குருஜி அவர்களுக்கு வணக்கம் எனக்கு இருபத்தி ஐந்து வயது ஆகிறது சென்னை எனது பூர்விகம் என்றாலும் தற்போது நான் வேலையின் காரணமாக குஜராத் மாநிலத்தில் வாழ்கிறேன். சிறிய வயது முதற்கொண்டே எனக்கு சித்தர்களின் மீதும் அவர்களின் வைத்திய முறையின் மீதும் அதிகமான பற்று உண்டு என் குடும்பத்தில் எவரும் சித்த வைத்தியம் தெரிந்தவர்கள் அல்ல. பிறகு எப்படி எனக்கு அந்த ஆர்வம் ஏற்பட்டது என்று சொல்ல தெரியவில்லை. இப்போது நான் உங்களிடம் கேட்பது நான் சித்த வைத்தியம் கற்று கொள்ளல்லாமா அப்படி கற்று கொண்டால் என்னால் முழுமையாக வெற்றி பெற்று மருத்துவ தொண்டாற்ற முடியுமா? என்பதை தயவு செய்து தெரியபடுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு
வாசுதேவன்
குஜராத்
அப்பன் பாட்டன் குணம் பிள்ளைக்கு வருமென்று நமது முன்னோர்களும் சொல்லியிருக்கிறார்கள் நவீன கால மரபணு வைத்திய முறையும் சொல்கிறது. ஆயிரம் தான் நான் தனிவொரு ஜீவனாக வாழ விரும்பினாலும் நான் வேண்டியோ வேண்டாமலோ என் குடும்பத்தாரை போன்ற குணாதிசியங்களை சுமந்து கொண்டே வாழவேண்டியவனாக இருக்கிறேன் அவற்றிலிருந்து நான் தப்பிக்க முடியாது. சுற்றுப்புற சூழல்கள் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தி எனக்கு பெரிய மாற்றங்களை தந்தாலும் உண்மையாகவே அவைகளை விரும்பி என்னை நான் மாற்றி கொண்டாலும் எனக்குள் இருக்கும் என் மரபு குணம் எப்போதாவது வெளிபட்டே தீரும். அதை மாற்ற இயலாது.
இது எப்படி சாத்தியமாகும் அப்பன் திருடனாக இருந்தால் மகனும் திருடனாக இருப்பானா? அப்படி கணக்கு போடுவது மனிதாபிமானம் அற்ற செயல் அல்லவா? என்று சிலர் கேட்கிறார்கள். அவர்கள் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள தவறி விட்டார்கள் என்றே கூற வேண்டும். திருட்டு என்பது ஒரு மனிதனின் குணம் அல்ல. அது ஒரு பழக்கம் வள்ளுவனின் மகனை கடத்தி கொண்டு வந்து திருடர்கள் கூட்டத்தில் தொடர்ந்து பழகவிட்டால் அவனும் திருடனாகி விடுவான். அதற்காக வள்ளுவனின் மகனே திருடன் என்று நாம் குறை கூற இயலாது. தொடர்ச்சியான பழக்கம் ஒருவனை எதுவாகவும் மாற்றி விடும். ஆனாலும் கூட எத்தனை வருடங்கள் திருடர்கள் கூட்டத்தில் இருந்தாலும் ஒருவன் நல்ல தாய் தந்தையருக்கு பிறந்தவனாக இருந்தால் என்றாவது ஒருநாள் தான் செய்யும் திருட்டு தொழில் தவறு என்று உணருவான். அவன் மனசாட்சி அப்படி உணர வைக்கும் மனசாட்சி என்று நாம் அழைப்பதே ஒருவனின் மரபு சார்ந்த குணமாகும். அது எந்த வகையிலும் மாறாது.
விஞ்ஞானம் தற்கால பிறப்பை அடிப்படையாக கொண்டு குணங்களை கணக்கு போடுகிறது. இந்து மெய்ஞானமோ ஒருவனின் சென்ற ஜென்ம பிறப்பின் தொடர்ச்சியாகவும் அவனின் குண இயல்பை கணித்து பார்க்கிறது. கூத்து, நாடகம், நடிப்பு, பாட்டு இப்படி எந்த கலையம்சத்தோடும் சம்மந்தபடாத சாதாரண ரொட்டிக்கடை வைத்திருப்பரின் மகன் உலகமே பார்த்து வியப்படையும் நடிப்பு மேதையாக வந்திருக்கிறார் அவர் தான் சிவாஜி கணேசன் அவரிடமிருந்த நடிப்பு திறமை வம்சாவளி மூலம் வந்தது அல்ல சென்ற ஜென்மத்தின் தொடர்பின் தொடர்ச்சியாக வந்தது.
அதே போலவே இந்த கேள்வியை கேட்டிருக்கும் வாசகருக்கு சித்த வைத்தவைத்தியத்தின் மீதுள்ள ஆர்வம் பிறப்பால் வந்தது அல்ல ஜென்ம தொடர்பால் வந்ததாகும். எனவே இது ஏன் வந்தது என்பதை ஆராய்வதை விட்டு விட்டு மருத்துவ வித்தையை கற்று கொள்வதில் கவனம் செலுத்துவது நல்லது என்று நினைக்கிறேன்.
உதாரணமாக இவரது ஜாதகத்தில் லக்கினத்திற்கு இரண்டாவது இடத்தில் சனியும் ராசிக்கு ஐந்தாவது இடத்தில் கேதுவும் அமைந்துள்ளார்கள் இப்படி பட்ட ஜாதகம் அமைந்துள்ளவர்கள் மரபு சார்ந்த வைத்திய முறையில் திறமைசாலிகளாக இருப்பார்கள். எனவே இவருக்கு கண்டிப்பாக சித்தவைத்திய கலை சித்திக்கும் என்று துணிந்து சொல்லல்லாம். பயிற்சியை முறைப்படி துவங்குங்கள் வைத்திய நாதனான எம்பெருமான் துணைவருவான்.