குருஜி அவர்களுக்கு வணக்கம். எனக்கு வாழ்க்கையில் சில சிக்கல்கள் இருக்கிறது அவற்றை விலக்கிக்கொள்ள எங்கள் ஊரிலிருக்கும் ஜோதிடர் ஒருவரை அணுகினேன் அவர் நவக்கிரகங்களை தொடர்ந்து வழிபட்டு வாருங்கள் உங்கள் கஷ்டம் விலகும் என்று சொன்னார் என்னென்ன நாட்களில் அந்த வழிபாட்டை செய்ய வேண்டுமென்று அவரிடம் கேட்டதற்கு செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களில் சுற்றி வாருங்கள் என்று சொன்னார் நான் அப்படி செய்யும் போது சிலர் இந்த நாட்களில் நவக்கிரகங்களை வழிபட கூடாது வாரம் முழுவதுமே வழிபட வேண்டும் என்கிறார்கள் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை தயவு செய்து விளக்கம் தாருங்கள்.
இப்படிக்கு
கமலவல்லி
கும்பகோணம்
சாமி கும்பிட வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றிவிட்டால் அதை இந்த நாளில் தான் செய்ய வேண்டும் அந்த நாளில் செய்யக்கூடாது என்ற வரைமுறைகளை வகுத்துக்கொண்டு செயல்படக்கூடாது தோன்றிய அந்த நாளிலேயே செய்துவிட வேண்டும் நல்லது செய்வதற்கு நாளும் கிழமையும் அவசியம் இல்லாதது ஆனால் சில பரிகாரங்களுக்கு என்று வருகின்ற போது அதற்கென்று உள்ள விதி முறைகளை மிக கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் அவைகளில் நமது சொந்த விருப்ப வெறுப்புகளையோ புகுத்தக்கூடாது அது மிகவும் தவறு.
குறிப்பிட்ட ஒரு கிரகத்தை மட்டுமே வழிபட வேண்டுமானால் அதற்குறிய நாளில் வழிபட்டால் போதும் ஒன்பது கிரகங்களையும் வழிபட வேண்டுமானால் அந்தந்த கிரகங்களுக்குறிய நாட்களை கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை இறைவழிபாடு நடத்துவதற்கு என்று நாம் வகுத்திருக்கும் சில நாட்களில் மட்டுமே செய்தால் போதுமானது பொதுவாக இந்துக்களாகிய நமக்கு குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளை வழிபாட்டிற்கு ஏற்ற நாட்களாக நமது முன்னோர்கள் காட்டி இருக்கிறார்கள் அந்த நாளில் வழிபடுவது சகல விதத்திலும் சிறந்ததாகும். எனவே நீங்கள் உங்கள் ஜோதிடர் சொன்னதை கடைபிடித்தாலே போதுமானது என்பது என் கருத்து.