கிருஷ்ணன் சுவடு 2
அழகன் என்ற பெயர்படைத்த எத்தனையோ வீராதி வீரர்களை சரித்திர பக்கங்களில் காண்கிறோம். சமகால வாழ்விலும் சந்திக்கிறோம். அவர்கள் மீது நமக்கு வருகிற ஈர்ப்பு சில நாட்கள் மட்டுமே நீடிக்கிறது. சூப்பர் ஸ்டார்கள் என்று வர்ணிக்கப்பட்ட பலர், கலியுக மன்மதர்கள் என்று புகழப்பட்ட பலர், தாங்கள் வாழ்ந்த காலத்திலேயே புகழ் மங்கி மக்களின் நினைவுகளிலிருந்து மறைந்து போனதையும் நாம் பார்க்கிறோம். ஆனால், ஆண்டுகள் ஐயாயிரம் கடந்தால் கண்ணனின் மேலுள்ள ஈர்ப்பும், காதலும் இன்னும் எவருக்குமே மறையவில்லை. கண்ணனை விரும்பாத கண்ணனை பற்றி அரிச்சுவடி கூட தெரியாத மனிதர்களாக இருந்தாலும், அவர்களும் கன்னணனின் திருவுருவத்தை ஒருநிமிடம் நேருக்கு நேராய் பார்த்துவிட்டால் மெய்மறந்து நின்றுவிடுகிறார்கள்.
கிருஷ்ணன் என்றால், கிறக்கம் வருகிறது. மாதவன் என்றால், மயக்கம் வருகிறது. கோவிந்தன் என்றால், குதூகலம் வருகிறது. கண்ணன் என்றால், கண்ணில் நீர் வருகிறது. இந்த சிறப்பு கண்ணனுக்கு மட்டுமே தனியாக உள்ள சிறப்பாகும். நீல நிறமாக விரிந்து கிடக்கும் கடலும், எல்லையே இல்லாமல் பரந்து நிற்கும் வானமும், வெகுதூரத்தில் கண்ணில் படுகிற கருமுகில் கூட்டமும், கண்ணனாகவே தெரிகிறது. மலர்களை பார்த்தால் அவனது சிரிப்பு, மூங்கில் கூட்டத்தை பார்த்தால் அவனது இசை, புல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளை பார்த்தால் அவனது கருணை, கோணி குலாவும் கன்னிப்பெண்களை பார்த்தால் அவனது லீலை, இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொன்றாக கண்ணனையே நினைவு படுத்துகிறது.
யாருக்கும் இல்லாத சிறப்பு கண்ணனுக்கு மட்டும் கிடைப்பது ஏன்? பரமேஸ்வரனை கண்டால் பக்தியும் வருகிறது, கூடவே மரியாதையும் வருகிறது. பார்வதியையும் அவள் பிள்ளைகள் இருவரையும் பார்த்தால் கூட அன்னையாய் அண்ணன் தம்பியாய் நினைக்க தோன்றுகிறதே தவிர கண்ணனிடம் கிடைக்கும் தோழமை உணர்வை வேறு எவரிடமும் பெற முடியவில்லையே? அது தான் அவனது சிறப்பா? வேதமும், அறிவை தருகிறது. உபநிஷதங்களும் அதையே தருகிறது. பிரம்ம சூத்திரம் கூட ஆன்மா விடுதலை பெரும் அறிவை தருகிறது. ஆனால் அவைகள் எல்லாம் ஒரு கல்லூரி பேராசிரியனை போல, உபதேசம் செய்கிறதே தவிர ஆரம்ப பள்ளி ஆசிரியரை போல் அரவணைத்து போதனை செய்யும் பகவத் கீதையை போல் இனிமையாக இல்லையே? அதனால் கிருஷ்ணனுக்கு சிறப்பு ஏற்படுகிறதா?
இந்த கேள்விகளுக்கு இல்லை என்ற பதிலையும் சொல்லிவிட முடியாது. ஆனால், இவைகள் மட்டும் தான் என்று திருப்தி கொள்ளவும் முடியாது. இதையும் தாண்டி எத்தனையோ தத்துவங்கள் கண்ணன் என்ற நினைப்பிற்குள் அடங்கி இருக்கிறது. முதலில் கண்ணனின் பிறப்பே மிக அழுத்தமாக சரித்திர ஏடுகளில் பதிவு செய்யப்படுகிறது. உலகத்தை ஒரே குடையின் கீழ் ஆளவேண்டும் என்று போராடிய அலெக்சாண்டரின் பிறப்பை விட அறிவு புரட்சியில் இன்று கூட சமமாக எவரும் இல்லை என்று கூறத் தக்க சாணக்கியனின் பிறப்பை விட அன்பே வடிவான அண்ணல் மகாத்மா காந்தியும் பிறப்பை விட ஆயிரம் மடங்கு அழுத்தமாக கண்ணனின் பிறப்பு பதிவு செய்யப்படுகிறது. காரணம் கண்ணன் கடவுளின் அவதாரம், சாதாரண அவதாரம் கூட அல்ல. பரிபூரண அவதாரம். இறைத்தன்மை முற்றிலும் இணைந்து மனித உடம்போடு நடமாடிய அவதாரம். அதனால் தான் அதற்கு எவருக்குமே இல்லாத அழுத்தம் இருக்கிறது.
வறண்ட பாலைவனம் மருந்துக்கு கூட நிழல் தருவதற்கு புல்பூண்டு எதுவும் கிடையாது. பார்வை எட்டும் தூரம் வரை மணல்பரப்பும் கானல் நீருமே கண்ணில் படுகிறது. போகவேண்டிய தொலைவு இன்னும் எவ்வளவோ இருக்கிறது. கையிலே ஒரு சொட்டு தண்ணீர் இல்லை. தாகத்தால் நாவு வறண்டு போகவில்லை, எரிந்து கொண்டிருக்கிறது. உடம்பிற்குள்ளே உள்ள உறுப்புகள் எல்லாம் ஒரு சொட்டு, ஒரே ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்காதா என்று கடுந்தவம் புரிகின்றன. கால்களை எடுத்து வைத்து நடக்க முடியவில்லை. கண்கள் இருளுகிறது. உடல் தடுமாறி, சூட்டு மணலில் வளைந்து விழுகிறது. அந்த நேரத்தில் ஆகாயத்திலிருந்து உதடுகளின் மீது மழைத்துளி வந்து விழுந்தால் எப்படி இருக்கும்? ஒவ்வொரு துளியும் பல துளியாக பெருகி தொப்பலாக நாம் நனைந்து விட்டால் எப்படி இருக்கும்?
அடர்ந்த காடு, நட்சத்திரங்கள் கூட இல்லாத இருண்ட வானம், பூதங்கள் போல மரங்களும், பாறைகளும் முன்னால் நிற்கின்றன. ஒற்றையடி பாதை, அதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. என்றோ! ஒருநாள் நடந்து போன அடையாளம் இதயத்தில் இருக்கிறது. அந்த நினைவாற்றலின் துணை கொண்டு, தான் வனத்தை கடக்க வேண்டும். கையில் வெளிச்சத்திற்கு விளக்குகள் இல்லை. மிருகங்கள் வந்தால் விலகி போவென்று பயமுறுத்தி காட்ட நெருப்பு இல்லை. கல் தடுக்கிவிழுந்தால் கூட, விழுந்த இடம் பள்ளமா? மேடா? என்று பார்க்க பகல் வரவேண்டும். இருட்டு சாதாரண இருட்டல்ல. தொட்டால் ஒட்டிக்கொள்ளும் மையிருட்டு. ஆயிரம் முறை கண்களை கசக்கிப்பார்த்தாலும், எதிரே இருப்பது இன்னதென்று தெரியாத கும்மிருட்டு. அந்த இருட்டு வேளையில், வானத்திலிருந்து பளிச்சென்று ஒரு மின்னல் தோன்றினால் எப்படி இருக்கும். அந்த மின்னல் வெளிச்சம் நமது கண்களுக்கு விருந்தாக எப்படி அமையும்.
அப்படி இருந்தது கண்ணனின் அவதார நேரம். கண்ணன் ஆவணி மாதம் பிறந்தான். ஆவணி என்பது தேவர்களுக்கு நடுநிசி நேரம். தேவர்கள் உலகமும், கண்ணன் ஜனனம் எடுக்கும் போது இருண்டு இருந்தது. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று பூமியின் நடுநிசி நேரம் அப்போது கண்ணன் தேவகியின் மடியில் குழந்தையாக வந்தான். அப்போது மனிதர்கள் உலகமும் இருண்டு இருந்தது. இந்து சாஸ்திர கணக்குப்படி தேய்பிறை பதினைந்து நாட்கள் பித்ருக்களுக்கு இரவு காலம் ஆகும். அந்த காலத்தில் அஷ்டமி என்பது அவர்களுக்கும் நடுநிசி. எனவே கண்ணனின் அவதாரம் பித்ருக்களுக்கும் இருண்ட பொழுதாக இருந்தது. தேவர்கள், மனிதர்கள் மற்றும் பித்ருக்கள் என்று எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். அறியாமை என்ற இருளில் இருந்தார்கள். அந்த இருட்டு நேரத்தில், இருள்நிறைந்த சிறைச்சாலையில் ஞான ஒலி பொருந்திய கிருஷ்ணன் அவதரித்தான்.
தேவை ஏற்படும் போது கிடைக்கும் பொருளுக்கு தான் அதிக மரியாதை கிடைக்கும். வேண்டி விரும்பி தவமிருந்து பெற்ற பிள்ளைக்கு தான் அதிக பாசம் கிடைக்கும். கண்ணனும் அப்படிப்பட்ட சமயத்தில் தான் எல்லோருக்கும் ஒரு இரட்சகன் வேண்டும் என்ற சமயத்தில் தான் மிக சரியாக அவதரித்தான். அவ்வளவு சிறப்பு வாய்ந்த அவனது அவதாரம் இதிகாசங்களால், போற்றப்படும் போது புராணங்களால், புகழப்படும் போது சரித்திரத்தில் பதிவு செய்யமட்டும் விஞ்ஞான பூர்வமான சான்றுகள் எதுவும் இல்லாமலா இருக்கும். என்று அறிஞர்கள் தேடினார்கள். அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்ற கண்ணன் கேட்டதை கொடுப்பேன் என்ற கண்ணன் தேடினால் கிடைக்காமலா போய்விடுவான் கிடைத்தது நல்ல ஆதாரங்கள் பல. அவன் வாழ்ந்த துவாரகையில் கிடைத்தது. இன்றும் கிடைத்து கொண்டே இருக்கிறது. ஆய்வுகள் முடிவுக்கு வரும் போது சரித்திரமும் கிருஷ்ணனின் மகத்துவத்தை ஒப்புக்கொள்ளும்.
இனி துவாரகையில், இதுவரை கிடைத்த ஆதாரங்களை சற்று வருடி பார்ப்போம். அதுவும் நமக்கு ஸ்ரீ கிருஷ்ண சிந்தனையை தரும். நமது பிறவியில் ஏற்பட்டிருக்கும் நிந்தனையை போக்கும்...