Store
  Store
  Store
  Store
  Store
  Store

இதுவும் ஒரு சுனாமி !


    ள்ளுவன் என்ற உலகம் தெரியாத அப்பாவி மனிதன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தானே அவன் சொல்கிறான் இந்த உலகம் எதை அடிப்படையாக வைத்து இயங்குகிறது. என்று கேள்வி கேட்டு உழவு தொழிலையே உலகத்தின் அடிப்படை என்று பதிலும் தருகிறான். உலகத்தை நடத்துகிற உழவு மற்றும் உழவன் இன்று இருக்கும் நிலைமையை பார்த்தால் நிச்சயமாக வள்ளுவன் தனது கருத்தை மாற்றி கொள்வான் காரணம் நம் நாட்டை பொறுத்தவரை இன்று உழவு என்பது சபிக்க பட்ட ஒரு தொழிலாகவே இருக்கிறது.

நாற்பது வருடங்காலமாக விவசாயத்தில் ஈடுபட்டு வரும் ஒருவர் சொல்கிறார் ஐயாமார்களே உங்கள் பிள்ளை குட்டிகள் நல்லா இருக்க வேண்டுமானால் வயிறு நிறைய கஞ்சி குடிக்க வேண்டுமானால் விவசாயம் பக்கம் திரும்பி பாக்காதீங்க காட்டுக்குள்ள போய் குள்ளநரி பிடிச்சி பொழப்பு நடத்துற நரிக்குறவன் கூட தான்பிடித்த முயலுக்கு இதுதான் விலை என்று சொல்லி விற்க முடியும் ஆனா அந்த உரிமை விவசாயிக்கு கிடையவே கிடையாது. ராத்திரி பகலா முழிச்சிருந்து தண்ணி பாச்சி காவல் காத்து வரப்பு வெட்டி களையெடுத்து பயிரை கரை சேர்த்து விற்க கொண்டு வந்தால் ஆளாளுக்கு ஒருவிலை கேட்கிறான் கடேசியில் விதை வாங்கின காசுகூட கிடைக்காது. வருஷத்தில் முன்னூறு நாளும் மூச்சிமுட்ட உழைச்சால் கிடைப்பது பட்டினி தான் அதனால விவசாயத்த பண்ணலாமென்று கனவு கானாதிங்க என்கிறார்.

அவர் சொல்வது மிகைபடுத்தப்பட்ட கூற்றாக சொல்ல முடியாது. இந்த நாட்டில் வட்டிக்கி வாங்கி விவசாயம் செய்து அசலையும் வட்டியையும் கொடுக்க முடியாமல் அடிபட்டு உதைபட்டு மனைவி மக்களை கடன்காரன் தூக்கி போகும் அளவிற்கு அவமானப்பட்டு வேறு வழியே இல்லாமல் தற்கொலை செய்து கொண்ட விவாசாயிகளின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டும் அசுரதாண்டவம் ஆடிய சுனாமி கூட இரண்டு லட்சம் உயிரை தான் காவு கொண்டது. ஆனால் கேட்பாரற்ற விவசாயிகளின் அவலம் மூன்று லட்சம் உயிர்களையும் தாண்டிவிட்டது.


இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்கிறார்கள். இந்தியாவின் இதையமே விவசாயி என்கிறார்கள். ஆனால் இந்த நாட்டில் தான் முதுகெலும்பும் இதையமும் கவனிக்கபடாமல் அனாதைகளாக தெருவில் கிடக்கிறது. பயிர் பச்சைகளை அழித்து நிலத்தடி நீரையே உறிஞ்சி எடுத்து மண்ணின் வளத்தை கெடுத்து நிற்கும் வேலிகாத்தான் முள் இருக்கிறதே அது வளர உரம்போட வேண்டாம் களையெடுக்க வேண்டாம். சுதந்திரமாக பயிர் செய்யும் பூமியில் வளரவிட்டால் போதும். அடுப்பு எரிப்பதற்காகவும் காகித கூழ் எடுப்பதற்காகவும் டன் ஒன்றிற்கு மூவாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு விற்கலாம்.

இதே போல உரம்போட்டு காவல் காத்து தண்ணீர் பாய்ச்சி ரத்தத்தை வியர்வையாக்கி உழைப்பை சிந்தி வளர்க்கப்படும் கரும்பின் விலையோ ஒரு டன் ஆயிரத்து தொள்ளாயிரம் ரூபாய் தான் நாட்டை கெடுக்கும் வேலி காத்தானுக்கு இருக்கும் மரியாதை நாட்டு பொருளாதரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கரும்புக்கு இல்லை கரும்பை பயிர் செய்து காசு கேட்டால் அந்த விவசாயி விரட்டி அடிக்க படுகிறான். குண்டு வைத்த பயங்கரவாதி போல் அரசாங்கத்தால் வெறுக்க படுகிறான். ஆனாலும் பாவம் விவசாயி அவன் என்ன செய்வான் அவனுக்கு மண்ணை பொன்னாக்க தெரியுமே தவிர பொன்னை கொள்ளையடித்து வேறு தொழில் செய்ய தெரியாது.

ஒரு முருங்கை மரமும் ஒரு பசுமாடும் ஒரு காணி நிலமும் இருந்தால் ஒரு குடியானவ குடும்பம் செழிப்போடு வாழ்வார்கள் என்று கிராம புறத்தில் சொவார்கள் காரணம் முருங்கைக்காய், முருங்கை பூ, முருங்கை இலை, முருங்கை விதை எல்லாமே ஆரோக்கியமான உணவு உழைப்பவனுக்கு ஏற்ற உடல் வலிவை அந்த உணவால் கொடுக்க முடியும். பசுகொடுக்கும் பால் தன குழந்தையின் வயிற்றை மட்டுமல்ல அக்கம்பக்கத்து வீடுகளிலுள்ள குழந்தைகளின் வயிற்றையும் நிரப்பி சில்லறை தேவைகளுக்கான காசுகளையும் கையில் தரும். நல்ல செழிப்பான காணி நிலத்தில் பாடுபட்டால் வருங்காலம் என்பது வசந்தகாலமே தவிர கசந்த காலமாக இருக்காது. இதனால் தான் அன்று அப்படி சொன்னார்கள்


இன்றோ நிலைமை தலைகீழாக இருக்கிறது. நகரங்கள் முதல் சிற்றூர்கள் வரை குடிக்கும் தண்ணீர் பாட்டலில் அடைத்து விற்க்கபடுகிறது. அந்த பாட்டில் தண்ணீரின் விலை லிட்டருக்கு முப்பத்திரண்டு ரூபாய் ஆனால் பசுதருகின்ற ஆரோக்கியமான பால் லிட்டர் வெறும் இருபது ரூபாய் மட்டுமே இந்த கொடுமை வேறு எந்த நாட்டில் நடந்தாலும் நிலைமையே வேறுவிதமாக போகும். ஆனால் நமது இந்தியன் ரொம்ப நல்லவன் எவ்வளவு அடித்தாலும் தாங்கி கொள்வான் திருப்பி அடிக்கவே மாட்டான். ஒரு லிட்டர் பாட்டிலின் தண்ணீருக்கான சுத்திகரிப்பு செலவு மூன்று ரூபாய்க்கு மேல் ஆகாது ஆனால் பல மடங்கு லாபம் அதன் மூலம் பார்க்க படுகிறது. ஒரு மாடு வளர்க்க அதற்க்கான தீவனம் தண்ணீர் புண்ணாக்கு மற்றும் பராமரிப்பிற்கான உழைப்பு என்று கணக்கு போட்டால் ஒரு லிட்டர் பால் பெற ஐம்பது ரூபாயாவது நியாப்படி செலவாகும். ஆனால் பால் உற்பத்தி செய்யும் விவசாயி அந்த விலையையா கேட்கிறான். உழைப்பிற்கான ஊதியத்தை கேட்டாலே அவனுக்கு மறுக்கபடுகிறதே அது ஏன்? அவன் இந்தியனாக பிறந்த ஒரே ஒரு பாவத்திர்க்காகவா?

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் மிக முக்கியமான கடமை ஹஜ் பயணம் என்பது அந்த பயணத்திற்கு இந்தியாவில் இருந்து போய்வர நிதி கொடுக்கபடுகிறது. இஷ்லாமியவர்களுக்காவது ஹஜ் புனித பயணம் கட்டாயமாக்க பட்டுள்ளது. கிறித்தவர்களுக்கு ஜெருசலேம் சென்று தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அவர்கள் மதத்தில் அது வற்புறுத்தவும் படவில்லை இந்துக்களுக்கு கைலாச யாத்திரை மிக முக்கியமானது ஆனால் அதற்கு கூட சொந்த பணத்தில் சொந்த உழைப்பில் சொந்த பிரயத்தனத்தில் போக வேண்டுமென்று கட்டாயம் இருக்கிறதே தவிர யாரோ கொடுக்கின்ற அதாவது அரசாங்கம் கொடுத்தால் கூட யாசகத்தை பெற்று போக கூடாது என சாஸ்திரங்கள் சொல்கின்றன. இப்படி மத சார்பற்ற அரசுக்கு சம்மந்தமே இல்லாத புனித பயணங்களுக்கு அரசியல் காரணங்களுக்காக வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவிடபடுகிறது.


அரசியல் வாதிகளின் சிபாரிசுகள் இருந்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும் திறமை சாலிகளுக்கு இடமில்லை என்று சாஸ்வதமான சம்பிரதாயத்தை கடைபிடிக்கும் விளையாட்டு துறைக்கு வருடத்திற்கு எழுபதாயிரம் கோடி ரூபாய் கொட்டி அழபடுகிறது. வெளிநாட்டில் படித்து வெளிநாட்டிலையே வேலை வாங்கி வெளிநாட்டிலேயே குடியுரிமை பெற்று வாழபோகும். இந்திய மாணவர்களுக்காக வருடா வருடம் ஐம்பத்திரண்டு ஆயிரம் கோடிகள் வீணாக்கபடுகிறது. ஆக மத அரசியலுக்கு ஒரு லட்சம் விளையாட்டுக்கு எழுபதாயிரம் வெளிநாட்டில் படிக்க ஐம்பதாயிரம் என்று வருடம் தோறும் இரண்டேகால் லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் செலவாகிறது. ஆனால் இந்தியர்கள் அனைவருக்கும் சோறு போடுகின்ற பசியாற்றுகின்ற விவசாயத்திற்கு வெறும் அறுபதனாயிரம் கோடிகள் மட்டுமே ஒதுக்க படுகிறது. அந்த பணமும் விவசாயிகளின் கையில் வந்து கிடைக்கும் போது ஒன்று அல்லது இரண்டு கோடிகளாக தான் இருக்கிறது.

இதைவிட வேதனையான விஷயங்கள் இருக்கின்றன மக்கள் பிரதிநிதிகள் என்று மக்கள் பிரச்சனையை அரசாங்க கவனத்திற்கு கொண்டு போக தொகுதி தோறும் சில சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தேடுக்கிறோமே அவர்கள் அடிக்கும் கொள்ளைகள் என்னவென்று ஊர் முழுவதும் தெரியும். நேற்றுவரை அரைகால் சட்டை கூட போட வழி இல்லாதவன் இன்று எம்.எல்.எ ஆகி விட்டால் ஊரில் இருப்பவன் கோவணத்தை எல்லாம் அவிழ்த்து விடுகிறார்கள். அப்படி பட்ட மக்கள் தொண்டர்களுக்கு எழுபதாம் வருடம் முதல் இன்றுவரை சுமார் இருநூறு மடங்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு ஒப்பிடும் போது எழுபதாம் ஆண்டில் இருந்து இன்றுவரை கரும்பின் விலை முப்பதெட்டே மடங்கே உயர்ந்துள்ளது.


அரசாங்க பள்ளிகளில் பாடம் படிக்கும் நமது குழந்தைகளின் கல்வி தரம் எந்த அழகில் இருக்கிறது என்று நாம் அனைவரும் அறிவோம். பத்தாம் வகுப்பில் பயிலும் மாணவனுக்கு தமிழை கூட்டி படிக்க தெரியாது. ஆங்கிலத்தில் எ பி சி டி கூட வரிசையாக சொல்ல தெரியாது. இது மாணவர்களின் குற்றமல்ல அவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களின் குற்றமாகும். தன் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் எத்தனை பேர் என்று கூட தெரியாத ஆசிரியர்கள் நாடு முழுவம் உண்டு. யாரவது ஒருவர் குழந்தைகளின் மீது அக்கறை கொண்டு பாடம் நடத்த துவங்கினால் மற்ற ஆசிரியர்களால் அவர்கள் தடுக்க படுகிறார்கள். சில காலத்தில் அம்மணமாக திரியும் ஊரில் கோவணம் கட்டியவன் பயித்தியகாரன் என்று முடிவு செய்து நல்லவர்களும் கெட்டு விடுகிறார்கள். இப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு கூட அதே எழுபதாம் ஆண்டு முதல் இன்றுவரை வாங்கும் சம்பளம் இருநுறு மடங்காக உயர்ந்துள்ளது. ஆனால் ஒரு கிலோ பருத்தியின் விலை அன்றுமுதல் இன்றுவரை வெறும் இருபத்தி இரண்டு மடங்கே அதிகரித்துள்ளது.

தற்போதைய காங்கிரஸ் அரசாங்கம் இருநூறு நாள் வேலை என்று ஒரு திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகபடுத்தி நடத்தி வருகிறார்கள். மனசாட்சி உள்ள எவனும் அந்த திட்டத்தால் நல்லது நடந்துள்ளது என்று சொல்ல மாட்டான். பத்து பேர் சேர்ந்து அரையடி பள்ளத்தை மூன்று நாட்களாக தோண்டுவார்கள் இதற்கு ஒரு சம்பளம் அதில் பஞ்சாயத்து தலைவர் மற்றும் குமஸ்தாவிற்கு கமிசன் கொடுத்து போக உழைக்காமலே சில பத்து ரூபாய்கள் கையில் கிடைத்து விடுகிறது. இலவச அரிசி சத்துணவு என்று மனைவி மக்களின் வயிறு எப்படியோ நிரம்பி விடுகிறது. ஆண்களுக்கு மது அருந்த உழைக்காத இந்த பணம் கிடைத்து விடுகிறது. இதன் விளைவு கரும்பு வெட்ட நாற்று நட களை பறிக்க வாய்க்கால் வெட்ட கூலிக்கு ஆள் கிடைபதில்லை. அப்படியே வேலைக்கு ஆள்வந்தாலும் சாப்படு சம்பளம் என்று கொடுத்து மாளவில்லை ஒரு மணிநேரம் குனிந்து வேலை செய்தால் ஐநூறு ரூபாய் சம்பளத்தை கீழை வை என்று நிற்கிறார்கள் ஆளும் இல்லாமல் கையில் காசும் இல்லாமல் விவசாயி எப்படி பயிர் தொழில் செய்வான்.

நிலத்தடி நீரெல்லாம் உறிஞ்சப்பட்டு விட்டது. எரி குளங்களில் மேடுகள் தான் தெரிகிறதே தவிர தண்ணீர் இல்லை ஆற்று மணல் கொள்ளையடிக்க பட்டு ஆறுகள் எல்லாம் பாலை வனங்களாக மாறி வருகிறது. கிடைக்கும் கொஞ்ச நஞ்ச தண்ணீரை வைத்து பயிர் செய்யலாம் என்றால் மின்சாரமும் இருப்பதில்லை அப்படியே மின்சாரம் வந்தாலும் குறைந்தழுத்த மின்சாரத்தால் மோட்டார் பம்புகள் வேலை செய்வதில்லை ஒரு மூட்டை நெல்லை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்றால் உயிர் போய்விடுகிறது. இந்த லட்சணத்தில் உலகமே விவசாயத்தை அச்சாணியாக கொண்டு சுழல்கிறது ஓடுகிறது என்று யாரவது சொன்னால் அவர்களை விவரம் தெரியாதவர்கள் அப்பாவிகள் என்று சொல்வதை தவிர வேறு என்ன வழி இருக்கிறது. அதனால் தான் உலகத்தையே ஒன்றரை அடி குறளில் சொன்ன வள்ளுவனை உலகம் தெரியாத அப்பாவி என்று சொல்ல வேண்டி வருகிறது. பாவம் வள்ளுவன் இனி புதியதாக பிறந்து விவசாயத்தின் அவலத்தை எழுத வேண்டிய துர்பாக்கியம் அவனுக்கு ஏற்பட்டுள்ளது.


Contact Form

Name

Email *

Message *