Store
  Store
  Store
  Store
  Store
  Store

கண்ணன் அழைப்பது கேட்கிறதா...?


கிருஷ்ணன் சுவடு 8


   பாரதப் போரை துவங்கி, பூமியின் பாரத்தை குறைத்து, நீதியை நிலைநாட்ட துவங்கிவிட்ட கண்ணன், மனிதர்கள் அனைவரையும் கடமை செய்ய சொல்கிறான், கர்மம் புரிய தூண்டுகிறான். சுடுகின்ற வரையில் தான் நெருப்பை நெருப்பு என்கிறோம். அதில் சூடு இல்லாத போது கரித்துண்டு, சாம்பல் என்று ஒதுக்கி விடுகிறோம். அதே போல, உயிர்கள் செயல்படுகிற வரையில் தான் அதன் பெயர் உயிராக இருக்கிறது. இல்லை என்றால் அது பிணமாகி விடுகிறது. செயல்புரிவதற்கு மட்டும்தான் ஜீவன்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். செயல்படவேண்டியது உயிர்களின் உரிமை அதை எந்த நிலையிலும் நிறுத்தி விடுவதற்கு அவைகளுக்கு உரிமை கிடையாது.

கடமையாற்ற வேண்டும், செயல்புரிய வேண்டும், கர்மம் செய்ய வேண்டும் என்பதற்காக எல்லாவிதமான செயலையும் நற்செயல் என்று கூறிவிட முடியுமா? மாலை போட்டு வரவேற்க வேண்டிய செயலும் இருக்கிறது. பாடை கட்டி வழியனுப்ப வேண்டிய செயலும் இருக்கிறது. எனவே எது தக்கது? எது தகாதது என்பதை அறிந்து செயலாற்ற வேண்டும். அப்படி செயலாற்றுவதற்கு அடிப்படையாக ஞானம் வேண்டும். அதனால் தான் கண்ணன் கடமையை விட ஞானம் சிறந்தது என்று கூறுகிறான். இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வரும் அர்ஜுனனை போர் செய்ய தூண்டுகிறபோது, கடமை முக்கியம் கடமைதான் உயிரென்று கண்ணன் சொன்னான். பிறகு கடமையை விட, ஞானமே சிறந்தது என்று எப்படி கூறுகிறான்? என்ற கேள்வி விஸ்வரூபமாக எழுந்து நிற்கும்.

இந்த உலகில், ஜீவர்கள் அனைவரும் இன்புற்று வாழ்வதற்கு இரண்டு வகையான நன்னெறிகள் வாசுதேவ கிருஷ்ணனால் கூறப்படுகிறது. அதில் மனிதனோ, மனிதனைப் போன்ற பிற உயிர்களோ எப்போதுமே செயலற்று ஜடமாக இருப்பது இல்லை. அப்படி செயலற்று இருந்தால் எந்த பயனையும் அடைய இயலாது. இயற்கையின் ஆற்றலால் எல்லா உயிர்களும் தன்னையும் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் கூட செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால், மனிதன் மட்டும் இந்திரியங்கள் இழுக்கின்ற இழுப்புக்கு இசைந்து செயலாற்றுகிறான். அவனது காது, இசையை கேட்க ஆர்வம் கொண்டால் ராகங்களை தேடி ஓடுகிறான். அறுசுவை உணவிற்காக அவன் நாவு போராட்டம் நடத்தினால் அதற்காக ஓடுகிறான். கவர்ச்சியான காட்சிகளை கண்கள் பார்க்க விரும்பினால், அதற்காகவும் ஓடுகிறான். மூக்கின் சுவைக்காகவும், தொடு உணர்ச்சியின் வேட்கைக்காகவும், ஓடி கொண்டே இருக்கிறான். இப்படி அவன் விரும்புகின்ற பொருகளை நோக்கி ஓடி ஓடி மூடனாக, அசடனாக, பொய் ஒழுக்கம் உடையவனாக மாறி விடுகிறான். அதனால் தான் மனிதனுக்கு மட்டும் நல்ல விதமான கடமையாற்ற முதலில் ஞானம் வேண்டுமென்று இறைவன் சொல்கிறான்.

நமக்கென்று விதிக்கபட்டிருக்கின்ற கடமையை முழுமூச்சாக செய்ய துவங்க வேண்டும். செயல்கள் எதுவும் செய்யாது சும்மா இருப்பது எந்த வகையிலும் நல்ல பயிர்களை அறுவடை செய்ய உதவாது. அதனால் பற்றுகளை துறந்து, எதிர்பார்ப்புகளை விட்டு விட்டு, ஆசைகளின் பக்கம் போகாமல் செயல்பட வேண்டும். அப்படி செயலாற்றுவதன் பெயர்தான் கடமை செய்வது என்பதாகும். வேள்விகள் செய்வது புனிதமிக்க செயல். அந்த செயலை செய்யும் மனிதர்களும், தேவர்களும் போற்றப்பட வேண்டியவர்கள். ஆனால், வேள்வியினால் இந்த பலனை பெறலாம். வேள்வியின் மிச்சத்தை உண்பதனால் பாவத்திலிருந்து விடுபடலாம் என்று நினைப்பது ஞானம் இல்லாத மூடர்களின் எண்ணமாகும். உயிர்கள் உணவிலிருந்தும் உணவு மழையிலிருந்தும் மழை வேள்வியிலிருந்தும் உருவாவதாக கீதையின் விஞ்ஞானம் கூறுகிறது. எனவே வேள்வி என்பது செயலாக விரிகிறது அந்த செயல் ஞானத்தை கூறும் வேதத்திலிருந்து வந்தது. வேதம் பரமாத்மாவிலிருந்து வந்தது. எனவே பரமாத்மா, பரப்பிரம்மம், கடவுள் இறைவன் என்பதெல்லாம் கூட செயல் என்பதன் ஆதார தத்துவமாகும்.

ஆசை இல்லாமல் செயல்படுபவனை மேலானவன், மகத்தானவன் மகாத்மா என்று உலகம் கொண்டாடுகிறது. தான் மதிக்கின்ற ஒருவனை போலவே உலகமும் செயல்பட நினைப்பது இயற்கையாகும். இதனால், ஆசையை துறந்த மகாத்மாக்களின் பின்னால் உலகம் செல்வதற்கு எப்போதும் தயாராக இருக்கிறது. சாதாரணமான மனிதனும் செயல்படுகிறான். அசாதாரனமானவனும் செயலாற்றுகிறான். சாமான்யன் செயல்படும் போது மயங்குகிறான், கலங்குகிறான். வழி தெரியாமல் வகையறியாமல் தடுமாறுகிறான். ஆனால், அசாதாரணமான ஞானி கலங்குவது இல்லை. தடுமாற்றம் இல்லாமல் ஞானியின் செயல் இருப்பதனால் அவனை மிக சுலபமாக முன்னோடியாக மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் மகாத்மா என்ற நிலையை நோக்கிச் செல்ல வேண்டியவன் மலையடிவாரத்தில் கேட்பாரற்று கிடக்கும்,  கூழாங்கற்களைப் போல யார் வாழ்க்கையும் முடிந்துவிட கூடாது. மலை உச்சியில், சிகரத்தில் பட்டொளி வீசி பறக்கும் பதாதைகள் போல அனைவர் வாழ்க்கையும் சுடர்விட வேண்டும். அதற்கு ஞானத்தோடு செயல்பட வேண்டும் இது தான் கண்ணனின் விருப்பம்.

ஆர்ப்பரிக்கின்ற கடல், ஆரவாரத்தோடு சுழன்று வீசுகிற சூறாவளி, வானத்தை நோக்கி எழும்பி நிற்கும் பிரம்மாண்ட மலை, அதிலிருந்து குதித்து விழும் அருவி, சலசலத்து ஓடும் நீரோடைகள், ஆறுகள், ஏரி, குளங்கள் சூரிய வெளிச்சமே உள்ளே வராத அடர்ந்த பச்சைக் காடுகள், அழகான மலர்கள், ஊர்ந்து செல்லும் பாம்புகள், குதித்து விளையாடும் வெள்ளை முயல்கள், சிறகடித்து பறக்கும் வானம்பாடி பறவைகள், கபடமே இல்லாது சிரிக்கும் அழகிய குழந்தைகள், இவைகள் அனைத்துமே இயற்கையின் அற்புதமான படைப்புகள். அண்டம் முழுவதும் வண்ண கோலங்களை போட்டு கொண்டிருக்கின்ற இயற்கையும், மனிதனது ஆத்மாவும் ஒன்றே தான். மனிதனின் செயல்கள் அனைத்தும் இயற்கையின் குணங்களிலிருந்து வந்தவைகளே. ஆனால், மனிதன் அது தனக்குள் இருந்து வெளிப்பட்டதாக நினைக்கிறான். இதனால், அவனுக்கு அகங்காரம் வருகிறது. தனது செயல் மீது பற்றுதல் வருகிறது. தன்னைச் சுற்றி இருக்கும் பொருட்களின் மீது ஆசை வருகிறது. ஆத்மாவையும், இயற்கையையும் அறிந்த ஞானி பற்று நீங்கி, எல்லா செயல்களையும் புரிகின்றான். செயல்களின் விளைவுகளை ஸ்ரீ கிருஷ்ணனின் திருவடிகளுக்கே அர்ப்பணம் செய்கிறான். அதனால் அவன் ஞானி என்ற தேஜஸோடு வெளிச்சமாக பவனி வருகிறான்.

பாரம் ஏற்றிய வண்டியை, மேட்டுப் பகுதியை நோக்கி செலுத்தும் போது இயந்திரம் உறுமுகிறது. மேலே எழுந்து செல்வதற்கு கஷ்டப்படுகிறது. அதே வண்டி பள்ளத்தை நோக்கி இறங்கி வரும் போது, கட்டுப்பாடு இல்லாமல் ஓடுகிறது. தடுத்து நிறுத்துவதற்கு கடுமையாக பாடுபடவேண்டி உள்ளது. பாரம் ஏற்றிய வண்டியும், ஆசைகளை சுமக்கும் வாழ்க்கையும் ஒன்றே தான். புலன்களின் மேல் ஏற்படும் இச்சையால், பொருட்களின் மீது நமக்கு பற்று வந்துவிடுகிறது. பற்றுதலால் இன்பம், துன்பம் உருவாகி வாழ்க்கை என்பது எதிர் நீச்சல் அடிப்பதாகவே ஆகிவிடுகிறது. ஆகவே, நமது சொந்த தர்மத்தை நமக்கென்று விதிக்கப்பட்ட கடமையை செய்தால், வெற்றி தோல்விகளின் மீது உருவாகும் ஈர்ப்பு ஈஸ்வரனின் பாதார விந்தங்களில் முடிவதனால், நமது வாழ்க்கை முழுவதுமே ஆனந்தம் என்ற ஒன்று மட்டுமே நிரந்தர சூரியனாக இருக்கிறது.

வேதங்களின் ஆய்வுபடியும், ஞானிகளின் அனுபவபடியும், மனிதன் என்பவன் முக்குணங்களால் ஆக்கப்பட்டவனாக இருக்கிறான். முக்குணங்களில் ஒன்றான ரஜோகுணம், மனிதனுக்கு விருப்பத்தையும், வெறுப்பையும் தருகிறது. ஆசையும், கோபமும் தான் சகல பாவங்களுக்கும் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. சுடவிட வேண்டிய நெருப்பை, புகை மூடி கொண்டிருப்பது போல, கண்ணாடியின் மேல் அழுக்கு படிந்து, உருவங்கள் தெரியாமல் மறைத்து கொண்டிருப்பது போல, அன்னையின் கர்பத்தில் சுகமாக உறங்கும் சிசுவின் ஞானத்தை, மாயையை மூடிக் கொண்டிருப்பது போல, காமத்தால் மனிதனின் சுத்த அறிவான ஞானம் மறைக்கப்பட்டிருக்கிறது. அந்த காமம் பிறந்தது புலன்கள் என்ற நதிக்கரையில். அதே நதிக்கரையில் தான் மனம் என்ற மோகினியும், புத்தி என்ற ராட்சனும் தங்கி இருக்கிறார்கள். காமம் என்பதே கொடூரத்தின் மறுபக்கம். அந்த கொடூரத்தோடு அரக்கனும், மாய மோகினியும் இணைந்து விட்டால் நிலைமை என்னவாகும்? யோசித்துப் பாருங்கள். எனவே புத்தியை அடக்கினால், மனம் அடங்கும். மனதை அடக்கினால், ஆசை அடங்கும். ஆசை அடங்கினால், புலன் அடங்கும். புலன் அடங்கினால், அண்டசராசரமே அடங்கும். மனிதன் சராசரங்களை ஆள கிருஷ்ணனால் சிருஷ்டிக்கப்பட்டவன்.

அதனால் தான், அர்ஜுனனின் சுயத்தன்மையை விளக்குவது போல, நமது அனைவரின் சுயத்தன்மையை விளக்க வந்த கண்ணன் சொல்கிறான். மனிதன் பெற்றிருக்கின்ற புலன்கள் என்ற இந்திரியங்கள் மிகவும் உயர்ந்தது. அதைவிட உயர்ந்தது மனது. மனதையும் சிறிய குன்றுமணி போல ஆக்கிவிட்டு உயர்ந்து நிற்பது புத்தி. புத்தி என்பதும் எல்லைகளுக்கு உட்பட்டு தான் வளரக்கூடியது. எனவே புத்தியை விட உயர்ந்தது ஆத்மா. எனவே அந்த ஆத்மாவை இன்னதென்று உணர்ந்து ஆத்மாவிற்குள் மறைந்திருக்கின்ற பரம்பொருளை கண்டு தெளிவு பெற்று தன்னோடு சமமாக, தனக்கு தோழனாக நம்மை வரச்சொல்லி, வரச்சொல்லி கண்ணன் அழைக்கிறான். அவனது அழைப்பு யார் காதில் விழுகிறதோ, அவர்கள் பாக்கியவான்கள். அழைப்பை செவிமடுக்காதவர்கள், இசையை ரசிக்க தெரிந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் செவிடர்களே.







Contact Form

Name

Email *

Message *