Store
  Store
  Store
  Store
  Store
  Store

கமலஹாசனின் பகுத்தறிவு !



     னநாயகம் என்றால் என்ன? நான் நினைப்பதை இப்படி இருக்கலாமோ என்று கருதுவதை இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதை தயக்கமின்றி வெளியிடுவதற்கு சகலவிதமான உரிமையும் சுதந்திரமும் கடைக்கோடி மனிதன் வரைக்கும் இருக்கிறது இருக்கும் என்று உறுதி படுத்துவதே முழுமையான ஜனநாயகமாகும். நம் நாட்டை பொருத்தவரை அரசியல் சாசன சட்டவரையரைகளில் இந்த உரிமைகள் தாரளமாக பரவி கிடக்கிறது. ஆனால் அந்த சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டிய அரசாங்கத்தின் செயல்பாடுகளில் பக்க சார்பும் நெகிழ்வு தன்மையும் அதிகமாக இருந்து பல நேரங்களில் ஜனநாயகத்தை கேலிக்குறிய பொருளாக்கி விடுகிறது. 

தற்போது நமது தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நடந்து வருகின்ற நிகழ்வுகளை காணுகின்ற போது ஜனநாயகத்தின் சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாமோ என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. ஒரு நடிகர் திரைப்படம் ஒன்றை எடுக்கிறார் வணிக ரீதியில் அதை சந்தை படுத்துகிற அனைத்து உரிமைகளும் அவருக்கு இருக்கிறது என்றாலும் திரைப்படம் என்பது மக்கள் ஊடகம் அதில் சொல்லபடுகின்ற கருத்துக்கள் எந்த வகையிலும் தேச நலனுக்கு குந்தகம் விளைவிப்பதாக இருக்க கூடாது என்பதற்காக அரசு தணிக்கை குழுவை அமைத்து பரிசோதனை செய்து அதன்பிறகு சந்தை படுத்த அனுமதி வழங்குவது தவிர்க்க முடியாத கட்டாயம். அந்த கட்டாயம் தான் விஸ்வரூபம் திரைப்படத்தை பொறுத்தவரை நடந்தது. 

திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை பார்த்த சில முஸ்லிம் அமைப்பினர் அதில் தங்களது மனதை புண்படுத்த கூடிய கதை அமைப்பு இருக்கிறது எனவே படத்தை வெளியிடக் கூடாது என்று கூறினர். அரசாங்கமும் அவர்கள் கூற்றை முற்றிலுமாக ஏற்றுக்கொண்டு படத்தை தடை செய்துவிட்டார்கள். அதன் பிறகு தான் மக்களுக்கே இந்த விஷயம் தெரிய வருகிறது. நியாப்படி என்ன நடந்திருக்க வேண்டும்? படம் வெளியே வந்து அதன் ஒரு காட்சியையாவது மக்கள் பார்த்து அதிருப்தி தெரிவித்திருந்தால் அது பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் என்று கருதி அரசு தடை போடலாம். அதில் தவறல்ல ஆனால் படம் வெளியே வராத நிலையில் அதில் சொல்ல பட்டிருக்கின்ற விஷயம் இன்னதென்று யாருக்குமே தெரியாத நிலையில் சில குழுவினர் கூறினார்கள் என்பதற்காக தடை போடுவது சரியான செயல் அல்ல. 

ஒரு குழந்தை தானிருக்கும் இடத்தை அசுத்தம் செய்கிறது என்றால் அந்த குழந்தைக்கு சுகாதாரத்தை கற்றுகொடுத்து சீர்படுத்த வேண்டுமே தவிர அதற்காக குழந்தையின் கைகால்களை கத்தரித்து விடுவது எந்த வகையில் நியாயமாகும்? கமலஹாசன் என்பவர் முதலில் ஒரு கலைஞர் அவர் எடுத்திருக்கிற அந்த படம் ஒரு கலை படைப்பு அந்த கலை படைப்பில் தவறு இருக்கலாம், விஷமம் இருக்கலாம், வேண்டாத கற்பனையும் இருக்கலாம் அதற்காக அந்த கலை படைப்பையே உடைத்து விடுவது அழித்து விடுவது நாகரீகமான செயல் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

கமலஹாசன் தனது படைப்பில் சொல்லியிருக்கின்ற கருத்துக்கள் தவறு என்றால் நீ சொல்வது தவறு அந்த விஷயம் அப்படி அல்ல உண்மையானது இது தான் எனவே திருத்தி கொள் என்று அவருக்கு எடுத்து சொல்லலாம். அறிவுரை கூறலாம் விமர்சனம் கூட செய்யலாம். அதை அவர் ஏற்றுகொள்ளாத போது அவர் கூறி இருப்பது தவறு என்று வேறொரு கலை படைப்பின் மூலம் மக்களிடம் வெளிபடுத்த வேண்டும். அது தான் உண்மையான கலையின் வளர்ச்சி அதை விட்டு விட்டு கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையையே அசைத்து பார்ப்பது எப்போதும் போல் இருக்காது என்றாவது ஒருநாள் கண்டிப்பாக சுட்டுவிடும். 

திரைப்படங்களில் மதங்களை பற்றி மத நம்பிக்கைகளை பற்றி மத அமைப்புகளை பற்றி பலகாலமாகவே காட்டமான விமர்சனங்கள் நடந்துவருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் தமிழ் சினிமா உலகில் யாரவது ஒரு கலைஞன் தன்னை புத்திசாலி முற்போக்குவாதி சோசலீசவாதி என்று கூறிக்கொள்ள விரும்பினால் உடனடியாக அவன் செய்வது இந்துமத நம்பிக்கைகளை இந்துமத சம்பிராதயங்களை சடங்குகளை மனம் போன போக்கில் விமர்சனம் செய்ய துவங்கி விடுவான். ஊடகங்களும் அவனது கருத்துக்களை பெரிய அளவில் வெளியிட்டு செயற்கரிய செயலை செய்தவர்கள் போல காட்டி கொள்வார்கள். நீங்கள் இப்படி பேசுவது தவறு இது எங்கள் மனதை புண்படுத்துகிறது என்று யாரவது சொன்னால் அவர்களை பார்த்து இந்த கூட்டம் கைகொட்டி சிரிக்குமே தவிர சிறிது கூட அதற்காக வருத்தப்பட மாட்டார்கள். 

கமலஹாசன் என்பவரும் அந்த கூட்டத்தில் தலைமை பொறுப்பில் இருப்பவர் தான். நாத்திகன் என்றாலே இந்து மதத்தை இழிவு செய்வது தான் அவன் வேலை என்ற நினைப்பு அவருக்கு நிறையவே உண்டு. தான் ஏறுகின்ற ஒவ்வொரு மேடையிலும் இப்படி எதையாவது விஷமத்தனமாக பேசவில்லை என்றால் அவருக்கு தூக்கம் பிடிக்காது. நல்லவேளை அவர் பேசுகின்ற பேச்சை அவரின் ரசிகர்கள் கூட பெரிதாக எடுத்துகொள்வதில்லை. திரைப்படத்தில் உருக்கமான காட்சிக்கு பிறகு வரும் நகைச்சுவையாகவே அதை எடுத்து கொள்வார்கள். அப்படி தான் இந்த விஷயத்திலும் இருக்குமென்று அவர் போட்ட கணக்கு தப்பு கணக்காகி விட்டது. அனைவருமே இந்துக்கள் போல சகித்து கொண்டு இருக்க மாட்டார்கள். இனிமேலாவது மத விஷயங்களை பேசுகின்ற போது திரை துறையினர் பொறுப்போடு நடந்து கொண்டால் அவருக்கும் நல்லது நாட்டுக்கும் நல்ல்லது. 

இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றவுடன் எதையும் யோசிக்காமல் அவருக்கு சாதகமாக நடந்து கொள்ள வேண்டுமென்று அரசாங்கம் நினைத்தால் அது தவறு நாளை ஒரு வேளை விஸ்வரூபம் திரைப்படம் போல வேறொரு திரைப்படத்தில் சில காட்சிகள் வரும் அதில் என் ஜாதிகாரரை அவமான படுத்துகிறார்கள், என் ஊர்காரரை கேவல படுத்துகிறார்கள் எனவே அந்த படத்தையும் தடை செய்யுங்கள் என்ற கோரிக்கைகள் வரும். இப்படி ஒவ்வொரு படத்தையும் தடை செய்து கொண்டே போனால் கடேசியில் கருத்து சுதந்திரம் என்று வாய் கிழிய பேசுவது திண்ணை பேச்சாக இருக்குமே தவிர நாகரீகமான அரசாங்கத்தின் புத்திசாலித்தனமான செயலாக இருக்காது. 

இஸ்லாம் சமூகத்தினர் ஒரு விஷயத்தை புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும். என்னை யாருமே குறைசொல்ல கூடாது விமர்சிக்க கூடாது என் கருத்திற்கு எதிர்கருத்து சொல்ல கூடாது என்று நினைப்பது சரியான போக்காக இருக்காது. எதை தொட்டாலும் என் மனது புண்பட்டு விடும் அதனால் என் பக்கத்தில் வராதே என்று கூறுவது வளர்ச்சியின் அடையாளம் அல்ல. வினை என்ற ஒன்று இருந்தால் எதிர்வினை என்று ஒன்று உண்டு இது இயற்கையின் நியதி நீங்கள் ஒரு கருத்தை சரியானது என்று கருதாலாம் அது உங்களது முழுமையான சுகந்திரம் நீங்கள் கூறுவதை தான் மற்றவர்கள் ஏற்றுகொள்ள வேண்டும் அதற்கு எதிராக ஒரு வார்த்தை கூட சொல்ல கூடாது என்று நினைப்பது ஜன சமூகத்திலிருந்து உங்களையே நீங்கள் தனிமைபடுத்தி கொண்டது போல ஆகிவிடும். போற்றுதலையும் தூற்றுதலையும் தாங்கி கொள்ள பழகியவனே சிறந்த மனிதன். 

தற்கால சூழலில் திரைப்பட துறையினர் சமூக பொறுப்போடு செயல்படுகிறார்கள் என்று எண்ண முடியவில்லை. வருடத்தில் பத்து படம் வருகிறது என்றால் அதில் ஒன்பது படம் வெட்டு, குத்து, ஆபாசம், அசிங்கம் என்பவைகளே அதிலும் குறிப்பாக மது அருந்துதல் பெண்களை தவறான கோணத்தில் சித்தரிப்பதை நியாயபடுத்துதல் போன்றவைகள் நிறையவே இருக்கிறது. நான்கு வயது பெண் காதலிப்பதும் எட்டு வயது பையன் காதல் கடிதம் கொடுப்பதும் திரைப்படங்களில் காட்டபடுகிறது. சற்றேனும் சமூக பொறுப்பு இருந்தால் இத்தகைய காட்சிகளை வைக்க துணிச்சல் வராது. எதையாவது காட்டி பணம் பன்ன வேண்டும் என்ற வெறி இருக்கிறதே தவிர பொறுப்புணர்ச்சி என்பது சுத்தமாக கிடையாது. 

அடுத்ததாக தமிழக மக்கள் ஒரு நல்ல தெளிவை அடையவேண்டும். திரைப்பட நடிகர்களும் இயக்குனர்களும் தேவலோகத்து பிரம்மாக்கள் அல்ல கற்று தேர்ந்த அறிவாளிகளும் அல்ல அனைத்தையும் உணர்ந்த பேரரிஞர்களும் அல்ல உண்மையை மறைக்காமல் சொல்லவேண்டும் என்றால் தற்போதைய திரைப்பட துறையினர் அழகையும் ஆபாசத்தையும் கடைபரப்பும் வியாபாரிகளே. இவர்களுக்கு பின்னால் அணி திரள்வதும் இவர்களது பேச்சை பெரிதாக எடுப்பதும் புத்திசாலித்தனமாகாது. 

இன்னொரு விஷயம் கூட என் புத்தியில் தென்படுகிறது. காமாலை கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்று நீங்கள் நினைத்தாலும் சரி சொல்லாமல் இருக்க என்னால் முடியவில்லை. மின்சார பிரச்சனை மூச்சை பிடிக்கிறது, காவேரி பிரச்சனை கழுத்தை நெரிக்கிறது பல திசையிலிருந்தும் அரசுக்கு எதிரான குரல்கள் ஒலிக்க துவங்கி விட்டன. எனவே மக்கள் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக விஸ்வரூபம் என்ற காலணா பிரச்னையை ஊதி ஊதி பெரிதாக்குகிறார்களோ? என்று தோன்றுகிறது. சற்று யோசித்து பாருங்கள் நான் சொல்வது கூட சரியாக இருக்கலாம்!.


Contact Form

Name

Email *

Message *