குருஜி அவர்களுக்கு, வணக்கம். நான் தினசரி செம்பருத்தி மலர்களை கொண்டு, சிவபெருமானை வழிபடுகிறேன். அதை பார்த்த எங்கள் ஊர் குருக்கள் ஒருவர், செம்பருத்தி பூ சிவப்பு நிறத்தில் அதாவது, இரத்த வண்ணத்தில் இருக்கிறது. இதை வைத்து பெருமானை வழிபடக் கூடாது என்று சொல்கிறார். ஆனால், எனக்கு வேறு மலர்களை வைத்து வணங்குவதற்கு பிடிக்கவில்லை. அதே நேரம் சாஸ்திர விரோதமாக ஏதாவது செய்து, வீணான பாவத்தை சம்பாதித்து விடக் கூடாது என்றும் அச்சமாக இருக்கிறது. எனவே குருஜி அவர்கள் எனது மன கலக்கத்தை போக்கி தெளிவைத் தருமாறு பணிவோடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
ரகுநாதன்,
காரைக்கால்.
சிவபெருமானை செம்மேனியன் என்றும், சிவந்த நேத்திரங்கள் உடையவர் என்றும் பல அடியார்கள் பாடி பரவுகிறார்கள். எனவே, சிவபெருமானுக்கு சிவப்பு என்பது விலக்கு அல்ல. பெருமானின் சரிபாதியாக இருக்கின்ற அன்னை ஆதிபராசக்தியின் நெற்றியில் துலங்கும் குங்குமமும் சிவப்பு எனும் போது அதை இறைவன் எப்படி விலக்குவார்?
மேலும் சிவ பூஜையில் செந்தாமரை, அரளிபூ தெச்சிபூ போன்ற சிவப்பான மலர்கள் பயன்படுத்தப்படுவதை நாம் நன்கு அறிவோம். பக்தர்கள் ஆசையுடன் சாற்றுகிற ரோஜா மலர்மாலையே ஒருவித சிவப்பு தானே! எனவே சிவப்பு வண்ணம் கொண்ட செம்பருத்தி பூவை, நீங்கள் பூஜைக்கு தாரளமாக பயன்படுத்தலாம். அதற்கு சாஸ்திரங்களில் தடையில்லை. மேலும் இறைவன், மலர்களின் நிறங்களை பார்ப்பது இல்லை. மலர்களை காணிக்கையாக்கும் மனித மனங்களின் நிறங்களையே கவனிக்கிறார்.