கிருஷ்ணன் சுவடு 7
மரணத்திற்காக அச்சபடுபவர்கள் யார்? ஆவி விட்ட பின் மேனி பட்ட பின் நெருப்பு சுட்டபின் நிலைப்பது என்ன? விவரிக்க முடியாத இருள் மயமான சூன்யம்தான் மரணத்திற்கு பிறகு ஏற்படுமா? அல்லது சொர்க்கம் என்றும் நரகம் என்றும் மீண்டும் பிறப்பும் என்றும் ஆத்மா இழுத்தடிக்கப்படுமா? அல்லது உடம்பு அழிந்ததோடு உயிரும் அழிந்து விடுமா? சுடுகாட்டு சாம்பலோடும், மண்ணோடும் மனித வாழ்க்கை முற்று பெற்று விடுமா? என்று பல்லாயிரம் கேள்விகளை எழுப்பிக் கொண்டு சாதாரண மனிதர்கள் அல்லல்படுகிறார்கள்.
பிறந்தநாள் முதல் இன்றைய நாள்வரை எனது உடம்பால் சுகம் அனுபவிக்கிறேன். அறுசுவையான உணவு, எனக்கு ஊட்டம் தந்திருக்கிறது. காதல் வாழ்க்கையில் ஆணும், பெண்ணும் புணர்ச்சி வேகத்தில் நான் இன்ப சிகரத்தில் ஏறி நின்றிருக்கிறேன். மயக்கும் அழகும், மதி மயக்கும் மதுவும் எனக்குள் நிற்கவே நிற்காத இன்ப லாகிரியை உதயமாக்கி கொண்டே இருக்கிறது. நான் பெற்ற பணம், எனக்கு கிடைத்த அதிகாரம், ஊரும், உலகமும் என்னைப் போற்றி புகழும் புகழ்ச்சியும், சிறகுகள் இல்லாமல் வானத்தில் பறக்கின்ற அபூர்வ அனுபவத்தை எனக்கு தந்துகொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல், சாவுமணியோசை என் காதில் விழுகிறது.
என் சொந்த பந்தங்கள் என்னை விட்டு ஓடிவிடும். அறுசுவை உணவும், அழகிய ஆடைகளும் என்னால் தொட்டுப் பார்க்க முடியாத அளவிற்கு எட்டத்தில் போய்விடும். கோடி கோடியாக சேர்த்து வைத்திருக்கும் பணத்தால் எனக்கு எந்த இலாபமும் இல்லை. கற்பூரம் காற்றில் கரைவது போல் என் பதவியும், அதிகாரமும் மரணத்தோடு மறைந்துவிடும். ஆகவே, எனக்கு கொடிதினும் கொடிதான மரணமே வேண்டாம் என்று மண்டியிட்டு ஓலமிடுகிறார்கள் ஆத்மாவின் உண்மை நிலையறியாத அப்பாவிகள்.
ஆத்மாவை கண்டு, கேட்டு அனுபவித்த ஞானிகள், இறப்பை பார்த்து அஞ்சுவது இல்லை. இறந்தவர்களுக்காகவும் வருந்துவது இல்லை. காரணம், அவர்களுக்கு தெரியும். யாரும் எப்போதும் இல்லாமல் இருந்த காலம் என்பது கிடையாது. மண்ணில் ஊர்ந்து செல்லுகின்ற சிறிய புழு முதல், மண்ணை ஆளுகிற சக்கரவர்த்தி வரை, காலந்தோறும், யுகந்தோறும் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு இறப்பு என்பதே கிடையாது என்பதை நன்கு அறிந்தவர்கள் அவர்கள் மண்ணில் இருக்கும் உயிர்களுக்கு மரணம் இல்லையா? அவைகள் சாவது கிடையாதா? துள்ளி ஓடுகிற புள்ளி மான் கொடிய புலியின் வாயில் கிடைத்து துள்ளத் துடிக்க செத்துப் போகிறதே அது மரணம் இல்லையா? இரவிவர்மா வின் ஓவியம் போன்று எழிலாக நின்ற மங்கை, நிமிட நேரத்தில் நெருப்பில் விழுந்து சாம்பலாகப் போகிறாளே அதன் பெயர் மரணம் இல்லையா? மரணம் என்பது கண்ணெதிரே நடந்து கொண்டிருக்கும் போது அதை இல்லை என்று மறுப்பது எப்படி ஆத்ம ஞானமாகும்?
மரணமுண்டு அதில் மாற்றம் இல்லை. ஆனால், அந்த மரணம் பஞ்ச பூதங்களில் செயற்கையால் உருவான உடலுக்கு உண்டே தவிர, ஆத்மாவிற்கு கிடையாது. ஒரு ஆத்மா, ஒரு சரீரத்தில் குழந்தைகயாக இருக்கிறது. சிறிது காலத்தில் வளர்ந்து இளமை பருவத்தை அடைகிறது. பிறகு வயோதிகமாக மாறிவிடுகிறது. இந்த இயற்கை மாறுதல் எப்படி நடக்கிறதோ அதுபோல தான் உடலுக்கு மரணமும் ஏற்படுகிறது. எதற்கும் உதவாது பயனற்றுப் போன, மாமிச பிண்டத்தை விட்டு விட்டு ஆத்மா வேறொரு நல்ல உடலைத் தேடி பறக்கிறது. எனவே மரணம் என்பது உடலுக்கு ஆத்மா, காலம் காலமாக மரணமே அடையாமல் சாஸ்வதமாக நிலைபெற்று நிற்கிறது.
இந்த உடம்பில் புலன்கள் இருக்கின்றன. புலன்களால் கிடைக்கும் உணர்ச்சிகள் எதுவும் நிலையாக இருப்பது இல்லை. காலந்தோறும் மாறிக்கொண்டே வருகிறது. இளமை பருவத்தில் சுகமானதாக தெரியும் காமம், முதுமை அடைந்தபிறகு பாரமாக தெரிகிறது. இதுதான் புலன்களின் நிஜமானத் தன்மை. எனவே புலன் உணர்சிகளை உறுதியாக பற்றாமல் சமமாக பாவிக்க பழக வேண்டும். அப்படிப் பழகினால் மனித உடம்பு என்பது பிறப்பதற்கு முன்பு இல்லாதது, பிறந்தபிறகு இருப்பது, பிறவி முடிந்த பிறகு இல்லாமல் போவது, அதனால் அழிந்து போகும் உடம்புக்காக வருந்தவேண்டிய அவசியமில்லை. இருக்கும் பொருள் இல்லாமல் போவதில்லை. மனித உடலை இயக்குகிற ஆத்மா என்றும் இருப்பது அதற்கு மரணம் என்பதே கிடையாது. அது எதனாலும் பாதிப்படையாதது.
ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்குப் போனால், அது கிரகப்பிரவேசம். ஒரு உடம்பிலிருந்து இன்னொரு உடம்பிற்கு போனால் அது புனர்ஜென்மம். எனவே மரணத்தை கண்டு அஞ்சவேண்டியது இல்லை என்பது கண்ணனின் கூற்று. ஆயுதங்களை பிரயோகம் செய்வதனால், உறவினர்கள் அழிந்து போவார்கள். தலைமுறைகள் மாண்டுபோவார்கள். அதனால், நான் போர் புரிய மாட்டேன் என்பது தானே காண்டிபனது வாதம். அதற்கு தான் கண்ணன் கூறுகிறான், மரணம் உடம்பிற்கு, உயிருக்கு அல்ல என்று இத்தோடு மட்டும் கண்ணன் நிற்கவில்லை. பிறந்தது எல்லாம் அழிந்தே தீருமென்றால், இன்று எதிரிகளாக நிற்கின்ற உன் பங்காளிகள் என்றோ ஒருநாள் மாளப் போகிறார்கள். அவர்களது மரணம் நிச்சயிக்கப்பட்டது. அதை யாரும் தடுத்து விட முடியாது. எனவே வில்லை எடு. கணையை தொடு. இலக்கை நோக்கி விடு என்று அவசரப்படுத்துகிறான்.
ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு இலட்சியத்திற்காக பிறக்கிறான். இலக்கு இல்லாத பிறவியே கிடையாது. பூக்கள் தோறும் பறந்து சென்று, தேனை சுவைத்து வாழும் பட்டாம்பூச்சியின் வாழ்க்கைக்கு கூட அர்த்தமுண்டு. கடமை உண்டு. அர்ஜுனன் மகாபாரத யுத்தத்திற்காக சிருஷ்டிக்கப் பட்டவன். போர் செய்வது அவன் கடமை. யுத்த களத்திற்கு இதற்காகவே வந்திருக்கிறான். தான் வந்த நோக்கத்தை விட்டு விட்டு தனது இலட்சியத்தை மறந்து விட்டு வீணான அஹிம்சை பேசுகிறான். இப்போது அது இதயத்திலிருந்து வந்த அஹிம்சை அல்ல. இரக்கத்தால் வெளிப்பட்ட அன்பு அல்ல. சுயநலத்தால் வந்த அஹிம்சை. பற்றுதலால் வந்த பாசம். அதனால் தான் கண்ணன் போலித்தனமான பாச வலையை அறுத்தெறி என்கிறான்.
செயல்புரிவதே உயிர்களின் கடமையாகும். செயல்புரிகிற போது, கிடைக்கின்ற பயனைப் பற்றி அக்கறை கொள்ளக் கூடாது. அதற்காக கடமையை செய்வதையே பயனற்றது என்று கருதி, சும்மா இருந்து விடவும் கூடாது. ஆசைகளை துறந்து, பற்றுதலை விட்டு, வெற்றி, தோல்விகளை எது வந்தாலும் எனக்கு இதமே என்று சமநோக்கோடு நடுநிலை புத்தியோடு செயலாற்றுவதே, வாழ்வதே யோகம் எனப்படுகிறது. வெற்றியையும், தோல்வியையும் இரண்டு கண்களாக பாவித்து செயல்படுகின்ற எவனும் வீழ்ச்சி அடையமாட்டான். வென்றால் வாகை சூடலாம், உலகை ஆளலாம் என்ற எண்ணத்தோடு பயணத்தை தொடர்ந்த எவனும் கரையேறியது இல்லை. இப்படிப்பட்டவன் பிறவி எனும் பெருங்கடலில் மாட்டி தத்தளித்து கொண்டே இருக்கிறான்.
சலனப்பட்டு கொண்டே இருக்கும் நீரோடை போன்ற மனதிலிருந்து, புறப்பட்டு வருகிற ஆசைகளையும், எண்ணங்களையும் துறந்து இன்பம் வரும் போது தலை கால் புரியாமல், ஆடாமலும், துயரம் வரும் போது வாய் விட்டு அலறாமலும், அச்சம், கோபம், மோகம் போன்ற உணர்ச்சிகளை அசட்டை செய்து இருப்பவனுக்கு மட்டும் தான் திடபுத்தி இருக்குமென்று கண்ணன் கீதையில் அர்ஜுனனை குறியீடாக வைத்து, உலகுக்கு உபதேசம் செய்கிறான். பொருட்களின் மீது கவர்ச்சி வருவதால் ஆசை பிறக்கிறது. ஆசை நிறைவேறாமல் போனால், அதை யாரவது தட்டிப் பறிக்க வந்தால், சினம் வருகிறது. கோபம் வந்தவுடன் உடம்பிற்கு மயக்கம் வருகிறது. மயக்கத்தால், நினைவு தடுமாறுகிறது. அதனால் புத்தி நாசம் ஏற்படுகிறது. புத்தி கெட்டுப் போய்விட்டால் அழிவு என்பது ரெளத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்து விடுகிறது. எனவே ஓட்டிற்குள் உடம்பை சுருக்கி கொள்ளும் ஆமையை போல, புலன்களை சுருக்கி கொள். அப்போது உன் பற்று அறுந்துபோகும். அறிவு மலர துவங்கும்.
கடலுக்கு மேல் செல்லும் கப்பலை, காற்று அசைத்து பார்க்கிறது. புரட்டி போட, முட்டி மோதுகிறது. அதே போலதான் இந்திரியம் என்ற காற்றால், மனம் என்ற கப்பல் அலைகழிக்கப்படுகிறது. இந்திரியத்தை அடக்க தெரிந்தவனே, கப்பலை ஓட்ட தெரிந்தவன். நிலையான ஞானம் பெற்றவன், அசைவு இல்லாது அமைதியாக இருக்கும் சமுத்திரத்தில் ஆறுகள் சென்றடைவது போல, ஆசைகள் இல்லாத மனதில், சாந்தியும், சமாதானமும், வைராக்கியமும், ஞானமும் நிலைத்து வாழ துவங்குகிறது. மனிதனது அகங்காரம், ஆசை இல்லாததனால் விறகு இல்லாத நெருப்பு போல அணைந்து விடுகிறது. ‘நான்’ ‘எனது’ என்ற எண்ணம் முற்றிலும் சுட்டெரிக்கப் பட்டபிறகு, கண்ணனின் கமலபாதம் கண்களில் தெரிகிறது. அவனது புல்லாங்குழலிருந்து வரும் பூபாள ராகம் நம் வாழ்க்கை விடியலை துவக்கி வைக்கிறது.