சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா? அவர்கள் நாட்டை ஆளலாமா? அவர்களுக்கு ஓட்டுப் போடலாமா?
சமுதாயத்தில் மேல்மட்டத்தில் உள்ளவர்களும் அறிவுஜீவிகளும் வெகு நாட்களாகவே இந்தக் கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இதற்கான பதிலை இன்றுவரை அவர்களாலும் தர முடிய வில்லை மற்றவர்களாலும் சொல்ல முடியவில்லை
நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் குடியா முழுகிவிடப் போகிறது? ஜேப்படித் திருடனும் கந்து வட்டிக்காரனும் சட்டசபையில் சண்டை போடும் போது பாவம் நடிகர்கள் அவர்களுக்கு சண்டை போடத் தெரியாதா? என்று பல அப்பாவிகள் கேட்கிறார்கள்
அமெரிக்காவில் ரெனால்ட் ரீகனும் நம்ம ஊரில் எம்.ஜி. ஆரும் நல்லா வெளுத்து வாங்கிருக்காங்களே அழுது வடிஞ்ச மூஞ்சிக்கல்லாம் ஓட்டுபோட்டு டி.வி. யை பார்த்து பயப்டுரதை விட நடிகருக்கு போட்டு ஜாலியா பொழுதைப் போக்கலாம் என்று சொல்பவர்களும் உண்டு
சினிமா நடிகருக்கெல்லாம் ஆட்சி நிர்வாகம் என்பதைப் பற்றியெல்லாம் என்ன தெரியும்? யாரோ எழுதி கொடுத்த வசனத்தை நெஞ்சி நிமிர்த்தி பேசி கைதட்டல் வாங்கும் நபர்களை சிம்மாசனத்தில் உட்கார வைத்தால் நரிக்கு நாட்டாண்மை கொடுத்தக் கதையாகி விடும் நாடு உருப்படனும் என்றால் நடிகர்களை அரசியலில் இறங்க அனுமதிக்க கூடாது என்கிறவர்களும் உண்டு
ஆனால் ஒன்று இந்திய நாட்டின் குடிமகனாய் பிறந்த எவனுக்கும் தேர்தலில் நிற்க உரிமையுண்டு அவன் தற்குறியாய் இருந்தாலும் சரி சதுரங்க சேனையை வழிநடத்தத் தெரிந்தவனாலும் சரி சினிமாக்காரனாக இருந்தாலும் சரி அப்படித்தான் நமது அரசியல் சாசனம் சொல்லுகிறது
அதனால் சினிமாக்காரர்களை அரசியலில் நுழையக் கூடாது என்கின்ற தகுதி யாருக்கும் இல்லை
ஆனால் ஒருமுக்கியமான விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் சாதாரண ஒரு அரசியல்வாதியை விட நடிகர்களுக்கு அதிகப்படியான புகழ் இருக்கிறது இந்தப் புகழும் கூட்டமும் நடிகர்களின் அறிவுத்திறத்தாலோ தியாகத்தாலோ வந்தது அல்ல சினிமா என்கின்ற ஊடகத்தால் வந்ததுதான் என்பதை நடிகர்களும் அவர்களின் விசுவாசிகளும் உணரத் தவறும் போதுதான் நாட்டுக்கு சிக்கல் ஏற்படுகிறது
இப்படி ஏற்பட்டச் சிக்கல்களை வரலாறு ஏற்றுக்கொள்ள திணறுகிறது உதாரணத்திற்கு நமது நடிகர் ரஜினிகாந்த் அவர்களேயே எடுத்துக் கொள்வோம் ஜெயலலிதா அம்மையார் ஆட்சியிலிருந்த போது மீண்டும் அவருக்கு மக்கள் ஓட்டுப் போட்டால் தமிழ் நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்றார்
அதுவரையிலும் எந்தவிதமான அரசியல் கருத்துக்களையும் வாய்திறந்து பேசாத ரஜினி திடீரென்று இத்தகைய கருத்துமணியை உதிர்க்கவும் அவரின் ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள் அலுத்தும் சலித்தும் இருந்த பொதுமக்களும் கூட சற்று ஆறுதலான மூச்சுவிட்டார்கள் ரஜினி என்ற புது முகமாவது நல்லது செய்ய மாட்டாரா என எல்லாத்தரப்பிலும் எதிர்பார்ப்பு இருந்தது
தூக்கத்திலிருந்த கும்பகர்ணன் விழித்து உணவு உண்டு விட்டு திரும்பவும் உறங்கப் போனதுபோல ரஜினியும் வந்தார் ஏதோ பேசினார் நமக்குஒன்றும் புரியவில்லை மீண்டும் அவர் மௌனியாகிவிட்டார்
இந்த சம்பவத்தைப் பற்றி சிலர் அப்போதே ரஜினிக்கு அரசியலுக்கு வரும் தைரியம் எதுவும் கிடையாது அவருக்கு நாட்டை விட மக்கள் நலத்தை விடசொந்த நலமே முக்கியமானது
அந்தக் காலக்கட்டத்தில் அவர் படங்கள் எதிர்பார்த்த வசூலைத் தர வில்லை திரையுலக வருவாயை தூக்கி நிமிர்த்தவே அந்த மாதிரி பேசினாரேத் தவிர அரசியல் ஆர்வத்தால் அல்ல என்றும் சொல்கிறார்கள்
இந்தக்கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக ரஜினிகாந்த் நாட்டின் மேல் அக்கரையுடையவராக இருந்திருந்தால் கோவை குண்டு வெடிப்புக்களுக்கு கண்டணம் தெரிவித்திருக்க வேண்டும் மாறாக அப்போதும் உம்மணாம் மூஞ்சியாக இருந்து விட்டு மணிரத்தினம் வீட்டில் குண்டு வெடிப்பு நடந்தபோதுதான் வாய்திறந்தார்
மணிரத்தினம் யாரு? ரஜினியின் மனைவிவழி உறவினர் அதுவும் இல்லாமல் சக சினிமாக்காரர் பலவகையிலும் தொடர்பில் உள்ளவர் அதனால்தான் அவர் மனம் பதைத்தது கோவையில் செத்தது சாதாரண பொதுஜனம் தானே! அதனால் ரஜினிக்கு எந்த தனிப்பட்ட பாதிப்பும் இல்லையே என்றும் பேசப்படுகிறது
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இன்றைக்கு இருக்கின்ற அரசியல்வாதிகளைவிட ரஜினிகாந்த் எவ்வளவோ பரவாயில்லை,
தனது திரைப்படத்தால் நஷ்டமடைந்த தியேட்டர் முதலாளிகளின் இழப்பீட்டு தொகையை திரும்ப கொடுத்து சரி செய்தார், தனது ரசிகர்மன்றம் மூலம் பல சமூக பணிகளை செய்து வருகிறார், தனது பெயரில் இயங்குகின்ற ரசிகர்மன்றத்தை தன் தலையீடோ. தன்னை சார்ந்தவர்களின் குறுக்கீடோ இல்லாமல் சர்வ சுதந்திரமாக செயல்பட அனுமதித்துள்ள உலகின் ஒரே நடிகர் அவர்தான் என்று ஆதரவு குரலும் ரஜினிகாந்திற்காக இல்லாமல் இல்லை,
தியேட்டர் முதலாளிகளுக்கு பணத்தை திரும்ப கொடுத்தது எல்லாம் வியாபார தந்திரம் அப்படி செய்தால் தான் அடுத்த படத்தை தைரியமாக யாரும் வாங்குவார்கள், இதில் நாட்டு சேவை எங்கே இருக்கிறது ரசிகர் மன்ற நற்பணி மன்றத்திற்கு சர்வ சுதந்திரம் என்பது எல்லாம் கூட வெறும் மாயா ஜாலம்தான், மன்றத்திற்காக. மன்ற உறுப்பினருக்காக தன் பணத்தில் 10 பைசா கொடுத்திருப்பாரா ? இதுவரை என்ற பதிலும் சொல்கிறார்கள் பலர்,
காவேரி நீர் பிரச்சனையில் தமிழக திரையுலகமே திரண்டு உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தியபோது அவர் எங்கிருந்தார் என்றே தெரியவில்லை,
நாலா புறமும் இருந்து கண்டன கணைகள் மாறி மாறி தாக்கியவுடன் ஒன்மேன் ஷோபோல் ஒரு உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார், கண்டனக்கனைகளின் முனையை மழுங்கடிப்பதற்காக கர்நாடகாவிற்கு எதிரான சில கருத்துக்களை வீர ஆவேசமாக பேசவும் செய்தார்.
கன்னடர்களின் பகைமை. இதனால் வந்துவிடுமோ என்று அச்சப்பட்டு அவசர அவசரமாக பெங்களூர் சென்று வழவழா கொழகொழா என்று பேசி சிவாஜி பட ரிலீசுக்கு வழியும் செய்துவிட்டு வந்தார்,
இவ்வளவு ஏன் ? நடைபெற முடியாத. நடப்பதற்கு சாத்திய மற்ற தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தை அரசியல்வாதிகள் உருவாக்கி நாடெங்கும் நாடகம்போல் நடித்துக் கொண்டிருந்த வேளையில் அதன் உச்சக் காட்சியாக ஒருகோடி ரூபாய் நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார்,
அதை இன்றுவரை கொடுத்தாரா ? யாராவது பெற்றுக்கொண்டார்களா என்று இதுவரை மக்களுக்கு தெரிந்தபாடில்லை, இப்படிப்பட்ட சுயநலக்காரர் அரசியலுக்கு வராமல் இருப்பதே நாட்டிற்கு நல்லது என சிலர் கூறுகிறார்கள்,
சசிகலாவோடு கூட்டுசேர்ந்து தமிழ்நாட்டையே ஜெயலலிதா கொள்ளையடித்தது பெரிய தவறல்ல,
இன்று திருக்குவளையாரின் வாரிசுகள் கூட்டாக சேர்ந்து தமிழ்நாட்டை மயான பூமியாக ஆக்கிக் கொண்டிருப்பதும் தவறல்ல.
நேற்று கட்சியை ஆரம்பித்த விஜயகாந்த் தனது மனைவிக்கும். மைத்துனருக்கும் அதிகாரம் கொடுத்தது. தன் ஜாதிகாரர்களுக்கு மட்டுமே கட்சியில் உயர்ந்த பதவிகளை கொடுத்தது, ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இன்னபதவிக்கு இவ்வளவு கப்பம் கட்டவேண்டும் என்று நிர்ணயம் செய்திருப்பதும் தவறல்ல,
ஆனால் அரசியலுக்கு வராதபோது தனிப்பட்ட மனிதரான ரஜினிகாந்தின் சில செயல்பாடுகள் மட்டுமே விமர்சித்து அவரை ஓரம்கட்ட நினைப்பது எந்தவகையில் நியாயம் என்று சிலர் குமுறுகிறார்கள்,
நிச்சயம் இந்த குமுறல் தவறு என்று சொல்லிவிடமுடியாது, காரணம் ரஜினிகாந்தை பெரிய இயக்கமாகவே மக்கள் பார்த்தாலும் அவர் இன்னும் தனி மனிதன் தான், எந்த கட்சியிலும் சேரவும் இல்லை, எந்த கட்சியையும் துவக்கவும் இல்லை,
அப்படி அவர் செய்யாத வரையில் அவரின் செயல்பாடுகள் பொது நோக்கில் பார்ப்பது தவறு, பக்கம் சாராமல் சிந்தித்து பார்த்தோம் என்றால் செல்வி ஜெயலலிதா.திரு கருணாநதி. திரு விஜயகாந்த் இவர்களை விட திரு ரஜினிகாந்த் எவ்வளவோ உயரத்தில் இருக்கிறார், அவரிடமிருந்து நன்மை வரும் என்று எதிர்பார்ப்பது சாதாரன மனிதனுக்கு சகஜமான ஒன்றுதான்,
ரஜினிகாந்தால் நன்மை வருகிறதோ இல்லையோ ? அவரை வைத்து பலர் நன்மை அடைய முயற்சிக்கிறார்கள்,
தேசம் முழுவதும் தனது கட்சிக்கு புத்துயிர் ஊட்ட திரு, ராகுல் காந்தி விரும்புகிறார், குறிப்பாக தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைக்கவேண்டும் என்று உறுதி கொண்டிருக்கிறாராம், அதற்காக ரஜினிகாந்த் என்ற மந்திரக்கோலை பயன்படுத்தினால் பல மாங்காய்களை பழுக்கவைக்கலாம் என்று ராகுல் காந்திக்கு சொல்லப்படுகிறதாம்,
அதற்காக பலமுறை ராகுல்காந்தியின் விசுவாசிகள் ரஜினிகாந்தை சந்தித்திருக்கிறார்களாம், இது ஒருபுறம் இருக்க தேசிய கட்சியான பா,ஜ,க, ரஜினிகாந்த் என்ற யானை கிடைத்தால் தமிழகத்தை ஒரு கலக்கு கலக்கலாம் என்று வரப்பு மேட்டில் தவமிருக்கும் கொக்குபோல காத்திருக்கிறார்களாம்,
இதில் எது உண்மை. எது பொய். எது கட்டிவிடப்பட்ட புரளி என்று நமக்கு தெரியாது, ரஜினிகாந்திற்கும், அந்தந்த கட்சிக்காரர்களுக்குமே வெளிச்சம்,
ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம் ரஜினி இப்போதாவது குழப்பம் குளறுபடி இல்லாமல் முடிவெடுப்பதை விட்டு விட்டு தனது வழக்கமான சொதப்பலான முடிவை எடுத்தாரென்றால் வரலாற்றுக்கு அவரால் ஏற்பட்ட திணறலை தீர்க்கவே முடியாது
நேற்று கட்சி ஆரம்பித்த விஜயகாந்தே தமிழ்நாட்டு முதல்வராக வேண்டு மென்று கனவு காணும் போது முதலமைச்சர் பதவி கொடுத்தால்தான் கூட்டணி என்று சவால் விடும்போது விஜயகாந்தின் முன்னோடியான ரஜினிகாந்த் மத்தியில் அதிகாரம் பெற நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது,