Store
  Store
  Store
  Store
  Store
  Store

என்னை உங்களுக்கு தெரிகிறதா?


    ன்னை உங்களுக்கு தெரிகிறதா? நிச்சயம் நன்றாக தெரிந்திருக்கும் மறந்து போயிருப்பிர்கள் நீங்கள் தினசரி மனதில் நினைத்து பார்க்கும் அளவுக்கு நான் பெரியமனுஷன் அல்ல ஆனாலும் உங்கள் வாழ்க்கையில் எதாவது ஒரு மூலையில் என்னை சந்திக்காமல் உங்களால் இருக்க முடியாது போதும் பீடிகை நீங்கள் யார் என்று சொல்லலாமே என்று நீங்கள் கேட்பது என் மந்தமான செவியில் லேசாக விழுகிறது என் கதையை சொல்லுகிறேன் கேளுங்கள் அதன் பிறகு நான் உங்களுக்கு மிகவும் தெரிந்தவன் தான் என்பதை புரிந்து கொள்வீர்கள்.

நான் சாம்பசிவம் என்னை பருத்தி வியாபாரி சாம்பசிவம் என்றால் சொடுக்கு போடும் நேரத்தில் அப்போது எல்லோரும் அடடே அவரா எனக்கு நன்றாக தெரியுமே வெள்ளை வேட்டி சட்டையும் வாய்நிறைய வெற்றிலையும் கக்கத்தில் பழைய மான்மார்க் குடையும் இடிக்கி கொண்டு வருவாரே அவர் தானே என்று எல்லோரும் அடையாளம் சொல்லிவிடுவார்கள் அந்த அளவிற்கு என் ஏரியாவில் எனக்கு பரிச்சயம் ஜாஸ்தி தோற்றத்தில் மட்டுமல்ல வியாபாரத்திலும் நேர்மையை கடைபிடித்ததனால் பெரிய பெரிய வியாபாரிகளும் கூட என்னிடம் மரியாதை காட்டுவார்கள் நேற்று நூறு ரூபாய்க்கு விலைபேசி பருத்திக்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டேன் என்றால் இன்று சரக்கை கொடுக்கும் போது இருநூறு ரூபாய்க்கு விலையேறினாலும் நேற்று பேசிய விலையை மாற்ற மாட்டேன்.

நேர்மையாக இருந்தாலும் நான் ஒன்றும் லட்ச கணக்கில் போட்டு புரட்டும் பெரிய வியாபாரி இல்லை விவாசாயி நிலத்தில் போய் சரக்குக்கு விலைபேசி வாங்கி மார்கட் கமிட்டியில் கொண்டு விற்று அதன் பிறகு சரக்குக்கான காசை கொடுத்துவிடுவேன் ஒருவகையில் இது தரகு வியாபாரம் என்றாலும் என்னமோ முதல்போட்டு வியாபாரம் செய்பவனை போல் நினைத்து கொள்வேன் மற்றவர்களும் அப்படி தான் என்னை நினைப்பார்கள் கிடைக்கும் வருவாயில் சிறுக சிறுக சேர்த்து சொந்தமாக வீடு நிலம் என்று ஓரளவு சம்பாதித்தும் வைத்திருந்தேன் எனக்கு இரண்டு பையனும் ஒரு பெண்ணும் என் மனைவி மிகவும் நல்லவள் அவளை மட்டும் நான் மனைவியாக பெறவில்லை என்றால் வருகிற சொற்ப வருவாய்க்கு நடுத்தெருவில் நின்றிருப்பேன் சிக்கனம் என்றால் அவளிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு புடவை கிழிந்து போய்விட்டால் அதை உடனடியாக தூக்கி தூர வீசி விட மாட்டாள் என் மரகதம் கிழிந்த புடவையை படுக்கையாக விரிப்பாள் அதற்கும் உதாவாமல் போகும் போது கிழித்து தலையணை உரையாக பயன்படுத்துவாள் அப்போதும் கிழிந்து விட்டால் தலையணைக்குள் பஞ்சாக அடைத்து விடுவாள் அதற்காக அவளை கருமி என்றோ கஞ்சத்தனம் மிகுந்தவள் என்றோ சொல்ல முடியாது. அக்கம் பக்கத்து வீட்டு பெண்மணிகள் எதாவது உதவி என்று வந்து கேட்டால் வெறுங்கையாக அனுப்ப மாட்டாள் தன்னால் முடிந்ததை செய்வாள் பொருளாக கொடுக்க முடியவில்லை என்றால் கூட அவர்களுக்காக ஓடியாடி ஒத்தாசை புரிவாள் அவளை யாருமே ஏன் விரோதி கூட குறை சொல்ல மாட்டார்கள்.

புருசனையும் பிள்ளைகளையும் கவனிப்பதற்கு மரகதத்திடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தாயால் கூட தரமுடியாத அரவணைப்பை கணவனுக்கு தருவாள் என் முகம் மாறுவதை வைத்தே என் உடம்பிற்கு என்ன? மனதிற்கு என்ன? என்பதை ஒரு நொடியில் கணித்து விடுவாள். ஆறுதலும் தைரியமும் அவளிடமிருந்து பெற்று விட்டால் காலகாலமாக வருகின்ற துயரங்கள் எல்லாம் ஒரு துரும்பை போல் தெரியும் அவ்வளவு தெளிவானவள் மதிநுட்பம் மிகுந்தவள். குழந்தைகளுக்கு குளிப்பாட்டி விடுவதில் இருந்து பாடம் சொல்லி கொடுப்பதுவரையில் அவள் கடைபிடிக்கும் நேர்த்தி பெரிய பேராசிரியருக்கு கூட வராது.

அடுத்த மாசி மாதம் பிறந்தால் எனக்கு எண்பத்திமூன்று வயது பூர்த்தியாகிறது. எழுபது வயது வரையில் நான் ஒரு இடத்தில் அமர்ந்தது கிடையாது பருத்தி எங்கெல்லாம் இருக்கிறது என்று தகவல் வருமோ அங்கெல்லாம் சைக்கிளை எடுத்து கொண்டு அலைவேன் மழைவராத காலம் பருத்தி அதிகம் விளையாத காலம் என்று வந்தால் கூட வேறு எதாவது தொழிலை எடுத்து செய்வேனே தவிர வீட்டில் சும்மா இருக்க எனக்கு முடியாது. ஐயோ போதும் எனக்கு வயதாகி விட்டது என்று உட்கார்ந்திருந்தால் பெண்ணுக்கு ஐம்பது சவரன் போட்டு கல்யாணம் நடத்தி வைத்திருக்க முடியுமா? மூத்தவனை இன்ஜினியராகவும் இளையவனை பேராசிரியராகவும் படிக்க வைத்து வேலைவாங்கி கொடுத்திருக்க முடியுமா? அவர்களுக்கு அப்பன் சம்பாதித்த சொத்து என்று சிறிதளவாவது நிலத்தை வைத்திருக்க முடியுமா? எல்லாம் எனது நிற்காத ஓட்டத்தால் கிடைத்தது தான்.

எழுபது வயது வரை எனக்கு சலிப்பே தட்டியது கிடையாது. இன்னும் சொல்ல போனால் எனக்கு எழுபது வயதானது கூட தெரியாது. எதோ நேற்று தான் மீசை முளைத்தவன் போல் நினைத்து கொண்டிருந்தேன். ஒருநாள் அதிகாலை உறங்கி கொண்டிருந்த மரகதத்தை தட்டி எழுப்பினேன் என் குரல் கேட்டாலே எழுந்துகொள்ளும் மரகதம் அன்று நான் கதறி புலம்பிய போது கூட எழவில்லை அவள் கழுத்து துவண்டு சாய்ந்த பிறகு தான் ஐயோ எனது அருமை செல்வம் உறக்கத்திலேயே போய்விட்டாளே என்று உணர்ந்து அழுதேன். அவள் மறைவுக்கு பிறகு தான் என் வயதும் என் தளர்ச்சியும் எனக்கு புரிந்தது அதுவரை பத்து மையில் என்றாலும் சலிக்காமல் சைக்கிள் மிதித்த என் கால்கள் துவண்டு போக ஆரம்பித்தது கண்மங்கியது தலைகிறுகிறுத்தது. மூச்சிறைதத்து. சாய்வு நாற்காலியில் படுத்து ஓய்வெடுக்க வேண்டும் என்று தோன்றியது.

ஆச்சி பதிமூன்று வருடம் ஓடி போயாச்சி நிறையப்பேர் என்னை மறந்தும் போயிருப்பார்கள் இப்படி ஒரு மனிதன் இருந்தானே நாம் பார்க்கும் நேரமெல்லாம் குறுக்கும் நெடுக்கும் நடமாடினானே அவனை தீடிர் என்று காணவில்லையே எங்கே போயிருப்பான் என்னவாயிருப்பான் என்று யாரும் யோசித்ததாக தெரியவில்லை வெளியில் உள்ளவர்களை விட்டுவிடுவோம் நான் பாடுபட்டு வளர்த்தேனே என் பிள்ளைகள் அவர்கள் கூட என்னை நினைத்து பார்க்கவில்லையே இதுதான் தலையெழுத்து என்பதோ? இதை தான் உலகத்தின் நடைமுறை என்று எல்லோரும் சொல்கிறார்களோ?

நினைத்து பார்க்கவே முடியவில்லை கண்ணுக்குள் சூன்யமான ஒரு உலகம் தான் தெரிகிறது. அந்த உலகத்தில் நான் மட்டுமே தன்னந்தனியாளாக நிற்கிறேன். தாகம் எடுக்கிறது, நாவு வரள்கிறது யாராவது ஒரு துளி தண்ணிர் தரமாட்டார்களா? என்று நெஞ்சம் ஏங்குகிறது. அதோ தூரத்தில் புகைவடிவாக என் மரகதம் தெரிகிறாள் அவள் கையில் தங்க கூஜா இருக்கிறது. அதன் வெளிச்சம் என் கண்ணை பறிக்கிறது அதிலிருந்து அமிர்த தாரையாக தண்ணீர் கொட்டுகிறது. நான் வாரி வாரி குடிக்கிறேன். தாகம் அடங்கவில்லை கானல் நீரை எத்தனை முறை குடித்தாலும் தாகம் அடங்குமா? இது தான் இந்த கனவு தான் என் கூட இப்போது துணையாக இருப்பது.

மரகதம் கூட்டி பெருக்கிய வாசல்படியை பார்க்கிறேன். சாணம் போட்டு மெழுகி கோலம் போட்டு அழகு படுத்திய அடுப்பங்கரையை பார்க்கிறேன். அவள் துணி துவைக்கும் கிணற்றடி கல், தேங்காய் அரைக்கும் அம்மிக்கல் பருப்பு திரிக்கும் எந்திரக்கல் எல்லாமே என்னை போலவே அனாதைகளாக கிடக்கிறது. மீண்டும் மரகதம் வருவாளா? தனது மென்மையான விரல்களால் தன்னை தொடுவாளா? என்று உயிரற்ற அந்த பொருட்களும் ஏங்குகின்றன. உயிரை பிடித்து கொண்டு படுத்து கிடக்கும் நானும் ஏங்குகிறேன். கல்லுக்கு தனது உணர்வுகளை பேசிவிட முடியாது. என்னால் முடியும் ஆனால் அதை கேட்பதற்கு தான் யாருமில்லை.

மூத்த மகன் சொல்லுகின்றான் அப்பா உங்களுக்கு வயசாகி விட்டது கண்ணும் காதும் முன்னே போல் இல்லை இந்த மாதிரி நிலையில் நீங்கள் என்னோடு சென்னையில் இருப்பது ரொம்ப கஷ்டம் நானும் வேலைக்கு போய்விடுவேன் உங்கள் மருமகளும் வேலைக்கு போய்விடுவாள் வீட்டில் தனியாக இருக்கும் உங்களை கவனிப்பது மிகவும் கடினம் இங்கு கிராமத்தில் உங்களை தெரியாதவர்கள் யாருமில்லை ஆத்திரம் அவசரம் என்றால் துணைக்கு வர நிறையப்பேர் உண்டு இங்கு இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தம்பி வீட்டில் வேண்டுமானால் சில நாட்கள் போய் இருங்கள் அவனுக்கும் ஆறுதலாக இருக்கும் என்று ஆக மொத்தத்தில் மூத்தவன் என்னை கைகழுவியதை வேறு விதத்தில் சொல்லி விட்டான்.

இளையவன் மட்டுமென்ன அண்ணன் காட்டிய வழியை மாற்றியா நடக்க போகிறான். அப்பா நான் சொல்லுகிறேன் என்று தப்பாக நினைக்காதீங்க உங்கள் மருமகளை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி கொண்டே இருப்பாள் யாரோடும் ஒத்து போகும் சுபாவம் அவளுக்கில்லை என் தலையெழுத்து அவ்வளவு தான் என்று அவளோடு குடும்பம் நடத்துகிறேன். நீங்களும் அங்கு வந்து உட்கார்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம் வீடே போர்களமாகி விடும் என் நிம்மதி பறிபோய்விடும் நன்றாக யோசித்து எதையும் செய்யுங்கள் என்று நேரிடையாகவே பேசிவிட்டான் என் மகள் மட்டும் என்ன செய்வாள் புருசனுக்கு கட்டுப்பட்டவள் என் அப்பாவை வீட்டில் வைத்து கொள்ளலாம் என்று சொல்ல அவளால் தான் முடியுமா? மருமகன் தான் ஏற்றுகொள்வாரா?

உறவுகள் சொந்த பந்தங்கள் அனைத்துமே சுமைகளை தூக்க தயாராக இல்லை நானும் ஒரு சுமைதான் என்று அப்போது தான் உணர்ந்துகொண்டேன் எனக்கு இளமை இருக்கும் போது இந்த சிந்தனை வரவில்லையே பிள்ளைகளை சுமையாக கருதியிருந்தேன் என்றால் இன்று அவர்கள் சிறகடித்து பறக்க முடியுமா? தனக்கென்று ஒரு கூடு குஞ்சிகள் என்று வாழமுடியுமா? இந்த நியாயத்தை யார் புரிந்து கொள்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு தகப்பன் பற்றிய எண்ணம் தீடிர் என்று வந்துவிடுகிறது. என் பிள்ளைகள் இரண்டு பேருமே ஒரு நாள் வந்தார்கள் அப்பா நாங்கள் சொந்த வீடு வாங்க போகிறோம் கையில் பணமில்லை வேறு காரியங்களுக்காக அலுவலகத்தில் கடன்வாங்கி விட்டதனால் லோனும் எடுக்க முடியாது நீங்கள் நமது சொத்தை வித்து பணம் கொடுங்கள் நீங்கள் பயிர் பண்ண முடியாமல் நிலம் வீணாகதானே இருக்கிறது. என்றார்கள் பெற்ற பிள்ளைகள் கண்கலங்கி நிற்கும் போது பெற்ற வயிறு கலங்கி விடுகிறதே

தம்பி நிலத்தை குத்தகைக்கு கொடுத்து தான் என் செலவுகளை பார்த்து கொள்ளுகிறேன் அதையும் விற்று விட்டால் நான் என்ன செய்வது என்று கேட்டேன் நாங்கள் இரண்டு பேர் இருக்கும் போது உங்களுக்கென்ன கஷ்டம் அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றார்கள் நம்பினேன் ரத்தம் சொட்ட சொட்ட சம்பாதித்த நிலத்தை விற்று பிள்ளைகளுக்கு கொடுத்தேன் மகிழ்ச்சியோடு வாங்கி போனார்கள் போனவர்கள் போனவர்கள் தான் இரண்டு மாதம் வரையில் ஆளுக்கு ஆயிரம் என்று அனுப்பியவர்கள் திருப்பி அதை பாதியாக குறைத்து இப்போது மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்று ஆக்கி விட்டார்கள் என் பிள்ளைகளின் கஷ்டம் எனக்கு புரிகிறது பாழும் வயிறுக்கு புரியவில்லையே அது இரண்டு நாளைக்கு ஒரு முறைமட்டும் பசித்தால் போதுமென்று இருப்பதில்லையே தினசரி பசி எடுக்கிறதே

இப்போது என்னை உங்களுக்கு நன்றாக தெரிந்துவிட்டது அல்லாவா? உங்கள் வீட்டு பக்கத்திலோ எதிரிலோ அல்லது உங்கள் வீட்டிலோ கூட சாய்வு நாற்காலியில் என்னை போல மதிப்பில்லாத ஜீவன்கள் படுத்து கிடக்கலாம் அவர்களில் நானும் ஒருவன் அதனால் என்னை உங்களுக்கு நன்றாக அடையாளம் தெரியும். என்னை தெரிகிறதோ இல்லையோ இப்போது நாம் சொல்லுவது உங்களுக்கு புரிந்தால் நான்றாக இருக்கும். வயது ஏறி முதுமை வருவது என்பது எனக்குமட்டும் நடப்பது அல்ல பளபள கன்னமும் ஒளிபொருந்திய கண்ணும் ஒரு நாள் முதுமையினால் கோடுகளுக்குள் மறைந்து போகும். கைகள் நடுங்கி வார்த்தை குளறி தடுமாறவேண்டிய நிலை உங்களுக்கும் வரும் அப்போது என்னை போல் புலம்புனீர்கள் என்றால் கேட்பதற்கு பக்கத்தில் யாரும் இருக்க மாட்டார்கள் ஒருவாய் சோறும் ஒருமுழ துணியும் இல்லாமல் நீங்கள் செத்து போனபிறகு வருடா வருடம் உங்கள் திவசத்திற்கு பிள்ளைகள் அன்னதானம் செய்வார்கள் ஏனென்றால் அது அவர்களுக்கு விளம்பரம்.






Contact Form

Name

Email *

Message *