சித்தர் ரகசியம் - 16
அழுகுணி சித்தர் என்று ஒருவர் இருக்கிறார். இவர் எல்லா சித்தர்கள் போலவே யோக கலையிலும், மருத்துவத்திலும் மஹா நிபுணர். ஆனால், தான் கூறுகின்ற எல்லா விஷயத்தையும் ஒப்பாரி வைத்து அழுவது போன்ற எழுத்து நடையில் பாடுவார். அதனால், தான் அவருக்கு அழுகுணி சித்தர் என்ற பெயர் வந்தது. மற்றபடி அவருடைய நிஜப் பெயர் யாருக்கும் தெரியாது. அவர் ஒரு அருமையான விஷயத்தை கூறுகிறார். மூல நெருப்பு என்ற ராஜகுமாரன், நாடிகள் என்ற ராஜபாட்டையில் பயணம் செய்கிறான் என்று. இதை பார்க்கும் போது ஓரளவு சித்த வைத்தியம் தெரிந்தவர்களுக்கே மலைப்பு வரும்.
மலைப்பதற்கான காரணங்கள் இல்லாமல் இல்லை. நமது உடம்பின் உள்ளே எலும்புகள் இருக்கிறது. இரத்த ஓட்டத்தையும், பிராண வாயுவையும் கொண்டு செல்லும் நுண்ணிய நாளங்கள் இருக்கின்றது. கண்களுக்கே தெரியாத துடிப்பு என்ற எழுபத்திரண்டாயிரம் வகை நாடிகள் இருக்கிறது. இந்த நாடிகள் எவற்றிற்கும் இது தான், இப்படித் தான் என்று அடையாளப் படுத்திக் காட்டும் உருவங்கள் கிடையாது. அப்படி இருக்க, மூல நெருப்பு என்ற குண்டலினி சக்தி எப்படி நாடிகள் வழியாக பயணப்படுமென்று சந்தேகம் தோன்றும். குண்டலினி சக்தி என்பதும், உருவமே இல்லாத மின்சாரத்தை போன்ற ஒருவித அதிர்வு தான். இந்த அதிர்வு, தான் தோன்றிய இடத்திலிருந்து செல்ல வேண்டிய இடத்திற்கு அதாவது பிரம்மா கபாலத்திற்கு செல்லும் வழியில் ஏற்பட்டிருக்கும் இடைஞ்சல்களை நீக்கி வழியை சுத்தப்படுத்துவது மட்டும் தான் நாடிகளின் முக்கிய பணியாகும்.
காரணம் குண்டலினி சக்தி எழுந்து மேலே வருவதற்கு மிக அதிகமான பிராண சக்தி தேவை. அந்த பிராண சக்தியை மூச்சு பயிற்சி வழியாக நாடிகள் பெற்று, உடம்பில் தக்க வைக்கிறது. இதனால் தான் பிராணயாமம் என்ற மூச்சுப் பயிற்சிக்கு நாடி சுத்தி என்ற பெயர் வைக்கப்படுகிறது. இந்த நாடிகள் பிற சக்தியாலும், அன்பு, பண்பு, தியானம் மற்றும் தவம் என்ற காரண சுத்திகளாலும், பரிபாலனம் செய்யப்படுகிறது. இடைகலை நாடி, சந்திரனின் தன்மை கொண்ட குளிர்ச்சியையும், பிங்கலை சூரிய தன்மை கொண்ட வெப்பத்தையும் உடம்பில் உருவாக்குகிறது. சுழுமுனை நாடி, அக்னி வடிவமாக இருப்பதனால், சூரிய சந்திர கலைகளை தேவைக்கு ஏற்றவாறு உடம்பிற்கு தருகிறது. இதனால் தான், கைதேர்ந்த வைத்தியர்கள் நாடிகளை பார்த்தே நோய்களை கண்டறிந்து விடுகிறார்கள்.
ஒருவர் உடம்பில் இடகலை நாடி அன்னம் போன்றும், கோழி போன்றும் நடைபோடுமாம். பிங்கலை நாடி ஆமை மற்றும் அட்டைப் பூச்சி போல நடக்கும். சுழுமுனை நாடி சமயத்திற்கு ஏற்றவாறு தவளையாகவும் பாம்பாகவும் உடம்பிற்குள் இயங்கும். இந்த நாடிகளின் இயக்கத்தை மையமாகக் கொண்டு மனித உடம்பில் வாதம், பித்தம் சிலேத்துமம் போன்ற தத்துவங்கள் செயல்புரிவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. திங்கள் மற்றும் புதன் கிழமையில் மனித உடம்பில் வாதத்தின் தன்மை அதாவது வாய்வு தன்மை அதிகமாக இருக்கும். செவ்வாய் கிழமை பித்தத்தின் தன்மை அதாவது அக்னியின் தன்மை அதிகமாக இருக்கும். வியாழன் கிழமை கபத்தின் தன்மை அதிகமாக இருக்கும்.
பொதுவாக தினசரி காலையில் வாதமும், நடுப்பகலில் பித்தமும், மாலையில் கபமும் உடம்பில் அதிகரிக்கும். அதே போல சித்திரை, வைகாசி மாதங்களில் வாத நாடி அதிகமாக அடிக்கும். ஆணி, ஆடி, ஐப்பசி மற்றும் கார்த்திகை ஆகிய மாதங்களில் பித்த நாடியும், மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் கப நாடியும் அதிகமாக வேலை செய்யும். வாத நாடி துடிக்கும் நேரம் ஒரு மாத்திரை பித்த நாடி துடிக்கும் நேரம் அரை மாத்திரை கபநாடி கால்மாத்திரை என்ற கால அளவில் நாடிகள் இயங்குகிறது. வாதநாடி நிமிடத்திற்கு பதினாறு என்ற முறையில் ஓடினால், மனிதனுக்கு நூற்றி இருபது வயதும், பித்த நாடி பனிரெண்டு என்ற கணக்கில் ஓடினால் நூறு வயது என்றும், கபநாடி இரண்டு என்று ஓடினால் என்பது வயதும் கணக்கு போடுகிறார்கள்.
வாதநாடி அபான வாயுடனும், பித்தநாடி பிராண வாயுவுடனும், கபநாடி சமானன் என்ற வாயுடனும் இயங்கி நிற்கும். அப்படி இயங்கினால் முப்பத்தொன்பது வயது வரை வாத நாடியும், அதன் பிறகும் அறுபத்தி மூன்று வயது வரை பித்த நாடியும் கடைசி கட்டத்தில் வாத நாடியும் வேலை செய்யும் என்கிறார்கள். இவைகளை எல்லாம் வைத்து கணக்கு போட்டு தான், மனிதனுடைய உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது எனவே நாடிகளின் இயக்கத்தை அலட்சிய படுத்தாமல் பராமரிக்க வேண்டுமென்று சித்தர்கள் சொல்கிறார்கள்.
குண்டலினி சக்தி இப்படி உடம்பின் அனைத்து பாகங்களுக்கும் தனது சக்திகளை கொடுத்து உடம்பில் உள்ள எல்லா இயக்கங்களையும், உணர்வுகளையும் இன்ப, துன்பங்களையும் கோப, தாபங்களையும் நிர்வாகம் செய்து உடம்பில் உஷ்ணம், குளிர்ச்சி ஆகியவற்றையும் சீராக பாதுகாத்து வருகிறது. இதுமட்டுமல்ல, உடம்பில் உள்ள ஆயிரக்கணக்கான நாடிகளையும், குண்டலினி சக்தியே பாதுகாக்கிறது. நாடி சுத்தியின் மூலம் மேல் துருவ எழுச்சியை மேற்கொள்ளும் குண்டலினி சக்தி பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்கிறது.
தனித்தனியாக பகுதி பகுதியாக, நமது உடம்பிற்குள் ஆயிரம் உறுப்புகள் இருந்தாலும், அவைகள் அனைத்திற்கும் மூல கருவாக இருப்பது குண்டலினி சக்தியே ஆகும். இந்த பேரின்ப சக்தி, எழுச்சியை அடையாமல் இருக்கும் நேரம் மூலாதாரத்தில் உறங்குவது போல் படுத்துக்கிடக்கிறது. அதனால், மூலாதாரத்தை குண்டலினி சக்தியின் கருவறை எனலாம். இதே குண்டலினி ஆதிசேஷன் போல் வீறு கொண்டு எழுந்தால், சகஸ்ரத்தில் படமெடுத்து ஆடுகிறது. அதனால் குண்டலினியின் ராஜகோபுரம் சகஸ்ரம் எனலாம்.
ஆகாயத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், தீயிலிருந்து நீரும், தண்ணீரிலிருந்து நிலமும் உண்டானதாக உலக உற்பத்தி பற்றி இந்திய வேதங்களும், உபநிஷதங்களும், ஞான நூல்களும் கூறுகின்றன. இந்த பூதங்கள், பிரளய காலம் என்ற அழிவு நேரத்தில் நிலம், நீரிலும் நீர் நெருப்பிலும், நெருப்பு காற்றிலும், காற்று ஆகாயத்திலும், ஆகாயம் பரவெளியான பிரபஞ்சத்திலும் கலக்கிறது. இந்த இயற்கை நிகழ்வை குண்டலினி அப்படியே தனது செயல்பாடாகவும் கொண்டிருக்கிறது. அதனால், தான் சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் உண்டு என்கிறார்கள்.
குண்டலினி சக்தி மூலாதாரத்திலிருந்து கிளம்பி, சகஸ்ரத்தை சுழுமுனை நாடி வழியாக சென்று அடையும் போது, ஆறு ஆதாரங்களை கடந்து செல்வதாக சொன்னேன். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாதகம், விசுக்தி, ஆக்ஞா ஆகிய ஆறு ஆதாரங்களை முறையே நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் மனம் என்று யோக சாஸ்திரம் உருவாக பெயரிட்டு அழைக்கிறது. இந்த ஒவ்வொரு ஆதாரங்களிலும் குண்டலினி சக்தி நிலைபெற்று நிற்கும் போதும், பயணப்படும் போதும் என்ன மாதிரியான விளைவுகளை மனிதர்களுக்கு கொடுக்கிறது என்ற விவரங்களை அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.