக்கட்டையாக இருந்தாலும் அலுக்காமல் விறகு பிளந்து போடுவார் பண்டபாத்திரங்கள் எடுத்து வருவதாக இருக்கட்டும் அவைகளை சுத்தம் செய்வதாக இருக்கட்டும் மிக நேர்த்தியாக ஒரு முகச்சுளிப்பு கூட இல்லாமல் செய்வார். பணமென்று அதிகம் எதிர்பார்க்க மாட்டார் கொடுத்ததை வாங்கி கொள்வார் ஆனால் தரமறுத்தாலும் சாப்பிடாமல் இடத்தை விட்டு நகரமாட்டார்.
தியானம் செய்பவர்கள் தன்னைமறந்து தியானம் செய்வார்கள் என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறேன் பார்த்தது இல்லை. ஆனால் தொப்பை கணேசன் சாப்பிடும்போது பார்த்தால் அங்கு இங்கு என்று கவனம் சிதறாமல் பார்வை கூட மாறாமல் சாப்பிடுவது தியானம் செய்வது போலவே இருக்கும். வாழை இலையோ, தையல் இலையோ இருப்பதில் பெரியதாக எடுத்துகொள்வார் அதில் கோபுரம் போல சாதத்தை கொட்டி அதன்மீது ஒரு குவளை சாம்பாரை அபிஷேகம் செய்து உருட்டி, உருட்டி சாப்பிடுவார் சாம்பாருக்கு எந்த அளவு சாதம் எடுத்து கொண்டாரோ அதே அளவு குழம்பு, ரசம், மோர் என்று போய்க்கொண்டே இருக்கும். அவர் ஒருவேளைக்கு சாப்பிடும் சாப்பாட்டை குறைந்தது நான் மூன்று நாளாவது சாப்பிடுவேன்.
இவ்வளவு சாப்பிட்டாலும் மனுஷன் இலையிலிருந்து எழுந்த மறுநிமிடமே அடுத்த வேலை எதாவது சொன்னால் சலிக்காமல் செய்வார் உணவுக்கு பிறகு கொஞ்சம் ஓய்வாக இருக்கவேண்டும் என்று நினைப்பதே கிடையாது. மனிதனாக பிறந்ததே உண்பதற்கும் வேலை செய்வதற்கும் என்பது போல நடந்து கொள்வார். அவரை பார்ப்பதற்கே எனக்கு அதிசயமாக இருக்கும் இப்படி ஒரு மனிதன் வாழ முடியுமா? என்று நான் பலமுறை யோசித்ததுண்டு. அவருக்கு வேலை கொடுக்கிற அளவிற்கு யார்வீட்டிலும் வேலை இல்லை என்றால் அவர் கதை மிகவும் கந்தலாகிவிடும். யாரிடமும் போய் பசிக்கிறது சோறுபோடு என்று கேட்கமாட்டார் எத்தனை நாளானாலும் அம்மன் கோவில் அரசமரத்து மேடையில் படுத்து தூங்குவதும் தாகம் வந்தால் குழாயில் வருகிற தண்ணீரை பிடித்து குடிப்பதுமாக இருப்பார்.
அவரை பார்த்த மாத்திரத்திலேயே இவருக்கு கொஞ்சம் மூளைவளர்ச்சி போதாது என்று சொல்லிவிடலாம் அரைகிறுக்கான ஒரு மனுஷனை கேலி கிண்டல் செய்து விளையாட்டு பொருளாக பார்ப்பது தான் சமூகத்தின் இயல்பு. ஆனால் தொப்பை கணேசனை பொறுத்தவரை நாங்கள் யாரும் அவரை கேலி பேசுவதே கிடையாது சின்ன பசங்க கூட அவரை பார்த்தால் ஒதுங்கி போவார்களே தவிர கிண்டலாக விளையாட மாட்டார்கள். அவரும் யாரும் தன்னை ஒரு வார்த்தை சொல்லும்படி நடந்து கொண்டது இல்லை
அவர் தூங்குவது தங்குவது எல்லாமே அம்மன் கோவில் மண்டபத்தில் தான் காலையில் எப்போது விழிப்பார் என்று யாருக்கும் தெரியாது இரவில் அவர் உறங்குவாரா என்பது கூட சந்தேகம் தான். ஒருநாள் விடியற்காலை மூன்று மணிக்கு முதல் பஸ் பிடித்து நாகர்கோவில் போவதற்காக பிள்ளையார் கோவில் பக்கம் போனேன் எங்கள் ஊரில் பஸ்ஸ்டான்ட், கடைத்தெரு எல்லாமே பிள்ளையார் கோவில் அம்மன்கோவில் மைதானம் தான் அன்று அப்படி மூன்றுமணிக்கு போனபோது கணேசன் அரசமரத்திலிருந்து விழுந்துகிடக்கும் சருகுகளை பொறுக்கி ஒரு இடத்தில் கும்பலாக போட்டுக்கொண்டிருந்தார் அவர் இதைபோல எதையாவது செய்தவண்ணம் தான் இரவு நேரங்களில் பலர் பார்த்திருக்கிறார்கள்.
ஆனால் மனுஷன் காலை ஐந்துமணிக்கெல்லாம் இரவு முழுவதும் நிம்மதியாக உறங்கியவர் போல கிணற்றில் தண்ணீர்வாரி குளித்துவிட்டு ஈர நெற்றியில் பட்டையாக விபூதியை சாற்றி சற்று பழுப்பேறி இருக்கும் கிழிந்த வேட்டியை மார்பு வரை தூக்கி கட்டிக்கொண்டு உட்கார்ந்து விடுவார் காலையில் யாராவது வேலைக்கு கூப்பிட்டால் அன்று காலை உணவு நிச்சயம். இல்லை என்றால் வேலை வரும்வரை காத்திருக்க வேண்டியது தான் பரிதாபப்பட்டு யாரவது பணம் கொடுத்தால் வாங்கி வைத்திருப்பார் அதை வைத்து இட்லி தோசை வாங்கி சாப்பிடலாமே என்று நான் யோசித்ததுண்டு. ஆனால் இதுவரை அவர் கடைப்பக்கம் போனதையோ பொருள் ஏதாவது வாங்கியதையோ யாரும் கண்டதில்லை.
உறங்குவதில்லை வேளா வேளைக்கு உண்ணுவது இல்லை கையில் காசு இருந்தால் கூட எதுவும் வாங்கி அனுபவிப்பதில்லை ஒரு பீடி, சிகரெட் கூட பயன்படுத்துவதில்லை. இவருக்கும் ஒரு மிருகத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது உணர்வுகளே இல்லாமல் கடவுள் ஒரு ஜீவனை படைத்துவிட்டானே இது என்ன படைப்பு இப்படி படைப்பதை விட படைக்காமல் இருந்திருக்கலாமே என்று நான் பலமுறை அவரை பற்றி யோசித்ததுண்டு ஆனால் அந்த யோசனை எல்லாம் பெரிய தவறு என்பதை ஒரு நாள் தெரிந்துகொண்டேன்.
அன்று தங்கம்மை பாட்டி செத்துப்போய்விட்டார்கள் பாட்டிக்கு என்று சொந்தபந்தங்கள் ஏதும் இல்லை ஏறக்குறைய பாட்டியும் தொப்பை கணேசனும் ஒன்றுதான் பாட்டிக்கு வயதாகிவிட்டது அதனால் வேலை செய்ய முடியாது ஆனாலும் பசி எடுத்தால் நாலு வீடு கேட்டு வயிற்றை நிரப்பிக்கொள்ளும். ஊர் கதைகளை பேசுவதும் தெரிந்தவர்களை குசலம் விசாரிப்பதும் பாட்டியின் வழக்கங்களில் ஒன்று. நல்லவேளை நோய் அதுஇது என்று வந்து பாடுபட்டு சாகாமல் தூக்கத்திலேயே நிம்மதியாக போய்சேர்ந்து விட்டது ஊர் ஜனங்கள் கூடிவிட்டார்கள் பாட்டி அநாதை பிணம் ஊர் பொதுவில் தான் அடக்கம் செய்ய வேண்டும் அவரவர் கையில் உள்ள காசுகளை கொடுங்கள் என்று இளைஞர்கள் கேட்டார்கள்.
பணம் எடுத்துவருவதாக சொல்லி வீட்டுக்கு போன ஜனங்களில் முக்கால்வாசி பேர் திரும்ப வரவில்லை அப்படியே வந்தவர்களும் நாலணா எட்டணா என்று தந்தார்களே தவிர உருப்படியாக எதுவும் தரவில்லை என்ன செய்வது ஒரு மாலை வாங்கவேண்டும் என்றால் கூட ஐம்பது ரூபாய் செலவாகுமே என்று யோசித்துகொண்டிருந்தோம்
பாட்டியின் பிணத்தின் பக்கத்தில் முழங்கால் கட்டி உட்கார்ந்திருந்த தொப்பை கணேசன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென்று எங்கோ எழுந்து போனார் ஒரு பத்து நிமிடத்தில் திரும்பி வந்திருப்பார் வந்தவர் தனது மடியை அவிழ்த்து எங்கள் முன்னால் கொட்டினார் ஐந்தும், பத்துமாக நிறைய பணம் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது இருக்கும்.
அத்தனை பணத்தையும் என் கையில் வாரி கொடுத்தவர் ஐயோ அம்மே என்று கிழவியின் மேல் விழுந்து அழுதார். அந்த அழுகைச்சத்தம் அவர் தொண்டையிலிருந்து வரவில்லை தொப்புளுக்கு கீழே அடிவயிற்றிலிருந்து கிளம்பி வாய்வழியாக தாய்ப்பசுவை இழந்துவிட்ட ஒரு கன்றின் ஓலமாக வெளியே வந்தது
இவரையா உணர்ச்சி இல்லாத மரக்கட்டை என்று நினைத்தேன் அப்படி இவரை நினைத்த நான் அல்லவா உணர்சிகளை புரிந்துகொள்ள முடியாத மரக்கட்டை இவரை போன்ற உணர்ச்சி உள்ள மனித ஜென்மங்கள் வாழ்வதனால் தான் மழை வருகிறது என்பதை நான் மறந்து போனேனே .