Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஊழலின் பார்மூலா நாயகன்...



    நெய்வேலி அனல்மின் நிலையம் அமைக்கபடுவதற்கு முன்பு அத்தகையதொரு அனல் மின் நிலையத்தை இந்தியாவில் எந்த பகுதியில் நிர்மாணிப்பது என்பது பற்றி பிரதமர் நேரு அவர்கள் தலைமையில் ஒரு ஆலோசனை கூட்டம் தலைநகரில் நடந்தது. பல மாநில முதல் மந்திரிகள் அதில் கலந்து கொண்டார்கள் மகராஷ்டிரா மாநிலத்தில் அமைத்தால் நன்றாக இருக்கும் என்றும் உத்திர பிரேதேசத்தில் அமைப்பதே சால சிறந்தது என்றும் மாறி மாறி கருத்துக்கள் சொல்லப்பட்டன கூட்டத்தில் கலந்து கொண்ட அப்போதைய தமிழக முதலமைச்சர் திரு.காமராஜர் அவர்கள் நெடுநேரம் அமைதியாக இருந்து கடேசியாக வாய்திறந்து மாராட்டியமும் உ.பி யும் மட்டுமே இந்திய மாநிலங்களாக இருக்கிறதா? தமிழகம் என்பது இந்தியாவில் இல்லையா? ஏன் இந்த அனல்மின் நிலையத்தை அங்கே வைப்பது பற்றி யாரும் சிந்திக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டார். நேரு உட்பட அனைவரும் வாயடைத்து போயினர். 

இந்திய தேசிய ஒருமை பாட்டிற்குள் உறவோடு வாழ்ந்தாலும் மாநிலத்தின் வளர்ச்சி என்று வருகின்ற போது உரிமையோடு போராடி பெறுகின்ற ஆண்மையும் துணிச்சலும் காமராஜருக்கு இருந்தது. எதிரே நிற்பது கடவுளே ஆயினும் மக்கள் நலத்தை அவருக்காக கூட விட்டு கொடுக்க மாட்டேன் என்ற காமராஜரை போன்ற உறுதிமிக்க தலைவர்களை இன்றைய நிலையில் எதிர்பார்ப்பது சிறுபிள்ளை தனம் என்றாலும் ஓரளவாவது மக்கள் நலனில் அக்கறை காட்ட கூடிய தலைவர்கள் இருப்பார்கள் இருக்க வேண்டும். என்று எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. 

இன்றைய தலைவர்கள் நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை தன்னை எதிர்த்து வெற்றி பெற்றவர்கள் ஆட்சி அமைத்தவர்கள் மண்ணை கவ்வ வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருக்கிறார்கள். கருணாநிதி ஜெயலலிதாவிற்கு ஆகாதவராக இருக்கலாம். ஜெயலலிதா கருணாநிதியை விரோதியாக பார்ப்பவராக இருக்கலாம். ஆனால் இவர்களில் ஒருவர் முதல்வரானால் அவர் மற்றவருக்கு முதல்வரே சாதாரண கடைகோடி மனிதனுக்கு ஒரு முதலமைச்சரிடம் எத்தகைய உரிமை இருக்கிறதோ அதே உரிமை அவர்களுக்கும் இருக்கிறது. ஆனால் இந்த உண்மை ஏனோ இவர்களுக்கு உரைக்க மாட்டேன் என்கிறது. 

திராவிட முன்னேற்ற கழகத்தை எதிர்த்து அரசியல் நடத்துபவராக ஜெயலலிதா இருக்கலாம். தி மு கழகத்தையும் அதன் தலைவர்களையும் பழிவாங்குவதில் ஜெயலலிதாவுக்கு தனிப்பட்ட ஆர்வம் இருக்கலாம். ஆனால் அரசு நிர்வாகம் என்று வருகின்ற போது அது மக்கள் பிரச்சனை மாநிலத்தின் வளர்ச்சி பிரச்சனை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நடந்து முடிந்த தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் தமிழக முதல் மந்திரி அவர்களுக்கு பேசுவதற்கு கூட சந்தர்ப்பம் கொடுக்காமல் அவர் வெளியேறும்படி செய்த கேலி கூத்து மத்திய அரசாங்கத்தால் நடத்தப்பட்டது என்றாலும் அதில் முழுபங்கு மத்திய அரசுக்கு மட்டுமல்ல மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கும் நிறையவே இருக்கிறது என்று தோன்றுகிறது. 

இன்றைய தமிழகம் முன் எப்போதும் அனுபவித்திராத பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. தெளிவாக சொல்வது என்றால் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மிக அதிகம் அண்டை மாநிலமான கர்நாடகம் காவேரியில் தண்ணீர் திறந்து விட மாட்டேன் நீதிமன்ற உத்தரவுகளையும் மதிக்க மாட்டேன் என்கிறது பக்கத்தில் உள்ள கேரளாவோ பெரியார் அணை விவகாரத்தில் தமிழ் நாட்டின் நியாயமான உணர்வுகளை மதிக்க மாட்டேன் என்கிறது. தண்ணீர் பிரச்சனை தான் தலைவலி என்றாலும் மின்சார பிரச்சனையோ உயிர்போகும் பிரச்சனையாக இருக்கிறது. மின்சாரம் இல்லாமல் வேளாண்மை செய்ய முடியவில்லை தொழில் கூடங்களை நடத்த முடியவில்லை அன்றாடம் வாழ்க்கையைகூட சுலபமாக நகர்த்த முடியவில்லை. இன்னும் கணக்கில் அடங்காத பிரச்சனைகள் இருக்கிறது. 

இவைகள் அனைத்தையும் உணர்வு பூர்வமாக பேச வேண்டுமானால் பத்து நிமிடம் என்பது போதாது இன்னும் சற்று நேரத்தை ஒதுக்கி தாருங்கள் என்று கேட்பதில் பெரிய தவறு எதுவும் இல்லை. காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலம் ஆளாத மாநிலம் என்று பாகுபாடு பார்க்கவில்லை எல்லோருக்கும் சமமான நேரம் ஒதுக்கபட்டது என்று மத்தியரசு சமாதானம் சொல்கிறது. இது எப்படி இருக்கிறது என்றால் தலைவலி இருப்பவனையும் தலையே இல்லாது இருப்பவனையும் ஒன்றாகவே பார்ப்போம் என்பது போல் இருக்கிறது. அந்தந்த மாநிலத்திற்குறிய பிரச்சனைகளின் அடிப்படையில் நேரங்களை ஒதுக்கினால் எதுவும் குறைந்து போகாது. 

திரிபுராவின் குறைகளை ஐந்து நிமிடத்தில் சொல்லி விடலாம் என்பதற்காக காஷ்மீர் பிரச்சனையும் அதே நேரத்தில் சொல்ல வேண்டும் என்று சொன்னால் எப்படி சரியாகும். முதல்வர்கள் பேச வேண்டாம் தங்களது மாநிலத்திற்குறிய சிக்கல்களை எழுதி கொடுங்கள் படித்து பார்த்து ஆவண செய்கிறோம். என்று மத்தியரசு சொல்வதாக இருந்தால் அதற்காக முதலமைச்சர்களை வரவைக்க வேண்டிய அவசியம் இல்லையே கடிதங்களை மின்னஞ்சல்களில் விநாடி நேரத்தில் பெற்றுவிடலாமே சில சிக்கல்களை எழுதி சொல்லிவிட முடியாது. பேச்சில் தான் சொல்ல முடியும். அப்போது தான் பிரச்சனைகளின் முழு நிலவரம் என்னவென்று மக்களுக்கு தெரியும். அப்படி நிலவரங்களை தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்பது போல மத்திய அரசின் நடைமுறை இருக்கிறது. 

சிலர் சொல்கிறார்கள் மத்திய அரசு அலுவலங்களுக்கு தமிழ்நாட்டின் பிரச்சனைகள் கோப்புகளில் அனுப்ப பட்டால் அதை உடனடியாக திறந்து பார்க்க வேண்டாம் எந்த நடவடிக்கைகளையும் துரிதமாக எடுக்க வேண்டாம் என்ற வாய்மொழி உத்தரவு போட்டது போல மத்தியரசு அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். என்று ஒருவேளை இந்த தகவல் தான் உணமையாக இருக்குமோ என்று நடைபெறுகின்ற நிகழ்வுகளை பார்த்தால் நமக்கு தோன்றுகிறது. 

தனது உறவீனர்களின் சம்பாத்தியம் போய்விட கூடாது என்பதற்காக கேபிள் டிவி சம்பவத்தில் மத்தியரசு பாராமுகமாக இருக்க வேண்டும் மக்கள் ஆயிரம் அவஸ்தை பட்டாலும் தமிழ்நாட்டில் இருந்து தொழில் முனைவோர்கள் வெளியேறி போனாலும் மின்சாரத்தை மட்டும் கொடுத்துவிட கூடாது எந்தவகையிலாவது அம்மையாரின் அரசாங்கம் நிம்மதியாக இருக்க கூடாது. அப்படி இருப்பதற்கு மத்தியரசு எது செய்தாலும் அதன் ஆயுள் காலத்தை முடிவுக்கு கொண்டுவந்து விடுவோம் என்றவகையில் கருணாநிதி அவர்களின் ராஜ தந்திரம் செயபடுவது தெள்ள தெளிவாக தெரிகிறது. 

மத்தியரசு தொகுப்பிலிருந்து மின்சாரத்தை தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவதற்கு வழித்தடங்கள் தரமாட்டோம் என்று சொல்வதும் தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்திற்கு தரமாட்டோம் என்று அடம்பிடிப்பதும் ஒரு பொறுப்புமிக்க மத்திய அரசின் செயலாக இல்லை. அரசின் மனப்பாங்கு மக்கள் துயரங்களை நீக்குவதாக அல்லாமல் தனக்கு ஆகாத அம்மையாருக்கு சிக்கல்களை மீண்டும் மீண்டும் கொடுத்து ரசிக்க வேண்டும் என்ற ரீதியிலேயே இருக்கிறது. இதனுடைய பின்னணி ஜெயலலிதாவை அரசியல் விரோதியாக மட்டுமே பார்க்கும் நிலையில் திமுக இருப்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. திமுகவும் அதை சார்ந்த மத்திய அரசும் தமிழக மக்களை தொல்லை படுத்துவதாக நினைக்கவில்லை ஜெயலலிதாவை நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறது. 

தமிழ்நாட்டில் வாழ்ந்த சீதக்காதி என்ற வள்ளல் இறந்த பிறகும் தர்மம் செய்தான் என்பதை செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்று அழகான பழமொழியில் தமிழ்மக்கள் சொல்வார்கள். தாங்கள் வெல்ல வேண்டும் என்பதற்காக தோற்றும் கெடுத்து கொண்டிருக்கிறது திமுக ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சியை தடுப்பதற்கு வருங்கலத்தில் திமுக அரசை ஏற்படுத்துவதற்கு எத்தனையோ உருப்படியான வழிகள் இருக்கின்றன. அவற்றை விட்டு விட்டு மக்கள் நலத்தோடு விபரீத விளையாட்டு விளையாடும் கலைஞரின் ராஜ தந்திரம் யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டது போல ஆகிவிடும். 

ஒரு மாநில கட்சியின் சில உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் என்பதற்காக பொறுப்பு மிக்க ஒரு மத்திய அரசு கீழ்த்தரமான முறையில் செயல்படுவதை இந்திய வரலாறு இப்போது மட்டுமே காண்கிறது. தமிழக மக்களுக்கு தங்களால் எந்த நன்மையையும் போக கூடாது என்று காங்கிரஸ் அரசு நினைத்தால் தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கின்ற வரி வருவாயை வேண்டாம் என்று சொல்ல வேண்டும் வருடம் தோறும் மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசு கொடுக்கும் நிதியை விட அதிகபடியான வரிபணத்தை தமிழகத்திடம் இருந்து மத்திய அரசாங்கம் பெறுகிறது. அந்த வருவாய் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லுகின்ற துணிச்சல் இல்லாத போது தனிப்பட்ட பகையின் காரணமாக மாநில மக்களையே கஷ்டபடுத்துவது மிகபெரிய தவறு. தவறுதலான முன்னுதாரணம் மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து இப்படியே இருந்தால் பல விபரீதமான பின்விளைவுகள் உருவாகலாம். 

பருக்அப்துல்லாவின் செல்வாக்கை குறைப்பதற்காக காங்கிரஸ் ஆடிய சதுரங்க ஆட்டமே இன்று அந்த மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் துப்பாக்கிகளின் ஓசையாக கேட்கிறது. சிரோன்மணி குருத்துவாரா பிரபந்த கமிட்டியின் செல்வாக்கை சீர்கெடுக்க விரும்பியதாலே பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் தீவிர வாதிகள் உருவானார்கள். இன்று பல வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது என்றால் அதற்கு காங்கிரஸ் காரர்களின் கபட நாடகமே என்பதை துணிந்து சொல்லலாம். இன்றும் அதே மாதிரியான அரசியல் சதூரங்க ந்டாகத்தை தமிழ்நாட்டில் காங்கிரஸ் நடத்தி பார்க்கிறது. இதற்கு இங்கிருக்கும் திராவிட பரிவாரங்கள் துணை போகின்றது. இவர்களின் சுயநல நாடகத்திற்காக மக்களின் அமைதியான வாழ்க்கை பலியாகிவிட கூடாது என்பதே நல்லதை விரும்பும் நல்லோர்களின் எண்ணம். 

எழுபதுகளின் ஆரம்பத்தில் பதவிக்கு வந்தவுடன் மதுக்கடைகளை திறந்து வைத்து தமிழகத்தில் ஒரு தலைமுறையையே வீணாக்கினார் கருணாநிதி. தனது சுயலாபத்திற்காக தமிழ் உணர்வை தூண்டிவிட்டு ஆங்கில பள்ளிகளை திறந்து வைத்து தமிழ் பண்பாட்டையே குழிதோண்டி புதைக்க வழிசெய்தார் கருணாநிதி தனது குடும்பத்திற்காக தனது வாரிசுகளுக்காக நாட்டின் வளத்தை எப்படி வேண்டுமானாலும் சிதைக்கலாம் என்பதற்கு முன்னுதாரணமாக இருந்தார் கருணாநிதி. இலைமறைவு காய்மறைவாக இருந்த பொதுநல வாழ்வில் சீர்கேடு என்ற கொடிய சித்தாந்தத்தை சட்டபூர்வமாக எதிலும் மாட்டிகொள்ளாமல் செய்து முடிக்க பலவகையான ஊழல்களின் ஊற்றுகண்ணை திறந்துவிட்டார் கருணாநிதி. இன்றைய ஆட்சியாளர்கள் கூட சொத்து குவிப்பு போன்ற முறைகேடுகளை நடத்துவதற்கு கருணாநிதியே பார்முலா கதாநாயனாக இருந்தார். இப்படி அவர் தனது நீண்ட நெடிய அரசியல் வாழ்வில் தமிழ் மக்களுக்கு எந்த வகையிலும் நன்மை செய்ததே இல்லை என்று தெளிவாக சொல்லலாம். 

இப்போது அவருக்கு வயது மிகவும் முதிர்ந்து விட்டது இந்த வேளையிலாவது தனக்கு மத்திய அரசாங்கத்தில் கிடைத்திருக்கும் அளப்பரிய செல்வாக்கை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு எதாவது ஒரு சிறிய நன்மை செய்யலாம். ஆனால் வயது முதிர்ந்தாலும் ஓநாயின் இரத்த வேட்கை போகாது என்பது போல இந்த நிலையிலும் மக்களுக்கு நன்மை வந்து விட கூடாது தனது சொந்த மக்களுக்கு தீமை வந்துவிட கூடாது என்பது போல நடந்து கொள்கிறார். இதன் வெளிபாடே தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் முதலமைச்சரை அவமானபடுத்தியது ஆகும். என்ன செய்வது தமிழன் தலையெழுத்து சுயநல காரர்களே அவனை எப்பொழுதும் ஆள்கிறார்கள்.



Contact Form

Name

Email *

Message *