குருஜி அவர்களுக்கு வணக்கம் நான் மிகவும் இக்கட்டான சூழலில் இந்த மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்புகிறேன் தயவுசெய்து உடனடியாக பதில்தருமாறு வேண்டுகிறேன். சென்ற வாரத்தில் இரவு ஒருமணிக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன் என் வீட்டு வாசலில் வந்த குடுகுடுப்பைக்காரர் இந்த வீட்டுக்காரர் சென்றமாதம் நீதிமன்றம் போய்வந்திருப்பார் அவருக்கு இன்னும் இரண்டுமாதத்தில் ஆயுள் முடியப்போகிறது என்று சொன்னார். அதை கேட்டதிலிருந்தே எனக்கு நிம்மதி இல்லை காரணம் சென்றமாதத்தில் நான் சொத்து விஷயமாக ஒரு வழக்கிற்கு நீதிமன்றம் செல்லவேண்டிய நிலைவந்தது போய்விட்டு வந்தேன் அது அந்த குடுகுடுப்பைக்காரர் மிகச்சரியாக கூறியதனால் என் மரணமும் அப்படியே நிகழ்ந்து விடுமோ என்று அஞ்சுகிறேன் ஆயிரம் தைரியமாக பேசினாலும் சாவு வரப்போகிறது என்றவுடன் சராசரி மனிதனால் அச்சப்படாமல் இருக்க முடியுமா? என்னால் வேலைகளை கவனிக்க முடியவில்லை மனைவி குழந்தைகளோடு சந்தோஷமாக பேசமுடியவில்லை தயவு செய்து அவர் கூறியபடி நடக்குமா? அதை தடுக்க ஏதாவது பரிகாரம் உண்டா? என்பதை எனக்கு சொல்லி என்னை காப்பாற்றுமாறு பணிவோடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு
ரகுநாதன்
மணப்பாறை
முதலிலேயே ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன் உங்கள் ஜாதகப்படி உங்கள் ஆயுளுக்கு எந்த தோஷமும் இல்லை பாதகமும் இல்லை இன்னும் முப்பது வருடங்கள் நன்றாக வாழ்வீர்கள் என்று உறுதியாக சொல்லலாம். எனவே மனதில் உள்ள தேவையற்ற பயத்தை முதலில் அப்புறப்படுத்துங்கள். ஜாதகத்தின் நிலை இப்படி இருக்கும் போது குடுகுடுப்பைக்காரன் அப்படி சொல்வதற்கு என்ன காரணம் என்று நீங்கள் கேட்கலாம்.
பொதுவாக குடுகுடுப்பைக்காரர்களை ஜாமகோடங்கி என்று அழைப்போம். ஜாமகோடங்கி என்றால் “இரவு நேரத்தில் குறிசொல்பவர்” என்பது பொருளாகும். இந்த கோடங்கிகள் இரவு நடுநிசிக்கு மேல் மயானத்திற்கு சென்று தன்னை நிர்வாணப்படுத்திகொண்டு காளிமாதாவின் அம்சமான ஜக்கம்மாதேவிக்கு பூஜை செய்வார்கள் அப்படி பூஜை செய்து தேவியை தன்னோடு அழைத்து கொண்டு கிராமங்களில் உள்ள தெருக்களில் வருவார்கள் சில வீடுகளுக்கு முன்னால் வருகிற போது ஜக்கம்மாள் அவருக்கு சொல்கிற சங்கதிகளை உடுக்கை சத்தத்துடன் பாடலாக பாடி குறி சொல்வார்.
என் அனுபவத்தில் குடுகுடுப்பைக்காரர்கள் சொல்லுகின்ற கடந்த கால விஷயங்கள் மிக சரியாக இருக்கும் எதிர்காலத்தை பற்றி அவர்கள் கூறுவது எதுவும் நடந்ததாக எனக்கு தெரியவில்லை ஆனால் சில பெரியவர்கள் அந்த காலத்தில் குடுகுடுப்பைகாரர்கள் நிஜமாகவே மந்திர தந்திரங்களில் தேர்ச்சி பெற்று இருந்தார்கள். அதனால் அவர்கள் சொல்கிற முக்கால பலன்களும் தப்பாமல் நடந்தது இப்போது அவர்களின் மந்திர பயிற்சி சிறப்பாக இல்லை அதனால் பாதி நடக்கிறது மீதி நடப்பதில்லை என்கிறார்கள்.
இன்றைய கோடங்கிகளில் பலர் மக்களின் அச்சத்தை தவறுதலாக பயன்படுத்தி காசு பண்ணுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் ஒருசிலர் பரிகாரம் செய்யும் நேரத்தில் பெண்களிடம் உள்ள தங்கநகை மற்றும் விலை உயர்ந்த பொருள்களை களவாடுவதிலும் கவனம் செலுத்துகிறார்கள். கள்ளம் கபடம் இல்லாத அந்த நாடோடி இன மக்களை கெடுத்ததில் நாகரீக மனிதர்களாகிய நமக்கு நிறைய பங்குண்டு அது வேறு விஷயம். அதை இங்கு பேசவேண்டாம். எனவே கோடங்கியின் தகவல்களை வைத்து அச்சப்படவேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் காலனையே காலால் உதைத்த சிவபெருமானை வழிபடுங்கள் மரணபயம் விலகும்.