Store
  Store
  Store
  Store
  Store
  Store

எட்டெழுத்து மந்திரத்தின் இனிய பொருள் !

 இந்து மத வரலாற்று தொடர் 21

    ரு மனிதன் உயிர் வாழ்வதற்கு மூச்சு காற்று முக்கியமானது. அந்த மனிதன் நல்ல வளர்ச்சியை பெறுவதற்கு சிந்தனை என்பது மிகவும் முக்கியமானது அதுவும் தடையில்லாத தடைபடுத்த முடியாத சிந்தனை சுகந்திரம் என்பது அத்தியாவசியமானது ஆகும். உலகத்தில் இதவரை நிகழ்த்தப்பட்ட சாதனைகள் எல்லாமே சுதந்திர சிந்தனையால் தான் உருவானது நமது இந்துமத பெரியவர்கள் இந்த உண்மையை மிக தெளிவாக உணர்ந்து இந்துக்கள் அனைவருக்கும் சிந்தனை செய்யும் அதிகாரத்தை தெளிவாகவே வழங்கியுள்ளார்கள். உலகில் எந்த மதத்திலும் இல்லாத சுதந்திரம் நமது இந்துமதத்தில் இருப்பதற்கு நமது பெரியவர்களின் விசாலமான மனதே முக்கிய காரணம்.

பொதுவாக இந்து மதத்திலேயே சுதந்திரம் என்பது வெகுவாக போற்றி பாதுகாக்க பட்டாலும் வைஷ்ணவ மரபில் மனித சிந்தனை சுதந்திரத்திற்கு தடைகள் என்பதே கிடையாது என்று சொல்லலாம். காரணம் ஒரு மனிதன் இறைநிலையை அடைவதற்கு அவனது விருப்பபடி வழிபாடுகளை அமைத்து கொண்டால் தான் முத்தி நிலை என்பது சாத்தியப்படும் இதனால் தான் உலகத்தை படைத்த முழுமுதற் கடவுளை காதல் நாயகனாகவும் இட்டபணி செய்கின்ற சேவகனாகவும் வழிபடும் சுதந்திரம் கொடுக்கபட்டிருக்கிறது. வைஷ்ணவ சுதந்திரத்தின் உச்சமான நிலையாக வடகலை,தென்கலை என்ற இருபெரும் பிரிவிகள் தோன்றி வைஷ்ணவ மரபை இன்றுவரை செழுமை படுத்தி வருகிறது.

14 ம் நூற்றாண்டளவில் வைஷ்ணவ நெறியில் வடகலை,தென்கலை என்ற அகச்சமைய பிரிவுகள் தோன்றின என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் புகழ்வாய்ந்த தென்கலை நெறியை பிள்ளை லோகசாரியரும்,மணவாள மாமுனிகளும் உருவாக்கினார்கள் வடகலை மரபினை வேதாந்த தேசிகர் தோற்றுவித்தார். தென்கலையை பின்பற்றுபவர்கள் ஆழ்வார்களால்  உருவாக்கப்பட்ட நாலாயிரம் திவ்யபிரபந்தத்தை தங்களது வழிகாட்டும் நூலாகவும் வடகலையை பின்பற்றுபவர்கள் வேதங்கள், உபநிஷதங்கள்,பகவத் கீதை ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்த பிரஸ்தானந்திரத்தை வழிகாட்டும் புனித நூல்களாக கொள்கிறார்கள். ஆனாலும் நாலாயிரம் திவ்வியபிரபந்தத்தை இவர்கள் ஒதுக்கிவிடவில்லை.


வடகலை,தென்கலை ஆகிய பிரிவினர்களுக்கு இடையில் வழிபாட்டு முறையில் சில சண்டை சச்சரவுகள் தொன்று தொட்டு நடந்து வருகிறது என்றாலும் உண்மையில் அந்த இரு மரபுகளுக்கு இடையில் ஆரோக்கியமான தத்துவ பேதங்கள் இருக்கிறதே தவிர உயர்வு தாழ்வு என்ற பிரச்சனையே கிடையாது ஆனால் துரதிஷ்டவசமாக இரு மரபினர் மத்தியில் இன்று ஏற்ற தாழ்வு சண்டைகள் நடந்து வருகிறது. அவைகளை பற்றி விரிவாக பேச வேண்டிய இடம் இது இல்லை என்றாலும் அப்படி ஒரு தகராறு வைஷ்ணவ மரபில் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியாது நமது கடமையாகும்.

தென்கலையை சேர்ந்தவர்கள் காதலாகி கசிந்துருகும் பக்தியால் மட்டும் பரம்பொருளை அடைந்து விட கூடாது பக்தியை விட பிரபக்தியை தனிச்சிறப்பு வாய்ந்தது அந்த பிரபக்தியை மேற்கொண்டே பகவானின் பாதார விந்தங்களை அடைய வேண்டும் என்கிறார்கள் பிரபக்தி என்றால் என்ன என்ற கேள்வி உங்களுக்கு எழக்கூடும். பகவானின் திருவடி தாமரை நிழலுக்காக தன உடல்,பொருள்,ஆவி அனைத்தும் பகவான் இடத்திலேயே முழுவதுமாக அற்பணித்து அவனே கதி என்று சரண்புகுதலே பிரபக்தியாகும் கீதை சொல்லுகின்ற சரணாகதி தத்துவம் தான் தென்கலை மரபின் தலைசிறந்த கொள்கையாகும்.

வடகலை மரபினர் சரணாகதி என்ற பிரபக்தியை வேண்டாம் என்று புறம்தள்ள வில்லை அதே நேரம் பக்தி என்பதையும் கூட்டாக வைத்து கொண்டால் தவறில்லை என்று சொல்கிறார்கள். அதற்காக அவர்கள் மர்க்கட நியாயம் என்ற ஒன்றை உதாரணமாக காட்டுகிறார்கள் அதாவது மர்க்கட என்றால் குரங்கு என்று அர்த்தம் குரங்கு குட்டியாக இருக்கும் போது எப்படி தாய் குரங்கை விடாமல் பிடித்து கொள்ளுமோ அப்படியே பகவானை பக்தர்கள் விடாப்பிடியாக பிடித்து கொள்ள வேண்டும். தாயை பிடித்து கொள்வது என்பது சேயின் பிரயத்தனம் முயற்சி என்பதாகும் முயற்சியே இல்லாமல் எதுவும் நடைபெறாது என்பது வடகலை பிரிவின் துணிச்சலான முடிவு.


இந்த மர்க்கட நியாயத்தை தென்கலை மரபினர் ஏற்றுக்கொள்வது இல்லை ஒரு பூனைக்குட்டி தன்னை முழுமையாக தாயிடம் ஒப்படைத்து விடுகிறது தாய் பூனை குட்டியை ஒருவேளை பரண் மீது வைக்கிறது மறுவேளை பானைகளுக்கு இடையில் கொண்டு வைக்கிறது. இந்த இடம் சரியா? செளரியமானதா? என்று குட்டி கவலை படுவது இல்லை அம்மாவுக்கு எல்லாம் தெரியும் அவள் என்னை அபாயத்தில் கொண்டு நிறுத்திவிட மாட்டாள் என்ற நம்பிக்கையில் நிம்மதியாக இருக்கிறது. இதே போலவே பக்தனும் பகவானிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து விட வேண்டும். அவன் என்னை சிம்மாசனத்தின் மீது வைத்தாலும் சரி சாக்கடையில் தள்ளினாலும் சரி எல்லாம் எனது நன்மைக்காக அவன் நடத்துவது என்று நிம்மதியாக இருக்க வேண்டும். இதற்கு மார்ச்சால நியாயம் என்று பெயர்.

இந்த மரபு தவிர பஞ்சராத்திரம் என்ற ஒரு மரபும் வைஷ்ணவத்தில் உண்டு. ஆனால் இந்த மரபை வைதீக வைஷ்ணவர்கள் பெரியதாக எடுத்து கொள்வதில்லை பஞ்சராத்திரம் என்றால் தத்துவ ஞானம் முத்தி பெருவதற்கான வழி, பக்தி நெறி,உடலை பக்குவபடுத்தும் யோக மார்க்கம், பொறி புலன்களை பற்றிய அறிவு ஆகிய ஐந்தும் கலந்ததாகும் இவைகளை பற்றிய விரிவான விளக்கத்தை நாரத மகரிஷி எழுதிய நாரத பஞ்சராத்திரம் என்ற நூலில் காணலாம். சாண்டில்யர்,ஒளபகாயனர்,மெளஞ்சாயினர்,கெளசிகர்,பாரத்வாசர் என்னும் ஐந்து முனிவர்களுக்கு இந்த ஐந்து நெறிகளை இறைவனாகிய திருமால் போதித்ததாக ஐதீகம் உள்ளது.

இது தவிர வைஷ்ணவத்தில் ஏராளமான பக்தி பிரிவுகள் இருந்தாலும் மிக முக்கியமானது இவைகள் தான் இவைகளின் மைய கருத்தை ஆழ்ந்து சிந்தித்தோம் என்றால் நாம் அனுபவிக்க வேண்டிய இறைவனின் திருக்கோலம் இறைவனின் அருளமுதை சுவைக்கும் உயிர்களின் இலக்கணம் இறைவனை அடைய தடையாக இருக்கும் இடைஞ்சல்கள் முத்தி நெறி என்ற வைகுந்த வாசலை அடைவதற்கான வழிகள் இறுதி நோக்கமான பகவத் அனுபவம் ஆகியவைகள் மட்டுமே என்று உறுதியாக சொல்லலாம்.


மிக விசேஷமாக ஸ்ரீ வைஷ்ணவத்தில் மட்டுமே இறைவனை பகவான் என்ற அடைமொழியில் அழைக்கிறோம் ஞானம்,சக்தி,பலம்,ஐஸ்வர்யம்,வீரியம்,தேஜஸ் ஆகிய ஆறு வகையான குணங்களை ஒன்றாக கொண்டவன் என்பதே பகவான் என்ற வார்த்தையின் உண்மை பொருளாகும் இத்தகைய பகவான் சத்யத்வம்,ஞானத்வம்,அநந்தத்வம்,ஆனந்த்வம்,அமலத்வம் என்ற உண்மை,அறிவு,எல்லை இல்லா நிலை,இன்பம்,தூய்மை ஆகிய வடிவோடு பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாகவும் நம்ப படுகிறது. இறைவனின் திருகுணங்களாக தென்கலை பிரிவினர் சொல்லும் செளலப்யம்,செளசீல்யம்,காருண்யம் ஆகியவைகளும் இங்கே சிந்திக்க தக்கதாகும்.

இவ்வளவு பெருமை வாய்ந்த திருமாலின் அருள் அமுதத்தை சாதாரண மனிதன் கூட நேருக்கு நேராக அனுபவிக்கும் ஒரு மார்க்கத்தை ஸ்ரீ வைஷ்ணவம் உலகுக்கு தந்துள்ளது அந்த அமுதம் என்னவென்றால் ஓம் நமோ நாராயணாய என்று எட்டெழுத்து மந்திரமாகும் இந்த மந்திரத்தின் ஆழ்ந்த அகன்ற விரிவான பொருளை நம்மால் சிந்திக்க முடியாது என்றாலும் ஓரளவாவது சிந்திக்கும் தகுதியை நமக்கு நாராயணன் தந்துள்ளான் இதில் வரும் ஓம் என்ற பிரணவம் மூல மந்திரம் என்பது நாம் அறிவோம் வைஷ்ணவ சித்தாந்தபடி அ,உ,ம என்ற மூன்று எழுத்துகளின் சேர்க்கை ஒலியே ஓம் என்பதாகும் இதனுள் இருக்கிறன அகரம் இறைவனையும்,மகரம் உயிரையும்,உகரம் படைத்தலையும் சுட்டுவதாகும்.


உயிரானது இறைவன் ஒருவனுக்கே அடிமை என்பதை காட்டுவதே மந்திரத்தின் கடேசி பகுதியில் வரும் நம என்ற வார்த்தையாகும் நம என்ற வார்த்தையில் ந என்ற முதல் எழுத்தில் இல்லை என்ற பொருள் மறைந்திருக்கிறது மீதமுள்ள  மகாரம் உயிரை குறிப்பதாக அறிந்தோம் அதாவது இதன் பொருள் நானும் எனக்குறியவன் அல்ல என்பதாகும். அப்படி என்றால் நான் யார்க்குறியவன் சந்தேகமே வேண்டாம் நான் நாராயணன் ஒருவனுக்கே அடிமை அவனுக்கே நான் தாசானு தாசன் இந்த மந்திரத்தில் மீதமுள்ள நாராயணாய என்பது இதை தான் சொல்லாமல் சொல்கிறது மேலும் இதில் உள்ள நார,அயன,ஆய என்ற வார்த்தைகளுக்கு தனிதனி பொருள் உண்டு.

நார என்பது நரனிடம் இருந்து தோன்றிய உயிர்களை குறிக்கும்.அயன என்று சொல் உபாயம்,பலன்,ஆதாரம் என்ற பல பொருள்களை தருகிறது. இவை இரண்டும் சேர்ந்த நாராயண என்ற சொல் உயிர்களுக்கு ஆதாரம் என்ற பொருளை காட்டுகிறது. கடேசியாக உள்ள ஆய என்ற பதம் பணி என்ற பொருளை கொண்டது அதாவது உயிர்கள் எப்போதும் இறைவனின் பணிக்காகவே உரியவைகள் என்பது இதன் அர்த்தமாகும் ஆக ஓம் நமோ நாராயணாய என்ற வார்த்தைகள் மனிதனின் ஆணவம் அழிகிறது ஆண்மை பிறக்கிறது ஆன்ம நேய ஒருமைப்பாடு ஏற்படுகிறது. இதனால் தான் பெரியாழ்வார்
மூலம் ஆகிய ஒற்றை எழுத்தை
மூன்று மாத்திரை உள்எழ வாங்கி
மேலை வண்ணனை மேவுதிர் ஆகில்
விண்ண கத்தில் மேவலும் ஆமே

                   என்று சொல்கிறார் அதாவது எட்டெழுத்து மந்திரத்தை மூன்று மாத்திரை அளவு மூச்சு காற்றுடன் உள்ளுக்குள் இழுத்து தியானம் செய்தால் இறைவனாகிய திருமாலின் பரமபதம் கிடைக்கும் என்பது ஆழ்வாரின் அமுத மொழியாகும் வைஷ்ணவம் வெறுமனே வாழும் நெறியாக மட்டுமல்லாது இறைவனோடு பக்தனை கொண்டு சேர்க்கும் நெறியாகவும் இருக்கிறது என்று பல பெரியவர்கள் சத்திய வாக்காக சொல்வது இதனால் தான் எனவே நாமும் ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ நாராயணாய என்று மீண்டும் மீண்டும் சொல்லி அடியவரின் துன்பங்களை களைந்து பாவங்களை போக்கி குழந்தை போல் அரவணைத்து கொள்ளும் திருமாலின் திவ்விய பாத கமலங்களை சிக்கென பிடித்து வைகுண்ட இன்பத்தை வாழும் போதே பெறுவோம்.



Contact Form

Name

Email *

Message *