இருட்டின் சத்தம் 3
வாசகர்களுக்கு வணக்கம். இன்றைய பதிவாக வந்திருக்கும் இருட்டின் சத்தம் என்ற கதை பத்து வருடங்களுக்கு முன்பு குருஜியால் எழுதப்பட்ட நாவல். அந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் இனி வரும் காலங்களில் நீங்கள் படித்து இதய படபடப்போடு ரசிக்கலாம். மேலும் இத் தொடர்கதை பற்றிய விமர்சனத்தை தயங்காமல் எழுதுங்கள். காரசாரமான கருத்தாக இருந்தாலும் கூட, அதை ஏற்றுக் கொள்கிறோம். காரணம், இலக்கியம் என்பது செதுக்கப்பட வேண்டிய சிற்பம் என்பது நமது குருஜியின் கருத்து.
இப்படிக்கு,
குருஜியின் சீடன்,
ஆர்.வி.வெங்கட்டரமணன்.
இரவில் அடித்த பட்டை சாராயத்தின் தாக்கம் இன்னும் தலையிலிருந்து இறங்கவில்லை. வாயிலிருந்து வீசுகின்ற கெட்டவாடை பாவாடை பூசாரிக்கே குமட்டுவது போல் இருந்தது. கனமான கண் இமைகளை கஷ்டப்பட்டு நீக்கிவிட்டு, திண்ணையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். தலை சுற்றுவது போல் இருந்தது. ச்சீ இன்னொரு நாளைக்கு நிதானம் மீறி குடிக்கக் கூடாது. பாழாய் போன உடுக்கைகாரன் சலிக்காமல் ஊற்றிக் கொடுத்ததனால், வந்த வினை என்று நினைத்து தன்னைத் தானே தேற்றிக் கொண்ட பூசாரி வாய்க்குள் ஊறிய எச்சிலை அசிங்கமாக வெளியில் துப்பினார்.
பேய் ஓட்றேன், நாய் ஓடறேன் என்று ஊரை ஏமாற்றி சாராயம் வாங்கி குடிக்கிறது, உடம்புல ஒட்டுத்துணி இல்லாம மயங்கி கிடக்கிறது இதுவே உனக்கு பொழப்பாப் போச்சி. இன்னொரு நேரம் இப்படி கிறங்கி கிடந்த கொதிக்கிற தண்ணீய உச்சந்தலையில ஊத்துறேன் பாரு! என்று வழக்கமான வசுவுகளை ஆரம்பித்த மனைவியை ஓங்கி அடிக்க போன பாவாடை பூசாரி வாசலில் அண்ணாமலை வருவதை பார்த்து பின்வாங்கினார்.
அடியே புள்ள, அண்ணாச்சி வந்திருக்கிறார். நாற்காலியை எடுத்து போடு முகத்தை கழுவிட்டு வந்துறேன் என்று துண்டை எடுத்து தோளில் போட்ட வண்ணம் பின்புறத்துக்கு நடையை கட்டினார். அவசர அவசரமாக வாய் கொப்பளித்து, முகம் அலம்பி கைகால்களில் தண்ணீர் காட்டி, துணியால் துடைத்தவண்ணம் அண்ணாமலை உட்கார்ந்திருந்த இடத்திற்கு எதிரே கிடந்த ஆட்டுக்கல்லின் மேல் போய் உட்கார்ந்தான். சொல்லுங்க அண்ணே காலையில வீடு தேடி வந்திருக்கிறீங்க, சொல்லி அனுப்பியிருந்தா நானே வந்திருப்பேன் என்று குழைந்து பேசினார்.
அண்ணாமலையிடம் இருந்து நீண்ட பெருமூச்சு பதிலாக வந்தது. வரசொல்லி பேசக்கூடிய சங்கதியில்லை பூசாரி. நீங்க வந்தா நாலுபேரு நாலுவிதமா பேச ஆரம்பிச்சிடுவாங்க. அதனாலதான் நானே வந்தேன் என்று உடைந்து போன குரலில் பதிலும் சொன்னார். நீங்க கவலைப்படாதீங்க, அண்ணாமலை அண்ணே எதுவா இருந்தாலும் யாருக்கும் தெரியாம நல்லபடியா செஞ்சிடலாம் நீங்க விஷயத்தை சொல்லுங்க என்று பாவாடை பூசாரி அக்கறையோடு பேசினார்.
என் பையன் சங்கரன் நேத்து ராவுல ஆத்துபக்கமா போயிருக்கான். யாரோ ஒரு பொண்ணு இவன துரத்துற மாதிரி இருந்திருக்கு. பயந்தடிச்சி ஓடிவந்த இவன் ரூமுக்குள்ள போயி இருட்டுல உக்காந்துட்டான். நானும், அவளும் விசாரிக்கும் போது தான் இந்த தகவல சொன்னான். சாதாரணமாகத்தான் இருக்கும் என்று நினைச்சு அவனுக்கு சாப்பாடு கொடுத்து தூங்க வச்சுட்டோம். ஆனா ராத்திரி பனிரெண்டுமணிக்கு மேலே நடந்தத நினைச்சா கொலைநடுக்கம் ஏற்படுது. பூசாரி ஐம்பத்தைந்து வயசுல பாக்காத அனுபவத்த நேத்து ராத்திரி பார்த்தேன் என்று கூறிய அண்ணாமலையின் குரலில் விவரிக்க முடியாத அச்சம் இருப்பதை பூசாரி கண்டுகொண்டார். அடுத்ததும் அண்ணாமலையே பேசட்டும் என்று அமைதியாக இருந்தார்.
ராத்திரி பனிரெண்டு மணிக்கு மேலே இருக்கும். முதலில் தெருமூலையில் ஒருநாய் ஊளையிட ஆரம்பித்தது. ஒன்றை தொடர்ந்து பத்து நாய் என்ற கணக்கில் ஏகப்பட்ட நாய்கள் ஊளையிட ஆரம்பித்தன. எல்லா நாய்களும் என் வீட்டு வாசலுக்கு வந்து ஊளையிட்டது. அந்த நேரத்தில் வீட்டை சுற்றி சூறைக்காற்று ஒன்று அடிக்க ஆரம்பித்தது. சுடுகாட்டில் வீசுவது போல, கெட்ட சாம்ராணி வாசனையும், வீட்டுக்குள் வந்தது. என் பையனுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. இவனும் ஊளையிட ஆரம்பித்துவிட்டான். பதறியடித்து எழுந்து போய் பார்த்தேன். தரையில் நாலு காலில் நின்று நரியை போல இவனும் ஊளையிடுகிறான். அதோடு மட்டுமல்ல அவன் நாக்கு முழுவதும் வெளியில் தொங்கி கொண்டிருந்தது. இந்த இடத்தில் அண்ணாமலை நிறுத்தி பூசாரியின் கண்களை கெஞ்சுவது போல் பார்த்தார்.
இந்த மாதிரி சொந்த பிள்ளை நிற்பதை பார்த்தா தகப்பனின் மனம் என்ன பாடுபடும் என்று யோசிச்சு பாருங்க. ஊரில் உள்ளவன் காலைப்பிடித்து இப்போது தான் அவனுக்கொரு நல்ல வேலையை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன். அந்த நேரத்தில் இப்படி நடக்கிறது என்றால், எப்படி தாங்க முடியும் என்று தோளில் கிடந்த துண்டை வாயில் வைத்து அழுத்தி கொண்டு விம்மி அழுதார். சூடான காபியை அவர் முன் நீட்டிய பூசாரியின் மனைவி, முதலில் சூடா இதை குடிங்க எல்லா குறையையும் ஆத்தா மாரியம்மா சரியாக்கிடுவா என்று ஆறுதலும் கூறினாள்.
அண்ணாமலையை சிறிதுநேரம் அழுவதற்கு விட்டுவிட்ட பாவாடை பூசாரி, நிதானமாக கேட்டார். ஆத்தங்கரையில், பெண்ணை பார்த்தேன் என்று உங்க பையன் சொல்லுகிறானே? ஆற்றில் எந்த இடத்தில் பார்த்தான். அதைப்பற்றி ஏதாவது விளக்கமாக சொன்னானா? என்று கேட்டார். சொன்னான், சொன்னான். ஆத்துக்கு அந்த கடைசியில பெரிய நாவல்மரம் நிக்குதுபாருங்க, அதுலதான் பார்த்தேன் என்று சொன்னான் என்று பூசாரியின் கேள்விக்கு அண்ணாமலை சாதாரணமாக பதிலை கூறினார்.
அவர் சாதாரணமாக சொன்ன பதில் பூசாரிக்கு நடுக்கத்தை கொடுத்தது. திடீரென்று ஈரப்பதம் இல்லாமல் தொண்டை வறண்டுவிட்டது போலவும் நாக்கு ஒட்டிக்கொண்டு விட்டது போலவும் ஒரு பிரம்மை தட்டியது தட்டு தடுமாறி வார்த்தைகளை துண்டு துண்டாக வெளிபடுத்தினார். அந்த... அந்த.. இடத்திலா பார்த்தான். ரொம்ப மோசமான இடமாச்சே என்று அச்சத்தை மறைத்துக் கொண்டு பேசவேண்டுமே என்பதற்காக பேசினார்.
எனக்கு அதை பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. நீங்க என் பிள்ளையை கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும். உங்களை விட்டால் வேறு வழி கிடையாது என்று அண்ணாமலை கெஞ்சலாக பேசினார். பாவாடை பூசாரிக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. நாவல் மரத்து பக்கத்தில் நிற்கிற பெண்ணை பார்த்திருக்கிறான் என்றால், அவளை கட்டுப்படுத்துகிற சக்தி தன்னிடம் இல்லையே, இரண்டு மாதங்களுக்கு முன்பு சிதம்பர சக்கரத்திற்குள் அவளை உட்காரவைத்து பந்தன படுத்த, கோவிந்த பணிக்கன் செய்த பூஜை முடிவில் பணிக்கனின் உயிரையே எடுத்துவிட்டது. முறைப்படி மந்திரம் கற்ற பணிக்கனுக்கே, இந்த கதி என்றால் நான் எம்மாத்திரம் என்று நினைத்து சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் பூசாரி தவித்தார்.
அந்த நேரத்தில், அண்ணாமலை சட்டையிலிருந்து ஐநூறு ரூபாய் நோட்டு இரண்டு எடுத்து பூசாரியின் கைகளில் திணித்தார். இதை இப்போ வச்சிக்கங்க. காரியத்த நல்லவிதமா முடிங்க. அப்புறம் கொஞ்சம் நிறையா தருகிறேன் என்று சொல்லவும் செய்தார். பூசாரியின் அச்சம் ரூபாய் நோட்டை பார்த்தவுடன் சற்று மறந்து போனது. ஆயிரம் ரூபாய் என்பது குறைந்தது ஐந்து நாள் சாராயத்திற்கு போதும். செழிக்க, செழிக்க குடிக்கலாம் கடித்துக் கொள்ள கோழிக்கறி கூட வாங்கலாம் என்று எண்ணம் ஓடியது. ஆனால் பூசாரியின் மனைவி வேறுமாதிரி திட்டம் போட்டாள். அண்ணாமலை கிளம்பி போனதும், இந்த மனுஷனிடம் பணத்தை பிடுங்கி, அடகு வைத்திருந்த பொட்டுத்தாலியை எப்படியாவது மீட்டு விட வேண்டுமென்று நினைத்தாள்.
பூசாரி பணத்தை வாங்கி கொண்டதும், அண்ணாமலைக்கு நிம்மதியாக இருந்தது. பாவாடை பூசாரி சாதார ஆள் இல்லை. இந்த வட்டாரத்திலேயே பேய் ஓட்டுவதில் பெரிய கில்லாடி. உடுக்கை எடுத்து அடித்துக் கொண்டு மாரியம்மன் தாலாட்டை பாடினால், ஆடாத பேய் எல்லாம் ஆட ஆரம்பித்துவிடும். இவர் வேப்பிலையின் அடிதாங்காமல் ஓடிய பேய்களின் எண்ணிக்கை சொல்லி மாளாது. நாள்பட்ட பேய்களே ஓடும்போது நேற்றுபிடித்த பேய் ஓடாதா என்ன? என்ற நம்பிக்கை நாற்காலி போட்டு உறுதியாக உட்கார்ந்தது. இனி பூசாரி என்ன சொல்ல போகிறார் என்று ஆர்வத்தோடு அவர் முகத்தை பார்க்க துவங்கினார்.
பூசாரிக்கு பேசுவதற்கு வார்த்தை இல்லை. தன்னால் முடியாது என்று சொன்னால், கையில் இருக்கும் பணம் போய்விடும். தனது கனவுகள் போய்விடும். எனவே ஆவது ஆகட்டும் என்று அண்ணாமலையை சரியாக ஒருமணிக்கு ஊர் எல்லையில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு வரசொன்னார். அண்ணாமலையும், சந்தோசமாக கிளம்பி போனார். வீட்டுக்கு வந்த அண்ணாமலை, சங்கரன் என்ன செய்கிறான் என்று பார்த்தார். காலை எட்டு மணி ஆனபிறகும், அசதியில் உறங்கி கொண்டிருந்தான். அவன் சமையல் கட்டில் அம்புஜம் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
அம்புஜத்தை பார்ப்பதற்கு அதிசயமாக இருந்தது. ராத்திரி இவ்வளவு களேபரம் நடந்திருக்கிறது. அத்தனைக்கும் நடுவில் அடித்து போட்டமாதிரி இவளால் எப்படி உறங்க முடிந்தது. ஒரு சின்ன குண்டூசி விழுந்தால் கூட விழித்து விடுவேன் என்று சொன்னதெல்லாம் பொய்யா அல்லது நேற்று அவளுக்கு ஏற்பட்டது மாயமான உறக்கமா? எதுவும் புரியவில்லை இருந்தாலும் அவளிடம் இப்போதைக்கு எதையும் சொல்லவேண்டாம் என்று அவருக்கு பட்டது. சங்கரனை போய் எழுப்பினார். குளிச்சிட்டுவா தம்பி என்று ஆறுதலாக அவனோடு பேசினார் சங்கரன் தூக்க கலக்கம் போகமலே எழுந்து கட்டிலில் உட்கார்ந்தான்.
எல்லாம் வழக்கமாக நடக்க துவங்கி விட்டது. காலை உணவு முடித்துவிட்ட சங்கரன், நண்பர்களோடு பேசுவதற்கு வெளியில் போய்விட்டான். நேற்று நடந்தது எதையும் அவன் மனதில் வைத்ததை போல தெரியவில்லை. அம்புஜமும் மதிய வேலைக்கான ஏற்பாடுகளை கவனிக்கத் துவங்கி விட்டாள். அண்ணாமலைக்கு மட்டும் மனதிற்குள் திடுக் திடுகென்று இருந்தது. தன்னைச் சுற்றி ஒரு மாய வலை பின்னப்பட்டு இருப்பது போலவும், அதனுள் தானும், தன் மகனும் அகப்பட்டு கொண்டது போலவும் நடக்க கூடாத அசம்பாவிதங்கள் இனி தொடர்ச்சியாக நடக்க போவது போலவும், அவருக்குள் கற்பனை விரிந்தது. எல்லாவிதமான குழப்பங்களையும், ஓரத்தில் தள்ளி வைத்து விட்டு, சாமி அறைக்குள் சென்று கைநிறைய விபூதி எடுத்து நெற்றியில் பூசினார். தான் வெளியில் சென்று வருவதாக மனைவியிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்.
அப்போது மணி பனிரெண்டு இருக்கும். இப்போதே கிளம்பினால் தான், பூசாரியை சரியான நேரத்தில் பார்க்க முடியுமென்று, அம்மன் கோவில் பக்கமாக நடையை கட்டினார். அவர் நடந்து போவதை பார்த்த, வடக்கு தெரு மாடசாமி, சைக்கிளில் ஏறிகிங்க எங்க போகனுமோ அங்கே போய் விடுகிறேன் என்று முன்வந்தான். அவருக்கும் அது சரியென்று பட்டது. இந்த வெயிலில், ஒரு கிலோ மீட்டராவது நடந்து போகவேண்டும். போய் சேர்வதற்குள் நாடி கழன்றுவிடும். சைக்கிளில் போனால் தெம்பாக இருக்கும் என்று நினைத்த அவர், சரி வா அம்மன் கோவில் வரைக்கும் போகலாம் என்று ஏறி உட்கார்ந்தார்.
அண்ணாமலையும், மாடசாமியும் ஒரு மணிக்கெல்லாம் கோவிலுக்கு வந்துவிட்டார்கள். ஆனால், பூசாரியை இன்னும் காணவில்லை. பணத்தை வாங்கிக் கொண்டு கம்பிநீட்டி விட்டாரா? என்று ஒருகணம் தோன்றியது பெரிய மனுஷன் அப்படியெல்லாம் செய்யமாட்டார் என்று சமாதானம் படுத்திக்கொண்டு, வேப்பமரத்து மேடையில் உட்கார்ந்தார். மாடசாமியையும், உட்காரச் சொன்னார். அவன் நீங்க உட்காருகண்ணே நான் கோவிலுக்கு பின்னால இருக்கிற கிணத்துல போயி தண்ணீ எடுத்து ஒரு குளியல் போட்டுட்டு வந்திடுறேன் என்று சொல்லி, கோவிலுக்கு பின்னால் சென்றான்.
போன வேகத்தில், அலறி அடித்துக் கொண்டு, மாடசாமி திரும்ப அடித்து வந்தான். அண்ணே நம்ம பாவாட பூசாரி அங்கே செத்து கிடக்கிறார் என்று அலறினான். அண்ணாமலைக்கு தூக்கி வாரிப் போட்டது. பதறியடித்து கொண்டு மாடசாமி சொன்ன இடத்துக்கு போனான். கால்களை பரப்பி கையில் பிடித்த தண்ணீர் சொம்போடு, பூசாரி செத்துக் கிடந்தான். அவர் கன்னத்தில் யாரோ ஓங்கி அடித்ததற்கான தடம் இருந்தது. மூன்று விரல்கள் அழுத்தமாக பதிந்திருப்பதை பார்க்க முடிந்தது. அடித்த வேகத்தில் அவர் தலை திருகிக் கொண்டு விழுந்திருக்க வேண்டும். கழுத்து நரம்பு தெரித்திருக்க வேண்டும். வாய் வழியாகவும், மூக்கு வழியாகவும் அப்போது தான் சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்பதற்கு அறிகுறியாக சூடான இரத்தம் வழிந்து தரையில் பரவிக் கொண்டிருந்தது.
அண்ணாமலைக்கு உடம்பு நடுங்கியது. இப்படி செத்துக் கிடந்த யாரையும் அவர் இதுவரை பார்த்தது இல்லை. இது எப்படி சாத்தியமாச்சு என்று, அவர் யோசிக்கும்போது, கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. கண்களை கசக்கிவிட்டு பாவாடை பூசாரியின் உடம்பை உற்று பார்த்தார். அவர் வாயிலிருந்து கொட்டுகிற இரத்தத்தை, ஓநாய் ஒன்று நக்குவது போன்ற காட்சியை மின்னல் வேகத்தில் தெரிந்து மறைந்தது. அண்ணாமலையின் அடிவயிற்றில் நெருப்பு பந்து உருள்வது போல உணர்ந்தார். தள்ளாட்டம் வந்தது. கால்களுக்குள் தரை நழுவுவது போல இருந்தது. சாய்ந்த அவரை மாடசாமி பக்குவமாக பிடித்துக் கொண்டு, வேறு பக்கம் நகர்த்தி வந்தார். மயக்கம் வரும் கண்களால், மீண்டும் அவர் பாவாடை பூசாரியை பார்த்த போது இரத்தத்தை நக்கிய ஓநாய் இப்போது அண்ணாமலையை முறைத்து பார்ப்பது போல தோன்றியது...
தொடரும்...