தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டுமென்ற கருத்தை சில அமைப்புகள் முன்னெடுத்து செல்கின்றன ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட்டால் குடிப்பவர்களுக்கு மனதளவிலும் உடளவிலும் பிரச்சனைகள் வராதா?
சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் தமிழ்நாட்டில் மதுவிலக்கை கொண்டுவந்த போது பெரியார் பாவபட்டவர்களும் கடினமான உடலுழைப்பு செய்பவர்களும் தங்களது உடல்சோர்வை நிவர்த்தி செய்து கொள்ள மது அருந்துகிறார்கள் அதை தடை செய்துவிட்டால் அவர்களது நிலைமை கவலைக்கிடமாகிவிடும் எனவே மதுவிலக்கு வேண்டாமென்று சொன்னார். அந்த நாள் முதலே மது குடிப்பதனால் உடல் சோர்வு நீங்குவதகவும் மனதில் உள்ள கவலைகள் விலகுவதாகவும் ஒரு மாயை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
சென்ற நூற்றாண்டில் பல நாடுகளை பிடித்து அரசியல் ஆதிக்கம் பெற்று காலனி நாடுகளை முற்றிலுமாக சுரண்டி தங்களது சொந்த நாட்டை சொர்க்கபுரியாக்க முயற்சித்த பல மேற்கு நாடுகள் தாங்கள் ஆதிக்கம் செலுத்தும் நாடும் நாட்டு மக்களும் அறியாமை மிகுந்தவர்களாக காட்டு மிராண்டிகளாக இருக்கிறார்கள் எனவே அவர்களை திருத்துவதற்காகவும் நாகரீக மனிதர்களாக மாற்றுவதற்காகவும் அடிமைகளாக வைக்க வேண்டிய நிலை இருக்கிறது என்று தங்களது நாட்டில் உள்ள அறிவாளிகளை வைத்தும் அடிமை நாட்டில் உள்ள எடுபிடி புத்திசாலிகளை வைத்தும் பிரச்சாரம் செய்வார்கள். அதே போன்றது தான் மது அருந்தவில்லை என்றால் உடம்பு கெட்டுவிடும் என்ற பிரச்சாரமும். இந்த பிரச்சாரத்தை செய்வது யார் என்றால் மது வகைகளை தயாரித்து விற்பனை செய்கின்ற பெரிய முதலாளிகள். தங்களது வியாபாரம் கெட்டு போகாமல் சூடுபிடிக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய மாய்மாலங்களை பரப்பி வருகிறார்கள்.
மது அறுந்தாமலையே உடல் சோர்வை நீக்கி கொள்வதற்கு எத்தனையோ வழி இருக்கிறது. அவைகளை கடைபிடிப்பது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல மது அறுந்துவதால் உடல் மேலும் கெட்டு போகிறதே தவிர ஆரோக்கியம் அடைவதில்லை. அதிகமான மது பழக்கம் நரம்பு தளர்ச்சி மூளை பாதிப்பு மன கொதிப்பு போன்றவைகளை உருவாக்குகிறது. மதுவிலக்கு கொண்டுவந்தால் இந்த நோயாளிகளின் எண்ணிக்கை குறையும் என்பதே உண்மை.
அரசாங்கம் மதுக்கடைகளை நடத்துவதனால் அதிகபடியான வருமானம் வருகிறது அந்த வருமானத்தை வைத்து கொண்டு மேலும் பல நலத்திட்டங்களை செய்யலாமே?
தமிழ்நாட்டு பெண்களும் சரி உலகளவில் உள்ள பெண்களும் சரி நகைகள் அணிந்து பார்ப்பதில் அவர்களுக்கு அலாதியான ஆர்வமும் ஆசையும் உண்டு அதற்காக விதவிதமான அணிகலன்களை உனக்கு தருகிறோம் ஆனால் நீ உன் மாங்கல்யத்தை கழற்றி கொடுத்துவிடு என்று கேட்டால் எந்த பெண்ணும் சம்மதிப்பாளா? நாம் கொடுப்பது வைர வைடூரிய நகைகளாக இருக்கலாம் அந்த விலை உயர்ந்த நகைகளுக்காக மஞ்சள் கயிறால் அமைந்த தாலியை அதற்கு ஈடாக கொடுக்க எவருக்கும் மனது வராது. தாலியை பறித்து விட்டு நகையை கொடுப்பது போன்றது தான் மதுவினால் வருகின்ற வருமானத்தை வைத்து நலத்திட்டங்களை மக்களுக்கு கொடுக்கிறோம் என்பதாகும்.
அரசு நிர்வாகம் என்பது உயர்தரமான மக்கள் சேவை அமைப்பே தவிர ஒரு வியாபார கூடம் அல்ல. வியாபாரத்தில் தான் லாப நஷ்ட கணக்கு உண்டு சேவையில் அந்த கணக்கை போட்டு பார்த்தால் அதன் பெயர் அயோக்கியத்தனம் உண்மையாக ஒரு அரசு மக்களுக்கு சேவையாற்ற நினைத்தால் அதற்கான வருவாயை ஈட்டுவதற்கு எத்தனையோ வகை உண்டு. ஒரு பெண் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக விபச்சாரம் செய்தேன் எனக்கு வேறு வழி இல்லை என்று சொல்வது எவ்வளவு தூரம் கீழ்மையானதோ அதை விட தகுதி தாழ்ந்தது மது விற்று வருகின்ற காசில் சேவை செய்வது. மது கடைகளை மூடி விட்டால் அரசுக்கு வருவாய் கிடைக்காது என்பதெல்லாம் கபட நாடகம் அந்த நாடகத்தை மக்களை காக்க வேண்டிய அரசே செய்கிறது என்றால் அதைவிட தாழ்மை எதுவுமே இல்லை.
அரசாங்க மது கடைகள் இல்லை என்றால் கள்ளச்சாராயம் நாடு முழுவதும் அதிகரித்து விடுமே?
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுகின்ற ஒருவர் முன்பு எனக்கு நண்பராக இருந்தார். அவர் ஒருநாள் தன்னோடு வேலை செய்யும் சகபணியாளர் ஒருவர் புதியதாக வீடுகட்டி இருப்பதை பற்றி சொல்லுகின்ற போது அவருக்கென்ன அவர் குவைத்தில் பணியாற்றுகிறார் வருமானத்தை வைத்து கொள்ள வழியில்லாத அளவு அதிகபடியாக இருப்பதனால் ஒன்றுக்கு நாலு வீடு கட்டுகிறார் என்று சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது அவரும் உங்களை போல போலீஸ்காரராக நம் ஊரிலே தானே வேலை செய்கிறார் பிறகு எங்கிருந்து அவருக்கு குவைத் பணம் வருகிறது நீங்கள் சொல்வது ஒன்றும் புரியவில்லையே என்று கேட்டேன். அதற்கு அவர் சிரித்து கொண்டே ஐயா நான் குவைத் என்று சொன்னது வெளிநாட்டை அல்ல மதுவிலக்கு காவல் பிரிவான கலால் பிரிவை என்று விளக்கினார்.
அரசு மது கடைகள் இல்லை என்றால் கள்ளச்சாராயம் அதிகரித்து விடும் என்பது உண்மை தான் அதை மறுப்பதற்கு இல்லை ஆனால் அரசாங்க இயந்திரம் மிகவும் வலுவானது உண்மையான அரசாங்கம் நேர்மையாக நடக்க விரும்பினால் கண்டிப்பாக கள்ளச்சாராய வியாபாரத்தை தடுத்து நிறுத்தி விட முடியும். ஆனால் இதுவரையில் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற இரண்டு கழக அரசுகளும் மதுவிலக்கை கொண்டுவந்தவுடன் கள்ளச்சாராயத்தை பெருக்கெடுத்து ஓட வேண்டும் என்றே அனுமதிக்கிறார்கள். காரணம் இதை காரணம் காட்டி மீண்டும் மதுவிலக்கை இரத்து செய்துவிடலாம் என்பதே அவைகளின் உண்மையான எண்ணம் இன்னும் ஒருபடி சொல்ல போனால் திராவிட பரிவாரங்கள் எதற்குமே மதுவிலக்கின் மேலே நம்பிக்கை கிடையாது அது அவர்களை பீடித்துள்ள பரம்பரை வியாதி.
பாமக போன்ற அரசியல் கட்சிகள் மதுவிலக்கு வேண்டுமென்று போராட துவங்கி விட்டார்களே இது நல்ல அறிகுறிதானே?
எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் பரிசுத்தமுள்ள பூச்சை பரலோகத்திற்கு போகும் போது கக்கத்தில் கருவாட்டை இடுக்கி கொண்டு போனதாம் என்பார்கள் பாமகவின் மதுவிலக்கு போராட்டமும் ஏறக்குறைய அப்படிதான் இருக்கிறது ஒரு ஊரில் பாமக கூட்டம் நடக்கிறது என்றால் அந்த ஊரில் உள்ள மதுக்கடைகளில் அதிகமான வியாபாரம் நடக்கிறது அந்த அளவு இராமதாஸ் அவர்களின் தொண்டர்களின் தாகம் அதிகமாக இருக்கிறது. முதலில் மதுவிலக்கு வேண்டும் என்று போராடுபவர்கள் தங்களது சொந்த கட்சிக்குள் குடிப்பவனுக்கு இடமில்லை என்ற நிலைபாட்டை கொண்டுவரவேண்டும்.
இன்று அரசியல் கட்சிகள் ஒரு பொதுகூட்டம் பேரணி போராட்டம் என்று நடத்துவதாக இருந்தால் முதலில் அதற்காக வருகின்ற தொண்டர்களுக்கு பிரியாணி பொட்டலமும் கோட்டர் பாட்டிலும் கண்டிப்பாக கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. முதலில் இவர்கள் தங்களை சுத்தபடுத்தி கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் நாளை முதல் குடிகாரர்கள் எவருக்கும் கட்சியில் இடமில்லை என்று இவர்களால் தைரியமாக அறிவிக்க முடியுமா? முடியாது காரணம் அப்படி அறிவித்து விட்டால் இவர்கள் கட்சியில் ஒரு தொண்டர் கூட தேடி பார்த்தாலும் கிடைக்க மாட்டார்கள்.
மதுவை எதிர்ப்பது ஊழலை ஒழிக்க சொல்வது போன்றவைகள் நல்ல விஷயம் தான் ஆனால் அந்த விஷயத்தை மக்கள் மத்தியில் முன்னெடுத்து செல்பவர்களுக்கு சுய ஒழுக்கம் கண்டிப்பாக தேவை தானே கழுத்தளவு சகதியில் கிடந்தது கொண்டு அடுத்தவன் முதுகை சுத்தபடுத்த நினைப்பது அறியாமையே தவிர வேறொன்றும் இல்லை தமிழ்நாடு முழுவதும் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றாலும் தெற்கை விட வடக்கு மாவட்டங்களில் வாழுகின்ற நிறைய பேரை இந்த அரசாங்கம் குடிகாரர்களா மாற்றிவிட்டார்கள் எனவே குடிக்கு எதிராக கோஷம் போட்டால் வடக்கு தமிழ்நாட்டு பெண்களையாவது தங்கள் பக்கம் சாய்த்து விட முடியாதா என்று ஐயா ராமதாஸ் நினைக்கிறார்.
அவரது உள்நோக்கம் எதுவாக இருந்தாலும் மதுவை ஒழிக்க வேண்டுமென்று அவர் சொல்வதை வரவேற்காமல் இருக்க முடியாது. தமிழ்நாட்டில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் அவரும் ஒருவர். அப்படிப்பட்ட ஒருவர் மதுவொழிப்பு போராட்டத்தை கையில் எடுத்திருப்பது பாராட்டுதலுக்குரியது.
பெண்களும் மது அறுந்துவதாக சொல்லபடுகிறதே?
ஆண்களுக்கு பெண்கள் சமம் என்கிறபோது ஆண்கள் செய்யும் அனைத்து செயலையும் பெண்களும் செய்யவேண்டும் அல்லவா? அதனால் நமது தாய்குலங்கள் குடித்து பார்க்கவும் துவங்கி விட்டார்கள். எத்தனை நாட்கள் தான் அவர்கள் குடிகார கணவனிடம் உதை வாங்கி சாவது ஒருநாளாவது அவன் குடிக்கின்ற பாட்டிலை பிடுங்கி தானும் குடித்து அவன் இடுப்பு மீது ஓங்கி உதைக்க வேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கு வரக்கூடாதா என்ன? பெண்களை குடிக்காதே என்று தடுப்பது சரியான ஆணாதிக்கம் குடிக்கட்டுமே தாரளமாக குடிக்கட்டுமே.
குடித்து குடித்து வயிறும் கெட்டு மனமும் கெட்டு குடும்பமும் கெட்டு தொட்டிலில் போட வேண்டிய குழந்தையை தூக்கி இடுகாட்டு நெருப்பிலே போடவேண்டியது தானே. தமிழனுக்கு வீடு எதற்கு? குடும்பம் எதற்கு? மானம் மரியாதை தான் எதற்கு? எல்லாம் கெட்டு குட்டிசுவராக போனாலும் நமது கழகங்களுக்கு ஒட்டுபோடாமலா போய்விட போகிறான். சோறுக்கும் நூறுக்கும் பீருக்கும் ஒட்டுபோடுகிற தமிழன் இருக்கும் வரையில் தமிழச்சியையும் குடிகாரி ஆக்கிவிட்டால் அரசாங்கத்திற்கு இன்னும் இரட்டிப்பாக வருமானம் வருமே. அடுத்த தேர்தலில் இலவசமாக வேறு ஏதாவது கொடுத்து நலத்திட்ட உதவிகளை அதிகரிக்கலாமே.
குடிப்பதனால் உடல்நலம் அதிகரிக்கிறது குடிப்பதனால் அரசாங்கத்திற்கு வருமானம் வருகிறது என்று அறிவாளிகள் பேசுவதையும் எழுதுவதையும் அறிந்து கொள்ள வேண்டுமென்று ஆண்டவன் நம் தலைமீது எழுதி வைத்திருக்கிறானே அவனை தான் குற்றம் சொல்ல வேண்டும். வேறு யார் மீது நம்மால் குற்றம் சாட்ட முடியும்.