யார் ஞானி 11
நந்தவனத்தில் பூத்திருக்கும் ஒரு சிறிய பூ. காலையில் மலர்ந்து மாலையில் வாடிப்போகும் ஒரு சின்னஞ்சிறிய மலர். இது தான் மனித வாழ்க்கை மலர் செடியில் பூத்து செடியிலேயே வாழ்ந்து, அங்கேயே வாடியும் விடலாம் அல்லது பறிக்கப்பட்டு மங்கையர்களின் கூந்தலை அழகும் படுத்தலாம். தலைவர்கள் கழுத்தில் மாலையாக விழலாம். இறந்து போனவர்களுக்கு இறுதி மரியாதையாகவும் மலர்கள் வரலாம். ஆனால், அந்த மலருக்கு அப்போதெல்லாம் கிடைக்காத சிறப்பு. அது தெய்வத்தின் சன்னதியில் மாலையாக அர்ச்சனை புஷ்பங்களாக வருகிற போது தான் சிறப்படைகிறது மற்றவர்களால் வணங்கவும் படுகிறது. மனித வாழ்க்கையும் அப்படித்தான். விதி என்ற நதி வழி பயணம் செல்லுகிற நமது வாழ்க்கை பள்ளத்தில் தேங்கி நின்றாலும், சுழற்சியில் அகப்பட்டுக் கொண்டாலும் சமுத்திரத்தில் போய் கலந்துவிட்டாலும், பெரிய சிறப்பை கண்பது இல்லை. நம்மை படைத்த பரம்பொருளை தேடி அதனை நோக்கி சரணாகதி அடையும் போது தான் வாழ்வின் நிஜ தத்துவம் பிரகாசம் அடைகிறது.
உலகில் உள்ள அனைத்து நாடுகளின் உண்மையான இயல்புகளை ஆராய்ந்து பாருங்கள். பிரிட்டிஷ்காரனுக்கு வியாபார புத்தி இருக்கும். அமெரிக்கனுக்கு எல்லோரையும் ஆள வேண்டும் என்ற ஆதிக்க வெறி இருக்கும். ஜப்பான் காரனுக்கு எது எப்படி நடந்தால் என்ன? நமது வேலையை கவனிப்போம் என்ற உழைக்கும் புத்தி இருக்கும். நமது இந்தியர்களின் இந்தியாவின் இயற்கை சுபாவம் என்னவென்று சற்று ஆராய்ந்து பாருங்கள். நமது எண்ணத்தில், நமது இரத்தத்தில், நமது சரீரத்தில் ஆன்மீக சிந்தனை மட்டுமே ஆழமாக ஓடுவதை மிக நுட்பமாக அறிவீர்கள். இந்த நாட்டில் மட்டும் தான் கொலைக்காரர்களும், மகாத்மாக்களும் இறைவனை பற்றிய தத்துவத்தை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். நமது வாழ்நாள் முழுவதுமே நமது நாட்களில் நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளுமே ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டே எழுப்பபட்டிருப்பது என்பதை நாம் உணர வேண்டும்.
குருஜி இப்படி ஒரு விளக்கம் கொடுத்தவுடன் எனக்கொரு கேள்வி தோன்றியது. நமது வாழ்வில் ஒவ்வொரு செயலுமே ஆன்மீகமானதா? நிற்பதுவும், நடப்பதுவும், உண்பதுவும், உறங்குவதும், புணர்ச்சியில் ஈடுபடுவதும் ஆன்மீகமா? இவைகள் எப்படி ஆன்மீகமாகும்? இது ஒவ்வொரு உயிருக்கும் அன்றாடம் நடக்கும் சாதாரண நிகழ்வு. இதில், ஆன்மீக சாயத்தை எப்படி பூச இயலும்? அப்படி பூசுவது இயற்கைக்கு முரணாக அமையாதா? என்று தோன்றியது. இந்த கேள்வியை மனதிற்குள் வைக்காமல் குருஜியிடம் கேட்டு விட்டேன். அவர் என்னை அர்த்தபுஷ்டியோடு ஒருகணம் பார்த்தார். பிறகு தமக்கே உரிய எளிய நடையில் என் சந்தேகத்தை நிவர்த்திக்க துவங்கினார்
நாம் தினசரி உணவருந்துகிறோம் சாதத்தில் முதலில் குழம்பு போட்டு கொள்கிறோம். குழம்பில் காய்கறி பருப்பு எல்லாம் கலந்து இருக்கிறது. ஒருவகையில் சொல்ல போனால் அனைத்தும் சேர்ந்து குழம்பி இருக்கிறது தெளிவு இல்லாமல் இருக்கிறது. அதனால், தான் இதற்கு குழம்பு என்று பெயர் வைத்தார்கள். இந்த குழம்பு நமது மனதை காட்டுகிறது. ஆசையால், மோகத்தால், வேகத்தால், விவேகத்தால், பாசத்தால் நாம் குழம்பி கிடக்கிறோம். குழப்பம் முடிந்தவுடன் ஓரளவு தெளிவு வருகிறது. இறைவன் அருளால் நன்மை, தீமையை உணர்ந்து கொள்கிறோம். இதனால் நமக்கு சில சுகங்கள் கிடைக்கிறது. உணவிலும் குழம்பிற்கு பிறகு மோர் சேர்த்துக் கொள்கிறோம் மோர் என்பது என்ன? அது பாலாக இருக்கும் போது அதில் வெண்ணெய் இருக்கிறது. நெய் இருக்கிறது. தயிர் இருக்கிறது அவைகளை எல்லாம் கடைந்து மோரை தனியாக எடுத்து விட்டோம். அதாவது மன குழப்பதிற்கு காரணமான ஆசைகளை கடைந்து, மனதை மட்டும் தனியாக எடுத்தது போல மோரை பிரித்து எடுத்து விட்டோம்.
மோர் சாதத்திற்கு பிறகு, அதாவது மனதை ஆசையிலிருந்து பிரித்து எடுத்த பிறகு, பாயசம், வடை சேர்க்கிறோம். இது தான் நமக்கு கிடைக்கும் சுகம் இறைவனை உணர்ந்து விட்டால் ஏற்படுகிற ஆனந்தம். இந்த ஆனந்தத்தை அனுபவிக்க அனுபவிக்க மனம் இன்னும் தெளிவடைகிறது. இறுதியில், ரசம் சாதம் எடுக்கிறோம். ரசம் உணவில் உள்ள கடினத் தன்மைகளை போக்கி எல்லாவற்றையும் செரிமானம் அடையவைக்கிறது. ரசம் என்பது கலப்படமே இல்லாத சரணாகதி. இறைவனிடம் முற்றாக சரணடைந்த பிறகு அவனோடு நாம் செரிமானம் அடைந்து கலந்து விடுவது தானே அதாவது முக்தி அடைந்து விடுவது தானே இயற்கை. இது தான் நமது உணவில் உள்ள தத்துவம். உணவுகளை உண்ணுகிற முறையிலேயே இறை தத்துவத்தை பின்னணியாக வைத்த இந்தியர்கள் பிள்ளை பெறுவதிலேயும் சாவிலும் அதே தத்துவத்தை தான் பின்புலமாக கொண்டிருப்பார்கள் என்பதை மீண்டும் மீண்டும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.
எந்த நாட்டவருக்கும் இல்லாத இந்த இயல்பு புலனறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களின் மீது அதி தீவிரமான நாட்டமுடைய இந்த இயல்பு நமக்கு மட்டும் எப்படி வந்தது? ஏன் வந்தது? ஆன்மீகமான புனித உணர்வும், தெய்வீகமான அனுபவமும் பெற்ற பலநூறு மகான்கள் இந்த மண்ணிலே பிறந்து தங்களது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து இன்றும் அந்த ஞான பரம்பரையின் தொடர்ச்சி நடந்து கொண்டே இருப்பதனால் தான் இந்த நாட்டு பிச்சைக்காரனும், பிரதம மந்திரியும் ஆன்மீக நாட்டம் உடையவர்களாக இருக்கிறார்கள். சூரியனுக்கு இணையான பிரகாசம் எவற்றிலும் இல்லை என்பது போல வேறு யாருக்கும் ஈடு இணையே இல்லாத வல்லமையும் அருளும் பொருந்திய மகான்கள் பலர் இந்த நாட்டில் தோன்றி இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒவ்வொருவருடைய செயலிலும் ஆயிரம் சாக்ரடீஸ் பல்லாயிரம் ஏசு கிறிஸ்து அடங்கி இருக்கிறார்கள் என்றால் அது மிகை இல்லை. அப்படிப்பட்ட ஞானியர்களில் மிகவும் தற்காலத்தில் வாழ்ந்து, தமது வாழ்க்கையால் வார்த்தைகளால் தேசத்தின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் முதன்மையானவர். ஈடு இணை இல்லாதவர் என்று குருஜி சென்ற அத்தியாயத்தில் வெள்ளையனை துறத்திய காவி மனிதர் என்று குறிப்பிட்ட ஞானியின் திருப்பெயரை உச்சரித்தார்.
நான் குருஜியிடம் கேட்டேன். ராமகிருஷ்ண பரமஹம்சரை அவரது சீடர்கள் குருதேவர் என்று அழைக்கிறார்கள். அவரை போற்றுகிறவர்கள் மிகப்பெரிய மகான் என்கிறார்கள். அவரின் பக்தர்களோ அவரே கடவுள். ராமனாகவும், கிருஷ்ணனாகவும் இந்த பூமியில் அவதாரம் செய்த மூலப்பரம்பொருளே பரமஹம்சராக அவதாரம் செய்தது. எனவே அவர் குருவும் அல்ல. ஞானியும் அல்ல. தன்னிகரற்ற பகவான் என்கிறார்கள். உண்மையில் ராமகிருஷ்ணர் யார்? அவரை எப்படி பார்க்க வேண்டும்? அவரது கருத்துக்களை எப்படி அணுகவேண்டும்? இந்த கேள்வி குருஜியை நிச்சயம் சந்தோசப்படுத்தி இருக்க வேண்டும். நல்ல கேள்வியை கேட்டாய் என்று கூறி தனது இருக்கையில் வசதியாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு பதில் சொல்ல துவங்கினார்.
வேதங்களில் மந்திரங்களை சொன்ன அல்லது கண்டறிந்த ஆன்மீக உணர்வு மிக்க மஹா புருஷர்களை ரிஷிகள் என்று அழைத்தார்கள். இதே ரிஷிகள் புராண காலத்தில் இறைவனின் அம்சம் பொருந்திய அவதாரங்களாக கருதப்பட்டார்கள். சாதாரண மனிதர்களின் அறிவு புலன்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற போது புலன்களையும் தாண்டிய பரம்பொருளை அறிந்து கொள்ளுகின்ற ஆற்றல் சிலருக்கு இருந்தது அவர்கள் தங்களது அனுபவங்களை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருப்பதை வேத கால மனிதன் அறிந்து அவர்களுக்கு ரிஷிகள் என்ற பட்டத்தை கொடுத்து அழைத்தான். காலம் செல்லச் செல்ல மனிதன் பல்வேறுபட்ட ரிஷிகளை சந்தித்தான். அந்த ரிஷிகளின் ஆன்மீக உணர்ச்சியில் ஏற்றத் தாழ்வு இருப்பதை அவன் புரிந்து கொண்டான். சில ரிஷிகள் சூரியனை போல் சுயப் பிரகாசம் கொண்டவர்களாகவும், சிலர் சந்திரனை போல வெளிச்சத்தை இரவல் வாங்கி பிரகாசிப்பதை போல் இருப்பதாகவும் வேறு சிலர் மிகச் சாதாரண மின்மினிகளை போல இருப்பதையும் உணர்ந்து கொண்டான். இதனால் ஆற்றலுக்கு ஏற்றவாறு ரிஷிகளை வகைப்படுத்த துவங்கினான்.
நமது இந்தியாவில் நியாயம், வைசேடிகம், மீமாம்சம் என்ற தத்துவ வகைகள் உண்டு. அவற்றில் சாங்கியம் என்பது மிகச் சிறந்த நுட்பமான தத்துவ பிரிவாகும். அந்த சாங்கிய தத்துவப் பிரிவை சேர்ந்த அறிஞர்கள் மேலே சொன்ன ஞானிகளை கல்ப நியாமக ஈஸ்வரன், ஈஸ்வர கோடி என்று இரண்டு வகைகளாக பிரித்தார்கள். அதாவது உண்மை, ஒழுக்கம், பக்தி, தியாகம் இவைகள் இருந்தாலும் கூட இறைவனை அடைய வேண்டிய சிந்தனையை சற்று தூரத்தில் வைத்து விட்டு உலகத்தை திருத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை மனதில் வைத்து செயல்படும் ரிஷிகளை கல்ப நியாமக ஈஸ்வரர்கள் என்றும் இறைவனை அடைய மட்டுமே வேண்டும் என்று நினைப்பவர்களை ஈஸ்வர கோடிகள் என்றும் பிரித்தார்கள். இவர்களில் யார் சிறந்தவர்? யார் உயர்ந்தவர்? என்று கேள்வி கேட்பது மிகவும் தவறு. காரணம் இருவருமே இறைவனின் தன்மையை முற்றிலும் அறிந்தவர்களாக இருந்தார்கள். அதனால் தான் இவர்களை வேதகால மனிதர்கள் வகைப்படுத்தி வழிபட்டார்கள். அவர்களின் கருத்துப்படி தங்களது வாழ்க்கையையும் அமைத்து கொண்டார்கள்.
இந்த காலத்திற்கு பிறகு அதாவது வேதாந்த அறிவு விற்பன்னர்களால் மட்டுமே பெறமுடியும். சாதாரண மனிதர்கள் கடவுளின் பேரில் அன்புதான் காட்ட இயலும் என்ற பக்தி வளர்ந்த காலத்தில் இறைவனை எங்கும் நிறைந்தவனாகவும், எல்லா உயிர்களின் மொத்த வடிவமாகவும் வழிபட துவங்கினர். புலன்களை அடக்கி, ஆழ்ந்த பக்தியோடு இறைவனை தியானிப்பதன் மூலம் ஞானமும், யோகமும் பெறலாம் என்று தீவிரமாக நம்பினார்கள். ஞானமும், யோகமும் பெற்றவர்களின் இதயத்தில் இறைவன் குடியிருக்கிறான். அவர்கள் இறைவனின் அம்சமாக இருக்கிறார்கள் என்ற சிந்தனை வளர்ந்த போது தெய்வம் மனித உடம்பில் நடமாடும் தெய்வமாக வரும் என்ற அவதார கொள்கை வேர் விட்டு வளரத் துவங்கியது. நான் வாழ முடியாத வாழ்க்கையை என்னால் முடியாத செயல்படுத்த முடியாத கட்டுத்திட்டத்தை நான் கடைபிடிக்க முடியாத சத்தியத்தை கடைபிடிப்பவன் ஞானி அவனே! ரிஷி அவனே! கடவுளின் வடிவம் என்ற சிந்தனை வளர்வதற்கு குரு வழிபாடு ஆச்சார்யா வந்தனை ஆகியவைகள் மூலகாரணங்களாக இருந்தன என்றால் அது மிகையில்லை.
குரு வழிபாட்டில் முன்னேறியதும், நான் மதிக்கின்ற குருவோடு என்னை நேசிக்கின்ற குருவோடு, மங்களவடிவிலான இறைவன் இருக்கிறான் என்று நம்புவதற்கு, மனிதர்களுக்கு அதிக காலம் பிடிக்க வில்லை. எனவே, மனித வடிவில் கடவுள் வருவான் என்ற நம்பிக்கை வேத காலம் துவங்கி உபநிஷத காலத்தில் வளர்ந்து, புராணகாலத்தில் செழிப்படைந்து இன்று நமது காலத்தில் உண்மையாக இருக்கிறது. எனவே அறிவை, ஞானத்தை வாழ்க்கை நெறிமுறையை வகுத்து தருவதில் ராமகிருஷ்ண பரமஹம்சர் குருதேவராக இருக்கிறார். ஒவ்வொரு சாஸ்திரத்தையும், தனது வாழ்நாளில் வாழ்ந்து காட்டி அனைத்தும் சத்தியமே என்ற அனுபவத்தை உண்மையாகவே நமக்கு தந்திருப்பதனால் அவர் ஞானியாக இருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு காட்டுவதில், அருள் மலை பொழிவதில், அனுக்ரகம் செய்வதில், அடைக்கலம் தருவதில் சமுத்திரமாக இருப்பதனால் அவர் பகவானாக இருக்கிறார். எனவே அவரை பூமிக்கு வந்த தெய்வமாக, கண்ணெதிரில் நடமாடிய கடவுளாக கருதுவதில் எந்த தவறும் இல்லை என்று குருஜி கூறினார்.
சுவாமி விவேகானந்தரை தொட்டவுடன் அவருக்கு இறை தரிசனத்தை ராமகிருஷ்ண பரமஹம்சர் காட்டினாராம். இவரே கடவுள் எனும் போது தன்னைத் தானே கடவுள் என்று விளங்க வைக்காமல் வேறு வகையில் எதற்காக காட்டவேண்டும். மேலும் கடவுளை இவர் உணர்த்தினார் என்றால், இவரும் கடவுளும் வேறு வேறு என்பது தானே பொருளாக வருகிறது. பிறகு இவரை எப்படி கடவுளாக ஏற்றுக் கொள்வது? என்று குருஜியிடம் எனது அடுத்த வினாவினை கேட்டேன். அதற்கு அவர் கொடுத்த விளக்கம் மிக சுவையாக இருந்தது அதை அடுத்த பதிவில் காண்போம்...
தொடரும்...