எனக்கு சிறிய வயது முதற்கொண்டே ஜோதிடத்தின் மேல் ஈர்ப்பு உண்டு. நான் ஜோதிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் அதற்கு அடிப்படையாக என்னென்ன விஷயங்களை நான் தெரிந்து கொள்ள வேண்டும்?
இப்படிக்கு
தர்மபிரகாஷ்
கிருஷ்ணகிரி
ஜோதிடம் என்பதை சாஸ்திரங்கள் வரிசையில் நமது முன்னோர்கள் வைத்து போற்றினாலும் ஜோதிடம் என்பது என்னை பொறுத்தவரை நல்லதொரு கலை என்பேன் காரணம் கலை என்றாலே மனிதர்களுக்கு மகிழ்ச்சி தருவதும் சிறந்த முறையில் வழிகாட்டுவதும் வாழ்க்கையை செம்மை படுத்துவதும் ஆகும். அதை ஜோதிடம் மிக நன்றாகவே செய்கிறது.
வாழ்க்கையில் துன்பப்பட்டு துயரப்பட்டு மனவேதனையால் மரணத்தை ஏற்று கொள்வதை தவிர வேறு வழியில்லைஎன்ற நிலைக்கு வந்து விட்டவர்களை அரசியல் சித்தாந்தங்கள் காப்பாற்றாது தத்துவ நூல்கள் கரை சேர்க்காது சுய முன்னேற்ற ஏடுகளும் கூட ஒதுங்கி விடும். ஆனால் தெருவோரத்தில் மரத்தடியில் வானமே கூரையாகக்கொண்டு உட்கார்ந்திருக்கிறானே கிளி ஜோசியன் அவன் கையில் இருக்கின்ற சிறிய புத்தகம் பலரையும் காப்பாற்றி விட்டிருக்கிறது.
அதாவது தளர்ந்து போன மனிதனுக்கு நம்பிக்கை கொடுத்து உன்னாலும் வாழ முடியும் இன்னும் சிறிது காலம் பொறுமையோடு காத்திரு காலம் கனியும் கடவுள் கை கொடுப்பார் நிச்சயம் வெல்லலாம் என்று ஆறுதலும் தேறுதலும் தருவது ஜோதிடம் ஒன்றே ஆகும். ஆனால் இந்த ஜோதிடத்தை கற்ற சிலர் மக்களை அச்சபடுத்தி பார்ப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள் அவர்களிடம் கேட்டால் நாங்கள் எச்சரிக்கை செய்கிறோம் அது தவறா என்று கேட்கிறார்கள் எச்சரிப்பது தவறல்ல அதே நேரம் எச்சரிப்பதாக நினைத்து கொண்டு மற்றவர்களை எரித்து விடுவது பெரிய பாவம்.
ஒரு ஜோதிடன் முதலில் தன்னை நம்புவனாக தான் கற்ற கல்வியை நம்புவனாக அனைத்திற்கும் மேலாக இறைவனையும் முன்னோர்களையும் நம்புவனாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே அவனால் துணிச்சலான விஷயங்களை தேவைப்படும் போது சொல்லி மற்றவர்களை கரை சேர்க்க முடியும் அதற்கு மாறாக தன்மீதே நம்பிக்கை இல்லாதவன் பிறருக்கு வழிகாட்ட போகிறேன் என்றால் குருடனும் குருடனும் குருட்டாட்டம் ஆடி குழி விழுந்தாரடி என்று பட்டினத்தார் பாடுவாரே அதுபோல ஆகிவிடும்.
ஜோதிடம் சொல்வதற்கு அறிவு மட்டும் இருந்தால் போதுமானது அல்ல மனித இதயத்தை படிக்க கூடிய ஆற்றலும் உணர்வுகளை உள்வாங்கி கொள்ளும் இயல்பும் இருக்க வேண்டும். நாளை காலையிலேயே சாகக்கூடிய ஜாதகனை பார்த்தால் கூட தைரியம் சொல்ல வேண்டுமே தவிர அதைரிய படுத்திவிடக்கூடாது. அதே நேரம் நடக்க போகிற நிகழ்வுகளை ஓரளவு கோடிட்டு காட்டியும் சம்மந்தபட்டவர்களை அதற்கான மனோநிலையை அடைவதற்கு சித்தபடுத்த வேண்டும் மிக குறிப்பாக பணம் பண்ணுவதிலேயே கவனம் இருக்க கூடாது நம் வாக்கால் மற்றவர்கள் வாழ வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே இருக்க வேண்டும்.
இவைகளுக்கெல்லாம் மேலாக ஜோதிடனின் சொந்த ஜாதகத்தில் வாக்கு பலிதமும் உள்ளுணர்வை கவனிக்கும் தன்மையும் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். அடுத்தவர்களை பார்த்து நாமும் ஆசைபட்டு மற்றவர்கள் வாழ்க்கையோடு விளையாடக்கூடாது.