Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆபாசம் தடுக்க ஆவன செய்க !


    சில தமிழ்நாட்டு கிராமிய கோவில்களில் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச நடனங்கள் நடைபெறுகிறது. இது ஆலயத்தின் மகிமையை குறைவு படுத்தி விடாதா? இதை தடுப்பதற்கு என்ன வழி?

இராமச்சந்திரன்,கள்ளகுறிச்சி

   திருசெந்தூருக்கு அருகில் உள்ள குலசேகர பட்டினத்தில் சக்தி வாய்ந்த முத்துமாரியம்மன் ஆலயம் உள்ளது. நவராத்திரி காலத்தில் தசரா பண்டிகை சிறப்புடன் கொண்டாடுவது தமிழகத்திலேயே இந்த கோவிலில் தான் நடைபெறுகிறது. முத்துமாரி அம்மனை வழிபட வருகின்ற பக்தர்கள் நவராத்திரி காலமுழுவதும் சில குறிப்பிட்ட வேடங்களை போட்டு விரதமிருந்து ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து பிராத்தனை செலுத்துகிறார்கள். இந்த விரத முறை மனிதனுக்கு உள்ள அகம்பாவத்தை ஆணவத்தை அறுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும்.


 எனக்கு தெரிந்தவரை 95 ஆம் வருடம்வரை இந்த வழிபாடு முறை பல இடங்களில் மிகவும் நியமத்தோடு நடைபெற்றது. அம்மனுக்காக விரதம் இருப்பவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து பக்கத்து ஊர்களுக்கு சென்று கூட்டமாக ஆடிபாடுவார்கள். நையாண்டி மேளம், ஜண்டை மேளம், கணியான் கூத்து, கரகாட்டம் போன்ற கிராமிய கலைகள் அந்த ஆடல் பாடல்களில் மிக முக்கிய பங்காற்றும். இருள் சூழ்ந்து விட்ட இரவு பொழுதில் பக்தியுடன் கூடிய இந்த கலை நிகழ்ச்சியை பார்ப்பதற்கு நிஜமாகவே மெய்சிலிர்க்கும்.

இன்று கிராமிய கலைக்குழுக்கள் இருந்த இடத்தில் நடன கலைஞர்கள் இருக்கிறார்கள். பாரம்பரியமான கலை அலங்காரங்கள் தவிர்க்கப்பட்டு திரைப்படத்தில் வருகின்ற நடன கலைஞர்கள் அணிந்து கொள்வதை போன்ற அரைகுறை ஆடைகள் அவர்கள் அணிகிறார்கள். அத்தகைய ஆடைகளோடு ஆபாசமான பின்னணி இசையும் சேர்க்கப்பட்டு பக்தி நிகழ்ச்சி பார்ப்பதற்கு அறுவறுப்பை தரும் ஆபாச நிகழ்ச்சியாக இருக்கிறது.


 இதில் எந்த ஊரை சேர்ந்தவர்கள் அதிகமான நடன மாதர்களை அழைத்து வந்து நாட்டியமாட வைக்கிறார்கள் என்பதில் பெரிய போட்டா போட்டியே நடைபெறுகிறது. ஒவ்வொரு ஊரிலும் ஒரே குழுவாக இருந்த நிலை மாறி பல குழுக்கள் உருவாகி அவர்களுக்குள்ளும் தேவையில்லாத போட்டி நடந்து பல நேரங்களில் சண்டை சச்சரவுகள் காவல் நிலையம் வரை போய்விடுகிறது. இப்படி செய்வது தவறு பண்பாட்டுக்கு விரோதமானது என்று அப்பகுதி மக்களில் பலர் நினைக்கவே இல்லை மாறாக அத்தகைய செயல்பாடுகளை ஊக்குவிக்கிறார்கள்.

இது திருநெல்வேலி பகுதியில் மட்டுமே நடைபெறுகிறது என்று சொல்லிவிட முடியாது. வேறு வேறு பெயர்களில் வெவ்வேறு சூழல்களில் தமிழ்நாடு முழுவதுமே பண்பாட்டுக்கு விரோதமான இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு வருகிறது. சில நேரங்களில் நகரங்களில் உள்ள டிஸ்கோ கிளப்புகள் கிராமத்திற்குள் ஊடுருவி விட்டதோ என்ற சந்தேகம் பலருக்கு வருகிறது. சர்வ நிச்சயமாக இது ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தாது. வருங்கலத்தில் மிகபெரும் பண்பாட்டு சீரழிவை உருவாகும் என்பதில் ஐயமில்லை.


தற்போதைய தமிழ்நாட்டு கிராமங்கள் கோவில் திருவிழாக்களில் மட்டுமல்ல மற்றும் பல உள் விவகாரக்களிலும் நகரமயமாகி மனிதாபிமானத்தை இழந்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த சட்டங்கள் போட்டால் மட்டும் போதாது எப்போதுமே ஒரு செயலை தடுக்க பலத்தை பிரோயோகம் செய்யும் போது அது வேறொரு பாதையில் மிகபெரிதாக வெளிவந்து அபாயத்தை உருவாக்குமே தவிர நிரந்தரமான தீர்வுகளை தராது.

இன்னும் ஒன்றையும் நாம் யோசிக்க வேண்டும். கிராமிய திருவிழக்களில் கலைநிகழ்சிகள் என்பது தவிர்க்க முடியாததாகும். வலுவான சட்டங்கள் வரும் போது நிஜமான கலையும் அழிய கூடும். உதாரணமாக மிருகவதை தடை சட்டம் சர்க்கஸ் என்ற அறிய கலையை முடிவு பாதைக்கு அழைத்தது சென்று விட்டதை நாம் அறிவோம். எனவே திருவிழாக்களில் நடக்கும் ஆபாச நடனங்களை தவிர்ப்பதற்கு மக்கள் மத்தியில் சரியான முறையில் ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தெய்வ சக்தி நிறைந்த பகுதிகளில் ஆபாசமான அனாச்சாரமான காரியங்களை செய்தால் நிச்சயம் பாதிப்பு உண்டு அதன் விளைவுகள் கண்ணுக்கு நேராக தெரியாவிட்டாலும் நிச்சயம் மிக கொடுமையான பாதிப்புகளை தந்தே தீரும். எனவே சம்மந்தப்பட்ட கிராம மக்கள் தங்களது இஷ்ட தெய்வ வழிபாடுகளில் பண்பாட்டு கேடான நிகழ்வுகள் நடைபெறாமல் தடுத்து தங்களது அடுத்த தலைமுறையும் சிறப்புடன் வாழ உதவி செய்ய வேண்டும். 



Contact Form

Name

Email *

Message *