சித்தர் ரகசியம் - 20
சித்தர்கள் மனித உடம்பை பற்றி பேசுகிறார்கள். அந்த உடம்பை செப்பனிட்டு இறைவனிடம் அழைத்து செல்லும் யோக கலைகளை பற்றி பேசுகிறார்கள். இவைகளெல்லாம் எதற்கு என்று கேட்டால், மனிதப் பிறவியின் இறுதி லட்சியமான முக்தியை அடைவது என்பதற்காகத்தான் என்கிறார்கள். முக்தியை நோக்கி மனிதன் ஏன் செல்ல வேண்டும்? முக்தி என்பது அவ்வளவு முக்கியம் வாய்ந்த ஒன்றா? எப்போதோ இறுதிப் பகுதியில் அடையக்கூடிய முக்திக்காக இப்போது இருக்கும் வாழ்க்கையை கரடுமுரடாக்கி கொள்ள வேண்டுமா? மிக குறுகிய மனித வாழ்க்கையில் கிடைக்கும் சிறிய சந்தோசங்களை அனுபவிக்காமல் விட்டுவிட்டு, கண்ணுக்கே தெரியாமல் இருக்கிறதா? இல்லையா என்று புரியாமல் மாயக்கண்ணாடிக்குள் மின்னுகிற முக்திக்கா அரும்பாடு படவேண்டுமா? என்று சிலருக்கு தோன்றும்.
சித்தர்கள் அர்த்தமற்ற வழியில் முக்தி முக்கியம் என்று கருதவில்லை. முக்தி என்ற மூன்றெழுத்தை சர்வ சாதாரணமாக இன்று நாம் பயன்படுத்துகிறோம் என்றாலும், அந்த வார்த்தையை அதன் பொருளை மனித சமுதாயம் பெற்றுக் கொள்வதற்கு மிக நீண்ட நெடிய காலம் போராடி இருக்கிறது. தலைமுறை தலைமுறையாக பெற்றுவந்த அனுபவத்தின் வரலாற்று தெளிவாகத்தான் சித்தர்கள் முக்தி கட்டாயம் வேண்டும் என்கிறார்கள். அந்த கருத்தை அனுபவப்பட்ட பெரியோர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். எதற்காக முக்தி கட்டாயம் தேவை? முக்தியை அடைவதற்கு மனிதன் இதுவரை உழைத்தது என்ன? பெற்றது என்ன? எப்போது அந்த உழைப்பை ஆரம்பித்தான்? என்பதை எல்லாம் சற்று நிதானமாக சிந்திக்க வேண்டும்.
சமுதாய அமைப்புகள் என்ற வார்த்தையை இன்று பல இடங்களில் கேட்கிறோம், படிக்கிறோம், நாமும் கூட எழுதுகிறோம். இந்த சமுதாய அமைப்பில் எவை எவையெல்லாம் அடங்குகிறது என்று பலரும் சிந்தித்தது கிடையாது. கணவன் - மனைவி என்று இரண்டு மனித ஜீவன்கள் இணைந்து உருவாக்குகிற குடும்பம் என்பதில் தொடங்கி, அரசாங்கம் என்பது வரை பல நிறுவனங்களை உள்ளடக்கியது தான் சமுதாய அமைப்பாகும். அத்தகைய சமுதாய அமைப்பில் முதுகெலும்பாக இருப்பது மதம் என்று சொல்லலாம். மதத்தை பற்றி இன்று பல்வேறு எதிர்மறையான கருத்துக்கள் உலா வருகின்ற போது, நான் அது சமூகத்தின் முதுகெலும்பு என்று சொல்வதனால் சிலருக்கு திகைப்பாக கூட இருக்கும்.
அரசு சட்டம் என்பதெல்லாம் உலகியல் சார்ந்த மனித தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உருவாக்கப்பட்டவைகளாகும். ஆனால், மதம் என்ற அமைப்பு மனிதனை உலகியல் கடந்த உன்னதமான அனுபவத்தை நோக்கி அழைத்து செல்ல உருவாக்கப்பட்டதாகும். நாம் கண்ணெதிரே காணும் இந்த உலகில் அனுபவிக்கும் புணர்ச்சி, இனவிருத்தி, உணவு, உடை, ஆடம்பரம், பதவி, சுகம் ஆகிய அனைத்துமே சிற்றின்பங்கள். ஆனால், உலகத்தை கடந்து, உலக பொருள்களை கடந்து கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் இன்பத்தை நாடுவது பேரின்பமாகும். இதனுடைய மறுபெயர் தான் முக்தியாகும் எதை பெற்றால் எல்லாவற்றையும் பெற்றதாக ஆகுமோ அந்த பெரும் பேறுக்கு மனிதனால் வைக்கப்பட்ட பெயர் தான் முக்தி என்பது.
உலகத்தில் அனுபவிக்கும் சுகங்களையும், அதன் காரணங்களையும் ஆதார பூர்வமாக நிரூபிக்கலாம். ஆனால், உலகத்தை கடந்த முக்தியினால் பெறுகின்ற சுகத்தை, எந்த ஆதாரத்தின் அடிப்படையிலும் புற உலகத்திற்கு நிரூபிக்க இயலாது. அதனால் இதை, கற்பனாவாதம் என்றும், அறிவுக்கு பொருந்தாத மூட சித்தாந்தம் என்றும் நாத்திக நண்பர்கள் புறக்கணிக்கிறார்கள். நிரூபிக்க முடியவில்லை என்றால், ஒன்றை முற்றிலுமாக இல்லை என்றோ, விரிவுரை செய்ய இயலாது என்றால் ஒரு தனிமனித அனுபவத்தை பொய் என்றோ புறக்கணித்து விட இயலாது. ஒருவேளை முக்தி என்பது இறைவனோடு சம்மந்தபட்ட காரியம் என்பதனால், அதை நிரூபித்து காட்ட இந்த உலகத்து பொருட்களுக்கு சக்தி இல்லாது இருக்கலாம். இந்த வகையில் சிந்தித்தால், ஆன்மீக ஞானிகளின் அருளுரைகளும், அனுபவ வாக்கியங்களும் பொய்யல்ல, கற்பனை கட்டுக்கதைகள் அல்ல, அனைத்தும் சக்திய வாக்குகளே என்பது புலனாகும்.
முக்தி என்பதை ஆன்ம சுகம் என்பதை நிரூபிக்க முடியவில்லை என்றாலும் கூட, அதை நோக்கியே பன்னெடுங்காலமாக பலதரப்பட்ட மக்கள் ஈர்க்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். அப்படி ஈர்க்கப்படும் மக்களுக்கு, வழிகாட்ட கூடியதாக, ஒரு கட்டமைப்பாக அழைத்து செல்ல கூடியதாக மதம் என்பது இருக்கிறது. அதனால் தான் மதத்தை சமுதாயத்தின் முதுகெலும்பு என்று துணிந்து கூறுகிறேன். மனிதன் டார்வின் தத்துவப்படி குரங்கிலிருந்து வந்தானா? அல்லது நேற்றுவரை இல்லாமல் இருந்து இன்று திடீரென்று புதியதாக படைக்கப்பட்டானா? என்று ஆராய்ச்சி செய்யாமல், மனிதன் என்று மனிதனாக சிந்திக்க துவங்கினானோ அன்றிலிருந்தே மதம் வந்துவிட்டது. புலன்கடந்த தேடுதலான ஆன்மிகம் வந்துவிட்டது என்பது தான் பொருளாகும்.
மனித வரலாற்றில் மத உணர்ச்சியற்று வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகள் எதுவுமே இல்லை. இன்றைய நாகரீக மனிதன் கற்காலம் என்று கருதக்கூடிய நாகரீகம் இல்லாத காலத்தில் கூட மதமும், மத சிந்தனையும் இருந்தது. இதன் அடிப்படையில் கூர்மையாக நமது பார்வையை செலுத்தினால், இன்று நடைமுறையில் இருக்கும் மதங்கள் எதுவும் புதியதாக தோன்றிவிடவில்லை. ஆதி மனித சிந்தனையின் புனரமைப்பு தான், சீர்திருத்தங்கள் தான் இன்றைய மதம் என்று அறிய வேண்டும். எனவே ஆன்மீக சிந்தனை என்பது ஆதிகாலம் தொட்டே மனிதனின் வாழ்க்கையோடு இணைந்திருக்கிறது. ஆன்மிகம் இல்லாத, அறச்சிந்தனைகள் கிடையாது. அறம் இல்லாத மனித வாழ்க்கை என்பது மிருக வாழ்க்கைக்கு சமமானது. அதனாலும் தான் மதத்தை சமுதாயத்தின் முதுகெலும்பு என்று சொன்னேன். அதை மீண்டும் சொல்வேன்.
சரி இவைகளெல்லாம் இருக்கட்டும் முக்தி என்பதை ஆதாரபூர்வமாக காட்ட இயலாது பத்துபேர் நம்பும்படி நிரூபிக்க முடியாது என்று சொல்கிறீர்கள் அப்படிப்பட்ட ஒரு பொருளை ஆண்டாண்டு காலமாக மனிதன் நாடவேண்டிய அவசியம் என்ன? தேன் இருக்கும் பாத்திரத்தை எறும்புகள் மொய்ப்பது போல முக்தி வாழ்க்கையை நோக்கி மனித மனங்கள் மொய்ப்பது ஏன்? என்ற கேள்விகள் நமக்குள் எழும்பினால் ஆச்சரியபடுவதற்கு இல்லை அழகான பெண்ணை மனிதன் நாடலாம் அளவுக்கு அதிகமான செல்வத்தை மனிதன் தேடி ஓடலாம் ஆதிக்க உணர்ச்சியை அள்ளி தருகின்ற மண்ணாசையின் பால் அவன் ஈர்க்க படலாம் இவைகளெல்லாம் இயற்க்கை நிலைமை இப்படி இருக்க எல்லா ஆசைகளையும் துறக்க கூடிய முக்தியை நோக்கி அவன் ஏன் ஓடவேண்டும்? அதற்கு என்ன காரணம்? அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்...