Store
  Store
  Store
  Store
  Store
  Store

சுமங்கலி பூஜை என்றால் என்ன?


    சுமங்கலி பூஜை என்றால் என்ன? அதை எப்படி செய்ய வேண்டும்? எந்த நாளில் செய்ய வேண்டும்?

வசந்தி,தஞ்சாவூர்


     ம்பிகையின் திவ்விய நாமங்களை சொல்லி வழிபடும் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம் 967 வது திருபெயராக சுவாஷினி என்ற பெயரை அம்மைக்கு கொடுத்து சிறப்பிக்கிறது. சுவாஷினி என்றால் மங்கலம் நிறைந்தவள் என்பது பொருளாகும். சுவாஷினி என்பதே சுமங்கலியாக மாறியது எனலாம். கணவனோடு கூடி இல்லறத்தை நல்லறமாக நடத்துகின்ற பெண்களே சுமங்கலி என்று அழைக்கபடுவார்கள்.

நல்ல இல்லறம் நடத்துகிற பெண்ணை இந்துமதம் பராசக்தியின் வடிவமாகவே காணுகிறது. எனவே அத்தகைய பெண்களை வழிபடுவதை பராசக்தி வழிபாடாகவே ஏற்றுகொள்ளபடுகிறது. வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்ல தலைமுறையை ஈன்று கொடுக்கின்ற பெண் உலகத்து நாயகி என்பதில் மாற்றுகருத்து இல்லை அவளை வழிபடுவதும் அன்னையை வழிபடுவதும் ஒன்றுதான்.

பொதுவாக சுமங்கலி பூஜை நவராத்திரி தினங்களில் சிறப்பாக கொண்டாட படுகிறது. ஒரு வீட்டில் திருமணம் ஆகாமல் நெடுநாட்களாக ஒரு கன்னி பெண் இருந்தால் அவளுக்கான தோஷத்தை நீக்குவதற்கும் சுமங்கலி பூஜை நடத்தலாம். ஆலயங்களில் மகாலட்சுமி ஹோமம் செய்து முடித்த பிறகு சுமங்கலி பூஜை நடத்துவது வழக்கம். சுமங்கலி பூஜை செய்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகிவிடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை

வீடுகளில் சுமங்கலி பூஜை செய்ய வேண்டுமென்றால் இல்லத்தை தூய்மை படுத்தி மாக்கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டி அழகுபடுத்த வேண்டும். சுவாமி அறையில் உள்ள படங்களுக்கு மாலை சாற்றி தூபமிட்டு விளக்கேற்ற வேண்டும். சுமங்கலி பூஜைக்காக ஒற்றைப்படை எண்ணிக்கையில் பெண்கள் அழைக்கப்படலாம் அதாவது மூன்று ஐந்து ஏழு ஒன்பது என்ற எண்ணிக்கையில் பெண்களை அழைப்பது கட்டாயம். 


பூஜைக்காக அழைக்கப்படும் பெண்களுக்கு நல்ல முறையில் வரவேற்பு கொடுக்க வேண்டும். பிறகு அவர்களை தாம்பாள தட்டில் நிற்க வைத்து இல்லத்தலைவி பாத பூஜை செய்ய வேண்டும். குங்குமம் சந்தனம் மலர்கள் கொடுத்து பெண்களை மனையில் மரியாதையோடு அமர செய்ய வேண்டும். பிறகு ஒவ்வொரு பெண்ணையும் அன்னை பராசக்தியாக கருதி தீபாராதனை செய்து வழிபட வேண்டும். ஒவ்வொரு பெண்ணிடமும் தனித்தனியாக பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். வழிபாடு முடிந்த பிறகு புடவை ரவிக்கை மஞ்சள் கண்ணாடி குங்கும சிமிழ் புஸ்பம் வெற்றிலை பாக்கு தட்சணை கொடுத்து உபசரிக்க வேண்டும்.

பூஜைக்கு வந்த பெண்களுக்குக் கட்டாயம் அறுசுவை உணவு கொடுக்க வேண்டும். அவர்கள் கையலம்பக் கண்டிப்பாக நீர்வார்க்க வேண்டும். அதன் பிறகு மீண்டும் ஒருமுறை அவர்களை வணங்கி வழியனுப்ப வேண்டும். அதன் பிறகு தான் பூஜை நடத்திய வீட்டுகாரர்கள் உணவு எடுத்துகொள்ள வேண்டும்.

சுமங்கலி பூஜைக்கு திங்கள், புதன், வெள்ளி போன்ற தினங்கள் உகந்தது ஆகும். இந்த தினங்களில் ராகு காலம் வராத எந்த நேரமும் நல்ல நேரமே ஆகும். சுமங்கலி பூஜை செய்தால் செய்யப்படும் வீட்டில் வறுமை, நோய், துன்பம், தோஷம் நீங்கி வளமோடு வாழ்வார்கள் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தில் பக்தியும் இருக்கிறது. அக்கம்பக்கத்து வீட்டாரோடு கொள்கின்ற ஐக்கியமும் இருக்கிறது.


Contact Form

Name

Email *

Message *