Store
  Store
  Store
  Store
  Store
  Store

நன்றி மறப்பது நன்றன்று !

இந்து மத வரலாற்று தொடர் 55


   

     நேற்று வரை மிகவும் சாதாரண நிலையில் இருந்த ஒரு மனிதன் இன்று பார்க்கும் போது முன்னேற்றத்தின் சிகரத்தில் இருக்கிறான் அதை கண்டவுடன் நமக்கு என்ன தோன்றுகிறது? நம்மோடு சாதாரணமாக சுற்றி திரிந்தவன் வாய்க்கால் வரப்பு என்று அலைந்தவன் இன்று எப்படி உயர்ந்து விட்டான்? ஒருவேளை இவனுக்கு புதையல் கிடைத்திருக்குமோ? அல்லது கூரையை பிரித்து கொண்டு தெய்வம் கொட்டும் என்பார்களே அதே போல எதாவது நடந்திருக்குமோ? என்று நினைப்போம். அல்லது நமக்கு சற்று அதிகமாக கோணல் புத்தி இருந்தால் ஒருவேளை இவன் கள்ளநோட்டு அடித்திருப்பானோ? யாரும் அசந்திருக்கும் போது திருடி கொண்டு வந்திருப்பானோ? என்று கூட தோன்றும். உண்மையில் ஒருவன் உயர்வதற்கு இவைகள் எதுவும் சரியான வழியில்லை. பிறகு மனிதன் முன்னேறுவதற்கு எது தான் வழியாக இருக்கும்? என்று யோசிக்க வேண்டும்.

பதறும் காரியம் சிதறும் என்று சொல்வார்கள் இதையே வடமொழியில் விநாசகாலே விபரீத புத்தி என்று அழைப்பார்கள் அதாவது ஒரு காரியம் தோற்க வேண்டுமென்றால் அதற்கு வெளியிலிருந்து எதிர்ப்புகளும் இடையூருகளும் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை காரிய கர்த்தாவின் மனம் குழம்பினாலே போதும் அனைத்தும் கெட்டுவிடும். அல்லது மனதில் நிலையற்ற எண்ணங்கள் தோன்றுவதே ஓடி கொண்டிருக்கின்ற குதிரையை குப்புற தள்ளுவதற்கு என்றும் சொல்லலாம். ஆகவே ஒரு செயல் வெற்றியை நோக்கி செல்வதற்கும் செல்லாததற்கும் பல வகையில் நேரடி காரணமாக இருப்பது நமது மனமே ஆகும். நம் மனம் மட்டும் செம்மை பட்டுவிட்டால் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். வெற்றியான காரியங்கள் தொடர்ந்து நடந்தால் தானே வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.

எனவே ஒருவன் முன்னேறுகிறான் என்று சொன்னால் அவனது மனம் செம்மையடைந்து செயல்களை செய்திருக்கிறான் அதனால் அவன் வாகை சூடி இருக்கிறான் என்பது தான் உண்மை. பலரும் மனமது செம்மையாக வேண்டும் என்று மாறி மாறி சொல்கிறார்களே மன செம்மை என்பது என்னவாக இருக்கும் என்று கேள்விகள் பிறக்கும் காரணம் செம்மை என்ற ஒரு வார்த்தை பல பொருளை தரும் அனைத்தும் சீராக இருக்கிறது சிறப்பாக இருக்கிறது என்ற பொருளும் செம்மை என்ற வார்த்தைக்கு உண்டு. ஆனால் மன செம்மை என்று வருகின்ற போது அது வேறு விதமான பொருளை தருகிறது. ஆர்வம், உத்வேகம், சிரத்தை என்ற பல பொருளையும் அதற்குள் பொருத்தி பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால் மட்டும் தான் சரியான பதில் நமக்கு கிடைக்கும்.

படிக்காமல் தெருவில் சுற்றி கொண்டிருக்கும் ஒரு பையனை பிடித்து உனக்கு ஏன் படிக்க பிடிக்கவில்லை என்று கேட்டு பாருங்கள் பாடங்களை மனப்பாடம் செய்ய சொல்கிறார்கள் அது என்னால் முடியவில்லை அதனால் தான் நான் பள்ளிக்கூடம் போகவில்லை என்ற பதிலை தருவான் அவனிடமே நேற்று பார்த்த திரைப்படத்தில் உள்ள புரியாத பாடல் ஒன்றை கேட்டு பாருங்கள் நமக்கே புரியாத வார்த்தைகள் எல்லாம் அவனுக்கு புரிந்திருக்கும் ஒரு வரியை கூட விடாமல் ஏற்ற இரக்கத்தோடு அழகாக சொல்வான். பாடங்களை மனப்பாடம் செய்ய இயலாத அவனுக்கு திரைப்பட பாடலை மனனம் செய்ய எப்படி முடிந்தது? விஷம் ஒன்றுமில்லை முன்னது செய்வதில் அவனுக்கு ஆர்வமில்லை பின்னது செய்வதில் ஆர்வம் அதிகம் இருக்கிறது. ஆகவே ஒரு மனிதனுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் அவன் விரைந்து முன்னேறுவான் எனவே தான் ஆர்வம் உத்வேகம் சிரத்தை என்ற பல பொருளை செம்மை என்ற ஒரே வார்த்தைக்குள் வைத்து காரிய சித்திக்கு மன செம்மையே மூல மருந்து என்று நமது பெரியவர்கள் சொன்னார்கள்.

இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால் ஆர்வத்தோடும் சிரத்தையோடும் காரியங்களை செய்தாலே போதும் எத்தகைய எதிர்மறையான சூழல்கள் இருந்தாலும் அத்தனையையும் தாண்டி வெற்றி பெறலாம் என்ற ரகசியம் தெளிவாகவே புரிகிறது. இது புரியாமல் தான் பலர் வாழ்க்கை சவால்களோடு முட்டி மோதி மண்டையை உடைத்து இரத்தம் வடிய படுக்கையில் கிடக்கிறார்கள் தேங்காய் வியாபாரம் பண்ண சொல்லி ராமசாமி சொன்னார் அதையும் நம்பி நான் செய்தேன் வாங்கி வந்த தேங்காய் எல்லாம் தென்னம்பிள்ளையாக மாறியதே தவிர ஒன்றுமே விற்கவில்லை நகைகளை வாங்கி விற்கலாம் நல்ல லாபம் வரும் பொருளும் கெட்டு போகாது என்று மாடசாமி சொன்னார் அதையும் செய்தேன் கடையில் நான் மட்டுமே உட்கார்ந்து கொண்டிருக்கிறேன் ஒரு ஈ எறும்பு கூட வந்து எட்டி பார்க்கவில்லை என்று சோக கதையை பக்கம் பக்கமாக சொல்பவர்கள் ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும் யாரோ சொன்னார்கள் செய்தேன் என்பதை விட்டு விட்டு எனக்கு பிடித்ததை எனக்கு தெரிந்ததை செய்தேனா என்பதை சிந்தித்து பாருங்கள் தோல்வியின் ரகசியம் தெரியும். காரணம் மனம் ஈடுபாடு இல்லாமல் எதை செய்தாலும் அது சந்தேகமே இல்லாமல் குப்பை தான் சிரத்தையோடு செய்தால் உறுதியான கற்பாறை கூட உருகிவிடும்.

சிரத்தை என்பது ஒரு உன்னதமான மனோநிலை தெய்வத்திடம் வரம் கொடு என்று கேட்பவர்கள் அதை கொடு இதை கொடு என்று தாறுமாறாக கேட்கவேண்டிய அவசியம் இல்லை சிரத்தையை கொடு என்று கேட்டாலே அனைத்தும் கிடைத்துவிடும். சிரத்தை என்ற ஒன்று வந்துவிட்டால் எடுத்த காரியத்தில் முனைப்போடு இருக்கும் விழிப்புணர்வு வந்துவிடும். விழிப்பு வந்துவிட்டால் விசுவாசம் என்ற நம்பிக்கை பிறந்து விடும். நம்பிக்கை வந்தால் நான் தான் பெரியவன் என்ற ஆணவ குப்பையெல்லாம் மறைந்து பணிவு தானாக வளர துவங்கி விடும். பணிந்தவன் நிமிர்ந்து விடுவான் என்பது அனுபவ சாட்சி. அதனால் தான் உலகத்தை படைத்து காத்து இரட்சித்து கொண்டிருக்கும் முழுமுதற்க் கடவுளான கண்ணபெருமான் தமது பகவத் கீதையில்

அச்ரத்யா ஹுதம் தத்தம் தபஸ்தப்தம் க்ருதஞ்ச யத்அஸதித்யுச்யதே பார்த்த நசதத் ப்ரேத்ய நோ இஹ

என்று தெளிவாக பதினேழாம் அத்தியாயம் இருபத்தி எட்டாவது ஸ்லோகத்தில் சொல்கிறார். அதாவது சிரத்தை இல்லாமல் செய்யப்பட்ட தவமும் அனுஷ்டிக்க பட்ட கர்மமும் அஸத் என்று கருதபடுகிறது. அது வேறு எங்கு சென்றாலும் பயன்படாது இந்த உலகிலும் பயன்பாடாது என்பது பொருளாகும். நான் தவம் செய்கிறேன் தியானம் செய்கிறேன் என்று அறுபது நாழிகையும் கண்களை மூடி கொண்டு பத்மாசனத்தில் அமர்திருந்தாலும் கூட சிரத்தை என்ற ஒன்று இல்லை என்றால் எந்த பயனும் கிடைக்காது. சிரத்தை இல்லாமல் செய்கின்ற தியானமும் தவமும் கூட கைகூடி வராது என்கிற போது மற்ற செயல்கள் மட்டும் எப்படி வெற்றியை தேடி தரும். எனவே அனைத்து காரியத்திற்கும் சிரத்தை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இதை நன்கு அறிந்திருந்த நமது முன்னோர்கள் மனிதன் செய்ய கூடிய அனைத்து காரியங்களையும் சிரத்தை வேண்டும் என்று கருதியதோடு மட்டுமல்லாது தனக்கு உடம்பையும் உடமைகளையும் தந்து சுக ஜீவியாக வாழ வைத்திருக்கும் முன்னோர்களை நினைத்து பார்ப்பதை கூட சிரத்தை என்ற பொருள்பட சிரார்த்தம் என்று அழைத்தார்கள். சிரார்த்தம் என்றால் இறந்தவர்களை வணங்குதல் மட்டுமே என்று பலர் நினைப்பது மிகவும் தவறு. சிரார்த்தம் என்ற பதம் நன்றி உணர்ச்சியை கூட ஆர்வத்தோடு காட்ட வேண்டும் என்பதை சுட்டி காட்டுவதற்கே அமைந்ததாகும். அதனால் தான் இந்து மதத்தின் அல்லது இந்து மக்களின் ஆதாரனமான கடமைகளில் ஒன்றான முன்னோர் வழிபாட்டை சிரார்த்தம் என்ற அர்த்தம் பொதிந்த வார்த்தையால் அழைத்தார்கள்.

முன்னோர்கள் என்பவர்கள் நமக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் மூத்த குடி என்பதோடு மட்டும் கருத தக்கவர்கள் அல்ல நாம் வாழுகின்ற வாழ்க்கை அவர்கள் போட்ட பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறது தான் நடந்து சென்ற பாதையில் உள்ள கற்களையும் முற்களையும் அவஸ்தை பட்டு அகற்றி நாம் நடந்து செல்ல சுகமான பாதையை உருவாக்கி கொடுத்தவர்கள். தங்களது வியர்வையாலும் இரத்தத்தாலும் நம்மை வெயில் படாமலும் குளிர்வாட்டாமலும் பாதுகாப்பு தந்தவர்கள் சோகங்களை மட்டும் தான் சுமந்து கொண்டு சுகங்களை மட்டும் நமக்கு விட்டு சென்றவர்கள். அப்படி பட்ட தியாக ஆத்மாக்களை நன்றியோடு நினைத்து பார்ப்பதே சிரார்த்தம் எனப்படும் மனித வாழ்விற்கு நன்றி உணர்வு என்பது மிகவும் அவசியம் காமம் உட்பட அனைத்து உணர்வுகளையும் நாம் அடக்கலாம் கடந்தும் செல்லலாம். ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் நன்றி உணர்வை அடக்கவும் கூடாது மறக்கவும் கூடாது.


தென்புலத்தார், தெய்வம், விருந்தொக்கல், தானென்றாங்க
ஐம்புலத்தா றோம்பல் தலை


என்று வள்ளுவனும் மனிதனுக்கு உரிய ஐந்து கடமைகளில் முன்னோர்களை நன்றியோடு நினைத்து பார்ப்பதை முதல் கடமை தலையாய கடமை என்று சொல்வதிலிருந்தே மூத்தோர்களை வழிபடுவதில் உள்ள சிறப்புகளை நன்கு அறியலாம். மனிதன் வாழ்ந்து இறந்து போகிறான் அதோடு ஒரு ஆத்மாவின் பயணமானது நின்று போகிறது அதற்கு மேல் ஒன்றுமே இல்லை இதில் அவர்களது செயல்களுக்காக நன்றி தெரிவிப்பது மனதோடு இருக்க வேண்டியதே தவிர வெளிப்புறமாக காட்டுவதில் என்ன இருக்கிறது. என்று பேசுவதெல்லாம் பொருள் மட்டுமே இருப்பது அது மட்டுமே புலங்களுக்கு அகப்படுவது அதை தாண்டி உண்மைகள் எதுவும் இல்லை என்று பேசும் வறட்டு சித்தாந்தமாகும். ஆத்மாவின் பயணம் மரணத்தோடு நின்றுவிடுவது அல்ல அதையும் தாண்டி செல்ல கூடியது என்ற உண்மை தெரிந்தால் மட்டும் தான் தனிமனித வாழ்விலும் ஒழுக்கம் இருக்கும் சமூதாய வாழ்விலும் இணக்கம் இருக்கும். அதை விட்டு விட்டு கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்வதை நமது இந்து மதம் கண்டனம் செய்கிறது.

இந்துமத சாஸ்திரப்படி நாம் யாரை உத்தேசித்து சிரார்த்தம் செய்கிறோமோ அவர் ஆவி உலகம் என்ற பிதுர் உலகத்தில் இருக்கலாம் அல்லது அதையும் தாண்டிய தெய்வ உலகத்தில் இருக்கலாம் இப்படி கண்ணுக்கு தெரியாத காட்சிக்கு அகப்படாத உலகங்கில் இல்லாமல் நாம் நேரடியாக கண்டு உணர கூடிய இந்த பூமியில் இந்த மனித உலகில் நம்மை போல சாதாரண மனித பிறப்பெடுத்து வாழ்ந்து கொண்டு கூட இருக்கலாம். அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களுக்காக நாம் செலுத்தும் நன்றி கடனான சிரார்த்தம் அவர்களுக்கு பல உயர்வுகளை கண்டிப்பாக தந்தே தீரும். அவர்கள் இருக்கும் இடம் எதுவாக இருந்தாலும் அவர்கள் தாழ்ந்த நிலையிலோ உயர்ந்த நிலையிலோ எந்த நிலையில் இருந்தாலும் சிரார்த்தம் அவர்களை கைதூக்கி விடும். உயர்வான தகுதி அவர்களிடம் இருந்தால் நாம் செய்யும் சிரார்த்தத்தால் மன மகிழ்ந்து ஆசிகளை நமக்கு தருவார்கள் தாழ்ந்த நிலையில் இருந்தால் தன்னுடைய நிலையை உயர்த்தி கொள்வார்கள் மனிதனாக எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் கூட இந்த சிரார்த்தம் அவர்களை சென்றடைந்து அவர்களுக்கு தேவை பட்டதை கண்டிப்பாக செய்யும்.

வாழ்க்கை என்பது கண்ணுக்கு தெரியாத ஒரு பிரம்மாண்டமான தேர் அந்த தேரை கரடு முரடான பாதையில் ஒட்டி செல்வதற்கு திறமை வாய்ந்த சாரதி மட்டும் இருந்தால் போதாது முரட்டு தனமான வலுவுடைய குதிரைகளும் வேண்டும். இங்கு குதிரைகள் என்பது நமது பாவ புண்ணியம் இறைவனின் அருள் சொந்த பந்தங்களின் ஒத்துழைப்பு என்று பலவற்றை குறிக்கும். அந்த பல காரணங்களோடு முன்னோர்களின் ஆசி என்ற குதிரையும் கண்டிப்பாக தேவை அந்த ஆசியை பெற்று தருவதே சிரார்த்தமாகும் அந்த சிரார்த்தத்தை கடமை என்று உணர்ச்சி இல்லாமல் செய்வதை விட்டு விட்டு உணர்ச்சி பூர்வமாக ஆர்வத்தோடு செய்தால் மட்டுமே நல்ல பலனும் நல்லதும் கிடைக்கும். அதனால் தான் இந்து மதம் அகவுலக வாழ்க்கையும் புறவுலக வாழ்க்கையும் ஒன்றாக இணைத்து முன்னோர்கள் வழிபாட்டை உறுதியாக வற்புறுத்துகிறது.

இறந்து போனவனை கண்டு பயந்தால் அந்த ஆத்மாவை சாந்த படுத்துவதில் சடங்குகளை செய்வதிலேயே இந்துக்கள் நின்றிருப்பார்கள். நன்றி உணர்ச்சியை மருந்துக்கு கூட நினைத்து பார்த்திர்க்க மாட்டார்கள். இந்து என்பவன் சகிப்பு தன்மை மட்டுமே கொண்டவன் அல்ல சமாதான சகவாழ்வு மட்டுமே அவனது குறிக்கோளும் அல்ல இவைகள் அனைத்தையும் தாண்டி நடந்ததை நடக்க போவதை எண்ணி பார்த்து ஆராய்ந்து அதற்க்கான சரியான மருந்தை கண்டு பிடித்து தானும் உயர்ந்து மற்றவர்களையும் உயர்த்துவதே அவனது நோக்கம். அந்த நோக்கத்தின் சீரிய அடையாளமே சிரார்த்தமாகும். சிரார்த்தம் செய்வதில் ஆயிரம் சடங்குகள் உண்டு பலநூறு சம்பிராதயங்கள் உண்டு அவைகள் இடத்திற்கு இடம் பண்பாட்டுக்கு பண்பாடு மாறுபட்டு ஒன்றுகொன்று சம்மந்தம் இல்லாமல் இருந்தால் கூட அனைத்திற்குள்ளும் ஒன்றாக இணைக்கும் ஒரு மெல்லிய இழை உண்டு அது தான் நன்றி பாராட்டுதல் என்ற உயர்ந்த பண்பாகும்.



Contact Form

Name

Email *

Message *