ஐயா எனக்கு ஐம்பது வயது பூர்த்தியாகிறது இதுவரை நான் வாழ்நாள் முழுவதுமே கஷ்டப்பட்டிருக்கிறேன் தோல்விகளை சந்தித்திருக்கிறேன் என்று மட்டுமே சொல்லலாம். அமைதியான முறையில் சிந்தித்து பார்த்தால் அற்ப விஷயங்களில் கூட நான் இன்பத்தை அனுபவித்ததில்லை என்று சொல்லலாம். இது ஒரு மனிதனின் வழக்கமான புலம்பல் அனைவருமே இப்படி தான் சொல்கிறார்கள் என்று நீங்கள் நினைக்க வேண்டாம் நான் கூறுவது அனைத்தும் சத்தியமான உண்மைகளே! என்ஜாதகத்தை பார்த்த பல ஜோதிடர்கள் உங்களுக்கு சகட தோஷம் இருக்கிறது உங்கள் தலையெழுத்து அவ்வளவு தான் என்று கூறி விட்டார்கள் இந்த தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு வழியேதும் இல்லையா? சுவாமிஜி அவர்கள் தயவு செய்து விளக்கம் தாருங்கள்
இப்படிக்கு
குணசேகரன்
தஞ்சாவூர்
வாழ்நாள் முழுவதுமே துன்பத்தை அனுபவிக்கிறேன் என்று நீங்கள் கூறுவதை நான் மறுக்கவில்லை நம்பாமலும் இல்லை. தனக்கு ஏற்படுவது இன்பமா துன்பமா என்பதை அறிந்து கொள்ள முடியாத எத்தனையோ மனிதர்கள் உலகில் உண்டு சிலர் சிரிக்க வேண்டிய நேரத்தில் அழுது கொண்டிருப்பார்கள் அழுவதற்காக சிரிப்பார்கள் மிகச்சிலர் மட்டுமே அழுகையை முழுமையாக வரமாக பெற்று இருப்பார்கள் அவர்களில் நீங்களும் ஒருவர். என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
சகட தோஷம் கொண்டு பிறந்தவன் மந்திரியாக ஆனால் கூட பத்து நாளில் பதவியை பறிகொடுத்து விடுவான் என்று சொல்வார்கள் அதை நான் நேரடியாகவும் பார்த்திருக்கிறேன் எனக்கு தெரிந்த ஒரு மனிதர் ஒரு அரசியல் கட்சிக்காக வெகுநாள் உழைத்து தனது வருவாய் அனைத்தையுமே இழந்திருக்கிறார். அவரது உழைப்பை மதித்து கட்சியும் தேர்தல் காலத்தில் நல்ல வாய்ப்பை கொடுத்தது ஆனால் அவரது துரதிருஷ்டம் அதை பயன்படுத்த முடியாத நிலை ஆகிவிட்டது.
விறகு வெட்டி கஷ்டப்படுகிறானே என்று ஒரு தொழிலாளிக்கு சந்தன காட்டையே எழுதி வைத்தானாம் அரசன் ஆனால் அந்த தொழிலாளி சந்தன காட்டின் மகத்துவத்தை அறியாமல் சந்தன மரத்தை வெட்டி கட்டைகளை எரித்து கரித்துண்டுகளை விற்று பிழைப்பு நடத்தினானாம் இப்படிப்பட்ட அப்பாவிகளை கூட சகட தோஷத்தின் சகபாடிகள் என்று கூறலாம்.
ஒருவரது ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் சந்திரன் இருந்தாலும் குரு நின்ற ராசிக்கு ஆறு, எட்டு, பனிரெண்டு ஆகிய இராசிகளில் சந்திரன் இருந்தாலும் அந்த ஜாதகத்தை சகட தோஷ ஜாதகம் என்று கூறுவார்கள். இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்தோம் என்றால் பலவிதத்திலும் அவர்கள் சோதனை மிகுந்தவர்களாகவே இருப்பதை காணலாம்.
சகட தோஷம் சர்க்கரை நோய் போன்றது வந்து விட்டால் போகாது வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிடுவது போல சகட தோஷத்திற்கு தினசரி பரிகாரம் செய்ய வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே பூரண விடுதலை உண்டு . தினசரி பரிகாரம் என்றவுடன் அதை செய்ய முடியுமா? முடியாதா? என்று கவலைப்படவேண்டாம் மிக சுலபமாக செய்து விடலாம்.
ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினசரி காலையில் நூற்றி எட்டுமுறை சொல்லி வாருங்கள் அமாவாசை தோறும் பசுவிற்கு பச்சரிசி தவிடு, மற்றும் அகத்திக்கீரை கொடுத்து வாருங்கள் சகட தோஷம் உங்களை கண்டாலே ஓடி ஒளிந்து கொள்ளும் துன்பத்தை விலக்கி இன்பமாக வாழலாம்.