இலங்கையைச்சேர்ந்த ஒரு நண்பர் அவர் பிறப்பால் புத்த மதத்தை சார்ந்தவராகவும், சிங்களவராகவும் இருந்தாலும் கூட மிக நன்றாக தமிழ் அறிந்தவர். ஹிந்து மதத்தின் மேல் மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவர். ஸ்ரீமத் இராமனுஜரின் பெயரில் அவருக்கு நிறைய பக்தி உண்டு. எப்போதாவது ஒருமுறை தொலைபேசியில் பேசுவார். அடிக்கடி கடிதம் எழுதுவார். சமீபத்தில் சென்ற வாரம் அவர் என்னோடு பேசும் போது விஜய் டிவியில் மஹாபாரத தொடர் வருகிறதே அதை பார்த்தீர்களா என்று கேட்டார். வருவதாக தெரியும் நேரமின்மையால் பார்க்கவில்லை என்று பதில் சொன்னேன். எனக்காக ஒருமுறை பாருங்கள். எனக்கு அதில் ஒரு சந்தேகம் இருக்கிறது என்றார்.
என்ன சந்தேகம் என்று அவரிடம் கேட்டேன். மஹாபாரத கதைப்படி, பீஷ்மரை போரில் வீழ்த்துவது, அர்ஜுனன். பீஷ்மரின் உடம்பில் கணை பாய்ந்து கீழே சாய காரணமாக இருந்தது, அர்ஜுனன் மட்டுமே என்று படித்திருக்கிறேன். ஆனால் இந்த தொடரில் அர்ஜுனன் முதல் அம்பு தொடுத்து பீஷ்மரை கீழே தள்ளுகிறான், பிறகு பாண்டவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக பீஷ்மர் மீது அம்புகளை போடுகிறார்கள். சரியான காட்சியா? இதற்கு மஹாபாரதத்தில் ஆதாரம் ஏதாவது உண்டா? என்று கேட்டார்.
அவர் கூறிய தகவல் எனக்கு பேரதிர்ச்சியை தந்தது. பீஷ்மரை வீழ்த்தியது அர்ஜுனன் என்பது தான் காலம் காலமாக சொல்லப்படும் விஷயம். மஹாபாரதத்திலும் அப்படித்தான் இருக்கிறது. வியாசரும் இதைத்தான் எழுதி இருக்கிறார். வில்லிப்புத்தூர் ஆழ்வாரும், இதனையே சொல்கிறார். பாரதத்தின் மூல நூல்கள் இந்த மாதிரி சொல்கிற போது, இதற்கு முற்றிலும் மாறுபட்டு பாண்டவர்கள் அனைவரும் சேர்ந்து பீஷ்மரை வீழ்த்தியதாக காட்டுவது எவ்வளவு பெரிய தவறு. எவ்வளவு பெரிய பொய்யான சித்தரிப்பு என்பதை யோசித்துப்பார்த்தேன். மேலும் அந்த தொடரில் சில காட்சிகளை பார்த்த போது, தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு போடுகின்ற எச்சரிக்கை வாசகங்களே அதிர்ச்சியை தந்தது.
மஹாபாரதத்தை கற்பனைக்கதை என்று விளம்பரப்படுத்துகிறார்கள். மஹாபாரதம் முழு முதற் கற்பனை என்று சொல்வதற்கு இவர்கள் யார்? விஜய் டிவி நிர்வாகம் இதற்கென்று செய்த ஆய்வுகள் என்ன? என்பதை அவர்களால் விளக்க முடியுமா? ஒருவேளை பைபிள் கதைகளை தொடராக தந்தால் அதை கற்பனை என்று இவர்களால் பகிரங்கமாக அறிவிக்க முடியுமா? மேலும் இது எந்த மதத்தாரையும் புண்படுத்துவதற்கு எடுக்கப்பட்டது அல்ல என்கிறார்கள். மஹாபாரதம் எந்த மதத்தாரை புண்படுத்துகிறது? மஹாபாரதம் எழுதப்பட்ட நாளில், இந்த நாட்டில் வேறு எந்த மதங்கள் இருந்தது? இல்லாத மதங்களை மஹாபாரதம் ஏன் புண்படுத்த வேண்டும்? எதைச்செய்தாலும் ஒருமுறைக்கு பலமுறை யோசிக்க வேண்டிய வெகுஜன ஊடகங்கள், சனாதன தர்மத்தின் விஷயங்கள் என்பதனால் அவற்றைப்பற்றி எந்த அக்கறையும் இல்லாமல், மனம் போன போக்கில் செயல்படுவது எந்த வகையில் நியாயம்?
மேலும் இந்த தொடரில், வேறு ஒரு காட்சி வருகிறது. அபிமன்யு யுத்தத்தில் மடியும் போது கிருஷ்ணன் அழுவதாக எடுத்திருக்கிறார்கள். பகவான் கிருஷ்ணன் தன் மரணத்தை கூட சிரித்த முகத்தோடு வரவேற்றவன். அவன் இன்னொரு மரணத்தை கண்டு வருத்தப்பட வேண்டிய அவசியம் என்ன? அப்படி வருத்தப்படுவது ஸ்ரீ கிருஷ்ணனின் பரமாத்மா என்ற தன்மைக்கு குறைவு வராதா? என்பதை தொலைக்காட்சி நிர்வாகம் சிந்திக்கவே இல்லை. இயேசு நாதரை அல்லது முகமது நபியை அவர்களது சொந்த இயல்பில் இருந்து மாறுபட்டதாக இவர்களால் காட்ட முடியுமா? அப்படி காட்டி விட்டு இது ஊடக சுதந்திரம் என்று இவர்களால் காலம் கழிக்க முடியுமா? என்பதை சிந்திக்க வேண்டும்.
மஹாபாரதம் என்பது இமயமலை போல, கங்கையை போல, இந்து மஹா சமுத்திரத்தை போல எப்போதும் இருப்பது. அதை விஜய் டிவி என்ற சின்னஞ்சிறிய கொசு கடித்து, குடித்து விட முடியாது. அதனால் இவர்கள் மஹாபாரதத்திற்கு எந்த வியாக்கியானம் சொன்னாலும் நமக்கு கவலை இல்லை. ஆனால் இல்லாத ஒன்றை இருப்பது போல காட்டுவது மிகப்பெரும் வரலாற்றுப்பிழையாகும். காந்தியை சுட்டது கோட்சே என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரை பத்துபேர்கள் சுற்றி நின்று சுட்டார்கள் என்று யாராவது ஒரு முட்டாள் நாளைக்கு படமெடுத்தால் அதற்கு விஜய் டிவி இன்று வழிவகுத்து கொடுத்தது போல் ஆகிவிடும்.
இந்திய பண்பாட்டை, இந்திய இலக்கியங்களை தாழ்த்திப்பேசுவதும், தரக்குறைவாக விமர்சனம் செய்வதும், இல்லாத புனைக்கதைகளை உருவாக்கி நடமாட விடுவதும் மேற்கத்திய நிறுவனங்கள் தொன்று தொட்டு செய்து வரும் காரியமாகும். அந்த பணியை தான் விஜய் டிவியும் செய்கிறது என்றால், அது திருந்த வேண்டிய அவசியமில்லை. காலம் ஒருநாள் அந்த நிர்வாகத்திற்கு திருந்த கற்று தரும்.