Store
  Store
  Store
  Store
  Store
  Store

குப்பை தொட்டியில் வீசப்படும் பெற்றோர்கள்




    திமதுரம் என்ற மூலிகையைப் பற்றி நாம் எல்லாரும் நன்கு அறிந்து வைத்து இருக்கிறோம் அப்படி அறியாதவர்கள் அதன் பெயரை கேட்டவுடன் அது மிகவும் இனிமையான சுவை கொண்டதாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கலாம் அல்லது அப்படி கற்பனை செய்துகொள்ளலாம். ஆனால், உண்மையில் அதிமதுரம் இனிப்பான பொருளா?

     இல்லை துவர்ப்பும் இனிப்பும், கலவையுடன் கூடிய சுவைதான் அதற்கு உண்டு இனிப்பே  இல்லாத அதிமதுரத்தை இனிப்பென்று கருதுவது போல்தான் வாழ்க்கையில் பல விஷயங்களை தவறுதலான கண்ணோட்டத்தோடு பார்த்துக்கொண்டும், நம்பிக்கொண்டும் ஏமாந்து போகிறோம். சிறிய விஷயங்களில் கிடைக்கின்ற ஏமாற்றம் நம்மை பெரிதாக பாதிப்பது இல்லை. ஆனால் மிக முக்கிய விஷயங்களில் ஏமாற்றம் அடையும்போது நமது வாழ்வே சூன்யம் ஆகிவிட்டது போல் உணருகிறோம்.
 
 
   ஒருவன் திருமணத்திற்க்காக பல காலம் ஏங்கி தவிக்கிறான் மணமகளைப் பற்றி பலவித கற்பனைகளில் மூழ்கிக் கிடக்கிறான் சினிமாவிலும், நாவல்களிலும் காட்டப்படுகின்ற இல்லற வாழ்க்கைப்போல் தனக்கும் அமைய இருப்பதாக மனக்கோட்டை கட்டிக் கொள்கிறான் முடிவில் அவனுக்கு அமையும் மனைவி சண்டைக்காரியாகவோ , பிடிவாதக் காரியாகவோ , நோயாளியாகவோ  அமைந்துவிட்டால் அவன் மனோ நிலை எப்படி இருக்கும்.

      இதனால் தான் மணவாழ்க்கைப் பற்றிய அதிக கற்பனைக்கும் எதிர் பார்ப்பிற்கும், இடம் கொடுக்காதே மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்று நமது பெரியவர்கள் சொல்லி சென்றிருக்கிறார்கள் இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்கவேண்டும். வாழ்க்கைத்துணையை அமைத்துகொள்வதில் நம்முடைய சுயவிருப்பமும், முயற்சியும் இருக்கிறது. ஆனால் பிள்ளைகள் விஷயத்தில் முழுக்க, முழுக்க நம் விருப்பப்படி எதுவும் அமைவது இல்லை.
      தான் விரும்பியப்படி தனது மகளுக்கு திட்டமிட்ட மாப்பிள்ளையையே திருமணம் செய்து வைத்த தகப்பன்கள் எத்தனை பேர் ? தான் நினைத்தப்படி மகனை படிக்கவைத்து வேலையில் அமர்த்தி அழுகு பார்த்த பெற்றோர்கள் எத்தனை பேர் ? விரல் விட்டு என்னிவிடலாம் நினைத்ததை நினைத்தப்படி நடைமுறைபடுத்தியவர்களை.

  என் மகளை ஆசை ஆசையாய்  டாக்டருக்கு படிக்கவைத்து டாக்டர் மாப்பிள்ளைக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் ஆண்டவர் சித்தம் வேறுவிதமாக அமைந்துவிட்டது. இஞ்சினியர் மாப்பிள்ளை தான் அமைந்து உள்நாட்டிலேயே வாழமுடியாமல் அயல் நாட்டில் வாழவேண்டிய நிலை வந்து விட்டது என்று சொல்லுகின்ற எத்தனையோ பெற்றோர்களது அன்றாடம் காண்கிறோம்.

   இது மட்டுமல்ல பிள்ளை இல்லை என்று கோவில் கோவிலாக சென்று வரம் பெற்று ஒரே பிள்ளையை பெற்றேன். அவனை படிக்கவைத்து ஆளாக்கி பார்க்கலாம் என ஆசைபட்டேன். ஆனால் படுபாவிபையல் பள்ளிக்கூடம் அனுப்பினால் கோவில் மண்டபத்தில் தூங்கிவிட்டு ஊர் வம்பை இழுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து நிற்பான் வக்கீலாக வேண்டியவன் இன்று வாழைக்காய் மண்டியில் புகை போட்டுக் கொண்டு இருக்கிறான் என்று அங்கலாய்க்கும் பரிதாபமான மனிதர்களையும் தினசரி பார்க்கிறோம்.
 
 
     இவைகளையெல்லாம் பார்க்கும்போது மக்கட் செல்வம் என்பது பேசுவதற்கும், நினைத்து பார்ப்பதற்கும் இனிமையானதே தவிர நடைமுறை வாழ்க்கையில் அதி மதுரம்போல் துவர்ப்பானது என்றுதான் தோன்றுகிறது.

  ஒட்டககங்களைப்பற்றி அறிந்தவர்கள் ஒரு விஷயத்தை கவனித்து இருப்பார்கள் பாலை வனத்தில் முளைத்து இருக்கும் கள்ளி செடிகள் ஒட்டகத்திற்கு மிகப்பிரியமான உணவாகும் கள்ளிச்செடியை திண்பதனால் அதன் முட்கள் ஒட்டகத்தின் வாயை கிழித்து ரத்தம் வடிய செய்யும் இரத்தம் வருகிறதே வலி எடுக்கிறதே என்பதற்காக ஒட்டகம் கள்ளிச்செடியை திண்பதை நிறுத்துவது கிடையாது வலியைவிட நாக்கு சுவையே ஒட்டகத்தை ஆட்டுவிக்கும்

   அதே போன்று தான் மனிதர்கள் உறவுகளால் ஏற்படும் வேதனைகளை கைவிட முடியாமல் பந்தபாச தளைகளுக்குள் அகப்பட்டு தவியாய் தவிக்கிறார்கள். இந்த நிலையில் தான் பட்டினாத்தார் காப்பதற்கும் வகையறிர் கைவிடவும் மாட்டிற் ஆப்பதனை அசைத்து விட்ட குரங்குபோல் அகப்பட்ரே  என்று பாடுகிறார்.

    பல சமயங்களில் என்னிடம் வரும் வயதான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தங்களை கவனிப்பது இல்லை என்று சொல்லி அழுவதை பார்த்து இருக்கிறேன். அவர்களின் நிலை மிகப்பரிதாபமாக இருக்கும்.
 
 
    ஒரே மகனை கண்ணும் கருத்துமாக வளர்த்தோம். அவன் விரும்பியதை எல்லாம் வாங்கி கொடுத்தோம் இதுதான்படிப்பேன் என்று அடம் பிடித்தான் அதற்கும் சம்மதித்தோம் காதலித்த பெண் தான் வேண்டுமென்று ஒற்றை காலில் நின்றான் வேறு வழி இல்லாமல் குலம் கோத்திரம் பார்க்காமல் அதே பெண்ணையே திருமணம் செய்து வைத்தோம். சென்னையில் தான் குடி இருப்பேன் என்றான் கிராமத்தில் உள்ள நில புலன்களை விற்று கையில் இருந்த சேமிப்பு பணத்தையும் கொடுத்து சென்னையில் வீடு வாங்கி கொடுத்தோம் எங்களையும் தன்னோடு அழைத்துச் செல்வான் என்று
 எதிர் பார்த்தோம் ஆனால் அவன் மாதம் ஆயிரம் ரூபாய் அனுப்புகிறேன் கிராமத்திலேயே ஒரு வாடகை வீடு அமைத்து கொண்டு இருங்கள் என்று தன்னந்தனியாக எங்களை விட்டுவிட்டு மனைவியோடு போய்விட்டான் என்று ஒரு வயதான தம்பதியினர் கண்ணீர்விட்டு கதறியது இன்னும் என் மனக்கண்ணில் அழியாமல் நிற்கிறது.

 ஆண் பிள்ளையை பெற்றாலே பெண்டாட்டி பேச்சை கேட்டு போய் விடுவான் பெண் பிள்ளைகள் அப்படியல்ல வாக்குப்பட்டு புகுந்த வீடும் சென்றாலும் பெற்றவர்களை மறக்காது என்று சிலர் கூறுகிறார்கள்.

    கிராமப்புறத்தில் சிலர் நாம் செத்துவிட்டால் ஆண்பிள்ளை சுடுகாட்டுக்கு தூக்கிக் செல்லும் வேலையை தான் கவனிப்பானே தவிர அழுவதற்கு அவனுக்கு நேரம் இருக்காது அதற்கு அவன் விரும்பவும் மாட்டான் பெண்பிள்ளைகள் அப்படியல்ல நம் தலைமாட்டில் உட்கார்ந்து நிஜமாகவே அழுவார்கள் என்று கூறுவதை கேட்டு இருக்கிறேன் அது உண்மையாகவும் இருக்கக்கூடும் என்று பலகாலம் நம்பியும் வந்தேன்.
 
 
     இந்த நம்பிக்கையை தவிடு பொடியாக்கும் ஒரு நிகழ்ச்சியை ஏசியாநெட் என்ற மலையாள தொலைக்காட்சியில் பார்த்தேன். அந்த நிகழ்ச்சி முதியோர் இல்லத்தில் இருக்கின்றவர்களை பற்றிய படத் தொகுப்பாகும் நிகழ்ச்சியின் ஒருங்கினைப்பாளர் அந்த இல்லத்தில் உள்ள முதியவர்கள் எந்த சூழலில் இங்கு வந்தார்கள் என்ற கேள்வியை அங்குள்ள பலரிடம் கேட்டார் அவரவர்கள் தங்களது நிலையை சொல்லி வந்தார்கள்

     அதில் எழுபது வயது மதிக்கதக்க ஒரு மூதாட்டி தன் கதையை சொன்னார் அந்த கதை புத்தனை கூட கொதிப்படைய செய்யும் மலையாளத்தில் அந்த அம்மையார் சொன்ன தக்வலை அப்படியே தருகிறேன் படித்துபாருங்கள் உங்கள் இதயம் படும்பாடை உணர்வீர்கள்.

     எனது சொந்த ஊர் பாலக்காட்டுக்கு அருகில் உள்ள ஒரு சின்ன கிராமம் எனது பதினானைந்தாவது வயதினிலேயே திருமணம் நடந்துவிட்டது. என் கணவர் மிகவும் நல்லவர் அதிர்ந்து பேசக்கூட தெரியாதவர் ஆனால் நல்ல உழைப்பாளி பூர்வீக சொத்தில் கடினமாக பாடுபட்டு நிறைய சம்பாதித்தார். எனக்கு அவர் கணவர் மட்டுமல்ல தாயும்கூட.
 
 
      எங்கள் இன்பமான வாழ்க்கையின் சின்னமாக இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர் இரண்டாவது பிள்ளை பிறந்த ஆறு மாதத்தில் இருந்து சோதனை காற்று எங்களை சுற்றிச்சுற்றி தாக்கியது நல்ல திடகார்த்தமான அவர் அடிக்கடி இனம்புரியாத நோயின் வசப்பட்டார் ஒரு நாள் இரவு மூச்சி திணறலால் அவதிப்பட்டார். மிக சிரமப்பட்டு வாய்வழியாக காற்றை இழுத்த அவர் அதையே கடைசி முச்சியாக வெளிவிட்டார்.

    பட்டியில் அடைக்கப்பட்ட ஆட்டுக் குட்டியை திடீரென்று தூக்கி நடுகாட்டில் போட்டது போல் என்வாழ்க்கையானது பத்தொன்பது வயதினிலேயே பட்ட மரமாக நின்றேன். அவர் இல்லாத வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை ஆனால் செத்துவிடவும் துணிச்சல் இல்லை காரணம் இடுப்பிலும், மார்பிலும் என்னையே நம்பி உள்ள பச்சைக் குழந்தைகள் இரண்டு குழந்தைகளுக்காக வாழ்க்கை நதியில் குதித்தேன் கடுமையாக எதிர் நீச்சல் போட்டேன்

     எங்கள் கிராமத்தை பொறுத்தவரையில் விவசாய வேலைகளை பெண்கள் கவனிப்பது கிடையாது ஆனால் நான் அவர்விட்டு சென்ற விவசாயத்தை முழு மூச்சாக செய்தேன்  வேலையால் உடல் வலித்தது ஆனால் குழந்தைகளின் வளர்ச்சி வலிக்கு மருந்தாக அமைந்தது வளர்ந்த பிள்ளைகளை படிக்க அனுப்பினேன் ஆனால் அவைகளுக்கு கல்வி என்பது வேம்பாக கசந்தது படிப்பு ஏறவில்லை என்பதனால் எட்டாம் வகுப்பைகூட எப்படி பிடிக்க முடியாமல் போனது வீட்டோடு இருந்து என்வேலை சுமைகளை கொஞ்சம் குறைந்தனர்.
 
 
  என் பெண்கள் மற்ற விஷயத்தில் எப்படியோ திருமணத்தை பொறுத்தவரை என் சொல்படியே நடந்துகொண்டனர் ஏராளமான நகை நட்டுகள் போட்டு வசதியான இடத்தில் மணம்முடித்து வைத்தேன் குழந்தை குட்டிகள் என்று அவர்கள் வாழ்க்கை இன்பகரமாக ஆரம்பமானது.

   இந்த நிலையில் எனது இளைய மகள் தனது தகப்பானாரின் சொத்துகளில் தனக்குரிய பங்கை பிரித்து தருமாறு கேட்டாள் மூத்தவள் உடன் பேசி முடிவு சொல்வதாக கூறினேன் மூத்த மருமகன் சொத்துகளை பிரிப்பது என்றால் அதிக விளைச்சல் உள்ள பூமிகளை தமது பங்காக தரவேண்டும் என்று அடம்பிடித்தார்

 அதற்கு இளைய மாப்பிள்ளை ஒத்து கொள்ளததால் பெண்களுக்கிடையில் பகைமை வளர்ந்தது ஒருதாய் மக்களுக்குகிடையில் நிலம் சம்மந்தமாக குழப்பங்கள் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.கணவர் இல்லாமல் வாழ்க்கைப் போராட்டத்தை தன்னந்தனியாக சமாளித்த எனக்கு உடல் வலிமை மட்டுமல்ல மனவலிமையும் அதிகமாக இருந்ததது. அதனால் உறுதியான ஒரு முடிவிற்குவந்தேன் என் விருப்பப்படிதான் சொத்துகள் பிரித்து தரப்படும் என்றும் அதுவும் என் மரணகாலத்திற்கு பிறகே அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் முடிவு செய்து பெண்களிடம் இறுதியாக சொல்லிவிட்டேன்.


    இரண்டு பெண்களுக்குமே இந்த முடிவு அதிர்ச்சியை தந்து இருக்கிறது ஆனால் அவர்கள் அதை வெளிகாட்டி கொள்ளவில்லை பழையப்படி சகஜமாக உறவாடினார்கள் பகை மறைந்துவிட்டது. பாசம் பிறந்துவிட்டது என்று நான் அப்பாவியாக நம்பினேன் அந்த நம்பிக்கை இரண்டு வருடங்கள் நீடித்தது.

    ஒரு நாள் மூத்தவள் பேரக் குழந்தைகளுடன் வீட்டிற்கு வந்தாள். அன்பாக பேசினாள் ஆதரவாக நடந்து கொண்டாள் தன் வீட்டிற்கு கிளம்பும்போது வரும் கார்த்திகை மாதம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று வரலாம் என்று கேட்டாள் தங்கையையும் கூப்பீடு நானும் வருகிறேன் எல்லோருமாக சேர்ந்து அம்மனை தரிசிக்கலாம் என்றேன்.

   கார்த்திகையும் வந்தது என் உறவுகளின் சாயமும் வெளுத்தது நடக்கப்போவது என்னவென்று தெரியாமல் பிள்ளைகளோடு கோவிலுக்கு வந்தேன். தரிசனமும் முடிந்தது மதிய உணவையும் எடுத்து கொண்டோம் பயண அலுப்பும் உண்டமயக்கமும் வயதான கண்களை மூட துடித்தது கொஞ்சம் தலை சாய்க்கிறேன் என்று பிள்ளைகள் இடம் சொல்லிவிட்டு மண்டபத்தில் படுத்தேன்.
 
 
     அலுப்பும், களைப்பும் என்னை அயர்ந்து உறங்க செய்துவிட்டது. வெகு நேரம் துங்கி இருக்கிறேன் நான் கண் விழித்து பார்த்த போது ஆலயத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன ஆள் நடமாட்டம் குறைந்திருந்தது என்னைப் சுற்றி பார்த்தேன் என் பெண்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் யாரையுமே காணவில்லை.

எங்கேயாவது வேடிக்கை பார்க்க சென்றிருப்பார்கள் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்கள் என்று காத்திருந்தேன் காலம் கடந்ததுதான் மிச்சம் போனவர்கள் வரவே இல்லை கோயில் நடை சாத்தப்பட்டு பல விளக்குகளும் அனைக்கப்பட்டுவிட்டன ஏதோ ஒரு திண்ணையில் விடிய விடிய உட்கார்ந்திருந்தேன் மழை வந்தது உடல் முழுவதும் சொட்ட சொட்ட நனைந்து குளிரில் நடுங்கிக் கொண்டே இரவு முழுவதையும் கழித்தேன்.

  அந்த நேரத்தில் என் மனம் எதை எதையோ நினைத்து பதைபதைத்தது பயமுறுத்தியது ஆனாலும் எங்கோ ஒரு மூலையில் சிறிய நம்பிக்கை ஒளிவிட்டுக் கொண்டே இருந்தது எப்படியும் குழந்தைகள் வருவார்கள் நம்மை அழைத்து செல்வார்கள் என்ற நம்பிக்கையோடு இரவும் முடிந்தது.
ஊருக்கெல்லாம் வெளிச்சமாக விடிந்த அந்த பொழுது எனக்கு மட்டும் இருட்டாகவே விடிந்தது இரவு முழுவதும் மழையில் நனைந்ததால் வயிற்றுக்கு உணவு இல்லாதாலும் உடல் எல்லாம் நடுங்கியது ஜீரம் அணலாக கொதித்தது பசி தள்ளாட செய்தது ஆனாலும் நம்பிக்கையே கையில் பிடித்துக்கொண்டு நான் பெற்ற மக்களை ஊரெல்லாம் தேடினேன   ஒருவரையும் காணோம் என்னால் நடக்க முடியவில்லை ஒரு வீட்டு திண்ணையில் மயங்கிவிழுந்தேன் முகத்தில் தண்ணீர் தெளித்து யாரோ என்னை எழுப்பினார்கள் கண்விழுத்து பார்த்தேன் நடுத்தர வயதில் ஒரு மனிதர் நின்றிருந்தார் என்னைப்பற்றிய எல்லா விவரங்களையும் கேட்ட அவர் தன் வீட்டிற்கு அழைத்து சென்று பெற்ற மகன் போல உணவு கொடுத்தார் மருந்தும் கொடுத்தார்.

   இரண்டு நாட்கள் அவர் வீட்டிலேயே தங்கி இருந்தேன். என்னை அவர் பாலக்காட்டில் கொண்டு விட்டுவிடுவதாக சென்னார் ஆனால் நான் மீண்டும் அங்கு சென்று நான் பெற்ற மிருகங்களை காணவிரும்பவில்லை எங்காவது உள்ள அனாதை இல்லத்தில் சேர்த்து விடும்படி மன்றாடி கேட்டேன் அந்த மனிதன் அதற்கு உடனே இணங்கவில்லை தன்னை மகன் போல நினைத்து தன்னுடனே தங்குமாறு என்னை வற்புறுத்தினார் நான் அவருக்கு கஷ்டம் கொடுக்க விரும்பவில்லை என் கொள்கையில் பிடிவாதமாக இருந்தேன் அதனால் அவர் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்தார்.
 
 
    இப்பொழுது நான் ஒரு முடிவு செய்து இருக்கிறேன் என் கணவரின் அயராத  உழைப்பாலும் எனது வேர்வையாலும் செழுமைப்பட்ட என்பூர்வீக சொத்து எனக்கு பிள்ளைகளாக பிறந்த பேய்களுக்கு போய் சேரக்கூடாது காலத்தே உதவி செய்த அந்த மனிதனுக்கும் என்னை பராமரிக்கும் இந்த இல்லத்திற்கும் சமமாக பங்கிட்டு கொடுக்கப்போகிறேன்.

   அந்த அம்மையாரின் கண்ணீர் கதை கல் நெஞ்சத்தைக்கூட கலங்க வைத்து விடும் என்பது உண்மை கொலை செய்வதைவிட கொடுமையானது முதுமையானவர்களை இயலாதவர்களை ஆனாதையாக விடுவது ஆகும் உயிர்வதைக்கூட ஒரு நிமிட வேதனை தான் கைவிடப்படுவதினால் அனுபிவிக்கும் வேதனை என்பது ஆயுள்முழுவதும் முள்கிரீடம் வைத்து சம்மட்டியால் அடிப்பது போல் ஆகும்.
 
 
    ஒரு காலத்தில் பெற்ற குழந்தைகளை அனாதையாக வீசி எரிவது வாடிக்கையாக இருந்தது இன்றுகூட அந்த நிலமை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது ஆனாலும் கூட பெற்றொர்களை அனானதகளாக்கும் பிள்ளைகளைப் பற்றிய கற்பனை கதைகள்கூட ஒரு காலத்தில் தவறாகப்பட்டது ஆனால் இன்று அத்தகைய நிஜங்கள் சர்வ சாதரணமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது

    இதற்கு காரணம் பிள்ளைகள் வளர்க்கப்படும் முறைகள் சரியில்லையா அல்லது கல்விமுறை அத்தகைய மனோபாவத்தை குழந்தைகள் இடம் வளர்க்கிறதா அல்லது சமுதாய அரசியலமைப்பு இத்தகைய  செயல் பாடுகளுக்கு ஊக்கும் தருகிறதா என்றெல்லாம் பல கேள்விகள் நம்முன்னால்  எழுந்து நின்று பதில் பெற துடிக்கிறது.

ஆண்பிள்ளைகள் தான் இரக்கமற்று நடந்து கொள்கின்றன பெண்பிள்ளைகள் அப்படி அல்ல என்ற காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது கொடுமைகள் செய்வதில் ஆணுக்கு நிகராகவே பெண்களும் இருக்கிறார்கள் என்பதையும் வைத்து பார்க்கும் பொழுது நமது ஒட்டுமொத்த சமுதாயமே கெட்டுபோய் இருப்பது நன்றாக தெரிகிறது.

  ஊரெல்லாம் தீபாவளி என்றால் நாமும் சேர்ந்து இரண்டு பட்டாசுகளை கொளுத்தலாம் ஊரே பற்றி எரிகிறது என்றால் தண்ணீர் குடத்தை தேடாமல் கொள்ளிக்கட்டையை தேடுவது சமுதாய அக்கறையாகுமா? தெரிந்தோ தெரியாமலோ நமது குழந்தைகள் நம்மை அனாதைகளாக்கும் கொடியவர்களாக ஆகிப்போனார்கள் அவர்கள் அப்படி ஆனதற்கு முழுமையான குற்றவாளி அவர்களோ கற்ற கல்வியோ, சமூகமோ, அரசியலோ காரணம் மட்டும் அல்ல நம் குழந்தைகள் கெட நாமும் மிக முக்கியமான காரண கர்த்தகளாக இருக்கிறோம்.

    நமது பெற்றோர்கள் நம்மை வளர்த்ததுபோல நாம் நமது குழந்தைகளை வளர்த்தேமா என்று சிந்தித்து பார்க்கவேண்டும். ஆயிரம் கஷ்டங்களும் துயரங்களும் தங்களுக்கு இருந்தாலும் அதையெல்லாம் நம் அப்பாவும் அம்மாவும் நம்மிடத்தில் காட்டினார்களா மிட்டாய் வாங்கிக்தர காசு இல்லை என்றாலும் நாளைக்கு இதைவிட நல்ல மிட்டாய் வாங்கி தருகிறேன் என்று நம் அம்மா ஆறுதல் படுத்துவளே தவிற சனியனே காசு இல்லாத நேரத்தில் கழுத்தை ஏன் அருக்கிறாய் என்று ஆத்திரப்பட்டு இருப்பளா

     நாம் நமது குழந்தைகள் இடம் ஏராளமாக பொருள்களை கொடுக்கிறோம் பணத்தையும் கொடுக்கிறோம் முழுமையான பாசத்தை கொடுக்கிறமா .பற்று பாசத்தை படம் பிடித்து காட்டி வளர்க்கப்படும் எந்த குழந்தையும் கெட்டுப் போவதில்லை உறவுகளை விட்டுவிட்டு ஒடிப்போவதும் இல்லை ஆகவே இன்றைய தலைமுறை இயந்திரங்களாக மாறிபோனதற்கு நமது ஆசைகளும் முட்டாள்தனமுமே முதல் காரணமாகும் நமது குழந்தைகளுக்கு மனம் இறுகிப்போனது போல் நமது பேரப்பிள்ளைகளும் ஆகிவிடக்கூடாது அப்படியானல் பாதிப்பு அடைவது பரிதவித்துப்போய் நிற்பது நமது குழந்தைகளே ஆகும்.
 
 
 
 

Contact Form

Name

Email *

Message *