சித்தர் ரகசியம் - 21
மிருகங்களுக்கும், மனிதனுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒரு வகையில் பார்க்கப் போனால் மனிதனிடம் இருக்கும் ஆற்றல்களை விட, மிருகத்திடம் இருக்கும் ஆற்றல் சிறப்பானதாகவும், பெரியதாகவும் இருக்கிறது. யானையின் பலம் மனிதனால் கற்பனை செய்தே பார்க்க முடியாதது. சிறுத்தையின் காலில் இருக்கும் வேகம், மனிதன் பெறவேண்டும் என்றால், பத்து ஜென்மம் எடுத்தாலும் முடியாது. அது நவீனமான விஞ்ஞான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கிறோம் என்று இறுமாப்பு கொண்டிருக்கின்ற மனிதன், இயற்கை சீற்றங்களை பல நாட்களுக்கு முன்பே மிருகங்கள் அறிந்து கொள்ளும் ஆற்றலை கண்டு நாணம் அடைந்திருக்கிறான். பிறகு எந்த விஷயத்தில் நமக்கும், மிருகத்திற்கும் வேறுபாடு இருக்கிறது?
சிந்தனை செய்கின்ற ஆற்றல், சிந்தனையை செயல்வடிவம் படுத்துகிற துணிச்சல், மிருகங்களுக்கு இல்லை. அதனால், மனிதன் கடவுள் படைப்பில் மிக உயர்ந்த சிருஷ்டி என்று மெச்சப்படுகிறான் என்று பலரும் கூறுகிறார்கள் இந்த கூற்று சரியானதாகவே படுகிறது. மனிதனை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது யானை. ஆனால், அந்த யானையால் இதுவரை ஒரு சிறிய சக்கர நாற்காலியை கூட செய்யமுடியவில்லை. சிறுத்தை நம்மை விட வேகமாக ஓடக்கூடியது தான். ஆனால், நமது சிந்தனையில் உதித்த விமானத்தின் முன்னால் சிறுத்தை வெறும் தூசு என்று தெளிவாகிறது. இப்படி மனிதன் தனது சிந்தனையாலும், அறிவாலும் பெற்ற பரிசுகளும் ஞானங்களும், அனுபவங்களும் மிக அதிகம். அவன் தனது அறிவின் அனுபவத்தால், இந்த உலகில் எதுவுமே நிலையாக இல்லை. நிலையாமை மட்டும் தான் இருக்கிறது என்பதை என்றோ அறிந்து கொண்டான்.
நிலையாமை என்றால், அதை இரண்டு வகையாக ஞானிகள் பிரிக்கிறார்கள். ஒருவகை பொருள் நிலையாமை. இன்னொருவகை உயிர் நிலையாமை. இதில் பொருளை பற்றி மனிதன் கவலைப்படவில்லை. பொருளாதாரம் என்பது சுழலுகிற சக்கரத்திற்கு இணையானது. இன்று ஒருபக்கம் இருக்கும் நாளை வேறொரு பக்கம் இருக்கும். நம் கையில் இல்லாமல் நழுவி போனாலும் கூட, எந்தவகையிலாவது அதை திரும்ப பெற்றுவிடலாம் என்று நம்பினான். அதனால், பொருள் நிலையாமையை பற்றி அதிகமாக அவன் அலட்டி கொள்ளவில்லை. ஆனால், உயிர் நிலையாமை என்பது மனிதனை வெகுவாக பாதித்தது.
ஒன்பது ஓட்டை உடைய உடம்பிற்குள் ஓடிகொண்டிருக்கின்ற மூச்சு காற்றானது வெளியில் போய்விட்டால் திரும்ப வரவே வராது. சந்தனமும், ஜவ்வாதும் பூசி அலங்கரிக்கப்பட்ட சரீரம் அழுகி நாற்றம் எடுக்க ஆரம்பித்துவிடும். பாலும், நெய்யும் கொடுத்து வளர்த்த உடம்பை நெருப்புக்கும், மண்ணுக்கும் கொடுத்துவிட வேண்டியது தான். நேற்று வரை அண்ணன் என்றும் அத்தான் என்றும் அழைத்தவர்கள் இன்று பிணம் என்றும், பேய் என்றும் அஞ்சி ஒதுக்குவார்கள். தகப்பனாக இருந்து தற்காக்க வேண்டிய பிள்ளைகளை தவிக்க விட்டு விட்டு மீண்டு வரவே முடியதாத எமபுரிக்கு போய்விடுவோம். எல்லாமே சூனியமாகிவிடும் என்பதை தெளிவாக மனிதன் புரிந்து கொண்டான்.
மனித வாழ்க்கை நிலையற்றது. உடம்பில் உயிர் தங்கும் காலம் மிக குறுகியது என்பதை உணர்ந்து கொண்டவுடன், மரணபயம் என்பது இயற்கையாக வந்துவிட்டது. இறப்பிற்கு பிறகு, நமது உயிர் எங்கே போகும் என்னவாகும், என்று மனிதனுக்கு முற்றிலும் தெரியாது. இதனால், மரணத்திற்கு பிறகுடைய வாழ்க்கை இருட்டாக புரியவே புரியாத புதிராக இருந்ததனால், மரணபயம் இன்னும் அதிகமாகிவிட்டது. மரணத்தை பார்த்து எப்போது மனிதன் அச்சப்பட துவங்கினானோ அப்போதே கடவுள் நம்பிக்கை முளைவிட்டு விட்டது எனலாம். வயது குறையாமல், உடம்பு தளராமல் மரணம் இல்லாமல் மனிதனால் நிலையாக வாழமுடியும் என்ற நிலை வந்துவிட்டால், மரண பயம் என்பது மனிதனிடம் இருந்து போய்விட்டால் கடவுள் நம்பிக்கை என்பதும் காற்றில் கரைந்து விடும். நாத்திகர்கள் கருதுவது போல ஆத்திக சிந்தனைக்கு சாவு மணி அடித்துவிடலாம். ஆனால், இன்று வரையில் சாகாமல் இருக்கும் அறிய வரத்தை எந்த மனிதனாலும் பெறமுடியவில்லை. இனியும் பெறமுடியும் என்ற நம்பிக்கையும் இல்லை எனவே மனிதன் இருக்கும் வரை ஆன்மீக சிந்தனையும் இருந்து கொண்டே தான் இருக்கும்.
தோன்றுவது, வளர்வது இறுதியில் பூஜ்யமாகி அழிந்து போவது, அதாவது மரணிப்பது என்பது உலகத்தின் உள்ள பொருட்கள் அனைத்துக்கும் விதிக்கப்பட்ட பொது விதியாகும். இந்த விதிதான் ஆதிகாலம் தொட்டு இன்றுவரை நடந்துவருகிறது என்பதை நமது வரலாற்று பக்கங்களில் தெளிவாக காணமுடிகிறது. ஒரு நொடி கூட இந்த உலகில் எதுவும் நிலைத்திருப்பது இல்லை. கண்ணுக்கு தெரிபவைகளும், தெரியாதவைகளும் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கிறது. ஆத்மா மட்டும் தான், உயிர் மட்டும் தான், மாறாமல் இருக்கிறது என்று ஞானிகளின் ஒருவகையினர் கூறினாலும், ஆசிய ஜோதி என்று அழைக்கபடுகின்ற புத்தர், அந்த ஆத்மா கூட மாறிக்கொண்டே இருக்கிறது என்று சொல்கிறார். உலக வாழ்க்கை ஓடி கொண்டே இருக்கும் தொடர் நீரோட்டம் என்று ஐரோப்பிய ஞானிகள் கூட கூறுகிறார்கள்.
நாளை இறக்கபோகிறவர்கள் இன்று இறந்தவர்களை பார்த்து அழுவது வேடிக்கை என்றும், முடிசூடும் மன்னரும் காலம் வந்தால் பிடிசாம்பல் ஆவார்கள் என்றும், பட்டினத்தார் அழகாக பாடுகிறார். உலகுக்கே பொதுமறை தந்த வள்ளுவன் கூட உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பதும் போலும் பிறப்பு என்று கூறி நிலையாமைக்கு தத்துவ விளக்கங்களை தருகிறார்கள். அறிவியலும், பலதேசத்து அறிஞர்களின் தத்துவங்களும், வரலாற்று சான்றுகளும் மரணம் என்பது தவிர்க்க முடியாத முடிவு என்று நிலையாமையை உறுதி படுத்துகிறது. இன்னும் ஒருபடி மேலே சென்று உயிர் நிலையாமை என்பது மட்டுமல்ல. உலகில் உள்ள எந்த பொருளுமே நிலையானது அல்ல தோன்றுவது அத்தனையும் அழிந்தே தீரும் மிக கடினமான மலை கூட சிதைந்து சிதைந்து சிறு மணல் துகள்களாக மாறிவிடும் போது, மனித உடலும், உயிரும் எம்மாத்திரம் என்று நிலையாமையை பற்றி மரணத்தை பற்றி ஆதாரம் தந்து சாவு பற்றிய நமது பயத்தை அதிகரித்து விடுகிறார்கள்.
இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும், மகிழ்ச்சியை நாடுகிறது மனிதனை பற்றி மிக குறிப்பாக சொன்னால், அவன் இன்பத்திற்காக இன்பத்தை அனுபவிப்பதற்காக பெரிய போராட்டமே நடத்துகிறான். கனி ரசமாக மதுவை அருந்தி களித்திருப்பது இன்பம் என்று ஒருவன் கூறுகிறான். கன்னியரின் மடிதனில் கிடப்பது இன்பம் என்று வேறொருவன் சொல்லுகிறான். மழலையரின் வாயமுதம் தருவது இன்பம் என்று மற்றவன் கூறுகிறான். மாடி மனை கோடி பணம் பெறுவது இன்பம் என்று இன்னொருவன் தேடி ஓடுகிறான். இப்படி எது இன்பம் என்பதில் ஆயிரம் சர்ச்சைகள் இருக்கலாமே தவிர, இன்பத்தை நாடுவதிலும், தேடுவதிலும் வாழ்வின் இறுதி நோக்கம் இன்பம் தான் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது.
இன்பம் தேடுதல் மட்டும் இல்லை என்றால், சமு\தாய இயக்கம் என்பதே இருந்திருக்க வாய்ப்பில்லை. அதிகமான இன்பமும், மிக குறைவான துன்பமும், வாழ்க்கையை உன்னதமாக மாற்றுகிறது. மனிதன் இன்பம் தருவது அனைத்தையும் நல்லது என்கிறான். அதை நோக்கி நடப்பது தான் நல்வழி என்கிறான். துன்பம் தருகின்ற பாதையில் நடந்து சென்றால், அவனை கேலியும் கிண்டலும் செய்து பயணத்தை தொடர விடாமல் தடுத்தும் விடுகிறான். இந்த உலகில் உள்ள பொருட்கள் அனைத்துமே இன்பமானது, இதை விட்டு விட்டால் இன்பம் என்பது கிடைப்பது அரிது என்று பல மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால், சிலர் இன்பம் என்பது மனம் சார்ந்த உணர்ச்சி, ஒருவருக்கு இன்பமாக இருப்பது வேறொருவருக்கு துன்பமாக இருக்கும். உலகத்தில் கண்ணுக்கு தெரியும் பொருட்களை வைத்து இன்பத்தை தேடினால், அது இன்ப துன்பம் என்று கலப்படமாக இருக்குமே தவிர முற்றிலுமான இன்பமாக இராது என்கிறார்கள்.
இப்படி முற்றிலும் இன்பமயமாக இருப்பது உலக பொருட்களுக்கு அப்பாற்பட்ட முக்தி நிலை. இந்த இன்பத்தை பெறுவதற்கு எந்த பொருட்களும் தேவையில்லை. அழிந்து போகின்ற பொருட்களை வைத்து கொண்டு அழியாத இன்பத்தை பெற்றுவிட முடியாது. எனவே, அழியாத இன்பம் தருகின்ற முக்தி என்ற இறுதி நிலையை அடைவதற்கு உலக பொருட்களை நாடாமல், உள்ளுக்குள் விளைந்து கிடக்கும் கருத்து பொருட்களை எரித்து சாம்பலாக்கி விட்டு முக்தியை நோக்கி நடைபோடுவது தான் துன்பம் கலவாத இன்பத்தை பெற ஒரே வழி என்று கருதப்படுகிறது. அந்த முக்தியின் தத்துவ கூறுகள் எப்படியெல்லாம் இருக்கிறது என்று சித்தர்கள் கூறுகின்ற வித்தாக மொழிகளை அடுத்த பகுதியில் விரிவாகவே பார்ப்போம்.