Store
  Store
  Store
  Store
  Store
  Store

நிரந்தர வேலை எப்போது...?


மதிப்பிற்குரிய குருஜி, 

நான் திருநெல்வேலி மாவட்டம் பணகுடி என்ற கிராமத்தைச் சார்ந்தவன். பிறந்த தேதி 24-11-1974. நான் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவன். கடவுள் ஒன்று அவரையே ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பார்க்கிறார்கள். கிறிஸ்தவ கொள்கைகளை விட தற்போது இந்துத்துவத்தை புனிதமானதாக கருதுகிறேன்.

நான் ஒரு கிறிஸ்தவ நிறுவனத்தில் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். பள்ளி நிர்வாகத்தினருக்கு நிரந்தர வேலை எனக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அவர்களின் சொந்தக்காரர்கள் அவர்களுக்கு வேண்டியவர்கள் என நிரந்தர வேலை கொடுக்கிறார்கள். நான் வயதான பெற்றோருக்கு நல்ல சாப்பாடு கொடுக்கமுடியாமல் மனைவி பிள்ளைகளையும் நன்றாக வாழ வைக்க முடியாமல் கஷ்டப்படுகிறேன். Forex என்ற வர்த்தகத்தில் ஈடுபட்டேன் அதிலும் லாபம் இல்லை.

எனக்கு நிரந்தர வேலை கிடைக்கவும் Forex என்ற வர்த்தகத்தில் லாபமும் கிடைக்க உதவி செய்யுங்கள்.

தங்களது மேலான பதிலை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன். தங்களது இணையதளத்தின் மூலம் தங்களது சேவை குறித்து அறிந்துகொண்டேன்.

வழிகாட்டுங்கள்...
நன்றி  
J.அந்தோனிசாமி 


பனைமரங்கள் சூழ்ந்த உங்கள் ஊர் எனக்கும் மிகவும் பிடிக்கும் செம்மண் பரப்பும் கரிசல் வாசமும் நிறைந்த உங்கள் ஊர் பகுதியின் ஒவ்வொரு மூலைமுடுக்குமே அழகானது அறிவுக்கு விருந்து தருவது பணகுடி என்ற பெயரை கேட்டவுடன் நிறைய பேர் நினைப்பார்கள் இந்த ஊரில் பனைமரங்களும் அதை ஜீவாதாரமாக கொண்ட மக்களும் அதிகமாக வாழ்வதனால் இந்த பெயர் வந்திருக்கும் என்று ஆனால் உண்மை அதுவல்ல உங்கள் ஊரில் ஆதி காலத்தில் இசை பாடுவதே தொழிலாக கொண்ட பல பாணர்கள் வாழ்ந்தார்கள் அவர்களின் இசை திறமைக்கு பரிசாக பாண்டிய மன்னர்கள் இந்த ஊரை தானமாக கொடுத்ததினால் பாணர்குடி என்ற பெயர் பெற்று காலபோக்கில் பணகுடி என்றானது.

உங்கள் ஊரில் உள்ள இராமலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் கோவில் புகழ் பெற்ற வைஷ்ணவ ஸ்தலமாகும். இங்கிருந்து ராமர் ராமேஸ்வரம் சென்றதாக செவிவழி கதையும் உண்டு அந்த கதைக்கு வலு சேர்ப்பது போல அனுமன் நதியும் இருக்கிறது. எல்லாம் சரி அந்த அனுமன் நதியில் இப்போது தண்ணீர் வருகிறதா? அல்லது ஆற்று மணலை எல்லாம் வாரி எடுத்து சோறு போட்ட ஆற்றை கூறு போட்டு விட்டார்களா? பார்த்து வெகுநாட்கள் ஆகி விட்டதனால் விவரம் தெரியவில்லை அதனால் தான் கேட்கிறேன்.

அன்பரே நீங்கள் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவராக இருந்தும் இந்துமதம் உங்களை கவர்வதாக சொல்லியிருப்பது கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இந்துமதம் உங்களை ஈர்ப்பது அதன் தத்துவங்களாலா அல்லது கிறிஸ்தவ மதத்தில் இருந்தும் அவர்கள் நிரந்தர வேலை தரவில்லையே என்ற கோபத்தினாலா? கோபத்தால் நீங்கள் இந்துமதத்தை ஆதரித்தால் அதை என்னால் நிச்சயமாக வரவேற்க முடியாது. 

சுயலாபத்திற்காக ஒருவன் இந்துவாக இருந்து கிறிஸ்தவனாக மாறுவது எவ்வளவு பெரிய தவறோ அதே தவறு கிறிஸ்தவனாக இருந்து மற்ற மதத்திற்கு மாறுவது காரணம் மதம் என்பது லாபம் தருகின்ற வியாபார பொருளல்ல ஒரு மனிதனை அவனது ஆத்மாவை பண்படுத்துகின்ற மிக சிறந்த கருவியே ஆகும். ஆனால் இன்று அந்த கருவி மதம் மாற்றுவதையே தொழிலாக கொண்ட சில மத போதகர்களால் மதிப்பு இழந்து வருகிறது. 

இந்துமதம் என்பது கடவுளை வழிபட மட்டும் கற்றுகொடுக்கும் மார்க்கம் அல்ல அது ஒரு வாழ்க்கை முறை காலை கண்விழிப்பது முதல் இரவு உறங்கும் நேரம் வரையிலும் அல்லது பிறந்தது முதல் இறப்பது வரையிலும் ஒரு மனிதன் மனிதனாக வாழ்வது எப்படி என்று பாடம் எடுப்பதே இந்து மதம்.

முதலில் நீ பெற்றவனுக்கு மகனாக இரு அடுத்து கட்டியவளுக்கு புருசனாக இரு கடேசியில் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக இரு அதன் பிறகே கடவுளுக்கு பக்தனாக இருக்கும் தகுதியை நீ பெறுகிறாய் என்பதே இந்து மதத்தின் ஆதர தத்துவமாகும். அது வாழ்க்கையை விட்டு வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளை விட்டு விலகி ஓட மனிதனை சொல்லவில்லை மாறாக வாழ்க்கையோடு போராடு சோதனைகளோடு போராடு இறைவன் உனக்கு ஆறுதலை தருவான். வெற்றிகளை தருவான் என்கிறது. 

எனவே வாழ்க்கையை தர்மபடி நடத்துகிறவன் எவனாக இருந்தாலும் அவன் ஏசுவை வணங்கினாலும் அல்லாவை தொழுதாலும் அவனே சிறந்த இந்துவாக இருப்பான் என்பது சுவாமி விவேகானந்தரின் சத்திய வாக்கு எனவே கிறிஸ்தவனாக இருந்துகொண்டே இந்துவாக வாழ்வது ஒன்றும் மகா கடினமல்ல நீங்கள் அப்படி இருக்க அன்னை மரியாளும் அவளது குமாரனும் உங்களுக்கு துணை செய்வார்கள்.

உங்கள் வேலையை பற்றியோ வர்த்தகத்தில் அடைய வேண்டிய மேம்பாடுகளை பற்றியோ கவலையே வேண்டாம் வரும் 2013 ஆம் வருடம் உங்களுக்கு நினைத்ததை நடத்தி வைக்கும் வருடமாக இருக்கும். அதுவரை பொறுமையோடு இருங்கள் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். மேலும் நீங்கள் ஈடுபடும் வர்த்தகத்தின் வளர்ச்சி உங்கள் ஜாதகப்படி பித்துருக்களின் அதாவது உங்கள் குல முன்னோர்களின் சில சாபங்களால் தடை பட்டு வருகிறது. அந்த சாபங்களிலிருந்து தற்காலிகமாக விடுபட்டு முன்னேற்றம் அடைய ஒவ்வொரு அமாவாசை அன்றும் யாரவது ஒரு வறியவருக்கு மதிய உணவை வழங்குங்கள் நல்லது நடக்கும்.


Contact Form

Name

Email *

Message *