Store
  Store
  Store
  Store
  Store
  Store

நரகத்தின் பாதை நாட்டியம்...?


     மீண்டும் ஒருமுறை யதார்த்தவாதியான நான் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள் செளக்கியாமா? குசலம் விசாரிப்புகள் இருக்கட்டும் நீட்டி முழங்காமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். 

இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர்கள் வட்டாரத்தோடு பேசிகொண்டிருந்தேன் அப்போது அதில் ஒரு நண்பர் நாட்டியங்களை பற்றி விரிவாக வியந்து பேசினார் நாட்டிய முறைகளை அவர் எடுத்து சொன்ன போது கேட்பதற்கு வியப்பாகவும் சுகமாகவும் இருந்தது. அப்போது எதிர்பாராமல் வேறொரு நண்பர் நாட்டியம் என்னய்யா பெரிய நாட்டியம் உடம்பை வளைத்து குலுக்கி ஆடுவதில் தெய்விகம் இருக்கிறது தத்துவம் இருக்கிறது என்று நீங்கள் சொல்வதெல்லாம் வெட்டி பேச்சி மனித மனதினுடைய வக்கிரத்திற்கு தெய்வீகமுலாம் பூசுவதன் பெயர்தான் நாட்டியம் என்று வெடிகுண்டு மாதிரி ஒரு கருத்தை தூக்கி போட்டார். 


ஒட்டுமொத்த கூட்டமே ஸ்தம்பித்து விட்டது. ஆடல்கலை என்ற நாட்டியம் இறைவன் மனிதனுக்கு தந்தது இறைவனே நடனமாடி கொண்டிருக்கிறான் என்பதற்காகத்தான் அவனுக்கு தில்லை கூத்தன் ஆடலரசன் அம்பலத்தில் ஆடுவான் என்ற புகழ் மொழிகளை தந்திருக்கிறோம். இறைவனும் இறைவியும் ஆடுகிற ஆனந்த தாண்டவமே உலகத்தின் படைப்பாகவும் அவர்களின் ஊழித்தாண்டவம் உலகத்தின் முடிவாகவும் நாம் கருதுகிறோம். அப்படிப்பட்ட நாட்டிய கலையை மனவக்ரத்தின் வெளிப்பாடு என்று சொன்னால் அதிர்ச்சி அடையாமல் என்ன செய்வது. 

வார்த்தைகளால் குண்டு போட்ட அந்த நண்பரே மீண்டும் தொடர்ந்து பேசினார். நாட்டியம் நடனம் என்பவைகள் காமத்தை தூண்டி மனிதனை கடவுள் மத்தியிலிருந்து கீழே தள்ளிவிடும் சாத்தானின் கண்டுபிடிப்பு தான் இசையும் நாட்டியமும் இவைகளை நாடி போவது நரகத்தை நாடி போவதற்கு சமமாகும். ஆடுகிறவர்கள் அனைவருமே உணர்வுகளை தூண்டி அதன் மூலம் பொருளீட்டுபவர்கள். மற்றவர்கள் அதாவது அதை ரசிப்பவர்கள் விளக்கில் விழும் விட்டில் பூச்சிகள். 


மனைவியை ஆடவிட்டு கணவனும் மகளை ஆடவிட்டு பெற்றோர்களும் வேடிக்கை பார்ப்பது மிக மட்டமான ரசனை உடல் அசைவுகள் மூலம் இச்சைகளை தூண்டலாமே தவிர உயரிய எண்ணங்களை உருவாக்கிவிட முடியாது . என்று சரமாரியாக பேசினார். இவர் மட்டுமல்ல இவரை போல நிறையப்பேர் பேசுகிறார்கள் நாட்டியத்தை மட்டுமல்ல சிற்பத்தை ஓவியத்தை இசையை ஒட்டுமொத்த கலைகளையே சாத்தானின் வேதமென்று சொல்லுகின்ற ஒரு கூட்டம் உலகத்தில் இருக்கிறது. அவர்கள் வார்த்தைகளை அள்ளி வீசுகின்ற போது கலைகளை நேசிப்பவர்கள் மூடர்களிடம் வாதமிட்டு ஆகபோவது என்ன? என்று ஒதுங்கி விடுகிறார்கள். சம்மந்தப்பட்டவர்களின் ஒதுக்கமே விமர்சனம் செய்பவர்களின் ஊக்கமாக மாறிவிடுகிறது. 

கலைகளை பற்றி ஆர்வம் மட்டுமே இருந்து அதை ரசிக்க மட்டுமே தெரிந்து விளக்கமான விரிவான விஷய ஞானம் இல்லாதவர்கள் இத்தகைய உரைகளை கேட்டு குழம்பி விடுகிறார்கள். இவர்கள் கூறுவதிலும் நியாயம் இருப்பது போல தெரிகிறதே பெருவாரியான நாட்டிய மேடைகளில் தலைவனின் வரவுக்காக ஏங்கி தவிக்கும் தலைவியின் விரக தாபத்தை மிகை படுத்தி காட்டுவதாகவே நிகழ்சிகள் அமைந்திருக்கின்றனவே? அதனால் நாட்டியம் என்பதுவே உணர்வுகளை சீண்டுவதற்கு தானோ என்றும் எண்ணுகிறார்கள். 


நாட்டியத்தை விடுங்கள் பாடுபவனையும் பாடலை கேட்பவனையும் ஒருங்கே மகிழ்விக்கும் இசையை கூட சிலர் இச்சைகளை தூண்டும் கருவி என்றே விமர்சனம் செய்கிறார்கள். இன்றைக்கு மக்கள் மத்தியில் உலா வருகின்ற பல பாடல் வரிகளை காதுகொடுத்து கேட்க சகிக்காமல் முகம் சுளிக்கும் எத்தனையோ மனிதர்களை கண்டிருக்கிறோம். இசைக்கான போட்டிகளை நடத்தி இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதாக சொல்லும் சில தொலைக்காட்சி நிகழ்சிகள் கூட அதில் பங்கு பெறுபவர்கள் நீதிபதிகளாக வருபவர்கள் தொகுத்து வழங்குபவர்கள் அடிக்கின்ற கூத்தையும் அணிந்திருக்கும் ஆடைகளையும் எதுமாதிரியும் இல்லாது புதுமாதிரியாக பல்லிளிக்கும் அலங்காரத்தையும் கண்டு கதிகலங்கி போவதையும் அறிகிறோம். 

ஒரு தொலைகாட்சியில் சிறுவர்களுக்கான இசைநிகழ்ச்சி நடக்கிறது குழந்தைகளின் திறமையை வெளிகாட்டுகிற மனபோக்காக அதை பாக்கும் போது யாரும் சொல்ல மாட்டார்கள் காராணம் பிஞ்சு குழந்தைகள் பாடுகின்ற பாடல் வரிகள் வயதுக்கு வந்தவர்களையே கெடுத்துவிடும். குழந்தைகளை பற்றி கேட்க வேண்டாம் இன்னொரு தொலைகாட்சியில் குழந்தைகளுக்கான நாட்டிய போட்டி அதில் அருவெறுப்பான அபிநயம் காட்டும் குழந்தைகள் நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா? அல்லது வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறோமா? என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது. தமிழ் தொலைகாட்சிகள் என்றில்லை மலையாளம், ஹிந்தி என்று நாடு முழுவதுமுள்ள தொலைகாட்சியின் லட்சணம் இது தான்.


கலைகளும் கலைஞர்களும் இந்தமாதிரி நடத்தபட்டால் கலைகள் என்பதே தெய்வீகம் என்ற நிலை மாறி காமகளியாட்டத்தின் மறுவடிவமே கலை என்ற நிலை வந்துவிடும். அப்போது கலைகளை பற்றி நான் மேலை குறிப்பிட்ட விஷமத்தனமான விமர்சனங்கள் உண்மையை போல் நடமாட ஆரம்பித்து மக்களின் மனநிலையை இறுகி போகவைத்து நாடு முழுவதும் மனநோய் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்துவிடும். 

அறிவில் சிறந்த நமது முன்னோர்கள் இயல் இசை நாட்டியமென்று கலையை மூன்றாக பிரித்ததற்கு ஆழமான அர்த்தங்கள் உண்டு. இயல் என்ற வரிசையில் கவிதை இலக்கியம் மட்டுமல்ல சிற்பம் ஓவியம் கூடவந்துவிடும். இவைகள் மனிதனின் அறிவை செழுமைபடுத்தி கூர்மையாக்குவது. இசை கலையோ கூர்மையான அறிவு உணர்வுகளோடு கலந்து அன்பாக வெளிப்பட செய்வது. நாட்டியம் அறிவையும் மனதையும் மட்டுமல்ல உடலையும் கூட ஒருநிலைபடுத்தி மனித தன்மையில் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்பட செய்வது. இதை நமது குழந்தைகளுக்கு சரியான முறையில் நாம் கொடுக்காமல் போனால் இழக்க போவது கலைகளை அல்ல தலைமுறையை.


மனிதனுக்கு இறைவன் கொடுத்த அறிய பொக்கிஷமான நான்கு வேதங்களை எளிமையாக புரிந்து கொள்ள முடியாத மனிதர்கள் பலருண்டு அவர்களும் கூட வேத ரகசியங்களை புரிந்து கொள்ள வேண்டும் அறிந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும் என்பதே ஆன்றோர்களின் விருப்பம். அந்த விருப்பத்தை மிக எளிமையாக நாட்டியம், அபிநயம், கீதம் போன்ற ரசங்களை ஒருங்கே இணைத்து உருவானது தான் நாட்டிய வேதம். இதை ஐந்தாவது வேதம் என்று கூட சொல்கிறார்கள். 

நாட்டியம் என்பது பலர் நினைப்பது போல உடலை வளைத்து நெளித்து செய்யும் உடல் பயிற்சி அல்ல. அதில் வேதாந்த தத்துவங்களே அடங்கி இருக்கிறது. நமது தத்துவங்கள் எதை முக்கியமாக கருதுகிறது? மனிதன் என்ற ஜீவாத்மா இறைவன் என்ற பரமாத்மாவோடு இரண்டற கலக்கும் முக்தி நிலையையே பிரதானம் என்று கருதுகிறது. நாட்டியமும் பரமாத்மாவை பிரிந்து உழலும் ஜீவாத்மா பரமாத்வாவோடு இணைய வேண்டிய தவிப்பை வெளிபடுத்துவதையே தனது மூல வித்தாக கொண்டுள்ளது. 


மாயையின் தோற்றங்கள் அனைத்திற்கும் இகம் என்ற பொது பெயர் உண்டு இகத்திற்கு அப்பாற்பட்ட பெருநிலையை பரம் என்று அழைப்பார்கள் மாயை எட்டிபிடிக்க முடியாத அதீத நிலையில் இருக்கும் பரமனை அல்லது பரத்தை சென்று அடைவதே இகத்தில் உழலும் ஜீவனின் ஒரே நோக்கமென்று உணர்த்துவதே நாட்டியம். பரம்பொருள் பரமாத்மா என்ற வார்த்தைகள் இனங்களை கடந்தது மதங்களுக்கு அப்பாற்பட்டது. சுருக்கமாக சொல்வது என்றால் எந்த மதத்திற்கும் சம்மந்தமே இல்லாத கடவுளை குறிப்பது.

கடவுளை அடைய நமது பெரியவர்கள் தானம் செய்ய சொல்கிறார்கள் தானம் உடலை பாதுகாக்கும் மனதை பாதுகாக்க தவம் செய்ய சொல்கிறார்கள் மனதையும் தாண்டி மனிதன் பயணித்து இறைவனை அடைய அல்லது இறைவனை உணர இருக்கும் ஒரே மார்க்கம் கலை என்ற ஒப்பற்ற மார்க்கம் மட்டுமே அந்த கலை கலையாக இருந்தால் நம்மை கரையேற்றும் கலை கொலையாக ஆனால் நமக்கு கதிமோட்சம் இல்லாமல் செய்து விடும். 

நான் சொல்லவருவது என்னவென்றால் கலை நமது மனதை மேல்நோக்கி ஈர்க்க கூடியதாக இருக்க வேண்டுமே தவிர கீழ்நோக்கி தள்ள கூடியதாக இருக்க கூடாது. இந்திய கலைகள் எதுவுமே மனிதனை கீழ்நிலை படுத்துவது கிடையாது அதில் மற்ற நாட்டு சரக்குகள் ஊற்ற படும் போது தான் பால் கள்ளாக ஆவதை போல் ஆகி விடுகிறது. கள்ளை மட்டுமே காணுகின்ற கண்கள் கலையை காமத்தோடு மட்டுமே சம்மந்தபடுத்தி பேசுகிறது. அதை தவிர்க்க நாம் நமது கலைகளின் புனித தன்மையை தெரிந்து கொள்ள வேண்டும் தெரிந்து கொண்டால் அதை சுலபமாக பாதுகாக்கலாம் 
நன்றி மீண்டும் இன்னொருமுறை உங்களை சந்திக்கிறேன் 

அன்புடன் 
யாதார்த்தவாதி



Contact Form

Name

Email *

Message *