Store
  Store
  Store
  Store
  Store
  Store

நானும் என் விதியும்...


   சுவாமிஜி அவர்களுக்கு நமஸ்காரம் நான் நூறு வருடகாலத்திற்கு மேல் பாரம்பரியம் கொண்ட ஆன்மீக அமைப்பு ஒன்றில் துறவியாக இருக்கிறேன். வெகு சமீபகாலமாக உங்களது இணையதளத்தை படித்து வருகிறேன். மிக அழகாகவும் ஆழமான கருத்து கொண்டதாகவும் உங்கள் எழுத்து இருக்கிறது. மனதில் பட்டதை எந்த வித தயக்கமுமின்று நீங்கள் வெளிபடுத்தும் பாங்கு எனக்கு நிறைய பிடிக்கிறது.

சுவாமிஜி நீங்கள் என்னைவிட வயதிலும் அனுபவத்திலும் பெரியவர் உங்களுக்கு சன்யாச தீட்சை முறையின் தத்துவங்கள் நன்றாக தெரியும். நமது பழைய பெயரையும் உறவையும் முற்றிலுமாக அறுத்த பின்பே இந்த வாழ்க்கைக்குள் நுழைகிறோம். இன்னும் சொல்ல போனால் நமது பழைய உடம்பிற்கு வாய்கரிசி போட்டு இறுதிகாரியம் முடித்து திவசம் நடத்திய பிறகே புதிய சன்யாச மார்க்கம் நம்மை அழைத்து கொள்கிறது. இந்த நிலையில் ஒரு சந்யாசியானவன் புதிதாக பிறந்தவன் ஆகிறான். எனவே அவனுக்கு ஜோதிடம் ஜாதகம் போன்றவைகள் பலன் தராது என்று சில சாதுக்கள் சொல்கிறார்கள். இது உண்மையா?

இந்த கேள்வி என் மனதிற்குள் நெடுநாளாக இருந்துவருகிறது. ஜோதிட சாஸ்திரத்தை அறிவு பூர்வமாக அணுகி விளக்கம் தருவதில் நீங்கள் சிறந்தவர் என்பதில் ஐயமில்லை எனவே தான் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறேன். என்னை போன்றும் நிறைய பேருக்கு இந்த சந்தேகம் இருக்கலாம் இதை தீர்க்க வேண்டியது உங்களது கடமை எனவே விளக்கம் தாருங்கள் சில காரணங்களுக்காக என் பெயரை பிரசுரம் செய்ய வேண்டாம். நன்றி இறைவன் உங்களுக்கு அனுக்ரகம் செய்வான்.

பெயர் சொல்ல விரும்பாத ஒரு துறவி

    கிரகங்கள் என்பது ஒரு தனிப்பொருள் அல்ல சுயேச்சையாக இயங்க கூடியது அல்ல அறிவியல் கிரகங்களை தானியங்கி என்று சொன்னாலும் அது உண்மை அல்ல காரணம் கிரகங்களை இயக்குவது அல்லது அவைகள் இயங்க காரணமாக இருப்பது கடவுள் ஒருவரே. ஒரு பண்ணையாருக்கு பல வேலையாட்கள் இருப்பது போல கிரகங்கள் அனைத்துமே இறைவனின் பணியாளராக வேலை செய்கிறது. இப்படி நான் சொல்ல வில்லை நமது இந்துமத சாஸ்திரங்கள் அனைத்துமே ஒரே குரலில் இந்த கருத்தையே வலியுறுத்தி சொல்கின்றன.

நாம் இந்த முறை மட்டுமல்ல கடந்த பல முறையும் பல பிறவிகளை எடுத்திருக்கிறோம். அந்த பிறவிகளில் நல்லதும் கெட்டதுமாக பல காரியங்களை செய்தும் இருக்கிறோம். அவற்றிற்கான பலா பலனை அனுபவிக்க வேண்டிய கட்டாயமும் நமக்குண்டு நமது செயலை பொறுத்தே நமது விதி தீர்மானிக்கபடுகிறது. அந்த விதியை நாம் முழுமையாக அனுபவிக்க ஒரு தபால்காரன் கடிதத்தை கொண்டு நமது முகவரி தேடி தருவது போலக் கிரகங்கள் நமது வினை பயனை நம்மிடம் கொண்டு சேர்க்கின்றன. அந்த வினை பயனை அனுபவிப்பதில் இருந்து யாரும் தப்ப இயலாது. உண்மையான பக்தி மற்றும் பிரத்தனையின் மூலம் வினை பயனின் வேதனையை குறைத்து கொள்ளலாமே தவிர இல்லாமலே முடித்து விட முடியாது.

ஒரு மனிதன் பொதுவாழ்வில் இழக்க கூடாதது பதவி தனிப்பட்ட வாழ்வில் இழக்க கூடாதது மனைவி இவை இரண்டையுமே பகவான் ராமனாக அவதாரம் செய்த போது இழந்தான் . கடவுளாக இருந்தாலும் வகுத்த விதியை விதைத்த விதையை அறுவடை செய்தே ஆக வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்வதற்காகவே அவன் அத்தகைய துயரங்களை தவிர்க்காமல் அனுபவித்தான் அவனே பரிபூர்ண அவதாரமாக ஸ்ரீ கிருஷ்ண பகவானாக அவதராம் செய்த போது காந்தாரியின் சாபத்திற்கு கட்டுப்பட்டு தனது உடல் கூட இறுதி மரியாதைக்கு கிடைக்கதவண்ணம் தனது அவதாரத்தை நிறைவு படுத்தி கொண்டார்.

இவைகள் எல்லாம் எதை காட்டுகிறது? கடவுளே மனிதனாக பிறந்தாலும் அவன் தனது செயலுக்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும். என்பதைக் காட்டுகிறது. கடவுளுக்கே இந்த நிலை என்றால் அற்ப மனிதர்களின் நிலை எண்ணி பார்க்க முடியாது. அதாவது கிரகங்கள் கொடுக்கும் பலன்களில் இருந்து துறவிகளும் தப்ப முடியாது என்பது என் வாதம் அல்லது தப்பவே கூடாது என்பதும் என் கருத்து.

துறவிகளுக்கு ஜாதக பலன் வேலை செய்யாது என்று சொல்பவர்கள் சாஸ்திரப்படி துறவிகள் தனது பூர்வ பிறப்பிற்கான கர்மாக்களை செய்து முடித்து விடுகிறார்கள். அதாவது அத்தோடு அவர்களோடு பூர்வ வாழ்க்கை முற்று புள்ளி வைக்கப்பட்டு விடுகிறது. அதன் பிறகு அவர்கள் வாழ்வது என்பது புதிய வாழ்க்கை கிரகங்கள் வினைபயனை தரும் என்றால் அது துறவிகளின் பூர்வ வாழ்க்கைக்கு தரும் பலனாக இருக்குமா? அல்லது புதிய வாழ்க்கைக்கு பலனை தருமா? என்ற ஒரு கேள்வியை அவர்கள் கேட்கலாம். இதற்கான விடை மிகவும் சுலபமானது எளிமையானது.

சன்யாச தீட்சை பெரும் போது ஒரு மனிதன் ஆத்மா ரீதியில் சுத்திகரிக்கபடுகிறானே தவிர சரீர ரீதியில் சுத்திகரிக்கபடுவதில்லை. அதவது அவன் பழைய உடம்புடனே புதிய வாழ்க்கையை ஏற்றுகொள்கிறான். எனவே அந்த பழைய உடலுக்குரிய பலாபலனை தவிர்க்க முடியாது. பழைய உடல் இருக்கும் வரை விதி வகுத்த பாதையிலிருந்து தப்பிக்க மனிதனுக்கு வழியில்லை.

இதற்கு உதாரணமாக எனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட ஏற்பட்டு கொண்டிருக்கும் சில சம்பவங்களை சொல்லலாம் இப்போது எனக்குப் பிறந்த ஜாதகப்படி புதன் திசையில் கேதுபுத்தி நடக்கிறது. இந்த் புத்திகாலம் தேவையில்லாத வம்பு வழக்குகளை உருவாகும் என்று புலிபாணி முனிவர் எழுதி வைத்திருக்கிறார். நாம் என்ன தப்பு தண்டாவுக்கா போக போகிறோம் வம்பு வழக்கு எப்படி வரும் என்று நான் நினைத்தேன். அதிசயத்திலும் அதிசயமாக எந்தத் தவுறும் நான் செய்யாமலே சில வழக்குகளை சந்திக்க வேண்டிய சூழல் எனக்கு வந்துள்ளது.

கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு எனது தலைமை சீடர் கோவிந்த சுவாமியின் மனைவிக்கு அவர் தாய்வீட்டு சொத்து பங்காக மூன்று லட்ச ரூபாய் வந்தது அதை வீணாக செலவு செய்வதை விட எதாவது நிலம் வாங்கி போட்டால் குழந்தைகளின் படிப்பு செலவிற்கு விற்று பயன்படுத்தலாம் என்று அவரும் விரும்பினார் அதை நானும் ஆமோதித்தேன் அந்த வேளையில் அரகண்டனல்லுரில் நான் தங்கி இருக்கும் வீட்டுக்கு பக்கத்தில் நாப்பது செண்டு நிலம் விலைக்கு வந்தது அது அன்றைய மார்க்கட் விலையில் ஐந்து லட்ச ரூபாய் கையில் இருந்த பணத்தையும் போட்டு மீத பணம் கடனும் வாங்கி அதை வாங்கி விடலாம் என்று கோவிந்த சாமி அவிப்ராயபட்டார்.

நானும் சரி என்றேன் நிலத்தின் சொந்தகாரர் திரு ஜாபர் சேட் என்பவரிடம் விலையும் பேசி அட்வான்சும் கொடுத்து விட்டோம். மூன்று மாதத்திற்குள் பதிவு செய்து கொள்வதாக ஒப்பந்தம். பதிவு செய்யும் நேரத்தில் கோவிந்த சுவாமியும் அவர் மனைவியும் நேரில் வர முடியாத அளவிற்கு மாமனார் வீட்டில் ஒருவருக்கு நோய் இதனால் கோவிந்த சாமி குறிப்பிட்ட தேதியில் பதிவை நிறுத்த வேண்டாம். உங்கள் பெயரிலேயே பத்திரம் பதிவு செய்து விடுகங்கள். நாம் அதை வருங்கலத்தில் விற்கதானே போகிறோம். எனவே அது உங்கள் பெயரில் இருந்தால் என்ன? என் பெயரில் இருந்தால் என்ன? என்று சொல்லி விட்டார்/ நானும் அந்த நேரத்தில் வேறு வழியில்லாமல் அதற்கு சம்மதித்து பத்திரம் பதிவு செய்து விட்டோம். அதில் எங்களுக்குள் இன்று வரை எந்தச் சிக்கலும் இல்லை இனிமேலும் வரவாய்ப்பில்லை.

ஆனால் பிரச்சனை முற்றிலும் எதிர்பாராத கோணத்திலிருந்து முளைத்தது நிலத்தை விற்ற திரு ஜாபர் சேட் சென்ற பிப்ரவரி மாதம் என்னை பார்க்க வந்தார். நான் மிக குறைந்த விலைக்கு உங்களிடம் நிலத்தை விற்று விட்டேன். இப்போது நில மதிப்பு உயர்ந்து விட்டது. எனவே எனக்கு மீண்டும் அதிகபடியான பணத்தை கொடுங்கள் இல்லை என்றால் நீங்கள் என்னை பணம் கொடுக்காமல் நிலத்தை ஏமாற்றி வாங்கி விட்டதாக புகார் செய்வேன் வழக்கு போடுவேன். அவமான படுத்துவேன். என்று கூறினார். எனக்கு அவரின் போக்கு அதிர்ச்சியாகி விட்டது.

நிலம் வாங்கிய அந்த காலத்தில் அதன் விலை அவ்வளவு தான் வருடங்கள் இத்தனை ஓடிய பிறகு நிலத்தின் விலை கூடியிருக்கிறது. இதற்கு யார் என்ன செய்ய இயலும் ஒருவேளை நிலத்தின் மதிப்பீடு குறைந்து விட்டால் அவரிடம் பணத்தை திருப்பி கேட்பது முறையா? சரியா? கேட்கத்தான் முடியுமா? எனவே நான் நீங்கள் கோரும் படி பணத்தை தர இயலாது என்று சொல்லி விட்டேன். அதற்கு காரணமும் உண்டு அவர் என்னிடம் மிரட்டும் தொனியில் பேசினார். அதற்கு நான் உடன்பட்டு விட்டால் பயந்தவன் தவறுகள் செய்தவன் என்பதை ஒத்துகொள்வது போல் ஆகி விடும்.

அவர் அத்தோடு சும்மா இருந்துவிட வில்லை வக்கீல் நோட்டிஸ் அனுப்பினார். வேறு வழியில்லாமல் நாங்களும் சட்ட பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டோம். மேலும் மேலும் அவர் இன்று வரை கூட கற்பனையான பல பொய்களை ஜோடித்து குருஜியின் மேல் பழி சுமத்துவேன். கிரிமனல் கேஸ் கொடுப்பேன். என்று ஒவ்வொருவரிடமும் சொல்லி மிரட்டி வருகிறார். இதனால் பல நேரங்களில் தேவையில்லாத மன சங்கடம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை நான் கற்றிருக்கும் பல விஷயங்களை வைத்து அவர் மனதை நொடி நேரத்தில் மாற்றிவிடலாம். ஆனால் அப்படி செய்தால் இந்த வினை பயனை வேறு வகையில் நான் அனுபவிக்க வேண்டிய சூழல் வரும் என்பதனால் அதை செய்ய நான் விரும்பவில்லை. வருவது வரட்டும் மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயப்பட வேண்டும். எல்லாவற்றையும் இறைவன் பார்த்து கொள்வான். அவன் விருப்ப படி நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் தாங்கி கொள்வது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

ஒருவேளை கடவுளின் விருப்படி ஜாபர் சேட்டின் பொய்யான குற்ற சாட்டுகளுக்கு நான் பலியாக வேண்டிய சூழல் வந்தாலும் அதற்காக நான் கவலைப்படவில்லை எதையும் தாங்கும் மன உறுதியை இறைவன் எனக்கு தந்துள்ளான். நான் நல்லவன் என்பதை ஊரார் அறிய வேண்டிய அவசியமில்லை உலகத்தை படைத்த நாராயணனுக்கு மட்டும் நான் நல்லவன் என்று தெரிந்தால் போதும். என்னை முழுமையாக அவனிடம் ஒப்படைத்த பிறகு எதற்காக நான் வருத்தப்பட வேண்டும். தாய் பூனை தனது குட்டியை பரண் மீதும் வைக்கலாம் சாக்கடையின் இடுக்கிலும் வைக்கலாம் என் தாய் பூனை நாராயணன் நான் அவன் குட்டி இதில் எனக்கு கிஞ்சித்தும் மாற்றுகருத்து கிடையாது.

இதை இங்கு நான் சொல்ல வேண்டிய சூழல் எதற்கு வந்தது என்றால் நானும் முறைப்படி குரு மூலம் தீட்சை பெற்று சன்யாச வாழ்வை மேற்கொண்டவன் என்னால் முடிந்தவரை ஒரு சன்யாசிக்குரிய தர்மத்தை கடைப்பிடித்து வருகிறேன். ஒருவேளை நான் தவறுகள் செய்திருந்தாலும் அது என்னை அறியாமல் நடந்ததாக இருக்குமே தவிர நான் அறிந்து என் மனசாட்சிபடி எந்த தவறுகளையும். செய்யவில்லை இது எனக்கும் என்னை சுற்றி இருப்பவர்களுக்கும் என்னை படைத்த இறைவனுக்கும் எனக்கு வழிகாட்டும் குருவுக்கும் தெரியும்.

நம்மை விட ஆயிரமடங்கு சக்தி மிகுந்தவர்கள் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரும், சுவாமி விவேகானந்தரும், பகவான் ரமணரும் அவர்கள் நினைத்திருந்தால் தங்களுக்கு வந்த கொடிய நோயிலிருந்து நிமிட நேரத்தில் விடுபட்டு இருக்கலாம். ஆனால் அவர்கள் அதை விரும்பவில்லை விதியின் பயனை இறைவன் கொடுத்த வரமாகவே ஏற்றுக்கொண்டு வாழ்ந்தார்கள். நமக்கு வழிகாட்டினார்கள்

எனவே சன்யாசிகளும் மனித உடம்பில் வாழ்பவர்கள் தான் அவர்களும் ஜோதிடம் என்ற கிரக பலத்தில் இருந்து தப்ப இயலாது. ஒருவேளை அவர்கள் ஆத்மா சூரியனை போலச் சுத்தமாக இருந்தால் வினை பயனால் வருகின்ற வேதனையை ஒரு பார்வையாளனை போலத் தாங்க கூடியவர்களாக இருப்பார்கள். அதானால் தான் விதி கொடுக்கும் தண்டனையில் இருந்து சன்யாசியனாலும் தப்ப முயல கூடாது தப்ப கூடாது என்று நான் விருபுகிறேன்.



Contact Form

Name

Email *

Message *