குருஜி அவர்களுக்கு வணக்கம் உங்கள் பதிவுகளை விடாமல் ஒரு வருடமாக படித்து வருகிறேன் தினசரி காலையில் நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்பதை படித்த பிறகுதான் அடுத்த வேலையை கவனிக்கும் பலரில் நானும் ஒருவன் உங்களது பேனாவும் மூளையும் அள்ள குறையாத அமுத சுரபியோ என்று கூட பல நேரம் யோசிப்பேன் நானும் கவிதை எழுதுபவன் தான் ஆனால் நீங்கள் சாதாரணமாக உரைநடையில் எழுதுவதே நல்ல கவிதை போல இருப்பதை அறிந்து பல முறை வியந்திருக்கிறேன்.
சில பேர் எழுதுவார்கள் மேடை தோறும் பேசுவார்கள் எழுதியதையும் பேசியதையும் வேறு யாராவது செயல்படுத்தினால் நல்லது என்று நினைப்பார்களே தவிர தானே ஒரு துரும்பை கூட கிள்ளி போட மாட்டார்கள் நீங்கள் அப்படி அல்ல சொன்னவற்றில் சிலவற்றையாவது செயல்படுத்த வேண்டும் என்று முனைப்பு காட்டி செயல்படுத்தியும் வருகிறீர்கள் உதாரணமாக உங்களை போன்ற வைதீக நெறியில் பற்று கொண்டவர்கள் ஜாதி உணர்வு அதிகம் உடையவர்களாக இருப்பார்கள் அவர்களில் மாறுபட்டு உயர்ந்த ஜாதியில் பிறந்தவர்க்கும் தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவர்க்கும் திருமணம் நடத்தி வைப்பது வரையில் உங்கள் சேவை இருப்பது மெத்த மகிழ்ச்சி
சுவாமி நானும் ஒரு பெண்ணை வெகுநாளாக காதலிக்கிறேன் அவள் என் ஜாதி இல்லை இதனால் என் வீட்டார் திருமணத்திற்கு ஒத்துகொள்ள மாட்டேன் என்கிறார்கள் அவள் வீட்டிலும் இதற்கு கடுமையான எதிர்ப்பு இருக்கிறது சில நேரங்களில் அவள் நாம் காதலிப்பதை விட்டு விட்டு அப்பா அம்மா சொல்படி நடந்து கொள்ளலாம் என்கிறாள் எனக்கு ஒன்றும் புரியவில்லை அந்த பெண்ணை திருமணம் செய்தால் என் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். என் ஜாதகப்படி அது நடக்குமா? நடக்காதா? என்பதை தயவு செய்து பார்த்து சொல்லவும்.
ராஜேஸ்வரன்,மதுரை
ஒரு ஆணுக்கு இன்னொரு ஆண் துரோகம் செய்வதை மிக பெரும் பாவ வரிசையில் நமது பெரியவர்கள் சேர்க்கவில்லை அதே போல ஒரு பெண் ஆணுக்கு துரோகம் செய்தாலும் அதையும் மாபாதக வரிசையில் கொண்டு வரவில்லை ஆனால் ஒரு பெண்ணுக்கு ஆண்மகன் ஒருவனால் துரோகம் இழைக்கப்படும் போது அது பெண் பாவம் என்ற சாப வரிசையில் சேர்க்கப் படுகிறது. இது பெண்ணின் மீது தனிப்பட்ட ரீதியில் கொண்ட அனுதாபத்தால் உருவானது அல்ல மிக அழுத்தமான காரணத்தாலே ஏற்பட்டதாகும்.
பெண்ணை மதிக்காத நாடும் வீடும் நலம் பெற முடியாது என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்கிறது. அதாவது பெண்மையின் நலனில் சமூதாய அக்கறையே மறைந்திருக்கிறது. ஆண் குடிகாரனாக, காமுகனாக, எதற்கும் உதவாத தற்குறியாக இருந்தாலும் பெண் சரியாக இருந்தால் எப்பாடு பட்டாவது குழந்தை குட்டிகளை கரைசேர்த்து விடுவாள். அதே நேரம் அந்த பெண் எந்த வகையிலாவது தவறு செய்பவளாக இருந்தால் அந்த குடும்பமே மண் மேடாகி விடும். குடும்பத்தை காப்பதற்கு பெண்ணே உயிர் மூச்சாக இருப்பதனாலும் அவள் பாதுகாக்க பட வேண்டும்.
பெண்மையின் மனது மிகவும் மென்மையானது சில பெண்கள் கேடுகெட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை ஆனால் பெருவாரியான பெண்கள் அவர்கள் எந்த நாட்டை எந்த பண்பாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் உணர்வு மயமாகவே இருக்கிறார்கள். எதையும் வெகு விரைவில் நம்பிவிடும் சுபாவம் பெண்ணின் இயற்க்கை குணமாக இருக்கிறது. அப்படி நம்பும் பெண்ணை துயரத்திற்கு உட்படுத்த கூடாது என்பதாலும் அவள் பாதுகாக்க படவேண்டும்.
ஆணை விட பெண்ணுக்கு உடல் வலிமை உள்ளத்தின் வலிமை மிகவும் குறைவு பெண்ணின் இயற்கை சுபாவப்படி அவள் யாரவது ஒருவரின் பாதுகாப்பில் இருப்பதற்கே விரும்புகிறாள். வேளைக்கொறு கணவனை தேர்ந்தெடுக்கும் மேலைநாட்டு பெண்மணியாக இருந்தாலும் கட்டிய கணவனே கண்கண்ட தெய்வம் என்று போற்றுகின்ற இந்திய பெண்மணியாக இருந்தாலும் இந்த விதி பொருந்தும். சில பெண்கள் சம அந்தஸ்தை எதிர்பார்ப்பது விதி விலக்கே தவிர பொதுவானது அல்ல இப்படி பாது காப்பு தேவைப்படும் பெண்ணை இம்சிக்க கூடாது என்பதாலும் அவள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அதனால் தான் நமது பெரியவர்கள் பெண்மையை போற்ற வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்றார்கள் பெரியவர்கள் சொல்லுகின்ற பல தர்மங்களை நாம் கடைபிடிக்காதது போலவே பெண்மையின் சிறப்பை பற்றி அவர்கள் சொல்லியதையும் நாம் காற்றில் பறக்க விட்டு விட்டோம். பெண்ணை பிள்ளை பெரும் இயந்திரமாக காம களியாட்ட உபகரணமாக பார்க்கும் மனித ஜென்மங்களே உலக முழுவதும் அதிகமாக இருக்கிறார்கள்.
சம்மந்தமே இல்லாமல் இதை இங்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று சிலருக்கு எண்ணம் வரும். காரணம் இல்லாமல் சொல்லவில்லை இந்த கேள்வியை இங்கு கேட்டிருக்கும் நண்பர் நிஜமாகவே ஒரு பெண்ணை காதலிப்பதாக சொல்லி இருப்பது முற்றிலும் தவறு அவர் அந்த பெண்ணின் மீது வைத்திருப்பது மோகமே தவிர காதல் அல்ல இத்தகைய பழக்கம் அவருக்கு புதுமையானது என்று சொல்ல முடியாது காரணம் அவர் ஜாதகம் பல காதல்களை சந்தித்தவர் இவர் என்று தெளிவாக காட்டுகிறது.
திருமணத்திற்கு ஜாதியை காரணம் காட்டுகிறார்கள், பெற்றவர்கள் மறுக்கிறார்கள் என்பது குறிப்பிட்ட அந்த பெண்ணை திசை திருப்புவதற்காக என்பதே என் எண்ணம். இவரின் நடவடிக்கைகளை ஓரளவு தெரிந்து கொண்ட பெண்ணின் பெற்றோர்கள் திருமணத்திற்கு தடை போடுகிறார்கள். என்றே சொல்லலாம் இந்த கேள்வியை என் முன்னால் வைத்து காதல் திருமணம் உங்களுக்கு வராது என்று நான் பதில் சொல்ல மாட்டேனா அதை குறிப்பிட்ட பெண்ணிடம் காண்பித்து தப்பித்து கொள்ளலாம் என்ற நோக்கத்திலேயே இந்த கேள்வி எழுதப்பட்டதாக நான் கருதுகிறேன் எனவே கேள்வி கேட்கும் நண்பர் தனது தவறான மனோநிலையை மாற்றி கொள்ள வேண்டும் என்பது என் அபிப்ராயம்.
தொடர்ந்து இதை போன்ற காதல் விளையாட்டுகளில் இந்த ஜாதகர் ஈடுபட்டால் 2013 ம் வருடம் ஜூலை மாதத்திற்கு மேல் மிக பெரிய பாதகமான விளைவுகளை சந்திப்பார் உயிருக்கே வினையாக முடியும் அளவிற்கு சம்பவங்களின் தாக்கம் இருக்கும் இல்லை என்றால் வாழ்நாள் முழுவதும் தான் செய்த தவறை எண்ணி எண்ணி வருந்த வேண்டிய அளவிற்கு உடல் பாதிப்பு ஏற்படலாம் எனவே பெண்ணை ஏமாற்றாமல் திருமணம் செய்து கொண்டு நல்ல படியாக வாழ்க்கையை துவங்க வேண்டுகிறேன்.
மனமகிழ்ச்சிக்காக மற்றவர்களை துன்புறுத்த நினைத்தால் அதன் எதிரொலி நமது வாழ்விலே நிச்சியம் கேட்கும் உப்பு தின்ற எவனும் தண்ணீர் குடிக்காமல் தப்ப முடியாது. இந்த பிறவியில் இல்லை என்றாலும் அடுத்த பிறவியில் தவறுக்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். ஆனால் அப்போது தண்டனை என்பது ஊசிக்கு பதிலாக கடப்பாரை குத்துவது போல் இருக்கும்.
ஊரான் பெண்ணை கெடுக்கும் போது மகிழ்ச்சியில் துள்ளும் குரூர மனது தன் வீட்டு பெண் அதே அவமானத்தை சந்திக்கும் போது எப்படி துடிக்கும் தனக்கு வந்தால் தான் துயரம் மற்றவர்களுக்கு வந்தால் எனக்கென்ன கவலை என்று இருப்பவன் நிச்சயம் மனிதனே கிடையாது. அவனை மிருக வகையில் கூட சேர்க்க முடியாது. நான் கேட்பது நீ மகாத்மாவாக மாற வேண்டாம் மனிதனாக மாற முயற்சி செய் என்பது தான் இல்லை என்றால் மீளவே முடியாத வேதனையில் நீ துடித்தே தீர வேண்டும். சர்வ வல்லமை படைத்த நாராயணன் அனைவருக்கும் நல்ல மனதை தரட்டும் நல்ல பாதையை காட்டட்டும்.