Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஜாதக நேரத்தை தீர்மானிக்கும் டாக்டர்கள் !


  சில நாட்களுக்கு முன்பு அவசரமாக என்னை காணவேண்டுமென்று ஒரு பெரியவர் வந்தார் என்னை சந்திப்பதற்கான முன் அனுமதி எதையும் அவர் வாங்கவில்லை என்பதனால் அலுவலகத்தில் இப்போது சந்திக்க முடியாது என்று தடுத்துவிட்டனர் இருந்தாலும் அவர் பிடிவாதம் செய்து சுவாமிஜியை பார்த்துவிட்டு தான் போவேன் என்று அடம்பிடித்திருக்கிறார் வேறு வழியே இல்லாமல் இப்படி ஒருவர் அடம்பிடிப்பதாக என்னிடம் சொன்னார்கள் நான் அந்த பெரியவரை வரச்சொன்னேன்

வந்தவர் மிகவும் சந்தோசப்பட்டார் வந்த இடத்தில் உங்களை பார்க்கமுடியாமல் போய்விடுமோ என்று வருத்தப்பட்டேன் நல்லவேளை கடவுள் கிருபையால் காணமுடிந்தது என்று சொன்னார் நானும் இவ்வளவு பிடிவாதமாக என்னை பார்த்தே தீருவது என்றிருந்த அவருக்கு நிச்சயம் எதாவது அவசரமான ஆபத்தான பிரச்சனை இருக்கும் என்று நினைத்து என்ன காரணத்திற்காக என்னை காண வந்திர்கள் என்று அவரிடம் கேட்டேன்

சுவாமி என் மருமகள் உண்டாகி இருக்கிறாள் இது தான் மாதம் நீங்கள் எல்லா யோகங்களும் பொருந்தி வரும் ஒரு நாளை குறித்து கொடுத்தால் அன்றைய தினத்தில் குழந்தை பிறக்கும் படி செய்துவிடலாம் அதனால் தான் பிடிவாதமாக காத்திருந்தேன் என்றார் அவர் சொல்லியது பாதி எனக்கு புரிந்தது மீதம் புரியவில்லை என்ன சொல்கிறீர்கள் முகூர்த்தத்திற்கு நாள் குறிக்கலாம் பிரசவத்திற்கு எப்படி நாள் குறிப்பது என்று அவரிடம் கேட்டேன் அவர் அதற்கு விரிவாக விஸ்தாரமாக எனக்கு பதில் சொன்னார் அந்த பதில் என்னை ஆச்சரியம் அடைய செய்தது என்றாலும் மக்களின் அறியாமையை நினைத்து வேதனையாக இருந்தது 


ஒன்பது கிரகங்களும் நன்றாக நல்ல இடத்தில் இருக்கும் நாளில் நல்ல பலனை தரக்கூடிய லக்கிணம் ராசி நடைமுறையில் இருக்கும் நேரத்தில் குழந்தை பிறப்புக்கான நேரம் குறித்து கொடுத்துவிடுவார்களாம் அன்றைய நேரத்தில் சாதாரன பிரசவம் நடை பெறவில்லை என்றாலும் அறுவை சிகிச்சை செய்தாவது குழந்தையை எடுத்து விடுவார்களாம் அப்படி நல்ல நேரத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்க்கை முழுவதுமே நல்லது மட்டும் தான் நடக்குமாம் இதற்கு மருத்துவ மனைகளும் பரிபூர்ண ஒத்துழைப்பு கொடுக்கிறதாம்

இது சம்பந்தமாக என் மருத்துவ நண்பர்கள் சிலரை கேட்டேன் அவர்களும் இதை ஒத்துக்கொண்டார்கள் என்ன செய்வது மனிதனை ஜோதிட பைத்தியம் இப்படியெல்லாம் செய்ய சொல்கிறது நாங்களும் வேறுவழி இல்லாமல் செய்கிறோம் என்றார்கள் இதில் சில டாக்டர்கள் உண்மையை மறைக்காமல் வேறொரு விஷயத்தையும் என் காதில் போட்டார்கள்

அறுவை சிகிச்சை செய்யக்கூடிய நிலையில் பத்து பதினைந்து பெண்கள் இருப்பார்கள் இதில் பல பேருக்கு ஒரே நேரம் குறித்து கொடுக்கபட்டிருக்கும் நாங்கள் டாக்டர்கள் என்றாலும் மனிதர்கள் தானே எந்திரமாக இருந்தால் ஒரே நேரத்தில் பத்து வேலையே செய்யலாம் நம்மால் ஆகுமா அதனால் அறுவைசிகிச்சை கூடாரத்திற்கு நோயாளியை காலையிலேயே கொண்டுவந்து படுக்கவைத்து விடுவோம் எல்லா வேலைகளும் துரிதமாக நடைபெறுவதாக காட்டிகொள்வோம்


நோயாளி அரைமயக்கத்தில் இருக்கும்படி பார்த்துகொள்வோம் நிதானமாக ஒவ்வொரு அறுவை சிகிச்சையாக செய்து முடிப்போம் குறித்து கொடுத்த நேரத்துக்கெல்லாம் எதுவும் நடக்காது ஆனால் அந்த நேரத்தில் தான் குழந்தை பிறந்ததாக குறித்து கொடுத்துவிடுவோம் என்றார்

மனித ஆசை தடமாறி போவதனால் எத்தகைய ஒழுங்கினங்கள் எல்லாம் சமூகத்தில் நடைபெறுகிறது பாருங்கள் பணத்திற்காக ஜோதிட சாஸ்திரம் விலை போகிறது அதே பணத்திற்க்காக மருத்துவ சேவை தலைகுனிகிறது இதற்கு மனிதர்களை தான் குற்றம் சொல்ல வேண்டுமே தவிர சம்பந்தப்பட்ட துறைகளை குறைசொல்லி எந்த பயனும் இல்லை

சாஸ்திரத்திற்கு விரோதமாக நேரம் குறிப்பது குறித்த நேரத்தில் நடந்ததாக மருத்துவர்கள் பொய் சொல்வது எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் அப்படி குறிக்கப்பட்ட நல்ல நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் நிச்சயமாக அப்படி தான் அதாவது நன்மையை மட்டுமே வாழ்நாளில் அனுபவிப்பதாக இருக்குமா என்று சிலர் கேட்கலாம் அவர்களுக்கு எனது பதில் இது தான் அத்தகைய குழந்தையின் ஜாதகத்தை எடுத்து கொண்டு ஒரு ஜோதிடரிடம் சென்றால் அவர் நல்ல பலனை சொல்வார் நாமும் காது குளிர கேட்கலாம் ஆனால் அது அந்த குழந்தையின் வாழ்வில் முழுமையாக நடைபெறும் என்று சொல்ல முடியாது அல்லது அப்படி எதுவும் நடக்காது


ஒரு மனிதன் பிறந்த நேரத்தை பொறுத்து தான் கிரகங்கள் பலன் தரும் என்கிறீர்கள் கிரகங்கள் நன்றாக இருக்கும் போது தானே அந்த குழந்தையின் பிறப்பு நடைபெறுகிறது அப்போது ஏன் நல்ல பலன் கிடைக்காது என்று சொல்கிறீர்கள் என்று உங்களில் சிலர் நினைக்கலாம் ஒரு மனிதனின் மரணம் என்பது எப்படி இறைவன் சித்தத்தால் நடை பெறுகிறதோ அதே போல தான் ஜனனம் என்பதும் நடக்கிறது

அதாவது ஒரு பெண்ணிற்கு இயற்கையான முறையில் பிரசவவலி ஏற்பட்டு குழந்தை பிறக்க வேண்டும் குழந்தையை சுகபிரசவமாக பெறுகிறோமா? அறுவை சிகிச்சையின் மூலம் பெறுகிறோமா? என்பது முக்கியமல்ல பிரசவவலி என்பது இயற்கையான முறையில் உருவானதாக இருக்க வேண்டும் செயற்கை முறையில் வரவழைக்கபட்டதாக இருக்க கூடாது இங்கு நாம் குறிப்பிடும் அறுவை சிகிச்சை முறை என்பது வலியே ஏற்படாமல் வலிய நம்மால் ஏற்படுத்தப்பட்டது ஆகும் இதனால் இறைவன் வகுத்த விதியை நாம் மீறுகிறோம் இது நடைமுறைக்கு உகந்தது அல்ல

இதே போலவே நேரம் குறித்து பெற்றெடுக்கபட்ட குழந்தைகளின் ஜாதகங்களையும் வாழ்க்கையையும் நான் ஒப்பிட்டு பார்த்திருக்கிறேன் குழந்தையின் அறிவு கூர்மையாக இருக்க வேண்டும் தெளிவாக பேசவேண்டும் என்று கணக்கு போட்டு நேரம் குறித்து பிறந்த குழந்தை மூளை வளர்ச்சி இல்லாமலும் தெளிவாக பேச முடியாமலும் இருப்பதை பார்க்கிறேன் பிறந்த நாள் முதல் தகப்பனுக்கு வளர்ச்சியை தவிர வேறு எதையுமே தரக்கூடாது என்று போட்ட கணக்கு திசை மாறி தகப்பன் இல்லாமலே வாழ வேண்டிய நிலைமை குழந்தைக்கு ஏற்பட்டு இருப்பதையும் பாக்கிறேன் தாயும் தகப்பனும் குழந்தையை பாராட்டி சீராட்டுவார்கள் என்று போட்ட கணக்கு தலைகீழாகி கணவனும் மனைவியும் விவாகரத்து வாங்கி பிரிந்து நிற்பதையும் பார்க்கிறேன் 


ஜாதகம் எழுதும் போது ஜனனே ஜென்ம செளக்கியானாம் வர்த்தனி குலசம்பதாம் பதவி பூர்வ புண்யானாம் என்று துவங்குவார்கள் அதாவது இந்த ஜாதகன் பிறந்திருக்கும் இடமும் இவன் உடலின் ஆரோக்கியமும் இவன் குடும்ப கெளரவமும் பட்டம் பதவிகளும் எல்லாமே இவனது சென்ற பிறப்பின் பாவ புண்ணிய செயலை பொறுத்தே அமைகிறது என்பது தான் இதன் பொருள் அதனால் நமது கர்மாவுக்கு ஏற்ற பிறப்பு நேரத்தை கடவுள் குறித்து வைத்துள்ளான் அந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் தான் முறையே தவிர நாமே ஒரு நேரத்தை குறித்து அதில் பிள்ளையை எடுப்பது எந்த வகையிலும் முறையாகாது

மேலும் இப்படி செய்ய நினைப்பவர்கள் ஒரு உண்மையை நன்றாக மனதில் வைக்க வேண்டும் நீங்கள் அரும்பாடு பட்டு நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்தாலும் கடவுள் தீர்மானித்த நேரத்தில் பிறந்தால் என்ன பலனை குழந்தை பெறுமோ அதே பலனை தான் இந்த நேரத்திலும் குழந்தை பெரும் வேண்டுமானால் நீங்கள் நல்ல பலனை ஜோதிடர் வாயிலும் புத்தக வரியிலும் காணலாமே தவிர நிஜ வாழ்க்கையில் காண முடியாது

இந்த உண்மைகளை எல்லாம் அந்த பெரியவரிடம் சொல்லி விளங்க வைக்க பார்த்தேன் எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருந்தது நேரம் குறிப்பதில் குறியாக இருந்தாரே தவிர நான் சொல்லியதை அவர் காதில் வாங்கி கொள்ளவே இல்லை அதனால் என்னால் முடியாது சென்று வாருங்கள் என்று அனுப்பி விட்டேன் நீங்களும் புதியதாக குழந்தைகள் பெற்று கொள்பவர்களாக இருந்தால் இந்த உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் உணராதவர்களுக்கு உணர்த்த பாருங்கள் கேட்க மறுத்தால் விதி விட்டவழி என்று விட்டு விடுங்கள்.


Contact Form

Name

Email *

Message *