Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆத்மா என்ற எலியும், ஆணவ பூனையும்!


    ல ஆன்மிக பெரியவர்கள் பேசும் போது அடிக்கடி ஆணவம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதை கேட்டிருக்கிறோம் ஆணவம் என்றால் என்ன? என்று கேள்வி எழுப்பும் போது நமது சிற்றறிவை பொறுத்தவரை அகந்தை கர்வம் என்று பொருள் கொள்கிறோம் ஆனால் அதுமட்டும் தானா ஆணவம் என்பது என்று சிந்திக்க வேண்டும் ஆணவத்தை பற்றி மிக அதிகமாக சைவ சித்தாந்த பெரியவர்கள் தான் பேசுகிறார்கள்.

சைவ சித்தாந்திகள் பேசுகின்ற ஆணவத்திற்கும் அத்வைதிகள் என்ற வேதாந்திகள் பேசுகின்ற அவிந்தைக்கும் ஸ்ரீ வைஷ்ணவம் சொல்லுகின்ற அகங்காரத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. சில நேரங்களில் ஆழ்ந்து சிந்திக்கும் போது சைவ சித்தாந்திகள் குறிப்பிடும் ஆணவம் என்ற பொருள் மிகவும் சிறந்ததாகவும் நம்மால் புரிந்து கொள்ளகூடியதாகவும் இருக்கிறது.

மனித ஜீவனை முன்னேற முடியாமல் கட்டிபோடுவது பாசம் பந்தம் போன்றவைகள் ஆகும் அதே மனிதனின் ஆத்மாவை மாசுபடுத்துவது மலம் என்று அழைக்கப்படுகிறது மும்மலங்களில் ஒன்றாக ஆணவம் கருதப்படுகிறது. செம்பு பாத்திரத்தில் உணவு பொருள்களை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் அதில் ஒருவித களிம்பு உருவாகும் அந்த களிம்பை அகற்றாமல் சுத்தப்படுத்தாமல் மீண்டும் மீண்டும் செம்பு பாத்திரத்தை பயன்படுத்துவோமானால் அதில் வைக்கப்படும் பொருள்கள் விஷமாகி விடும்.

அதே போன்ற களிம்பு தான் ஆத்மாவை பீடிக்கும் ஆணவம் என்பதாகும் அதனாலையே ஆணவத்தை சகசமலம் மூலமலம் என்று சைவர்கள் அழைக்கிறார்கள். இதுமட்டுமல்ல இரவு நேரத்தில் வருகின்ற இருட்டு இருக்கின்ற பொருளை கண்களால் பார்க்க முடியாமல் மறைத்துவிடுவது போல ஆணவ மலம் அறியாமை என்னும் இருட்டாக மாறி ஆத்மாவின் அறிவை மறைப்பதனால் அது இருள் மலம் என்றும் அழைக்கப்படுகிறது.

மனித சரீரத்திற்குள் மறைந்திருக்கும் ஆத்மா நுணுக்கரிய நுண்ணியது என்பதை நாம் அறிவோம் அந்த நுண்ணியதிலும் நுண்ணியதான ஆத்மாவை சென்று இந்த ஆணவ மலம் பற்றிக்கொள்வதனால் இந்த ஆணவ மலத்திற்கும் நுண்ணியது என்று பொருள் கூறப்படுகிறது அதாவது ஆகாயம் முதல் பூமி வரை விசாலமாக இருக்கின்ற ஆத்மாவை சிறுமை படுத்துவதனால் இதற்கு நுண்ணியது என்று பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.

பொதுவாக ஆணவத்தின் இயல்பு மறைப்பதாகும் ஆத்மாவின் அறிவை மறைத்து அகங்காரம் மமதை ஆசை கோபம் முதலிய தீய குணங்களை தீய செயல்களை உருவாக்கி விடுவதே ஆணவத்தின் செயல்பாடு எனலாம். சர்வ வல்லமை பொருந்திய ஆத்மாவை கூட இந்த ஆணவம் ஆட்டி பார்க்கலாம் ஆனால் ஞானம் என்ற நல்லறிவை ஆத்மாவல் தொட்டு பார்க்க கூட முடியாது. காரணம் ஆணவம் தன்னை இன்னார் என்று அடையாளபடுத்தி காட்டினால் கூட உணர்வு குளத்தில் நீந்தி கொண்டிருக்கும் ஆத்மாவால் அதை அடையாளம் காண இயலாது அதே நேரம் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட நல்லறிவு ஆணவத்தின் எந்த வேடத்தையும் துல்லியமாக அடையாளம் கண்டுகொள்ளும்.

ஆணவத்தை அடக்கி மேலெழுந்து வரமுடியாமல் முடக்கி போட்டு செய்கின்ற எல்லா காரியங்களும் சத்கர்மமாகும் அதாவது பாவகரை படாத செயலாகும் ஆணவம் வழிநடத்த செய்கின்ற செயல் அனைத்துமே பாவகர்மம் என்று துணிந்து சொல்லாம் அதாவது நான் என்ற அகந்தையோடு பத்தாயிரம் உயிர்களை காப்பாற்றினால் கூட அது நற்கர்மம் ஆகாது அகந்தை இல்லாமல் ஒரு சிறிய துரும்பை கிள்ளி போட்டால் கூட அது பலநூறு ஆலயங்களை உருவாக்கிய சத்கர்மமாக பரிமளிக்கும்.

ஆணவத்தால் வருகின்ற பாவங்கள் எதுவாக இருந்தாலும் அதை அனுபவித்தே ஆகவேண்டும் என்பது உயிர்களின் கட்டாயமாகும். கர்ம வினையின் தாக்கத்தை சில பரிகாரங்கள் மூலம் தவிர்த்து கொண்டாலும் கூட அது வேறு வடிவில் வேறு வகையில் அடுத்த ஜென்மாவில் கூட நம்மை தொடராமல் விட்டு விடாது. ஜென்மங்கள் தோறும் தொடர்கின்ற பாவ வினையை தருகின்ற ஆணவத்தை அழிக்காமல் உயிர்கள் இறைவனின் பாதார விந்தங்களை சென்றடைய முடியாது.

இத்தகைய ஆணவத்தை அழிப்பது எது அதாவது ஆணவம் என்பது நமக்கு வராமல் தடுப்பது எது என்ற கேள்வி எழுவது இயற்கை நமது சாஸ்திரங்கள் அதற்க்கான வழியை நமக்கு சொல்லாமல் இல்லை பாவங்கள் நிறைந்த கலியுகத்தில் பாவங்களை கழுவி களையும் ஒரே கருவி என்று பகவத்நாமா பாராயணத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது சிவ நாமத்தையோ ராம நாமத்தையோ அல்லது உங்கள் மனத்திற்கு இனிதாக தோன்றுகின்ற எந்த நாமத்தையோ இடையறாது பாராயணம் செய்து பாருங்கள் ஆணவம் என்பது வெளிச்சத்தை கண்ட இருட்டை போல் உங்களிடமிருந்து மறைந்தே போகும்.



Contact Form

Name

Email *

Message *