Store
  Store
  Store
  Store
  Store
  Store

மாடும் மனிதனும் மாதவனே!


    புராணங்களில் கற்பனை என்பது மிகுதியாக இருக்கும் ஆனாலும் அந்தக் கற்பனையைத் தாண்டி பலவிதமான உண்மைகளும் ஒவ்வொரு மனிதன் அடைந்தே தீரவேண்டிய லட்சிய நோக்கங்களும் இருக்கும் இதை கதை சுவாரஸ்யத்தோடு படிப்பவர்களுக்கும், விமர்சன  நோக்கோடு பார்ப்பவர்களுக்கும் தெரியுமென்று கூறிவிடமுடியாது. அதே நேரம் பக்தியோடும் இவைதான் இறுதியான உண்மை என்ற முரட்டுத்தனத்தோடும் படிப்பவர்களுக்கும் புரியமென்று சொல்லிவிடமுடியாது. பரந்த ஞானமும் சிறந்த உலக அறிவும் இவைகளுக்கெல்லாம் மேலானதாக நடுநிலையையும் உடையவர்களுக்கே புரியுமென்று சொல்லலாம் ஆகவே குருஜியிடம் எனது சந்தேகங்களை முன்வைத்தேன்.


கேள்வி:    புராணங்களில் சிறந்தது எது?

குருஜி:
    பல மனிதர்களுக்கு அறிவு வளர்ச்சியானது ஒரு குறிப்பிட்ட எல்லையோடு நின்று விடுவதற்கு மிக முக்கியமான காரணமே அது சிறந்தா? இது சிறந்ததா? என்று வாதம் செய்யும் இயல்பே ஆகும். முதலில் மனிதன் இந்தக் குணங்களை முற்றிலுமாக களைந்துவிட்டு எல்லாவற்றையும் தெரிந்துகொள்வோம். தெரிந்தவற்றில் எது அனுபவத்திற்கு சாத்தியமானதாக நமக்குத்தோன்றுகிறதோ அதை எடுத்துக்கொள்வோம் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் அப்படி வளர்த்துக்கொள்ளும் முயற்சிக்கு பெயர்தான் ஞானவேட்கை என்பது இந்த ஞானவேட்கைக்கு 18 புராணங்களுமே சமமான கருத்துப் பங்குகளை நமக்கு தந்தாலும்  அவை எல்லாவற்றையும் இப்போது பேசுவதாக இருந்தால் நாளும் நேரமும் போதாது என்பதற்காக  இப்போது விஷ்ணு புராணத்தை பற்றி சற்று ஆழமாக சிந்திப்போம்.
  
 இந்திய தத்துவ சிந்தனை வரலாற்றில் விஷ்ணு புராணத்திற்கும் பாகவத புராணத்திற்கும் நிறைய பங்களிப்பு உள்ளது என்று உறுதியாகச் சொல்லலாம். இது மட்டுமல்ல நம் நாட்டில் பழைய காலத்திலேயும் இடைப்பட்ட காலத்திலேயும் இருந்த பல்வேறு இனங்களையும், கோத்திரங்களையும், சமயப் பிரிவுகளையும் பண்படுத்தி ஒன்று சேர்க்கும் முயற்சியில் இப்புராணங்கள் முன்நின்றன என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. காரணம் இந்தப் புராணங்களில் மதம், மெய்ப்பொருளியியல்கள் வரலாறு, தனி மனித உறுதி, சமுதாய நிலைகள் அரசியல் ஆகிய எல்லாவற்றையும் தெளிவுற இவைகள் படம்பிடித்துக்காட்டுவதனால் மக்களிடத்தில் பெறும் வரவேற்பை பெற்று இருந்தன. அது மட்டுமின்றி ஞானமார்க்கம், பக்தி மார்க்கம், தர்ம மார்க்கம் ஆகிய மூன்று மார்க்கங்களையும் இவைகள் தெளிவாகக் கூறுவதனாலும் புகழ்பெற்றது.


  மேலும் இந்திய ஞானிகள் உபதேசித்த ஒருமைக் கொள்கையாகிய அத்வைதம், பண்மைக் கொள்கையாகிய விசிஷ்டாத்வைதம், இருமைக் கொள்கையாகிய துவைதம் மற்றும் சாங்கியம் யோகம், நியாயம், மீமாம்சம், வைசேடிகம் ஆகிய அனைத்து தத்துவப் பிரிவுகளையும் பக்தி உணர்வுகளையும் தனக்குள்ளே கொண்டு இருப்பதனால் இவைகள் புராணங்களின் கிரீடம் என்றே சொல்லலாம்.

    பாகவத புராணத்தைவிட விஷ்ணு புராணம் காலத்தால் முற்பட்டது. விஷ்ணு புராணத்தில் உள்ள விவரங்கள் விரிவாகப் பார்த்தால் புராணங்கள் என்று கருதப்படும் இலக்கியங்கள் அனைத்தைப் பற்றியுமே முழுமையாகத் தெரிந்து கொள்வதற்கு அடிப்படையாக இருக்கும். வியாசரின் தந்தையான பராசர மஹரிஷி மைத்ரேயனுக்கு கூறுவதாக இப்புராணம் அமைந்துள்ளது. இதில் அண்டசராசரங்களின் தோற்றம் இருப்பு ஒழுங்கு முடிவு ஆகியவைகளைப் பற்றி நேர்த்தியான விதத்தில் விரிவான முடிவுகள் கொடுக்கப்பட்டு உள்ளன.

 இவ்வுலகம் முழுமுதற் கடவுளான விஷ்ணுவில் இருந்து தோன்றியது என்றும் அவரையே நிலைக்களமாகக் கொண்டு மாறாத ஒழுங்கில் இயங்கி வருகிறது என்றும் கூறப்பட்டு இருக்கிறது.   உலகத்தை தாங்குபவரும்,  கட்டுப்படுத்துகிறவரும் விஷ்ணு ஒருவரே என்பது இப்புராணத்தின் முடிவாகும். இதுதான் மற்ற புராணங்களும் கருதுகிற விஷயமாகும். விஷ்ணு என்பவர் இருமை இல்லாத ஒருமையானவர் என்றும் வரம்பெற்ற ஆத்மாக்களோடு உணரப்படுபவர் என்றும் இவரே பிரம்மாவாகவும், சிவனாகவும், பரமாத்மாவாகவும் கருதப்படுகிறார் என்று உபநிஷதங்கள் கருதுவதை தாமும் கூறுவதாக இப்புராணம் பறைசாற்றுகிறது.


  பராசரமகரிஷி விஷ்ணுவைப் பற்றி பாடும் ஒரு துதிப்பாடலில் அவரே முடிவில்லாதவர், மாறுபாடு இல்லாதவர், எல்லாம் நிறைந்த எங்கும் உள்ள எல்லாம் கடந்த பரமாத்மா இரண்யகர்பன் ஹரிசங்கரன், வாசுதேவன், தாமோதரன், அச்சுதன், புருஷோத்தமன், நாராயணன்,  பிரம்மன் மற்றும் சிவன் என்று எல்லாச்சிறப்புப் பெயர்களும் இவர் ஒருவரையே குறிக்கிறது என்ற பொருள்பட பாடுகிறார்.

இப்பெயர்களை பராசரர் வரிசைபடுத்திக் கூறுவதற்கு சிறப்பான காரணம் ஒன்று உள்ளது. வேதவாதிகள், வைஷ்ணவர்கள், சைவர்கள், பஞ்சாத்திரிகள், ஏகாந்திகள், பாகவதர்கள், பாசுபதர்கள், யோகிகள், ஸப்தபிரம்மவாதிகள் முதலிய எல்லாப்பிரிவு சமயத்தவர்களும் வெவ்வேறு வடிவில் வெவ்வேறு முறையில் பரப்பிரம்மமத்தை வழிபட்டாலும் அவை அனைத்தும் முழுமுதற் கடவுளான விஷ்ணுவை நோக்கி நெருங்கிச் செல்ல வழியை ஏற்படுத்தும் மார்க்கங்களே ஆகும் என்பதை குறிப்பால் பராசரர் உணர்த்துகிறார்.
 
  பராசரரின் இந்த கருத்து மிகவும் கவனிக்கதக்கதாகும்.  பழைய கால இந்திய மக்கள் பல தெய்வங்களை வழிபட்டார்கள். ஒரு தெய்வ வழிபாடு என்பது அவர்களிடத்தில் முற்றிலுமாக இல்லை என்ற கருத்து பரவலாக இன்று மக்கள் மத்தியில் பரப்பபட்டு வருகிறது. ஆனால் அந்தப் பரப்புரைகள் முற்றிலும் தவறானவை உண்மைக்குப் புறம்பானவை என்பதை பராசரரின் கருத்து மூலம் நன்றாக விளங்கிக் கொள்ளலாம்.


 கேள்வி:    இந்திய தத்துவங்கள் பொதுவாக ஆத்மா, உலகம், பிரம்மம் ஆகியவைகளை பற்றியே அதிகமாகப்பேசும் இயல்புடையவைகள் ஆகும். பராசரரும் ஆத்மாவைப் பற்றி அறிந்தவராகவும், தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். அப்படி அவர் ஆத்மாவைப் பற்றி என்ன மாதிரியான கருத்துக்களை கொண்டிருந்தார்?

குருஜி:    பிரபஞ்ச சுழற்சியானது தொடக்கமும் முடிவும் இல்லாதது. கல்பகோடி காலமாக வளர்ந்து அழிந்து மீண்டும் வளர்ந்து சுழன்று கொண்டே இருக்கும் முடிவுறாத பிரபஞ்ச செயலைப் பற்றி வேதாந்தம் கூறுகின்ற முழுமையான கொள்கைகளிலிருந்து ஆத்மாவின் இருப்புத் தன்மையை விஷ்ணு புராணம் நமக்குக் கூறத் தொடங்குகிறது.

 இவ்வுலக அமைப்பிற்கு முழுமையான ஒரே காரணம் ஆத்மாவாகும். அந்த ஆத்மா மனித அறிவால் பெறுகின்ற கொள்கைகளுக்கு எல்லாம் மேம்பட்டதாகும். வடிவமற்றது. நிறமற்றது, வரையறுத்துக் கூறத்தக்க தனி இயல்பற்றது, மனதால் உணரமுடிந்தாலும் வார்த்தைகளால் சொல்ல முடியாதது, பிறப்பு, வளர்ச்சி, மாற்றம், அறிவு, அழிக்கப்படுதல் முதலிய இம்மை குணங்களற்றது என்றும் இருப்பது என்று தெளிவாகப் புராணம் பேசுகிறது.


இந்தக்கருத்தை உன்னிப்பாக வேண்டாம் மேலோட்டமாக பார்த்தாலே இது நிர்குண பிரம்மத்தின் அதாவது உருவமற்ற பரபிரம்மத்தின் தெளிவான கருத்தாக இருப்பது புலப்பட்டு விடும். பராசரர் இப்படி ஆத்மாவை குறிப்பிட்டுவிட்டு அத்தகைய நிலையான ஆத்மாவே விஷ்ணு என்கிறார். எல்லையற்ற எப்போதும் மாறுதல் இல்லாத முதல்மையான ஆத்மாவே இவ்வுலகத்தில் எல்லையுள்ள எப்பொழுதும் மாறுகின்ற தன்மையுடையதாகத் தோற்றமளிக்கிறது என்கிறார்.
  
 இந்த உலகத்திலுள்ள அனைத்து பொருட்களிலும் ஆத்மா இருக்கிறது. அதே நேரம் எல்லாப்பொருட்களும் ஆத்மாவில் இருக்கிறது அதனால் உலகில் உள்ளுணர்வைத் தெளிவாகவும், குழப்பமில்லாமலும் பெற்றிருக்கின்ற அறிவாளிகள் அந்த ஆத்மாவை வாசுதேவன் என்று பெயரிட்டு அழைப்பதாக பராசரர் கூறுகிறார். இந்த வாசுதேவர் உலகிற்கு உள்ளேயும் இருக்கிறார் உலகத்திற்கு அப்பாற்பட்டும் இருக்கிறார் அவரே எக்காலத்திலும் புருஷனாகவும், பிரபஞ்சங்கள் எல்லாமாகவும் தனி மனிதனாகவும் தோன்றுகிறார்.
  
 பிரதானம் அல்லது பிரகிருதி என்று பிரிக்க முடியாத முதன்மையான ஆற்றலாகவும், பிரமாண்டமாகவும், நுணுக்கறிய நுண்ணியதாகவும் இருக்கும். வாசுதேவரே பகுத்துக்காணப்படக் கூடிய யாவற்றிற்கும் வியக்தா ஆவார். அதாவது முதற் காரணமாவார். உலகத்தின் நிலையான இருப்பும் நிலையில்லாது மாறிக்கொண்டே இருக்கும் காலமும் விஷ்ணுவினுடைய மறுத்தோற்றமாகும்.


  இந்த உலகத்தில் நாம் காணுகின்ற எல்லாப் பொருளும் விஷ்ணுவைப் போலவே நிலைத்தன்மை உடையதாகும். ஆனால் பொருட்கள் அனைத்தும் அவரால் தாங்கப்படுகிறது அவர் யாராலும் எவற்றாலும் தாங்கப்படுவது இல்லை. தானே முளைத்த, தானே எல்லாமுமான சர்வவல்லமை பொருந்திய பரமாத்மாவான விஷ்ணு எதனாலும் தாங்கப்படும் அவசியமற்றவராக இருக்கிறார்.

உண்மைத் தன்மையுடைய பொருட்கள் தோற்றத்திற்கும், ஒற்றுமைப்பட்ட செயல்முறைகளுக்கும், ஒழுங்காக அமைந்த வளர்ச்சிகளுக்கும், மாறுதல்களுக்கும், அழிவுகளுக்கும் காரணமாக இருக்கிறது. இயற்கையிலுள்ள இத்தகைய நெறிமுறைகளுக்கு உட்பட்ட ஒழுங்கிற்கு பரப்பிரம்மமே ஆதாரமாகும்.

கேள்வி:    விஷ்ணு புராணத்தின் இந்த கருத்து ஏறக்குறைய ராமானுஜரின் கருத்தை ஒத்திருக்கிறது. ஆத்மாக்களின் இயல்புகளை எல்லாம் பரமாத்மா வகுத்திருக்கின்ற பொழுது நல்லது, கெட்டது, ஏற்றம், இறக்கம் என்ற பாகுபாட்டிற்கு அவைகள் ஆட்படுவது ஏன்?

குருஜி:    ஒரு குழந்தை தாயிடம் குதிரை பொம்மை வாங்கித் தரச்சொல்லி அடம்பிடிக்கிறது. வாங்கிக் கொடுத்தவுடன் கையில் வைத்து புரட்டி பார்த்துவிட்டு பொம்மையை தூற எறிந்து விட்டு போகிறது. அதே குழந்தை கடற்கரை ஓரமாக மணல் வீடு கட்டுகிறது. அதை அலைகள் வந்து அடித்துச் சென்றவுடன் எதிர்காலமே போய்விட்டது போல் அழுது ஆர்ப்பரிக்கிறது. பிறகு வேறொரு இடத்தில் மணல் வீட்டைக் கட்டுகிறது. கஷ்டப்பட்டு கட்டிய மணல் வீட்டை உற்சாகத்துடன் கால்களால் மிதித்து துவைத்து சந்தோஷப்படுகிறது.


  இதற்கெல்லாம் என்ன காரணம் என்று யாராலும் கூறமுடியாது. அப்படி நடந்து கொள்வது குழந்தையின் இயல்பு ஆகும். இந்த இயல்புகளை லீலாவாதம் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. விஷ்ணு புராணமும் இறைவனின் செயல்களை அறுதியிட்டு உறுதியாகக் கூற முடியாததற்கு இத்தகைய லீலைகளே காரணமாகும் என்கிறது. அதாவது அலகிலாத விளையாட்டுடைய ஈசனின் லீலையே உலகத்தின் இயக்கம் என்பதாகும்.

கேள்வி:    உலகப் பொருளெல்லாம் ஈசனின் வடிவம் அவர் அதுவாகும், அதைத் தாண்டியும் இருப்பதெல்லாம் சரிதான். ஆனால், வரையறுக்க முடியாத நிர்குணமான பரமாமத்மா எதற்காக தனக்குத் தானே எல்லைகளை வகுத்துக்கொள்கிறது? எப்பொழுதும் உள்ள குணங்களற்ற, மாறுதலற்ற, செயலற்ற தூய ஆத்மா ஆகிய பரப்பிரம்மம் எப்படி செயல்படுகிறது? அது எவ்வாறு உலகத்தை படைப்பதாகவும், காப்பதாகவும், சம்காரம் செய்வதாகவும் ஆயிற்று? அல்லது கணக்கற்ற எல்லையுள்ள மாறுதல் அடைந்து கொண்டே இருக்கும் உயிர்களின் தொடர் நிகழ்ச்சி முறையாக எப்படித்தோன்ற முடியும்?

குருஜி:    இந்த கேள்விகளுக்கெல்லாம் மிக அற்புதமான பதிலை விஷ்ணு புராணம் தருகிறது. கொள்கைகளாலும், கோட்பாடுகளாலும் விதிமுறைகளாலும் கட்டுப்படாத மனித அறிவு எப்படித் தயக்கமின்றி உண்மைகளை ஒத்துக்கொள்ளுமோ அவ்வாறே பராசரரும் பளிச்சென்று நிஜத்தை ஒத்துக்கொண்டு மேலே கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவைகள் மனித அறிவிற்கு அப்பாற்பட்டவைகளாகும் என்று ஒரே வரியில் பளிச்சென பதிலை தந்து விடுகிறார்.


 பரமாத்மாவின் தன்மையுடன் அமைந்த ஒப்பற்ற ஆற்றல் என்பது சோதித்து அறிய முடியாத ஆற்றலாகும். அது மேலோட்டமாக அல்லது ஆழ்ந்தோ நமது அறிவால் தீர்க்க முறைப்படி உணர்ந்து கொள்ளும் வகையில் இல்லை. இயற்கைக்குள் பொதிந்திருக்கும் ஆற்றல்கள் சோதனைச்சாலைகளில் பௌதீகமாக அறியக் கூடியது அல்ல. எனினும் உள்ளுணர்வால் பரமாத்மா தோற்றுவிக்கும் காரியங்களைக் கொண்டு அவைகளை ஓரளவு அறியமுடியுமேயன்றி வேறுவகையாக அதை அறுதியிட்டுக் கூற முடியாது. ஆத்மாவான பரம்பொருள் தனது எல்லாம் கடந்த நிலைக்கு குறைவு வராமல் இவ்வுலகிலுள்ள பொருட்களையெல்லாம் தோற்றுவிக்கவும், ஆளவும், அழிக்கவும் ஆற்றல் பெற்று இருப்பதாக நாம கருத வேண்டும்.

    இந்த ஒப்பற்ற ஆற்றலில் பரப்பிரம்மம் எப்பொழுதும் உள்ளதாகவும், இல்லாததாகவும் இருக்கிறது. ஒன்றென்பதும் இரண்டென்பதும் அதுதான். பல என்பதும் அதுதான். தோன்றியதும் அதுதான் தோன்றாமல் இருப்பதும் அதுதான். குணம் குறிகளோடு இருப்பதும் அதுதான் உருவமற்ற நிர்குணமாக நிற்பதும் அதுதான். செயலும் செயலின்மையும் அதுதான் இவ்வாறு பரமாத்மாவின் முடிந்த முடிவான இயல்புகளை அழகிய உதாரண உருவகங்களோடு விஷ்ணு புராணம் வர்ணனை செய்கிறது.
  
 இந்த உயர்ந்த ஆத்மாவின் தன்னிகரற்ற ஆற்றல் மாயா சக்தி என்ற பெயரில் வெளிப்படுகிறது. இம்மாயா சக்தி பிரம்மமல்லாத வேறொன்றாக தனியாக இருப்பது அல்ல. அதனால் பரப்பிரம்மத்தின் இருமையற்ற ஒருமையான தன்மையையும் இது மறுப்பதாகாது. பிரம்மத்தின் ஆற்றல் மாயையாக வெளிப்படும்பொழுது அது பிரம்மத்திற்கு அந்நியம் என்று கருத இயலாது. எனவே பராசரரின் இந்த எளிய கொள்கை அண்ட அமைதி முறைக்கு தக்கவாறு விளங்குவதாகக் கொள்ளலாம். இக்கொள்கைகளே புராணங்கள் அனைத்திலேயும் உள்ளீடாக அமைந்துள்ளதை நாம் காணலாம்.


உண்மையைத் தேடி தரிசிக்க விரும்புவோர் இவ்வுலகத்தின் தெய்வ அமைப்பு எவ்வாறு இருக்கிறது என்பதை பராசரர் மூலம் நன்கு புரிந்து கொள்ளலாம். உண்மையைக் காணும் ஆவல் உடையவர்களுக்கு பராசரர் கூறுவதை மேலும் நாம் சிந்திப்போம். உயிரற்ற இயற்கையானது எப்படிப் படிப்படியாக விரிவாக்கம் அடைந்து பலவகையான ஜீவன்களாயிற்று என்பதையும் மனிதனின் இயற்கைத் தன்மைக்குக் கீழாக இருக்கும் பல்வகை உயிர்கள் எவ்வாறு ஒன்றிலிருந்து மற்றொன்றாக வளர்ச்சி அடைந்தது என்பதையும் நம்பத்தகுந்த வகையில் அவர் விளக்குகிறார்.

 மேலும் மனித இனங்களில் காணப்படும் அறிவு, ஒழுக்கம், சமுதாயப்பண்பு, ஆன்மீகப்பண்பு முதலியவைகளின் வளர்ச்சிகளை பற்றியும் உலகில் தெய்வத்தின் ஆற்றலினால் விளைவதும் தீமையின் ஆற்றலினால் விளைவதும் மாறிமாறி எழுச்சியுற்று எழுவதும், வீழ்வதும் பிரபஞ்ச அமைப்பில் கர்மாவின் ஒழுங்கு முறை சட்டத்தையும் சான்றோர்கள், துறவிகள், வீரர்கள் முதலிய சிறப்புமிக்கவர்களிடம் தோன்றும் செயலானது சமுதாய நிகழ்வுகளில் எவ்வாறு பதிகிறது என்பதையும் உலகம் நெருக்கடியான சூழல்களை சந்திக்கும் போது தெய்வ ஆற்றலானது அறிவாகவும், தர்மமாகவும், அன்பாகவும், அவதாரமாகவும் எவ்வாறு எதற்காகத் தோன்றுகிறது என்பதையும் மிக அழகாக பராசரர் பட்டியலிட்டு தருகிறார்.
  
 இவ்வுலகம் தங்குதடையில்லாமல் தர்மத்தின் வழியில் செல்லுவதற்கு இயற்கையின் இயல்புகளை மாற்ற நினைக்காமல் நீதிவரையறைகளுக்கு உட்பட்டு மனித சமுதாயம் செயல்படவேண்டுமென்று விஷ்ணு புராணம் அறிவுரைத் தருகிறது இக்கருத்துக்களை விஷ்ணு புராணத்தில் நீங்கள் நேரடியாக படிக்கும் போது உணரலாம் வேறு பல உண்மைகளும் தெரியும் 

சந்திப்பு P.சந்தோஷ் குமார்



 

Contact Form

Name

Email *

Message *