அன்புள்ள குருஜிக்கு வணக்கம் எனக்கு சிறு வயது முதலே நடிப்பு துறையில் நாட்டம் இருக்கிறது திரைப்படத்தில் நடித்து பெயரும் புகழும் பெற விரும்புகிறேன் என் வீட்டல் உள்ளவர்கள் நான் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் பெண்ணான என்னால் வீட்டாரை மீறி நடிக்க வருவது என்பது சிரமமான காரியம் ஆனாலும் எனது ஆவலை அடக்க முடியவில்லை எனது ஜாதகத்தை உங்களுக்கு அனுப்பி உள்ளேன் தயவு செய்து தாங்கள் அதை பார்த்து நான் நடிக்க முடியுமா? முடியாதா? என்று விளக்கமாக சொல்லணும் உங்கள் சொல்லில் தான் எனது அடுத்த கட்ட செயல் இருக்கிறது தயவு செய்து என் பெயரை வெளியிட வேண்டாம்
பெயர் சொல்ல விரும்பாத வாசகி
கலையின் மீது கொள்கின்ற ஆர்வம் என்பது ஒரு போதைக்கு சமமானது மது அருந்தும் போது ஏற்படும் போதையை விட அது கிடைக்காத போது அதற்காக ஏங்கும் ஏக்கம் மிகவும் அபாயகரமானது அதே போல தான் கலையின் மீது தாகம் கொண்ட மனதை அதை நாடாதே என்று தடுக்கும் போது பயங்கரமான விளைவுகளையும் எதிர்கொள்ளவும் ஏற்படுத்தவும் தயாராகி விடுகிறது
பாசமிகுந்த பெற்றோருக்கு பெண்ணாக பிறந்த நீங்கள் உங்கள் எண்ணத்திற்கு அவர்கள் தடை போடுகிறார்கள் என்றவுடன் அவர்கள் மீது கோபம் கொள்வது எந்த வகையிலும் சரியில்லை என்பது எனது எண்ணம் மூத்தோர் வார்த்தை ஆரம்பத்தில் கசப்பாக இருக்கும் முடிவில் தான் அதன் இனிப்பு தெரியும்
உங்கள் ஜாதகத்தை மிக தெளிவாக ஆராய்ந்தேன் அதில் நீங்கள் நல்ல கலைஞராக வருங்காலத்தில் வருவதற்கான சூழல் இருப்பாதாக என்னால் காணமுடியவில்லை அதாவது கலைத்துறையில் உங்களால் வெற்றி பெற முடியாது என்பது என் கருத்து காரணம் கலைக்குரிய கிரகங்களான புதனும் சுக்கிரனும் உங்களுக்கு சாதகமாக இல்லை எனவே நடிப்பின் மீது உள்ள ஆவலை நீங்கள் குறைத்து கொள்வதை தவிர வேறு வழியில்லை மேலும் 2012 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் வரை உங்களுக்கு மிகவும் தீமையான காலம் இருக்கிறது அதுவரை பெரியவர்களின் சொற்படியும் இறைவழிபாடு செய்தும் வாருங்கள்
வாழ்க்கை என்பது நினைத்ததை எல்லாம் நடத்தி முடிப்பதில் இல்லை நடப்பதை நல்ல விதமாக பயன்படுத்தி வெற்றி பெறுவதில் இருக்கிறது நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தை நடிப்பை விமர்சனம் செய்வதில் செலுத்துங்கள் நல்ல வருங்காலம் உங்களை வரவேற்கும்.