Store
  Store
  Store
  Store
  Store
  Store

சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?


    சித்தர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் தங்களை தாம் தான் சித்தர் என விளம்பரம் படுத்திக் கொண்டது கிடையாது. இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு நாள் நமது நாராயண மிஷன் ஆஸ்ரம வளாகத்திலுள்ள தென்னை மரங்களுக்கு அடியில் ஓய்வாக உட்கார்ந்திருந்தேன்.  அப்படி உட்கார்ந்து இருப்பது எனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.  மரங்களில் ஏறி விளையாடும் அணில்களையும் கிளைகளின் மேல் ஊஞ்சல் ஆடும் பறவைகளையும் கண்ணார கண்டு ரசிக்கும் சுகத்தை விட வேறு இன்பம் உலகில் ஏது? அப்போது என் உதவியாளர் வந்து யாரோ ஒரு இளைஞர் என்னை பார்க்க வந்திருப்பதாக சொன்னார்.  அவரை வரச் சொன்னேன்.

    என் முன்னால் வந்து நின்ற இளைஞன் வட இந்தியரை போல் ஆடையணிந்திருந்தார்.  ஆனால் அவர் முகத்தில் வீசிய திராவிடர்களை அவர் தமிழர் தான் என்பதை சொல்லாமல் சொல்லியது.  அவரை உட்காரச் சொல்லி உங்கள் பெயர் என்ன என்று கேட்டேன்.  அதற்கு அவர் தன்னை தமிழ் ஞான சித்தர் என்று அறிமுகப்படுத்தி கொண்டதோடு இல்லாமல் வெறுங்கையால் விபூதி வரவழைத்து என் நெற்றியில் பூசி என்னை ஆசிர்வதிக்கவும் செய்தார்.  பயபக்தியோடு அதை ஏற்று கொண்டேன்.  தனது ஊரில் அன்னதானம் செய்ய போவதாகவும் அதற்கு இரண்டு மூட்டை அரிசியோ அல்லது அதற்கு இணையான பணமோ நீங்கள் தர வேண்டும்.  உங்களை தந்து விட சொல்லும்படி ஆதிபராசக்தி தனக்கு உத்தரவு போட்டுயிருப்பதாகவும் சொன்னார்.


     நன்கொடை வேண்டுமென்றால் அதை சாதாரணமாக கேட்கலாம்.  அதற்காக விபூதி  வரவழைத்து அம்மாளின் உத்தரவு என மிரட்டி கேட்க வேண்டும் என்று அவசியமில்லை.  அதனால் அவரிடம் அன்னதானம் யாருக்கு சுவாமி செய்ய போகிறீர்கள் என்று பணிவுடன் கேட்டேன்.  மக்களுக்கு தான் என்று கம்பீரமாக பதில் சொன்னார்.

  பொதுவாக நான் அன்னதானம் செய்வதை விரும்புவதில்லை.  யாருக்காவது உணவளிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றினால் சாலையில் பார்க்கும் பிச்சைகாரனுக்கோ, மனோநிலை பாதிப்படைந்தவருக்கோ சாப்பாடு வாங்கி கொடுத்து விடுவேன்.  அதனால் அம்பிகையின் உத்தரவை நிறைவேற்ற முடியாததற்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன் என்று பணிவாக அதே நேரம் குதர்க்கமாக பதில் சொன்னேன்.

   உடனே அவருக்கு கோபம் வந்துவிட்டது.  நான் துர்வாசக முனிவரின் வாரிசு.  மந்திர தந்திங்களை கற்று தேர்ந்த மகா சித்தன். எனக்கு கோபம் வரும்படி பேசினால் சபித்து விடுவேன்.  எல்லாம் நிர்முலமாகி விடும் என்றார்.  இவரிடம் பேசுகின்ற நேரத்தில் என் நண்பர்களான காக்கா, குருவிகளை பார்த்து ரசித்தால் கூட மனம் குதுகலமாக இருக்கும்.  அதனால் அவரை நடையை கட்டும்படி சைகை செய்து விட்டு என் வேலையை பார்க்கலானேன். 


     இன்றைய கால கட்டத்தில் இப்படியொரு சித்தர் கூட்டம் நாட்டில் திரிகிறது.  இவர்களுக்கெல்லாம் சித்தர் என்ற வார்த்தையின் உண்மை பொருள் கூட தெரியாது.  நாலு சித்தர் பாடல்களை படித்துவிட்டால் சித்தர்களின் பரிபாஷைகளின் சிலவற்றை புரிந்து கொண்டு விட்டால் தாங்களும் சித்தர்கள் தான் என்ற மனவியாதி வந்துவிடும்.

  அதற்காக உண்மை சித்தர்கள் இவர்களை மன்னிக்கட்டும்.  எனது ஆன்மீக பயிற்சியின் ஆரம்பகாலமனது.  குண்டலினி பயிற்சியில் இந்திரிய பந்தனம் செய்து பழகி கொள்ள வேண்டும்.  என்று ஆசை எனக்கு இருந்தது.  ஆனால் அதை எப்படி செய்ய வேண்டுமென்ற வழிமுறை எனக்கு தெரியாது.  அந்த நேரத்தில் ஒரு சித்த புருஷனின் சந்திப்பு எனக்கு கிட்டியது.

    அரகண்டநல்லூர் பச்சை வாழியம்மன் ஆலயத்தில் குதிரை சிலைகளின் கால்களுக்கு இடையில் உட்கார்ந்து காற்று வாங்குவது அப்போது எனக்கு மாலை நேர பொழுதுபோக்கு.  அப்படி ஒரு நாள் நானும் எனது நண்பர் அன்பழகன் என்பவரும் உட்கார்ந்திருந்த போது எங்கள் பக்கத்தில் அழகான ஒரு மனிதர் வந்தமர்ந்தார். நான்கடி உயரம் தான் இருப்பார்.  தலையை எண்ணெய் தேய்த்து வாரி பல நாட்களாகி இருக்கும்.  காவிபடிந்த பல் இடுக்கை குச்சியால் குத்தி கொண்டிருந்த அவர் என்னிடம் சிகரெட் வாங்கி தர முடியுமா? என்று கேட்டார்.  அன்பழகன் சட்டை பையில் வைத்திருந்த புது பாக்கெட் சிகரெட்டை அவரிடம் கொடுத்து விடும்படி சொன்னேன்.


     இருபது வருடங்களுக்கு முன்பே அந்த சிகரெட் பாக்கெட் விலை இருபத்தி ஐந்து ரூபாய்.  இவ்வளவு விலை உயர்ந்த சிகரெட்டை பிச்சைகாரன் போல் தோற்றமளிக்கும் ஒருவருக்கு கொடுப்பதா? என்று நண்பர் நினைத்திருக்கிறார்.  இதை வினாடி நேரத்தில் புரிந்து கொண்ட அந்த மனிதர் அப்பா நீ விலை உயர்ந்த பொருளை தரவேண்டாம்.  அதற்கு பதிலாக பீடி வாங்கி கொடு போதும் என்றார்.  என் நண்பர் அதிர்ந்து போய்விட்டார்.  நான் மனதில் நினைத்ததை இந்த கிழவன் எப்படி கண்டுபிடித்தான் என்று முணுமுணுத்த அவர் கடைக்கு போய் பீடிகட்டு வாங்கி வந்து அவரிடம் கொடுத்தார்.  அடுத்து நடந்த நிகழ்வால் நாங்கள் இருவரும் அதிர்ந்தே போய்விட்டோம்.

    பீடி பற்ற வைத்து ஆழமாக இழுத்த அவர் சாதாரணமாக எல்லோரும் புகையை வெளிவிடுவது போல் விடவில்லை.  குரங்கு பீடி பிடிப்பது போல் ஒரே இழுப்பில் முழு பீடியை இழுத்து எல்லா புகையையும் விழுங்கி விட்டார்.  சிறிது நேரத்திற்கு எல்லாம் பீடி புகை அவர் வேஷ்டிக்கு அடியிலிருந்து வந்தது.  அதாவது அவர் வாய் வழியாக இழுத்த புகையை குதம் வழியாக வெளியிட்டார்.  இப்படி ஒரு காட்சியை பார்த்தால் யார் தான் அதிர்ச்சி அடைய மாட்டார்கள்.


    முதலில் அதிர்ந்த நான் சிறிது நேரத்தில் இப்படி செய்பவர்கள் ஹட யோகத்தில் நன்கு பயிற்சி பெற்றவர்களாகத்தான் இருக்க முடியும் என்று அவரிடம் பயபக்தியுடன் எனது குண்டலி யோக ஆசையை வெளியிட்டேன்.  நண்பர் அன்பழகனை தூர போக சொன்னவர் எனக்கு அந்த பயிற்சியை மிக எளிமையாக எந்த மறைவுமில்லாமல் என் உடல் வாகுக்கு ஏற்றவாறு எப்படி செய்ய வேண்டுமென்று கற்பித்தார்.

  அவர் ஒரு முறை சொன்னதே யுக யுகமாக கேட்டு மனதில் பதிவதை போல நினைவில் வந்துவிட்டது.  குரு தட்சனையாக இரண்டு ரூபாய் மட்டுமே வாங்கிய அவர் அதை என் கண்ணெதிலேயே சுக்கு நூறாக கிழித்தும் போட்டுவிட்டார்.  ஏன் அப்படி செய்தார் என்று இன்றுவரை எனக்கு விளங்கவில்லை.  அதன் பிறகு அவரை நான் பார்த்ததும் இல்லை. 

    இப்படி சில உண்மை சித்தர்களை நேருக்கு நேராக சந்தித்து இருக்கிறேன்.  அவர்களோடு பேசி பழகியும் இருக்கிறேன்.  சில ரகசியமான தாந்திரிக கலைகளை அவர்கள் எனக்கு கற்று தந்திருக்கிறார்கள்.  அவர்களை பார்த்தது பழகியது ஞான விஷயங்களை பெற்றது எல்லாமே ஆனந்தமான சுக அனுபவம் எனலாம்.  அவைகளை பற்றி எழுத வேண்டுமென்றால் தனி புத்தகமே போட வேண்டும்.


     மேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்



 

Contact Form

Name

Email *

Message *