பூரகம். ரேசகம் வழியாக கும்பகத்தில் பிராணனை முறைப்படி நிறுத்தும் பொழுது உள்ளுக்குள் நிலை கொண்டு இருக்கிற பிராணன் நமது மூளை நரம்புகளில் பலவற்றை விழிப்படையச் செய்து கட்டுக்கடங்காத குதிரை போல் நாலாதிசையும் ஓடி அலையும் மனதை பிடித்து இழுத்து ஒரு மையப்புள்ளியில் நிலை நிறுத்தி விடும்,
மனமானது சாதாரணமாக மையப்புள்ளியில் நிலை நிற்கும் போது குழப்பங்கள். சஞ்சலங்கள். படபடப்புகள் அனைத்தும் குறைந்து சாதாரண நிலையிலிருந்து அசாதாரணமான நிலைக்கு மனிதன் பயணப்படுகிறான், அதாவது மனதை ஒரு நிலைப்படுத்தக்கூடிய மனிதர்களுக்கு சாதாரண மனிதர்களுக்கு தோன்றுவதைப்போல் கனவுகளும் குழப்பங்களும் வருவதில்லை, அப்படியே அவர்களுக்கு கனவு வந்தாலும் அது இறைவன் (அல்லது) ஏதோ ஒரு அதீத சக்தியின் உணர்த்துலாக தான் இருக்குமேயன்றி சாதாரணமாக இராது
அப்படித்தான் எட்டு மாதங்களுக்கு முன்பு நான் ஒரு உணர்த்துதலை உணர்ந்தேன், அது காட்சியாக இல்லாமல் குரலாக இருந்தது, எனக்கு திரை போடுகிறார்கள் என்ற ஒரு அசரீரி போன்ற வாக்கு எமக்கு திடீரென்று ஏற்பட்டது, நான் அதை அந்த குரலை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எனது வழக்கமான அலுவல்களில் மூழ்கி விட்டேன், அதன்பின் அந்த குரல் என் மனதிலிருந்து மறந்தே போய்விட்டது,
பொதுவாக எனக்கு வருகின்ற எல்லா கடிதங்களையும் எந்த வேலை எப்படி இருந்தாலும் அனைத்தையும் ஒதுக்கி விட்டு எவ்வளவு பெரிய கடிதமானாலும் முழுவதும் படித்து விடுவது எனது இயல்பு, பெருவாரியான கடிதங்கள் அவரவர்களின் சொந்தப் பிரச்சினையின் வெளிப்பாடாகவே இருக்கும், இத்தகைய கடிதங்களில் விசித்திரமாகவும். விநோதமாகவும் ஒரு கடிதம் என் கண்ணில் பட்டது, திண்டுக்கல்லில் இருந்து இல,நாகராஜன் எழுதியிருக்கிறார்,
தானும் தனக்கு நெருங்கியவர்களும் சேர்ந்து ஸ்ரீ ராமபிரானுக்கு ஆலயம் ஒன்றை எழுப்பியதாகவும் அதை பல பகவத் பாகவதர்கள் முன்னிலையில் குடமுழுக்கு செய்து வைத்ததாகவும் ஆனால் கும்பாபிஷேகத்திற்கு பின் கிராம மக்கள் யாருமே ஆலுயத்திற்கு வந்து இறைவனை தரிசிப்பது இல்லை என்றும் திருவமுதை வாங்குவதற்கு குழந்தைகள் கூட வருவதில்லை என்று மிக உருக்கமாக நெஞ்சை நெகிழ வைக்கம் வண்ணம் எனக்கு எழுதி இருந்தார்
தன்னைப் பற்றியும் தன் உயர்வை பற்றியும் மட்டுமே நினைத்து செயல்படும் இன்யை சூழலில் தன்னைப்பற்றி ஒரு வரிகூட எழுதாமல் பகவத் கைங்கரியம் தடைப்பட்டு நிற்பதை மட்டுமே கருத்தில் கொண்டு மனமுருகி எழுதியிருந்த அக்கடிதம் என்னை ஒருமுறை அசைத்துவிட்டது அந்த அசைவில் எனக்கு “திரை போடுகிறார்கள்” என்ற அசரீரி வார்த்தை உண்மை பளிச்சென கண்ணை பறித்தது,
உடனே சென்று அந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் திருமேனியை கண்குளிர கண்டு அவன் பாதார விந்தங்களை தரிசிக்க வேண்டும் என்ற அவா எனக்குள் பீறிட்டு எழுந்தது, ஆசையானது சூழ்நிலையை மறக்கச் செய்யும் என்பதற்கு இணங்க என் உடல்நிலையையும் பொருட்படுத்தாது எம்பெருமான் குடிகொண்டுள்ள முத்தலாபுரம் என்ற கிராமத்திற்கு நேரடியாக சென்றேன், திண்டுக்கல் - வத்தலக்குண்டு சாலையில் வத்தலக்குண்டுக்கு 6 கி,மீ, முன்பாகவே முத்தலாபுரம் கிராமம் அமைந்துள்ளது,
சீதாபிராட்டி இளையபெருமாள் சமேதராய் ஆஞ்சநேய சேவையை ஏற்றுக்கொள்ளும் சக்கரவர்த்தி திருமகனாய் ராமசந்திரமூர்த்தி எழுந்தருளியிருக்கிறான், அங்கே இருக்கும் அவரின் கோலம் தாய் பசுவை கண்ட சேய்போல் நம்மை ஆக்கிவிடுகிறது, அங்கே ஸ்தாபிதம் செய்து இருக்கும் மூலச்சக்கரத்தின் அருள்ஒளி கசிந்துருகச் செய்கிறது, சிறிய அளவில் எளிமையாக ஆலயம் அமைந்து இருந்தாலும் பல சித்தர்களும் பாகவத பெருமக்களும் அவ்விடத்தில் தவமியற்றிய அருட்கடாட்சத்தை உணர முடிகிறது
வேண்டுதலை நிறைவேற்றும் வேந்தனாக நிற்கும் இறைவன் பல பேருடைய குறைகளை நீக்க தயாராக இருப்பதை நான் உணர்ந்து கொண்டேன். ஆனால் கார்மேக வண்ணனாகிய ஸ்ரீராமன் ஆலயம் அமைந்ததனால் தான் இந்த ஊரில் மழை தண்ணீர் இல்லை, வறுமை தாண்டவமாடுகிறது என்று யாரோ கிளப்பிவிட்ட பொய்யான வதந்தியை நம்பி அப்பாவி மக்கள் அருளை பார்த்து இருள் என மிரண்டு நின்றிருந்தனர், அவர்களிடம் அந்த ஆலயத்தின் பெருமையையும் தீனதயாளனான சீதா ராமனின் அருள் சக்தியையும் எடுத்து சொல்லி திரும்பினேன்,
அதன்பின் எனக்கு ஒரு கருத்து தோன்றியது, ஏறக்குறைய உலகம் முழுவதும் தெரிந்த ஸ்ரீ ராமனுக்கே இத்தகைய வதந்தி திரை போடுகிறார்கள் என்றால் பேரும் ஊரும் பிரபலம் இல்லாமல் குக்கிராமங்களில் இருக்கும் கிராம தேவதைகளின் நிலை எப்படியிருக்கும், அறியாமையால் மக்கள் அக்கிராம தேவதைகளிடம் எத்தகைய தவறுகளை செய்துகொண்டு இருப்பார்கள் என்று எண்ணி வேதனைப்பட்டேன்,
அந்த வேதனையின் வெளிப்பாடாகவோ என்னவோ திருநெல்வேலி மாவட்டம் இராதபுரம் பகுதியிலிருந்து ஒரு அன்பர் என்னிடம் வந்தார், தனக்கு திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் திருமணம் ஆன ஒரு மாதத்திலிருந்தே தனது மனைவிக்கு திடீர்திடீர் என புத்தி மாறாட்டம் ஏற்பட்டு விடுவதாகவும் அதற்கு எத்தனையோ வைத்தியர்களையும் மலையாளம் மாந்திரீகர்களை அணுகியும் இன்றுவரை சுகம் எதுவும் ஏற்படவில்லை என்றும் இசக்கியை ஏவிவிட்டு தனது வாழ்க்கையை இப்படி சீரழிக்கிறார்கள் என்று கண்ணீர் மல்க கூறினார்
நான் இசக்கியை பற்றி காவல்தெய்வம் என்று தான் இதுவரை நம்பி வந்தேன், அது எப்படி ஏவல் தெய்வமாக மாறியது? என்று குழம்பினேன், அவர் விஷயமாக நான் பூஜையில் அமர்ந்து பார்த்தபோது ஒரு பிரம்ம ராட்சச நிலையிலிருக்கும் தீய ஆவி ஒன்றே அவர் மனைவியை பிடித்து ஆட்டிக்கொண்டு இருக்கிறது என்பதை உணர்ந்தேன்,
இந்த இடத்தில் பிரம்மராட்சசி என்றால் என்ன? என்ற ஓர் வினா உங்களுக்குள் எழும் அதைப்பற்றி சிறிது விளக்கி விடுகிறேன், வேதம் கற்ற குடும்பத்தில் பிறந்து நியமப்படி பூஜை புனஸ்காரங்களை செய்துகொண்டு இருக்கும் பெண் கொலை செய்யப்பட்டாலோ அல்லது வேறு எந்த வகையில் நயவஞ்சகமாக சாகடிக்கப்பட்டாலோ அந்தஆவி ஆக்ரோஷம் அடைந்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஆவி உலகிற்கு செல்லாமல்தான் வாழ்ந்த. பழகிய இடங்களில் சஞ்சரிக்கும் அதன் வாசஸ்தலம் வயது முதிர்ந்து வாகை மரமாகவும் இருக்கும், இதையே பிரம்ம ராட்சசி என கூறுவார்கள், தான் குடிகொள்ளும் மனித சரீரத்தை ஈவு இரக்கமின்றி வதைப்பதில் இந்த பிரம்ம ராட்சசிக்கு நிகர் வேறு எந்த ஆவியும இல்லை என்றே சொல்லலாம்
இந்த விளக்கத்தை அன்றைய சூழலில் அந்த அன்பரிடம் கூறினால் அவரால் அதை ஜீரணிக்க முடியாது, எனவே அதைப்பற்றி எதுவும் அவரிடம் தெரிவிக்காமல் பிரம்ம சாட்சியை சாந்தப்படுத்தும் தாந்ரீக வழியிலான பூஜைகளையும் ஹோமங்களையும் செய்து அந்த ஆவியை பெண்ணிடமிருந்து விலக்கி அவரை அனுப்பி வைத்தேன், இன்று அவர் மனைவி பரிபூரண சௌக்கியமாக இருக்கிறார்,
அவர் சென்ற பின்பும் இசக்கியை என் மனைவிக்கு ஏவிவிட்டார்கள் எள்ற வார்த்தை எனக்குள் திரும்ப திரும்ப ஒலித்தது, அதன் விளைவாக கிராம தேவதைகள் பற்றியும் அவர்களின் இயல்பு பற்றியும் அறிந்துகொள்ளும் ஆவல் எனக்குள் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது, அந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள கிராம தேவதைகளின் வழிபாடு ஆவிகளின் வழிபாடே என்று “லெவி- பிரெல்லின்” என்ற அறிஞர் எழுதிய கருத்தை படிக்க நேரிட்டது,
இந்த கருத்து எனக்குள் இருந்து கொண்டிருந்த ஆர்வ நெருப்பை சூறாவளிபோல் தாக்கியது, கிராம தேவதை வழிபாடு அனைத்துமே ஆவிகளின் வழிபாடு தானா? அப்படியென்றால் அத்தேவதைகளைப்பற்றி புராணங்களோடு சம்பந்தப்படுத்தி சொல்லும் கதைகள் வெறும் கற்பனையா? என்று இப்படி எத்தனையோ வினா அலைகளை அச்சூறாவளி எழுப்பியது,
ஆவி உலக வழிபாடு என்பது தமிழர்களின் பண்பாட்டிற்கு புதுமையான ஒரு விஷயம் இல்லை, வரலாற்றுக் காலத்திற்கு முன்பே ஆவி உலக வழிபாடு தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறது, தென்புலத்தார் பெருமை அவர்கள் தம் பூஜை முறைகள் பற்றி மிக விரிவாக தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது, தொல்காப்பியத்தை அடிப்படையாக வைத்து தமிழர் தம் ஆவி வழிபாட்டை ஆராய்ந்தோமானால் பல சுவையான விஷயங்கள் நமக்கு கிடைக்கும்
நாட்டின் எல்லைப்பகுதியை விரிவாக்கம் செய்வதற்காகவும் அல்லது வேறு சில மானப்பிரச்சினைகளுக்காகவும் அக்கால அரசர்கள் பெரும்படையெடுப்பை நடத்தியபோது சமர்க்களத்தில் வீர சொர்க்கம் எய்திய மாபெரும் வீரர்களுக்கு படைப்பள்ளியும். நடுகற்களும் வெற்றியடைந்த மன்னர்களால் ஏற்படுத்தப்பட்டது,
மரணமெய்திய வீர மறவர்களின் உறவினர்களும் அவனால் காப்பாற்றப்பட்ட அல்லது அவன் வீரத்தின் பால் ஈர்க்கப்பட்ட மக்களும் படைப்பள்ளிகளிலும் நடுகற்களிலும் பலவிதமான மங்கலப் பொருட்களையும் பலியிடுதலையும் நடத்தி மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டனர்,
அக்கற்களில் வீர மறவர்களின் செயலுக்கு ஏற்றவாறு புகழ்ச்சி வார்த்தைகள் பொறிக்கப்பட்டன,
“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பில் பெரும்படை
வாழ்த்தல்”
“கற்கோள் நிலையே கல்நீர்ப் படுத்தல்
கல்நடு தல்லே கல்முறைப் பழிச்சல்”
“அவர் பெயர்க் கல்மிசைப் பொறித்துக்
கவின்பெறக் கல்நாட் டின்று”
என்ற தொல்காப்பிய வரிகளால் நாம் நன்கு அறிகிறோம், மேலும் தனது பெயர் நடுகல்லில் பொறிக்கப்படவேண்டும் என்பதற்காகவே பல சாகச செயல்களை அக்கால வீரமறவர்கள் புரிந்திருக்கின்றனர்
இத்தகைய நடுகற்களில் வீரர்களின் புகழ் உள்ளதை உள்ளவாறு உணர்த்தியிருப்பது பாராட்டத்தக்கது, ஒரே கல்லில் வடிக்கப்பட்டு இருக்கின்ற வீரச்செயல்கள் பற்றிய குறிப்புகள் உண்மையாகவும் செறிவான தன்மை அடங்கியதாகவும் இருக்கிறது என்பதில் ஐயமில்லை,
அதாவது கல்வெட்டுகள். செப்பேடுகள் ஆகிய இவைகள் ஸ்தாபிதம் செய்வதற்கு நடுகற்களே முன்ளோடிகளாக இருந்திருக்கிறது, சில நடுகற்களில் வீரர்களின் உருவங்களும் அவர்கள் தம் செயல்பாடுகளும் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டிருப்பதால் ஆவி வழிபாட்டிற்கு மிக வசதியாகவும் இறந்த ஆத்மாவோடு மனதை இரண்டற கலப்பதற்கு கிரியா ஊக்கியாகவும் அமைந்துள்ளது,
மேலும் பதிற்றுப்பத்து 13 மற்றும் 15வது செய்யுள்கள் பழங்கால தமிழர்கள் அதவாது ஆரிய திராவிட கலப்பு ஏற்படுவதற்கு முன்பே ஆவி வழிபாட்டை மேற்கொண்டிருந்தனர் என்பதை தெளிவாக காட்டுகிறது, சேயோன். மாயோன். வேந்தன். வருணன். கொற்றவை ஆகிய ஐம்பெரும் கடவுள்களை குறிஞ்சி. முல்லை. மருதம். நெய்தல் . பாலை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் வழிபாடு செய்தனர்,
என்றாலும் முன்னோர் வழிபாட்டை அதாவது தென்புலத்தார் வழிபாட்டையே பெருவரியான மக்கள் கொண்டிருந்தனர் என்று புறநானூறு. சிலப்பதிகாரம் மற்றும் பழந்தமிழர் இலக்கியங்கள் பல உள்ளங்கை நெல்லிக்கனிபோல் நமக்கு காட்டுகிறது,
எல்லாம் சரி- இதுவரை நம்மில் பெரும்பாலோர் கிராம தேவதைகள் என்பவை சிவன். விஷ்ணு. துர்க்கை முதலிய பெரும்கடவுகள்களின் பரிவாரங்கள் என்றோ. ஏவலர்கள் என்றோ கருதி வந்திருக்கிறோம், மேலும் பெருந்தெய்வங்களான சக்தி. சிவன். ஐயப்பன் ஆகியோரின் அவதாரங்கள் தான் அங்காளபரமேஸ்வரி. முத்தாரம்மன். பத்திரகாளி. அய்யனார். சுடலைமாடன். சாஸ்தா. என்ற நம்பி வந்தது தவறோ என்ற எண்ணவைக்கிறது அல்லவா?
நிச்சயமாக அது தவறு இல்லை என்றே நான் உறுதியாக கருகிறேன், மஞ்சளும். சந்தனமும் ஒன்றாக கலந்திருந்தாலும் இரண்டும் வேறு வேறு என்று நுகழ்ச்சியில் நிவுணத்துவம் வாய்ந்தவர்கள் பிரித்து காட்டி விடுவார்கள், அதைப்போன்றுதான் சிறு தெய்வ வழிபாடும் ஆவியுலக வழிபாடும் ஒன்றோடு ஒன்று பிண்ணி பிணைந்திருந்தாலும் அத்தேவதைகளின் வழிபாட்டு முறைகளின் பின்புலத்தை நுணுக்கி ஆராய்ந்தோமானால் நம்மால் துல்லியமாக பிரித்தறிய இயலும்
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தோனேஷியா. கரீபியன் தீவுகள். தென் மற்றும் வடகொரியாக்கள். சீனா போன்ற நாடுகளிலும் சிறு தெய்வ வழிபாடுகளும். பித்ருக்கள் வழிபாடும் இணைந்தே காணப்படுகிறது, இதில் சிறிய வேறுபாடு என்னவென்றால் அவர்களின் ஆவியுலக மந்திரபிரயோகமும். தெய்வங்களுக்கு மந்திரப்பிரயோகமும் ஏறக்குறைய ஒன்றாக இருக்கிறது, நம் பகுதியில் இலக்கியங்களில் சற்று ஆழமாக நுழைந்தோம் என்றாலே தெய்வ பித்ரு வேறுபாட்டை உணர்ந்து கொள்ளலாம்,
புறநானூறு 260. 23. 238 ஆகிய பாடல்களில் சங்ககால மக்கள் “கன்னி நிழற்கடவுள்” கூளி பேய் ஆகிய சிறு தெய்வங்களுக்கு விழா எடுத்தும். பலியிட்டும் வழிபாடு நடத்தினார்கள் என்ற விளக்கம் நமக்கு கிடைக்கிறது, ஆகவே சிறு தெய்வ வழிபாடுவேறு. ஆவியுலக வழிபாடு வேறு என்பதை நாம் நன்றாக உணர்ந்து கொண்டோம்,