ஐயா நான் இலங்கையை சேர்ந்தவன் கடந்த பத்துவருடமாக கனடா நாட்டில் வாழ்ந்து வருகிறேன் என் சொந்த ஊரில் அம்மாவும் அண்ணனும் இருந்தார்கள் கடந்த வருடம் என் அண்ணன் தீடிரென்று மாரடைப்பால் காலமாகி விட்டார் என் தாயார் மட்டும் அங்கே தனியாக வாழ்கிறார்கள் அவர்களை என்னோடு அழைத்து கொள்ள விரும்புகிறேன் ஆனால் அதற்கான முயற்சிகளை நான் எடுக்கும் போதெல்லாம் ஏதாவது ஒருவகையில் தடை ஏற்படுகிறது அதற்கு என்ன செய்வது என்று புரியவில்லை என் தாய் என்னோடு இருப்பார்களா? அல்லது நான் அவர்களோடு இருப்பதற்கு நாடு திரும்பட்டுமா? என்பதை என் ஜாதகத்தை பார்த்து சொல்லும் படி தாழ்மையோடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
சிவதாசன்,
கனடா.
பெற்றவர்கள் எப்படி போனால் என்ன நான் நன்றாக வாழ்கிறேனா அதுமட்டும் போதும் என்று நினைப்பவர்கள் மத்தியில் தாயாரை உங்களோடு வைத்துகொள்ள நினைக்கிறீர்களே அதற்கு முதலில் பாராட்ட வேண்டும் அத்தோடு அவர் வர முடியாவிட்டாலும் நான் அவரோடு சென்று இருக்கட்டுமா என்று கேட்கிறீர்களே அதிலிருந்தே நீங்கள் சிறந்த மனிதன் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த நல்ல எண்ணத்திற்கே கடவுள் உங்களை கைவிட மாட்டான் என்று சொல்லலாம்.
ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்திற்கு நான்காம் இடத்திற்குறியவனுடன் அல்லது நாங்காமாதி நின்ற ராசிக்கு திரிகோணத்தில் சந்திரன் அல்லது ராகு இருந்தால் அவரது தாயார் கண்டிப்பாக அயல்நாட்டு பயணத்தை மேற்கொள்வார் உங்கள் ஜாதகமும் அப்படியே அமைந்துள்ளது அதனால் உங்களோடு உங்கள் அம்மா கண்டிப்பாக வருவார் இன்னும் மூன்று மாதங்கள் பொறுத்திருங்கள் நீங்கள் நினைத்தது நடக்கும்.