- மனைவி பேச்சைக் கேட்டு குடும்பம் நடத்துவது சிறந்ததா? நமது சொந்த விருப்பப்படி குடும்பம் நடத்துவது சிறந்ததா?
ராசப்பக்கவுண்டர், கோபிசெட்டிபாளையம்
குடும்பம் நடத்துவதில் எனக்கு அனுபவம் கிடையாது காரணம் நான் சந்நியாசி அதே நேரம் ஒரு சந்நியாசியாக இருப்பவன் சமூக பழக்க வழக்கங்கள் அனைத்தையும் பற்றிய அறிவுடையவனாக இருக்க வேண்டும் என்பது எனது குருநாதரின் விருப்பம் அதன் காரணமாகவே பல குடும்பங்களை அவைகள் நடைபெறும் விதத்தை கூர்ந்து ஆறாய்ந்திருக்கிறேன் சில பேர் சொல்கிறார்கள் பெண்புத்தி பின்புத்தி எதையும் செய்வதற்கு முன்பு யோசிக்க மாட்டார்கள் செய்து முடித்த பிறகு சிந்தித்து குழம்பி கொண்டிருப்பார்கள் பெண்களால் பிரச்சனைகளை உருவாக்கத்தான் முடியுமே தவிர தீர்க்க இயலாது எனவே மனைவியின் சொற்படி குடும்பம் நடத்தினால் பல சிக்கல்களை சந்திக்க வேண்டும் அதனால் கணவன் விரும்பியப்படியே குடும்பம் நடத்துவது சிறந்தது என்கிறார்கள்
இன்னும் சிலர் ஒரு குழந்தையை எப்படி வளர்ப்பது வீட்டு செலவினங்களை ஒழுங்குமுறைப்படி எப்படி நடத்துவது என்பதெல்லாம் பெண்களுக்கு தான் தெரியும் அதில் ஆண் தலையிடுவது எந்த காலத்திலும் நல்லதல்ல ஆண்களால் வழிநடத்தப்படும் குடும்பங்களை விட பெண்களால் நடத்தப்படும் குடும்பமே பல துறைகளில் வென்றிருக்கிறது என்கிறார்கள்
இதில் இது சரி இது தவறு என்பதை தீர்க்கமாக சொல்லுவதில் பல சிக்கல் இருக்கிறது நான் பெண்புத்தி பின்புத்தி என்பதை நம்புபவன் இல்லை இருந்தாலும் நமது சமூக அமைப்பில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு முடிப்பதில் ஆண்மக்களே முன்நிற்கிறார்கள் இதானால் பெண்களை விட ஆண்களுக்கு சற்று அனுபவம் கூடுதலாக இருக்கிறது இது சமூக அமைப்பால் உருவான ஏற்ற தாழ்வே தவிர கடவுள் படைப்பால் உருவானது அல்ல கடவுள் ஆண் பெண் இருவரையுமே சமமாக படைத்துள்ளான் நமது அனுபவத்தில் ஒன்றுக்கு பல முறை யோசித்து செயல்படும் பெண்களையும் பார்க்கிறோம் யோசிக்கவே துப்பில்லாத ஆண்களையும் பார்க்கிறோம்
நான் கண்டவரையில் ஒரு குடும்பத்தை நல்ல முறையில் நடத்துவதற்கு கணவன் மனைவி இருவரில் ஒருவர் சம்பாதிக்க வேண்டும் மற்றவர் குடும்பத்தை நடத்த வேண்டும் இருவருமே சம்பாதிக்க வேண்டும் என்று கிளம்பி விட்டால் குழந்தைகள் நிலை பரிதாபமாகி விடும் ஓடி ஓடி சம்பாதிப்பது காசு பணத்தை சேமித்து வைப்பது பிள்ளைகளுக்காகதான் அந்த பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்க முடியாமல் அவைகள் தான்தோன்றி தனமாக வளர்ந்தால் என்ன பிரயோஜனம் இருக்கிறது. ஆனால் நம்மில் பலர் விற்கும் விலை வாசியில் இரண்டு பேர் சம்பாதித்தால் தான் குடும்பத்தை நடத்த முடிகிறது என்று வேலைக்கு கிளம்பி விடுகிறார்கள் பொருளாதார நோக்கில் பார்க்கும் போது இது சரி என்றாலும் சமூக நோக்கில் பல இடைஞ்சல்கள் இருப்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்
பணம் மட்டும் தான் வாழ்க்கை பண பலம் இருந்தால் அனைத்தையும் சாதித்து விடலாம் என்று நினைப்பது சரியாகாது வாழ்வதற்கு பணம் தேவை என்பதை நான் மறுக்க வில்லை ஆனால் பணம் மட்டும் தான் தேவை என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது வருவாய் குறைவாக இருந்தாலும் கூட இருப்பதை வைத்து நிறைவாக குடும்பம் நடத்துபவரே புத்திசாலி எனவே குடும்ப பொறுப்பை மனைவி ஏற்றிருந்தால் அவள் விருப்பத்திற்கு கணவன் இணங்கி நடப்பதில் கெளரவ குறைச்சல் எதுவும் இல்லை அதே வேலையை புருஷன் செய்தால் மனைவி ஒத்துழைப்பதால் எந்த குற்றமும் நடந்து விடாது
ஆனால் பொதுவாக குடும்பம் நடத்தும் ஆணோ பெண்ணோ நான் நினைப்பது மட்டும் சரி மற்றவர்கள் எதையும் சொல்ல கூடாது என்ற சர்வதிகார மனப்பான்மையில் நடந்து கொண்டால் அது பெரிய தவறு எல்லா விஷயங்களுக்கு மட்டும் இல்லை என்றாலும் முக்கியமான விஷயங்களுக்கு வாழ்க்கை துணையை கலந்தாலோசனை செய்வதில் பல நன்மைகள் உண்டு அது குடும்ப வளர்ச்சிக்கு நல்ல உரமாக அமையும்