Store
  Store
  Store
  Store
  Store
  Store

சினிமா ஆபாச வியாபாரமா...?

   மீபத்தில் பிரபல திரைப்பட இயக்குனரான எனது நண்பர் ஒருவர் என்னை சந்திக்க வந்திருந்தார் அவருடன் நெடுநேரம் பல விஷயங்களை பற்றி பேசி விட்டு கடேசியில் இப்போது வெளிவருகின்ற திரைப்படங்கள் எவற்றிலும் கதைகளே இருப்பது இல்லையே கதைகள் இல்லாமல் எப்படி உங்களால் படம் எடுக்க முடிகிறது என்று கேட்டேன் இப்படி நான் கேட்டதும் சிரித்து பிரகாசமாக இருந்த அவர் முகம் கருத்து விட்டது ஐயோ பாவம் நாம் கேட்க கூடாத கேள்வியை கேட்டு அவர் மனதை புண்படுத்தி விட்டோமோ என்ற வருத்தம் எனக்கு ஏற்ப்பட்டது 

ஆனால் அவர் சில வினாடிகளில் சகஜ நிலைக்கு வந்து விட்டார் மிட்டாய் கடையில் உட்கார்ந்து கொண்டு ஈ மொய்கிறதே என்று வருத்தப்படுபவனை போல இன்றைய இயக்குனர்களின் நிலை இருக்கிறது நாங்கள் பணத்திற்க்காகதான் படம் எடுக்கிறோம் என்றாலும் அந்த தொழிலில் முன்பெல்லாம் எங்களது திறமையை அறிவை அனுபவத்தை காட்ட முடிந்தது அதனால் மனதிருப்தியும் சந்தோசமும் நிறையவே எங்களிடம் இருந்தது ஆனால் இப்போது இயக்குனர்களின் திறமைக்கோ அனுபவத்திற்கோ மதிப்பு கிடையாது 


தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற படியும் நடிகர்களின் இமேஜிக்கு தக்கப்படியும் தான் படம் எடுக்க வேண்டிய சூழல் உள்ளது இதில் கதை லாஜிக் அது இதுவென பேசிக்கொண்டிருந்தால் ஓரம் கட்டிவிடுவார்கள் பிறகு பிழைப்பை நடத்துவது பெரும்பாடாகிவிடும் என்று வருத்தத்தோடு சொன்னார் அதன் பிறகு தான் அவர் முகம் கருத்தது என் கேள்வியை கேட்டு அல்ல தன் நிலையை உணர்ந்து என்பது புரிந்தது

திரைப்படம் என்பது எவ்வளவு சக்திவாய்ந்த மக்கள் ஊடகம் என்பது நமக்கு தெரியும் பக்க பக்கமாக எழுதி குவித்தாலும் எதோ ஒரு சிலர்தான் படிப்பார்கள் சினிமாவில் ஒரு காட்சியில் அல்லது ஒரு சிறிய வசனத்தில் சொல்ல வேண்டிய கருத்தை சொல்லி விட்டால் அது ஒட்டு மொத்த மக்கள் மத்தியில் மிக சுலபமாக சென்று விடும் அப்படி பட்ட ஊடகத்தை கையில் எடுத்துக் கொண்டால் ஒரு நாட்டின் அரசியல் தலை எழுத்தையே மாற்றி அமைத்து விடலாம் என்பதற்கு தமிழ் நாடு நல்ல உதாரணம் அண்ணாதுரை துவங்கி இன்றைய விஜயகாந்த் வரையிலும் திரைப்பட ஊடகத்தால் உருவான அரசியல் பார்மூலாக்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது 


அன்றைய திரைப்படங்கள் அரசியலை பற்றி மட்டுமே பேசியிருந்தால் முழு வெற்றியை அடைந்திருக்காது காரணம் நாட்டில் உள்ள சிலர் தவிர பலர் அரசியலை விரும்புவது இல்லை அவரவரும் அவரவர்க்கு தக்கப்படி விஷயங்களை தேடும் மனப்பாங்கும் ரசனையும்  உண்டு அதற்கு ஏற்ற வாறே திரைப்பட பிரம்மாக்கள் பல்வேறுப்பட்ட கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு வந்தார்கள் அதனால் தான் அக்கால திரைப்படங்கள் எழுதப்படாத இதிகாசங்களாக இன்றும் பலர் கருத்துகிறார்கள்

ஆனால் தற்போதைய திரைப்படங்களில் நல்ல விஷயங்களை பூதக்கண்ணாடிக் கொண்டு தான் தேட வேண்டி உள்ளது சிலர் பாகவதர் காலத்து திரைப்படங்கள் சொன்னக் கருத்துக்கள் வேறு சிவாஜி காலத்து திரைப்படங்கள் சொன்னக் கருத்துக்கள் வேறு இரண்டிற்கும் பெரிய வேறுபாடு உண்டு வளர்ச்சியும் உண்டு காலம் தோறும் சூழலுக்கு ஏற்றவாறு மாற வேண்டிய நிலை சினிமாவிற்கு உண்டு

நான் சிவாஜி காலத்தில் இருந்தது போல் தான் இப்போதும் இருப்பேன் என்று சினிமா பிடிவாதம் பிடித்தால் அது புறப்பட்ட இடத்திலேயே நிற்க வேண்டியது தான் ஒருகாலத்தில் பாடல்கள் கதையை நகர்த்தியது என்றால் மற்றொரு காலத்தில் கதையும் வசனமும் அந்த வேலையை செய்தது இப்போது நவீன தொழில்நுட்பம் வந்துவிட்டதனால் மாறியே ஆகவேண்டிய நிலை சினிமாவின் கட்டாயமாகி விட்டது

மேலும் அன்று சில திரைப்பட நிறுவனங்கள் தான் இருந்தன இன்று அப்படி அல்ல பல கோணத்தில் போட்டிகள் உதயமாகி விட்டன அதற்கு ஈடு கொடுக்கும் போது சினிமாவின் பழைய நடைமுறை மாறித்தான் ஆகும் என்று சொல்கிறார்கள் 


இந்த கருத்தை யாரும் மறுக்க இயலாது பழைய விஷயங்களையே மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்தால் கேட்பவனுக்கு சலிப்பு தட்டிவிடும் எதிலும் மாற்றம் என்பது அவசியமானது தவிர்க்க முடியாதது ஆனால் இங்கே பேசுகின்ற விஷயம் சினிமாவில் கதை இல்லையே அது ஏன் என்பது தான்

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தவறல்ல காட்சி அமைப்பில் ஒலி ஒளி அமைப்பில் டிஜிட்டல் முறையை கொண்டு வரலாம் அதுவும் தவறல்ல ஆனால் கதையே இல்லாமல் படம் எடுப்பதில் யாருக்கு என்ன லாபம் என்பது தான் நமது கேள்வி

ஒருவன் சினிமா பார்க்க இரண்டரை மணி நேரம் தியேட்டருக்கு வருகிறான் அவனை அந்த நேரத்தில் சந்தோஷப்படுத்தி அனுப்புவது தான் கலைஞர்களின் நோக்கமே தவிர உபதேசம் செய்வது அல்ல என்று சிலர் விளக்கம் தருகிறார்கள் இது சரிதானா நியாயம் தானா என்று அவர்கள் மனசாட்சி கேட்காமல் இருந்தால் சரி 

 எனது இயக்குனர் நண்பர் சொன்னார் நல்ல கதையை எழுதி தயாரிப்பாளரிடமோ பெரிய நடிகர்களிடமோ கொண்டு காட்டினால் அவர்கள் கேட்பது ஒன்றே ஒன்று தான் இதில் கதை இருக்கிறது சரி காசுப் பண்ண வழி இருக்கிறதா என்கிறார்கள்

நடிகர்களோ கதையில் தனது முத்திரையை பதித்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் செய்கிறார்கள் இதனால் கலைக்காக கதை எழுதப்போய் பணத்திற்காகவும் நடிகர்களின் தனி முத்திரைக்காகவும் கதையின் கழுத்தை அறுக்க வேண்டிய நிலை ஏற்ப்படுகிறது

சிவாஜி கணேசன் போன்ற நடிகர்கள் கதைக்காக தங்களை மாற்றிக் கொள்வார்கள் தற்க்கால நடிகர்களோ தங்களுக்காக கதையை மற்ற சொல்கிறார்கள் பிறகு எப்படி தரமான படத்தை தரமுடியும் என்று கேட்டார் அதிலும் நியாயம் இருக்கிறதல்லவா


தமிழ் திரைப்பட உலகில் முதல் தர வரிசையில் இருக்கும் நடிகர் ஒருவர் சில காலத்திற்கு முன்பு எடுத்த திரைப்படம் ஒன்றில் தன்னை மிகைப்படுத்தி காட்டிக் கொள்ளவும் தாம்தான் எல்லோரையும் விட மேலானவன் வித்தியாசமானவன் என்று விளம்பரம் படுத்திக் கொள்ளவும் தேவையற்ற பல பாத்திரங்களை உருவாக்கி நடித்திருப்பார் அந்த படம் எடுப்பதற்கு ஆன செலவை விட விளம்பரப்படுத்த ஆன செலவு நிச்சயம் அதிகமாக இருக்கும் கடைசியில் அந்த படம் மக்களுக்கு சொன்ன செய்தி என்ன வென்றே இதுவரை யாருக்கும் புரிய வில்லை கடைசியில் பல கோடி செலவில் உருவான படம் வந்த வேகத்தில் சில லாபத்தை கொடுத்து விட்டு பெட்டியில் தூங்குகிறது

திரைப்பட நடிகர்கள் நடிகைகள் நடிப்பது சம்பளம் வாங்குவது புகழின் உச்சிக்கு ஏறி கொட்டம் அடிப்பதற்கு அல்ல அவர்கள் தயாரிப்பாளர்களிடம் இருந்து சம்பளம் வாங்கினாலும் அந்த பணம் கணிப்பொறியாளன் முதல் மூட்டை தூக்கும் தொழிலாளி வரை கொடுக்கும் பணம் என்பதை மறந்து விடக்கூடாது  


பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு எத்தகைய சமூக பொறுப்பு உள்ளதோ அதே அளவு சமூக பொறுப்பு கலைஞர்களுக்கு உண்டு அவர்கள் தங்களது நடிப்பால் இசையால் புலமையால் மக்களை செம்மை படுத்த பாடுபட வேண்டுமே தவிர கீழ்த்தரமான உணர்ச்சிகளை தூண்டிவிட்டு குளிர்காய நினைக்க கூடாது அப்படி நினைப்பவர்கள் நிச்சயம் சமூக விரோதிகளே ஆவார்கள்

பாசமலர்,பாகப்பிரிவினை,படிக்காத மேதை போன்ற படங்கள் இன்றுவரை கூட கொட்டகைகளில் ஓடி கணிசமான வருவாயை ஈட்டி தருகிறது என்றால் அது சிவாஜி என்ற மாபெரும் நடிகருக்காக மட்டும் அல்ல நல்ல அழுத்தமுள்ள அர்த்தமுள்ள கதைக்காகவும் தான் என்பதை உணர வேண்டும் வெறும் நடனம் சண்டை கவர்ச்சி என்று நேற்று காலையில் எடுக்கப்பட்ட படம் இன்று மாலையே பெட்டியில் குறட்டை விடுவது கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததே என்பதையும் உணர வேண்டும்

மக்கள் கவர்ச்சியை விரும்புகிறார்கள் அதனால் தான் இத்தகைய படங்களை எடுக்க வேண்டிய நிலை இருக்கிறது என்று சில திரைத்துறையினர் பேசுகிறார்கள் இது தவறு என்று அவர்களுக்கே தெரியும் எந்த சினிமா ரசிகனும் அரைகுறை ஆடையோடு படம் எடுங்கள் என்று எந்த தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் கடிதம் போடுவது கிடையாது இவர்களாகவே அப்படி முடிவு செய்து திட்டமிட்டு மக்களின் ரசனையை பாழ் படுத்துகிறார்கள்

 அந்த கால சினிமாவில் கவர்ச்சியும் ஆபாசமும் இல்லவே இல்லை என்று நான் சொல்ல வரவில்லை இருந்தது ஆனால் அது கதை என்ற உடம்பில் முழைத்த உறுப்பாக இருந்ததே தவிர வீங்கிய கட்டியாக இருக்க வில்லை  பழங்கால சிற்ப கலையிலும் ஓவியங்களிலும் பாலுணர்வை தூண்டக் கூடிய வடிவமைப்புகள் இருந்தன ஆனால் அவைகள் ரசிக்க கூடியதாக ரசிப்பவனின் கலை உணர்ச்சியை மேம்படுத்த கூடியதாக இருந்ததே தவிர கண்களை கூசி அருவறுத்து மூடக்கூடிய்தாக இருந்ததில்லை

ஜனரஞ்சக கலை என்று வரும்போது அதில் நாலாவித விஷயங்கள் கலந்திருப்பது இயல்பு அதை குறை சொல்வது கலைஞனின் கற்பனை திறனை தடை போடுவது போலாகும் கற்பனை சுகந்திரம் என்பதற்க்காக எவருக்கும் தங்களது வக்ர புத்தியை விளம்பரப் படுத்திக் கொள்ள உரிமை கிடையாது ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியையும் கெடுத்தது போல இவர்களது வக்ர எண்ணம் மக்களையும் கெடுத்து விடும் இது முற்றிலும் தர்ம விரோதமாகும்

எனவே திரைப்பட துறையினர் நல்ல கதை உள்ள படைப்புகளை மக்களுக்கு தரவேண்டும் தற்க்கால இந்திய மக்கள் கொடுமையை கண்டு மெளனமாக போகும் நிலையில் இல்லை இன்று ஊழலின் நெஞ்சுக்கு நேராக நீட்டப்பட்டிருக்கும் ஈட்டி நாளை காலையில் ஆபாச வியாபாரிகளான திரைதுரையினரை நோக்கி நீட்டப்படலாம் வெட்டும் வாள் வருவதற்கு முன்பே வெட்டப்படும் சூழலை தடுத்து கொள்பவனே புத்திசாலி

Contact Form

Name

Email *

Message *