கலைஞர் கருணாநிதி அவர்கள் இலங்கை தமிழர்களுக்காக மீண்டும் டெசோ அமைப்பை துவங்கி இருக்கிறாரே அதன் நோக்கம் என்ன?
ஆதியில் டெசோ துவங்கபட்டதே அரசியல் காரணங்களுக்காக மட்டுமே ஈழ மக்களின் துயர் துடைப்பதற்காக அல்ல அப்போதைய முதல்வர் எம்.ஜியாரை எதிர்த்து அரசியல் நடத்த வேண்டும். தானும் தமிழர்களுக்காக குரல் கொடுக்க கூடியவன் தான் என்று மக்களை நம்பவ வைப்பதற்காகவும் கலைஞர் கண்டுபிடித்த பிரச்சார ஆயுதமே அப்போதைய டெசோ ஆனால் அந்த டெசோ கலைஞரின் திட்டத்தை நிறைவேற்றியதோ இல்லையோ ஈழ போராளிகளின் அமைப்புகளை நிரந்தரமாகவே பிளவுபடுத்த காரணமானது. அது வரலாற்றின் மிகப்பெரிய துயரம்.
இப்போதைய டெசோவின் உதயம் ஈழ மக்களுக்கு தொண்டாற்றுவதற்காக உருவாக்க பட்டிருக்கிறது. என்று கலைஞர் சொல்கிறார் ஆனால் அதை அவரின் கழக கண்மணிகள் கூட நம்ப மாட்டார்கள் திமுக இப்போது மிகபெரும் உட்கட்சி பூசலில் சிக்கி இருக்கிறது. உள்ளுக்குள் நடக்கும் குழாயடி சண்டை வெளியில் தெரிந்து விட கூடாது என்பதற்காக வெளியில் கட்டப்பட்டுள்ள ஒலிபெருக்கியை டெசோ அதுமட்டுமல்ல விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரயிருக்கிறது அதில் பிரச்சாரம் செய்வதற்கு எதாவது ஒரு விஷயம் வேண்டும். ஈழத்தின் துயரத்தை மேடைதோறும் கண்ணீர் விட்டு அழுதாலே மக்கள் மனம்கசிந்து விடுவார்கள் என்பது கருணாநிதி அவர்களின் ராஜதந்திர கணக்கு இதில் வேறொரு சாணக்கிய தனமும் இருக்கிறது. கடேசி நேரத்தில் காங்கிரஸ் ஏதாவது முரண்டு பிடித்தால் ஈழ பிரச்சனையை காட்டி கூட்டணியை முறித்து கொள்ளவும் புதிதாக அமையபோகும் மத்திய அரசுக்கு ஜால்ரா தட்டவும் வசதியாக இருக்கும் இது தான் டெசோவின் தற்போதைய வரவுக்கான காரணம்.
மதுரை ஆதீனத்தின் இளைய பட்டத்தை நித்தியனந்தாவிற்கு வழங்கி இருப்பதன் காரணாம் என்ன? இது சரியான வழிமுறை தானா?
ஆதீனங்கள் என்பது சுதந்திரமான ஒரு ஆன்மிக அமைப்பு அதில் தற்போதைய தலைவர் தனக்கு அடுத்ததாக ஒரு வாரிசை தேர்ந்தெடுத்து அதை உலகுக்கு அறிவிப்பதில் எந்த தவறும் இருப்பதாக சொல்ல முடியாது. அது மடாதிபதியின் சொந்த விருப்பம் இந்த கருத்து வழக்கமான நடைமுறைகளுக்கு சரியானதே தவிர இப்போதைய மதுரை ஆதீனத்தின் செயல்பாட்டிற்கு பொருந்தி வரக்கூடியது அல்ல
பொதுவாக சைவ மடங்களில் சிவ தீட்சை பெறுவது என்பது சாதாரண மான விஷயம் அல்ல அதுவும் ஒரு ஆதீனத்தின் சன்யாசியாக தீட்சை பெறுவது என்றால் அதற்கென்று தனி பயிற்சிகள் உள்ளன உதாரணமாக மடத்தில் சேர்ந்த ஒருவருடத்திற்கு கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும். அடுத்த ஒரு வருடம் பசுகொட்டைகளில் சாணம் வாருவது முதல் பசுக்களை கவனிப்பது வரை செய்ய வேண்டும். அதன் பிறகு மடப்பள்ளி என்ற சமயலறையில் தொண்டாற்ற அனுமதிப்பார்கள் இவைகளில் எல்லாம் நல்ல தேர்ச்சி பெற்ற பிறகே பூஜையறை பக்கம் வரமுடியும்.
இதில் எந்த பயிற்சியை எப்போது நித்தியானந்தா மதுரையில் பெற்றார் என்பது நமக்கு தெரியவில்லை மேலும் சைவ திருமுறைகளில் நல்ல தேர்ச்சியும் ஆகம விதிகளை நுணுக்கமாக ஆய்வு செய்யும் யுத்தியும் உடையவராக இருக்கவேண்டும் நித்தியானந்தா அந்த தகுதியை பெற்றிருக்கிறார் என்பது நிச்சயம் சந்தேகமே இதை அவருடைய கடந்த கால கருத்துக்களை வைத்து பார்க்கும் போது அதில் அவருக்கு துளி கூட அறிவு இல்லை என்பது தெரியவரும்.
மேலும் தனது செயலுக்கு நியாயம் கற்பிக்கும் மதுரை ஆதீனம் நித்தியானந்தா ஆங்கில புலமை பெற்றவர் பல நாடுகளில் ஆன்மிக அமைப்புகளை வைத்திருக்கிறார் என்று சொல்கிறார் ஆதீனத்தின் இத்தகைய கூற்று சைவ சமையத்தை பற்றி அறிந்தவர்களுக்கு மனவேதனையை தருவதாகும் தேவார திருமுறைகளில் பற்றே இல்லாத ஒரு மனிதரை ஆங்கிலம் தெரிந்தவர் என்ற ஒரே காரணத்திற்க்காக இளைய பட்டமாக முடி சூட்டுவது தமிழையும் சைவத்தையும் அவமானபடுத்தும் செயலாகவே கருத வேண்டும். ஆங்கில புலமை ஒன்று தான் தகுதி என்றால் அதற்கு நித்தியானந்தா எதற்கு நல்ல ஆங்கில பேராசிரியரை பட்டம் சூட்டலாமே?
விஷயம் இவைகளில் எதுவுமே அல்ல திராவிட கழக கூட்டங்களில் கலந்துகொண்டு நாத்திக பேச்சிகளுக்கு சாமரம் வீசும் மதுரை ஆதீனம் போன்றவர்கள் சிவனையும் மதிக்க மாட்டார்கள் சைவத்தையும் போற்ற மாட்டார்கள் பணத்தை மட்டுமே போற்றி வழிபடுவார்கள் என்பது உலகறிந்த ரகசியம் பணத்திற்காக மதிப்பு மிக்க ஒரு ஆதீனத்தின் தலைமை பொறுப்பிற்கு ஒழுக்கத்தில் களங்கம் அடைந்த ஒருவரை கொண்டுவருவது என்பது அந்த ஆதீனத்தை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனையும் சிறுமை படுத்துவதாகும் இவர்களை பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட எம்பெருமான் நெற்றிக்கண் திறந்தபோதும் குற்றம் குற்றமே என்று வாதிட்ட நக்கீரருக்கு நெற்றிகண்ணை திறந்து அருள்பாலித்த எம்பெருமான் மதுரை வீதியில் விறகு சுமந்து தனது பக்தனை காத்தருளிய எம்பெருமான் தண்டிக்காமல் விடபோவதில்லை காரணம் சிவன் என்ற மங்கள பொருளே ருத்திரன் என்ற சம்ஹார மூர்த்தியாகவும் இருக்கிறார்.