மனிதனுக்கு பெயர் என்பது மிகவும் முக்கியம் ராமச்சந்திரன் என்று சொன்னவுடனேயே நமது கண்முன்னே தெரிவது தசரதனின் குமாரன் ராமனோ இல்லையோ நமக்கு தெரிந்த நெருங்கி பழகிய சொந்தக்காரனான ராமச்சந்திரனின் முகம் தான் நினைவுக்கு வரும். அதன்பிறகு தான் எந்த ராமச்சந்திரன் என்று தெரிந்துகொள்ள முற்படுவோம். அந்த அளவு பெயர் என்பது ஒரு மனிதனோடு பின்னி பிணைந்து இருக்கிறது பெயர் இல்லாமல் எதையும் நம்மால் நினைவில் வைத்துகொள்ளவும் முடியாது அடையாளம் தெரிந்து கொள்ளவும் இயலாது.
பெயருக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருந்தவுடனே சிலர் ஒரு மனிதனின் வாழ்வையே பெயர் தான் நிர்மாணிக்கிறது ஒருவனுக்கு நல்லதொரு பெயர் அமைந்துவிட்டால் அவன் வாழ்க்கையின் உச்சத்திற்கே சென்றுவிடுவான் என்று சொல்கிறார்கள். ஆனால் பெயர்களை பொறுத்தவரை அது எந்தநாட்டு பெயராக இருந்தாலும் எந்த மதத்து பெயராக இருந்தாலும் அல்லது மதத்தின் நிழல் கூட தீண்டாத பெயராக இருந்தாலும் அவைகளுக்கு தனிப்பட்ட சக்தி இருப்பதாகவோ அந்த பெயர் மட்டுமே ஒருவனின் வாழ்க்கையை தீர்மானிப்பதகவோ கருதிவிட முடியாது.
பன்னீர்தாஸ் என்ற பெயரை நிறையப்பேர் வைத்திருக்கிறார்கள் அந்த பெயருடைய பலரும் பலநிலையில் இருப்பவர்களாக இருக்கிறார்களே தவிர அனைவருமே வி. ஜி. பன்னீர்தாஸ் போல் புகழ்பெற்று விடவில்லை. இதிலிருந்தே ஒரு பெயருக்கும் ஒருவருடைய வாழ்க்கைக்கும் சம்மந்தம் இல்லை என்று மேலோட்டமாக நாம் முடிவு செய்யலாம். ஆனால் நமது அனுபவத்தை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு கொண்டுசென்று சிந்தித்தோம் என்றால் நேற்றுவரை ஒரு பெயரில் இருந்தவன் இன்று வேறொரு பெயரை பெற்றவுடன் வாழ்வில் மாறி இருப்பதையும் தேறி இருப்பதையும் மறுக்க முடியாத சூழலில் உள்ளோம். எனவே பெயரிலும் கூட எதோ ஒரு காந்தசக்தி இருக்க வேண்டுமென்று தெரிகிறது.
ஒரு மனிதனுடைய பெயர் அவன் பிறந்தபிறகு உருவாக்கபடுகிறது என்று நாம் நினைக்கிறோம் ஆனால் நாடிஜோதிடத்தை உருவாக்கிய ரிஷிகளில் பலர் அப்படி நினைக்கவில்லை ஒருவன் பிறப்பதற்கு முன்பே அவன் கருவில் இருக்கும் போதே அவனுடைய பெயர் தீர்மானிக்க படுகிறது என்று கருதுகிறார்கள். இன்னாருக்கும் இன்னாருக்கும் பிறக்கும் இவனுக்கு இந்த பெயரை வைக்கிறேன் என்று பிறகு யாராவது பெயர் சூட்டுவது முன்பே தீர்மானிக்கப்பட்ட பெயரை தான் என்பது அவர்களின் கருத்து.
இந்த கருத்தை தவறு என்று நம்மால் ஒதுக்கிவிட முடியவில்லை ஒரு குழந்தை பிறக்கிறது பிறந்தவுடன் அந்த குழந்தைக்கு இன்ன பெயர் வைக்கவேண்டும் என்று தாயோ தகப்பனோ நினைக்கிறார்கள் ஆனால் சம்மந்தமே இல்லாத வேறு யாரோ வந்து ஒரு பெயரை சூட்டிவிடுகிறார்கள் அதுவும் காலபோக்கில் நிலைத்து விடுகிறது. இன்னும் சிலருக்கு பிறக்கும் போது வைத்த பெயர் வளர்ந்து பெரியவராக வருவதற்கு முன்பே மாறிவிடுகிறது. சம்மந்தமே இல்லாத பெயர்களில் அவர்கள் அழைக்கபடுவார்கள்.
நாகரீகம் கட்சி கொள்கை மதமாற்றம் போன்றவற்றாலும் பெயர்கள் மாற்றபடுகின்றன பெயர் மாற்றத்தில் நம்பிக்கையுடையவர்களும் இலக்கிய உலகில் புனைபெயரோடு வலம்வர வேண்டும் என்று விரும்புகிறவர்களும் பெயர்களை மாற்றி கொள்கிறார்கள். ஒருசிலர் தங்களது பெயரை அடிக்கடி மாற்றி கொள்வதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். இப்படி ஆயிரம் முறை பெயர்களை மாற்றினாலும் அனைத்து பெயர்களுமே நிலைத்து நிற்பதில்லை ஒரு மனிதனுக்கு அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரே ஒரு பெயர் மட்டுமே கடைசிவரை நிலைத்து நிற்கும் அந்த பெயரை வைத்தே அவன் அழைக்கப்படுவான் அப்படி அழைக்கப்படும் பெயரே அவன் பிறப்பதற்கு முன்பே அவனுக்கென்று தீர்மானிக்கப்பட்ட பெயராக இருக்கும்.
அப்படி தீர்மானிக்கப்பட்ட பெயரை ஒருமனிதன் பெறவேண்டும் அப்படி பெற்றால் தான் அந்த பெயர் அவனுக்கு நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தி மன வளர்ச்சியையும் அறிவு வளர்ச்சியையும் கொடுக்கும். ஆனால் துரதிருஷ்டவசமாக பலருக்கு தீர்மானிக்கப்பட்ட பெயர்கள் அதிர்ஷ்டகரமாக அமைவதில்லை. அதிர்ஷ்டபெயர் அமையவில்லையே என்பதற்காக பெயர்களை மாற்றி கொண்டே இருபதிலும் எந்த அர்த்தமும் கிடையாது.
சிலர் எண்கணித ஜோதிடப்படி பெயர்களில் உள்ள சில எழுத்துகளை கூட்டியோ குறைத்தோ மாற்றி அமைத்து கொள்கிறார்கள் அதுவும் சரியான வழக்கம் என்று சொல்லிவிட முடியாது. பெயர் என்பது பிறர் நம்மை அழைப்பதற்கே அப்படி அவர்கள் அழைக்கும் போது என்ன ஒலி அலை வருகிறதோ அந்த அலைதான் நமது பெயருக்குரிய அதிர்வாகும். அந்த அதிர்வை எழுதும் போது மட்டும் எழுத்தை மாற்றிபோட்டு எழுதுவதினால் வரப்போவதில்லை.
எனவே பலர் நம்மை எப்படி அழைக்கிறார்களோ சமுதாயத்திலும் குடும்பத்திலும் நமது பெயர் எப்படி நிலைத்திருக்கிறதோ அந்த பெயர் தான் நமக்குரிய பெயராகும். அதைவிட்டு விட்டு வேறு பெயர்களை மாற்றி அமைத்தால் நமது வாழ்க்கையும் மாறும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. எனவே பெயர்களை மாற்றுவதை விட்டு விட்டு நமக்கென்று அமைந்த பெயரை வலுவாக மாற்ற முயற்சிக்க வேண்டும் அது எப்படி பெயரை வலுவாக மாற்றுவது? என்று பலர் யோசிக்கலாம் அதற்கு ஒரு எளிய வழி இருக்கிறது.
மந்திரங்கள் என்று சொல்கிறோமே அவைகளும் சாதாரணமான வார்த்தைகளால் உருவானவைகளே ஆகும். மற்ற வார்த்தைகளுக்கு இல்லாத சக்தி மந்திர வார்த்தைகளுக்கு கிடைப்பது எப்படி? அந்த வார்த்தை பலராலும் பல நேரங்களிலும் பலமுறை திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது. ஒருவார்த்தை பலமுறை உச்சரிக்கப்படும் போது அதில் ஒருவிதமான சக்தி உருவாகுகிறது அந்த சக்தி தான் பிரணவத்தில் உள்ள நாத சக்தியாகும். நமது பெயரையும் மந்திரங்கள் போல் மீண்டும் மீண்டும் சொல்வதினால் அதற்கு ஒரு சக்தி கிடைக்கிறது.
உதாரணமாக அரசியல் தலைவர்கள் மற்ற துறை பிரபலங்களின் பெயர்களை சொல்லும்போதே ஒருவித அதிர்வுகள் நமக்கு தெரிகிறதே அது ஏன்? அவர்கள் பெயரை தினசரி பலநூறு நபர்கள் பலநூறு தடவை சொல்கிறார்கள். அதனால் அதனுடைய அதிர்வலைகள் விரிவடைந்து அவர்கள் பெயர்கள் ஒரு மந்திரம் போல ஆகிவிடுகிறது. நமது பெயரும் மந்திரம் போல் ஆனால் நமது வாழ்விலும் மலர்ச்சியும் தெளிவும் தானாக ஏற்படும்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்? செய்யவேண்டிய காரியம் மிகவும் சுலபமானது தினசரி நம் பெயரையே மனதிற்குள் மீண்டும் மீண்டும் நாமே உச்சரிக்க வேண்டும். எவ்வளவு அதிகமாக உச்சரிக்கிறோமோ அவ்வளவு விரைவில் நமது பெயர் சக்திமிகுந்ததாக மாறும். அப்படி மாறினால் மட்டுமே பெயருக்கு மகத்துவம் ஏற்படும் அதைவிட்டு விட்டு மாதத்திற்கு ஒரு பெயர் என்று மாற்றி கொண்டே போனால் எந்த பயனும் இல்லை.