Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஒரு ஈழத்தமிழரின் பண்பாட்டுக் காதல் !


    லங்கை தமிழர் ஒருவர் நார்வே நாட்டில் இருந்து மின்னஞ்சல் ஒன்று அனுப்பி இருந்தார் அதில் நான் தமிழ் பண்பாட்டையும் அதன் முழு அர்த்தத்தையும் புரிந்து கொண்டவன் நமது முன்னோர்கள் வகுத்த வழி நடந்த பாதை அனைத்துமே புனிதமானவைகள் என நம்புபவன் நம்மால் புதிய நல்ல விஷயங்களை உருவாக்க முடியவில்லை என்றாலும் நமது முன்னோர்கள் உருவாக்கியதை சிதைக்க கூடாது என்ற ஆசையும் கொண்டவன் சொந்த நாட்டில் சுதந்திரமாக வாழமுடிய வில்லை என்றாலும் வாழும் நாட்டில் அது அந்நியமானதாக நமது பண்பாட்டிற்கு மாறுபட்டதாக இருந்தாலும் அங்கே கூட நமது நிஜமான முகத்தை மறைக்காமல் அந்நிய சாயம் பூசாமல் வாழ வேண்டும்மென நினைப்பவன்

இதனால் நம் மதத்தை என்னால் முடிந்த வரை கடைபிடிக்கிறேன் மற்றவர்களையும் கடைபிடிக்கும் படி வேண்டுகிறேன் நான் சொந்த நாட்டில் தொழில் முறை ஓவியன் என்பதனால் நமது தெய்வங்களின் திருவுருவ படங்களை வரைந்து நம்மக்களின் பூஜையறையில் வைத்துக் கொள்ள கொடுக்கிறேன் இதை தொழிலாக அல்ல என மதத்திற்கு செய்யும் தொண்டாகவே கருதுகிறேன் இதனால் நமது தெய்வ உருவங்களை வரையும் போது மரபுகள் சிறிது கூட வழுவாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் இதில் எனக்கு தற்போது ஒரு சிறிய சந்தேகம் வந்துள்ளது அதை உங்களால் தீர்க்க முடியும் என்று நினைத்து இந்த மடலை எழுதுகிறேன்


தமிழ் கடவுள் முருகன் என்பது நமக்கு நன்றாக தெரியும் முருகனின் பவித்திரமான தோற்றத்தை பல கோணங்களில் பல ஓவியர்கள் வரைந்துள்ளார்கள் அதில் மிகவும் முக்கியமானது வள்ளி தேவயானையுடன் கூடிய சுப்பிரமணியர் ஓவியத்தை சொல்லலாம் அந்த ஓவியம்  வரையும் போது அன்னையர் இருவர் கரங்களிலும் தாமரை பூ இருப்பதாக வரையப்படுகிறது இது தவறு இப்படி வரைவது பழைய மரபுக்கு விரோதமானது என்று ஓரளவு விஷயம் தெரிந்த வயதான பெரியவர் ஒருவர் சொல்கிறார் அவர் கூறுவது நிஜமா நிஜம் என்றால் சரியான முறையில் வரைவது எப்படி? என்று அவர் கடிதம் விரிந்து இருந்தது

முருக கடவுளின் தோற்றமே பல தத்துவங்களை நமக்கு விளக்கும் அவரது கையில் உள்ள வேல் ஞானத்தையும் வாகனமான மயில் பிரணவ மந்திரத்தையும் பாதத்தில் நெளிந்து கிடக்கும் பாம்பு குண்டலினி சக்தியையும் காட்டுவதாகும் தேவிமார் இருவரோடு அவர் காட்சி தருவதிலும் ஆழ்ந்த கருத்துண்டு தேவயானை சரியை தத்துவத்தையும் வள்ளி பிராட்டியார் கிரியை தத்துவத்தையும் உணர்த்துபவர்கள் இப்படி சரியை கிரியை என்ற இருவேறு கருத்துக்களை சொல்லும் தேவியரின் திருவுருவத்தில் ஒரே மலர்கள் இருப்பது கருத்து முரணாகும் இதில் உங்களுக்கு சொல்லிய பெரியவரின் அபிப்பிராயம் நிச்சயம் சரியென்றே எனக்கு தோன்றுகிறது


சித்திர சாஸ்திரத்தை விளக்கும் பல நூல்களில் இதற்கான பதில் இருக்கிறதா என்று தேடிபார்த்தேன் சித்திரை தீபிகை என்ற மிக பழமையான வடமொழி நூல் ஒன்றில் இதற்கான விளக்கம் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது அதில் சிவகுமாரனான கார்த்திகேயனின் திருவுருவம் சிவந்த மேனியும் அபய வரதத்துடன் கூடிய கரங்களும் மார்பில் சாய்ந்த வேலும் திருவடியில் மயிலும் தாமரை ஏந்திய கரத்துடன் வள்ளி தேவி வலப்புறத்திலும் நீலோத்பலம் மலர் ஏந்திய கரத்துடன் தேவயானை இடப்புறத்திலும் இருப்பதே சரியான தோற்றம் என்று சொல்லப்பட்டிருக்கிறது

தற்போது நடைமுறையில் உள்ள எளிதாக கிடைக்க கூடிய பல முருககடவுளின் படங்களையும் பார்த்தேன் அவற்றில் நீங்கள் குறிப்பிட்டது போலவே தாமரை ஏந்திய கரங்களுடன் தேவியர்கள் காட்சி தருகிறார்கள் இது தத்துவப்படி மிகவும் தவறு திருமுருகனின் திருவிழிகள் இரண்டும் சூரிய சந்திரனை குறிப்பதாகும் வலப்புற கண்ணாகிய சூரியன் தாமரை ஏந்திய வள்ளியை நோக்கிய வண்ணம் உள்ளது சூரியனை தரிசனம் செய்து கொண்டிருக்கும் காலம் வரை தாமரை பூ வாடாது சுருங்காது அதை போலவே சந்திரன் என்ற இடது கண்ணால் நோக்கப்படும் நீலோத்பலம் என்ற குமுத மலர் அதாவது அல்லி சந்திரன் இருக்கும் வரை இதழ்களை சுருக்காது எப்படி பிராட்டியார் இருவர் கையிலும் உள்ள மலர்கள் முருகனின் திருபார்வையால் வாடாமல் இருக்கிறதோ அதை போல உள்ளன்போடு முருகப்பெருமானை உபாசிக்கும் பக்தர்களின் இதயமும் சந்தோசத்தால் மலர்ந்திருக்கும் என்பதே தத்துவ விளக்கம்


நமது முன்னோர்களின் அறிவும் தெளிவும் எவ்வளவு நுணுக்கமானது பாராட்டுதலுக்குரியது என்பதை இரண்டு சிறிய மலர்களின் விஷயத்திலேயே தெரிந்து கொள்ளலாம் இவ்வளவு அறிவார்த்தமான முன்னோர்களை பெற்ற நமது தமிழ்மக்கள் இன்று ஐரோப்பிய கலாச்சாரம் என்ற அந்நிய முகமுடியை அணிந்து கொண்டு பெருமைப்படும் போது சொந்த நாட்டிலேயே வாழ முடியாமல் அகதிகளாக அல்லல்படும் நமது ஈழத்தமிழர்கள் நம் மதத்தின் மீதும் பண்பாட்டின் மீதும் கொண்டிருக்கும் அளவிட முடியாத அபிமானத்தை நினைக்கும் போது மெய்சிலிக்கிறது

இந்த ஈடுபாடு ஈழமக்கள் மத்தியில் இருக்கும் வரை அவர்கள் நாடற்ற அனாதைகளாக இன்று துரத்தப்பட்டு வனவாசத்தை மேற்கொண்டு இருந்தாலும் நிச்சயம் ஒருநாள் தங்களது தாய் பூமியை மீட்டேடுத்தே ஆவார்கள் என்ற நம்பிக்கை பிரகாசமாக ஒளிர் விடுகிறது ஆனால் சொந்த நாட்டில் வாழ்ந்தாலும் பண்பாட்டை குழிதோண்டி புதைத்து விட்டு ஐரோப்பிய வேசதாரிகளாக மாறிவிட்ட தமிழக தமிழர்களை நினைக்கும் போது இவர்களும் ஒருநாள் சொந்த மண்ணை இழந்து விட்டு நாடோடிகளாக மாரி விடுவார்களோ என்ற பயம் ஏற்படுகிறது.



Contact Form

Name

Email *

Message *