கிருஷ்ணன் சுவடு 5
ஸ்ரீ கிருஷ்ணனை பற்றி சிந்திக்கும் போது இவன் மனிதனா? அல்லது இறைவனா? என்ற சந்தேகம் அடிக்கடி வந்து போகும். காரணம், மனிதரில் மிகச்சிறந்த மனிதனாகவும் கிருஷ்ணனை பார்க்க முடிகிறது. இறைவனின் மிக உயர்ந்த அருளையும் அவனிடம் காணமுடிகிறது. இப்படி மனிதனாகவும், இறைவனாகவும் அவன் பூமியில் வந்துபோக வேண்டிய அவசியம் என்ன? பாற்கடலில் பாம்பணையில், பூமகளும் திருமகளும் சேவையாற்ற வைகுண்ட வாசனாகவே இருந்து கொண்டு, பூமி பாரத்தை அவனால் தீர்க்க முடியாதா? பூமியை அவனால் பரிபாலனம் செய்யமுடியாதா? கிருஷ்ணன் வாழ்வில் இல்லை என்பதும் இல்லை. முடியாது என்பதும் இல்லை. பிறகு எதற்காக அவன் மண்ணிலே வந்து பிறக்க வேண்டும்? அற்ப மனிதர்களுக்காக தூதனாக, சாரதியாக, காவலனாக இருக்க வேண்டும்? இது சிந்தனைக்குரிய கேள்வி.
கண்ணனை முழுமையான அவதாரம் என்று பலரும் கூறுகிறார்களே? அவன் முழுமையானவனா? முழுமைக்கு அப்பாற்பட்டவனா? என்று பார்ப்பதற்கு முன்னால், அவதாரம் என்றால் என்ன? என்பதை அறிந்து கொண்டால், கண்ணன் பிறப்பில் உள்ள இரகசியத்தை ஓரளவு புரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அவதாரம் என்ற வார்த்தையை கோவிலில் கேட்கிறோம். வீடுகளில் கேட்கிறோம். மேடைகளிலும் கேட்கிறோம். அதனுடைய உண்மையான பொருள் என்ன? என்று நம்மில் பலர் கேட்பதே கிடையாது. அப்படி ஒரு சிந்தனையும் கிடையாது.
தன்னை உள்ளன்போடு நேசித்து பக்தி பாராட்டும் ஆத்மாக்களை வாழ்விப்பதற்காகவும், அறநெறி தவிர்த்து மற நெறியில் வாழ்வோரை நிக்ரஹம் செய்வதற்காகவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் அவதாரம் எடுக்கப்படுகிறது. அவதாரத்தின் நோக்கை ஸ்ரீ கிருஷ்ணன் இப்படித்தான் கூறுகிறான். பாகவதர்களும், அநுபூதிமான்களும் பகவானாகிய இறைவன் தனது நித்திய விபூதியிலிருந்து, அதாவது இறைத்தன்மையில் இருந்து மனிதர்களின் மேல் கருணை வைத்து இறங்கி வருவதன் பெயரே அவதாரம் என்று கூறுகிறார்கள்.
அவதாரம் என்ற ஒரே வார்த்தையை நாம் பயன்படுத்தினாலும், அவதாரங்களில் சாட்சாத் அவதாரம், ஆவேச அவதாரம், அம்ச அவதாரம் என்ற மூன்று வகை இருக்கிறது. கண்ணெதிரே ஒரு கொடுமை நடக்கிறது. அதை உடனடியாக தட்டிக் கேட்க வேண்டும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இறைவன் நினைத்து வந்தான். அதன் பெயர் ஆவேச அவதாரம். இறைவன் முழுமையாக இல்லாமல், அவனது ஆயுதமோ, வேறு சில பொருட்களோ அவதாரம் எடுத்தால் அதன் பெயர் அம்ச அவதாரம். முழுமுதற் கடவுளான இறைவனே இறங்கி வந்து அன்னையின் கருவறையில் குழந்தையாக உருவெடுத்தால் அதன் பெயர் சாட்சாத் அவதாரம்.
இவைகளுக்கு சரியான உதாரணம் சொல்லவேண்டும் என்றால் ஸ்ரீ மகாதேவி பாகவதம் என்ற அற்புதமான நூல் ஜனகர், ஜனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகியவர்கள் அம்சாவதாரம். மோகினி, நரசிம்மர், வாமணர், திருவிக்கிரமர் போன்றவர்கள் ஆவேச அவதாரம் என்று கூறுவதை இங்கு நினைவு படுத்தலாம். முழுமுதற் கடவுளான நாராயணன் பத்து அவதாரங்கள் எடுத்ததாகத்தான் நம்மில் பலருக்கு தெரியும். ஆனால், ஸ்ரீ மகாதேவி பாகவதம் என்ற அந்த நூல், சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர், வராகம், நாரதர் நர நாராயணர், கபிலர், தத்தாத்ரேயர், யக்ஞர், ரிஷபம், பிருது, மச்சம், மோகினி, கூர்மம், கருடன், தன்வந்திரி, நரசிம்மன், வாமணன், பரசுராமன், வியாசர், ராமன், பலராமன், கிருஷ்ணன், புத்தன், கல்கி என்று இருபத்தியாறு அவதாரங்களை பகவான் எடுத்ததாகவும் தகவல் தருகிறது. விஷ்ணு புராணம் இருபத்தி நாலு என்று கூறுகிறது.
இந்த இடத்தில் நமக்கு ஒரு சந்தேகம் வரும் பலராமன் சரி. கிருஷ்ணன் சரி. கல்கியும் சரி. இது என்ன புத்தன்? புத்தனுக்கும், மகாவிஷ்ணுவின் அவதாரத்திற்கும் என்ன சம்மந்தம்? சனாதனமான ஹிந்து தர்மத்தையே எதிர்த்து புதிய மதத்தை உருவாக்கியது புத்தர். அவர் எப்படி விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுவார்? ஒரு வேளை பெளத்தமதத்தின் தாக்கம் அதிகரித்து சனாதனத்தின் வலு குன்றுவது போல் இருந்ததனால், புத்தனும் பெருமாள் தான் அவன் கூறுகிற வழியும், ஸ்ரீ வைஷ்ணவத்தின் ஒரு பகுதி தான் என்று நமது பெரியவர்கள் முடிவு செய்து பிரச்சாரம் செய்தார்களோ என்று நமக்கு தோன்றும். காரணம் நாம் இன்று இதயத்தை ஆழ புதைத்து விட்டு அறிவை மட்டும் கைபிடித்துக் கொண்டு வாழ்வதனால் இப்படிதான் சிந்திக்க முடியும்.
நமது ஹிந்து தர்மத்தில், பதினெட்டு புராணங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் பழமையானது லிங்க புராணம். இதில் இறைவனான சிவபெருமான் முப்புரம் எரி செய்வதற்காக புறப்பட்ட கதையை கூறும் திரிபுர சம்ஹார பகுதியில், புத்தனை விஷ்ணுவின் அம்சமாக கூறும் பகுதி இருக்கிறது. மிக சிறந்த கிருஷ்ண பக்தரான, ஜெயதேவர் தான் எழுதிய கீத கோவிந்தம் என்ற பக்தி நூலில், பலராம அவதாரத்திற்கு பதிலாக புத்த அவதாரத்தை மட்டுமே நமக்கு காட்டுகிறார். ஜீவகாருண்ய மூர்த்தியான புத்தர் வைதீக மார்கத்தில் மண்டிக்கிடந்த ஹிம்சையை கண்டித்து, வேள்விகளில் உயிர் பலி கொடுப்பதை தடுப்பதற்காகவும், பகவான் புத்தராக தோன்றினார் என்றும் கவிநயம் சொட்ட பாடுகிறார்.
அவதாரங்களை பற்றி அதன் விளக்கங்களை பற்றியும், ஆராய்ந்து கொண்டு போனால் இன்னும் எவ்வளவோ விஷயங்களை சொல்லிக் கொண்டே செல்லலாம். ஆனால், நமக்கு அவதார மகாத்மியத்தை மட்டுமே பார்க்க கூடிய நோக்கமில்லை. தலைச் சிறந்த அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணனின் அவதார அம்சங்களை, அவன் லீலைகளை, தத்துவங்களை, சூட்சமங்களை அறிந்து கொள்வதே நோக்கம். எனவே, ஸ்ரீ கிருஷ்ணனின் பாதத்தை பின்பற்றி நடப்பது தான் நமக்கு சரியாக இருக்கும். ஸ்ரீ கிருஷ்ணன் முழுமையான தரிசனத்தை ஸ்ரீ மத் பாகவதத்தில் நம்மால் காணமுடியும். ஆனால், அங்கே தெரிகின்ற கண்ணன் நம்மை மயக்கி விடுவான். அவனது புல்லாங்குழலின் இனிமையும், மயிற் பீலியின் அழகும், காளிங்க நர்த்தனமும், ராஜ கிரீடையும், நம்மை கிறங்கடித்துவிடும். எனவே, பாகவதத்தில் சென்று மயங்கி கிடக்காமல், மகாபாரதத்தில் சென்று அவன் தரிசனத்தை தூரத்திலிருந்தே பெறுவோம்.
பாரதத்தில், கண்ணன் பல பகுதிகளில் வணங்கப்பட வேண்டிய கடவுளாகவே நடமாடவில்லை. தோள் மீது தோள்போட்ட நண்பனாக, உறவினனாக, ஆசிரியனாக ஏன் வேலைக்காரனாக கூட நடமாடுகிறான். யுத்தம் ஆரம்பிக்கும் நேரத்தில், தான் தனது விஸ்வரூபத்தை, அர்ஜுனனுக்கு காட்டி தான் யார்? என்பதை உலகத்தவருக்கு அறிவிக்கிறான். அதன் பிறகே தேவகி கண்ணன், வாசுதேவ கிருஷ்ணனாக மற்றவர்கள் காண்கிறார்கள். கிருஷ்ணன் துவாரகையின் மன்னன். அவன் நினைத்தால், உலகமே எதிர்த்து வந்தாலும், அனைத்தையும் ஒரே நொடியில் சாம்பலாக்கும் வல்லமை பெற்றவன். ஆனாலும், அவன் உலகத்தவரால் கீழான வேலை என்று கருதப்படுகிற, பல பணிகளை மகிழ்வோடு புரிகிறான்.
இந்திரன், யமதர்மனும் இவன் அழைத்தால் பல்லக்கு தூக்க பறந்து வருவர். விஷ்ணுவும், சிவனும், பிரம்மாவும் இவன் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து பணிந்து கிடப்பார்கள். ஆனாலும், இவன் பசியும், பிணியும் வியர்வை நாற்றமும் கொண்ட சாதாரண மனிதர்களுக்காக தூது போனான். அங்கே தனது அந்தஸ்துக்கு, உரிய மரியாதை கிடைக்காத போதும், கலங்காது நின்றான். கடமையை செய்தான். அது மட்டுமா? தனது மாணவன், தனது நண்பன், தனது தங்கையின் கணவன் என்று பலவகையிலும் தன்னைவிட குறைவான பார்த்தனுக்கு தேர் ஒட்டி, அர்ஜுனன் அங்கே செல், இங்கே நில் என்று கட்டளை இட்டால் அதற்கு பணிந்து பார்த்த சாரதியாக நின்றான். இதுமட்டுமல்ல, தன்னை காண ஒரே ஒரு நிமிடம் தரிசனம் பெற, கோடான கோடி முனிவர்கள் தவம் கிடக்கும் போது யுத்த களத்தில், சாதாரண வீரர்கள் தனது ஊனக் கண்களாலும் பார்க்கின்றபடி காட்சி கொடுத்தான்.
அதனால் தான் இவனை ஸ்ரீ ராமானுஜர் எளியவனுக்கெல்லாம் எளியவனான பரம தயாளன் என்று பாராட்டி போற்றி வணங்குகிறான். மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் நடந்த யுத்தத்தில் பாண்டவர் பக்கம் நின்று, பல காரியங்களை செய்தார். அவைகளை எல்லாம் பார்க்கும் போது கண்ணன் தர்மத்தை மட்டும் உபதேசிக்கும் வெறும் உபதேசி அல்ல. அதையும் தாண்டி சிறந்த செயல்வீரன். யுத்த தந்திரி என்பது புரியாதவர்களுக்கும் புரியும். பீஷ்மரை அர்ஜுனனால் வீழ்த்த முடியாது என்ற ஒரு நிலை குரு ஷேத்திர பூமியில் இருந்த போது, பிதாமகரால் பாண்டவ சேனை திட்டமிட்டு அழிக்கப்பட்ட போது, தன்னையும் மறந்து, தனது உறுதிமொழியையும் மறந்து, சாதாரண மனிதனை போல சக்கரத்தை எடுத்துக்கொண்டு பீஷ்மரை வீழ்த்த ஓடினார்.
தன் மீது அன்புகொண்டவர்கள் தனக்காக எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைப்பது ஒருவித சுயநலம். தனது அன்பர்களுக்காக தான் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே சிறந்த பொதுநலத்தின் சிகரம். கண்ணனின் இந்த செயல் இதையே நமக்கு காட்டுகிறது. மேலும், கண்ணனை பாருங்கள் பீஷ்மர், வைஷ்ணவ அஸ்திரத்தை எடுத்தபோது அது அர்ஜுனனை தாக்காமல் தன்னை தாக்கும்படி வேதனையை அனுபவித்தார். பீமனின் மகனான கடோத்கஜனை, கர்ணனோடு மோதவிட்டு கர்ணனின் சத்திய அஸ்திரத்தை குறிமாற செய்தார். ஜெயப்பிரதனை கொல்ல சூரியனின் போக்கையே மாற்றினார். துரோணருக்காக, தர்மனை தடுமாறச் செய்தார். சக்கரத்தை மண்ணில் பதிய வைத்து, கர்ணனின் சிறப்பை உலகத்தவர் உணரும்படி செய்தார்.
குருஷேத்திர பூமியில், கண்ணன் நடந்துகொண்ட விதம் தர்மத்தை காப்பதற்காக என்று அவன் சொன்னாலும், அதர்ம வழியாக தெரிகிறதே? பொய் சொல்ல செய்ததும், ஒருவனுக்காக வேறொரு உயிரை பலி கொடுப்பதும் எப்படி அறவழியாகும்? தர்மத்தை நிலைநாட்ட வந்த தர்ம தேவதையே தடம் மாறலாமா? என்ற கேள்வி நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு வருவது இயற்கை. ஆனால், கிருஷ்ணனின் சொல்லும், செயலும் இயற்கையால் கூட புரிந்துகொள்ள முடியாத பரமரகசியம். ஆனால், அந்த ரகசியம் பக்தர்களுக்கு தெரியும். காரணம் இருட்டிற்குள் வெளிச்சத்தை காட்டுவதுபோல், பகவான் நமக்குமட்டும் அதை காட்டுவார். அதை நாம் தொடர்ந்து சிந்திப்போம்.